திருப்புல்லாணி ஸ்ரீ ஆதிஜகன்னாதப் பெருமாள்
திருப்புல்லாணி என்று அழைக்கப்படும் தர்ப்பசயனம் ராமேஸ்வரம் செல்லும் வழியில் ராமநாதபுரத்தில் இருந்து 10 கி.மீ. தொலைவில் உள்ளது. பாண்டி நாட்டில் அமைந்துள்ள வைணவப் பெருந்தலங்கள் பதினெட்டுள் இது, நான்காவது. இது 44வது திவ்யதேசமும்கூட.

திருப்புல்லாணி, ஆழிசேது, திருவணை, தர்ப்பசயனம் என்ற பெயர்களைக் கொண்ட இத்திருத்தலத்தைத் திருமங்கை ஆழ்வார், மணவாள மாமுனிகள், பெரியநம்பிகள், ஞானசம்பந்தர், நாவுக்கரசர், அருணாசலக் கவி, புல்லங்காடர் போன்ற பாடியுள்ளனர். புல்லங்காடர் சங்கப்புலவர்களுள் ஒருவர். இத்தலத்தைச் சேர்ந்தவர். தொல்காப்பிய உரையாசிரியர்களில் ஒருவரான தெய்வச்சிலையாருக்கும் இத்தலத்துப் பெருமானின் திருநாமம்தான். இதன்மூலம் இந்த ஊர் சங்ககாலத்திலும் புகழ்பெற்றதாக இருந்துள்ளதை அறிய முடிகிறது.

சேதுபதி மன்னர்களின் நிர்வாகத்திற்கு உட்பட்ட தலம் இது. இறைவன் திருநாமம் ஆதி ஜகன்னாதர். இறைவி பத்மாசினித் தாயார். பூரியிலுள்ள ஜகன்னாதர் அரூபமாகக் காணப்படுகிறார். இத்தலத்தில் பெருமாள் சங்கு, சக்ர தாரியாக முழுவடிவத்தில் பூஜிக்கப்படுகிறார். இவருக்கு தக்ஷிண ஜகன்னாதர் என்ற பெயர் உண்டு.

இங்கு சக்ர தீர்த்தம், ஹம்ச தீர்த்தம், வருண தீர்த்தம், தர்ம தீர்த்தம், ராம தீர்த்தம், அகஸ்திய தீர்த்தம் ஆகியவை உள்ளன. இரணிய நதி, கண்வ நதி, க்ஷீர நதி ஆகியவையும் உள்ளன. கடல். ஆறு , குளம் என மூன்று புண்ணிய தீர்த்தங்களை உடைய இத்தலத்திற்கு முந்நீர்த் தலம் என்ற பெயரும் உண்டு.

நின்றான் (ஆதி ஜகன்னாதர்) கிடந்தான் (ராமபிரான்), இருந்தான் (சந்தானகிருஷ்ணன்) என மூன்று அர்ச்சாவதாரங்களும் இந்த ஆலயத்தில் ஒருசேரச் சேவை தருவது மிகச் சிறப்பு. கோயில் பிரகாரங்கள் ஐந்து (தேரோடும் வீதி, மாடவீதியும் சேர்த்து). ஐந்தாம் சுற்றில் கோயிலுக்கு எதிரே சந்திர தீர்த்த புஷ்கரணி, நான்காம் திருச்சுற்றில் ஆசார்ய புருஷர்கள், ஸ்தானீகர் மாளிகைகள் அமைந்துள்ளன. பழங்காலக் கற்கோயிலான இதில் நுணுக்கமான சிற்பங்கங்களைக் கோயிலுக்குள் எங்கும் காணலாம். கோயில் கல்வெட்டுக்களில் தலத்தைப் பற்றியும், கோவிலைப் பற்றியும் பல விவரங்களை அறியலாம். சேதுபதிகள் பலரால் தரப்பட்ட தாமிர சாஸனங்களும் ஓலைச்சுவடிகளும் உள்ளன.

ஆதி ஜகன்னாதர் சன்னிதி முதல் பிரகாரத்தில் அமைந்துள்ளது. கருட மண்டபம் தாண்டி உள்ளே சென்றால் அழகிய மணிமண்டபம், இதைத் தாண்டிச் சென்றால் பெருமாள் கருவறை விமானத்தின் தென்பிரகாரத்தில் லக்ஷ்மிநரசிம்மர், வடக்குப் பிரகாரத்தில் விஷ்வக்சேனர். உள்ளே அர்த்த மண்டபத்தில் ஆதிஜகன்னாதர் சேவை சாதிக்கிறார். உற்சவரான கல்யாண ஜகன்னாதர், உபய நாச்சியார்களுடன் தரிசனம் தருகிறார். பெருமாள் சன்னிதிக்கு எதிரில் பெரிய கருட மண்டபத்தில் கருடன் சன்னிதியைக் காணலாம்.

இரண்டாம் பிரகாரத்தில் தாயார் சன்னிதியின் நுழைவாயில் மேலே குடைவரைக் கோபுரம் உள்ளது. வெளிப்பக்கத்தில் உக்கிராண அறை, ஆழ்வார்கள் சன்னிதிகளும், யாகசாலையும் உள்ளது. தெற்குப் பிரகாரத்தில் தாயார் சன்னிதி. பத்மாசினித் தாயார் என்ற திருநாமத்துடன் வரதாபய ஹஸ்தங்களுடன் காட்சி தருகிறார் இவர். வடக்குப் பிரகாரத்தின் கீழ்ப்பகுதியில் பட்டாபிராமர் சன்னிதி வாசல், துவஜஸ்தம்பம் பலிபீடம் ஆகியவை உள்ளன. பெருமாள் சன்னிதிக்கு வடகிழக்கே சயன ராமன், பட்டாபிராமன் சன்னிதிகளைக் காணலாம். வடமேற்கில் கோதை நாச்சியார் சன்னிதி உள்ளது.

தர்ப்பைப் புல்லில் பெருமாள் படுத்துக் கொண்டிருக்கும் தர்ப்பசயன ராமனின்
அழகுத் திருக்கோலத்தைக் காண ஆயிரம் கண்கள் வேண்டும். மருங்கில் பட்டாகத்தி, உந்தியிலிருந்து மேல்நோக்கி செல்லும் காம்பு மூன்று கிளைகளாக பிரிந்து நடுக்காம்பில் உள்ள மலரில் பிரம்மனையும் மற்ற இரண்டு மலர்களில் சூரிய, சந்திரர்களையும் காணலாம். மது, கைடபர்கள், கௌஸ்துவம், லட்சுமி, மார்க்கண்டேயர், விபீஷணன், குகன், கடலரசன், கடலரசி, வருணன் ஆகியோரும் உடனுள்ளனர்.

தல விருட்சம் அரசமரம். திரு அணை கண்டால் அறு வினை இல்லை என்பது இத்தலத்தின் பழமொழி. இத்தலத்தின் பெருமையே அரசமரமும் அதனடியில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள நாகமும்தான். அரசமரத்தின் கீழுள்ள திருமாலை ஸ்ரீராமர் சக்ரதீர்த்தத்தில் நீராடி வழிபட்டபோது, திருமால் தோன்றி, வில்லைக் கொடுத்து இலங்கேஸ்வரனை வீழ்த்தி சீதாப்பிராட்டியை மீட்டு வா என ஆசி வழங்கினாராம். ராமர் சன்னிதிக்கு வடபால் உள்ளது சந்தானகோபாலன் சன்னிதி. இங்கே புத்திரப்பேறு வேண்டி நாகப்பிரதிஷ்டை செய்து பால்பாயசம் படைத்து, அன்னதானம் செய்து சர்ப்ப சாந்தி, சர்ப்ப ஹோமம் செய்து பயனடைகின்றனர்.

சேது ஸ்நானம் செய்தபின் இத்தலத்தின் சன்னிதிக்கு எதிரில் ஒருவருக்கு அன்னதானம் அளித்தால், அது கயை க்ஷேத்திரத்தில் ஒரு லட்சம் பேருக்கும், காசியில் இரண்டு லட்சம் பேருக்கும், பிரயாகையில் ஏழு லட்சம் பேருக்கும் அன்னதானம் செய்த பலனை அளிக்கும் என்று ஸ்ரீராமனே, சீதாப்பிராட்டியிடம் கூறியதாக வழக்கு.

சீதா துரைராஜ்

© TamilOnline.com