அரங்கேற்றம்: சரஸ்வதி காசி
ஆகஸ்ட் 3, 2014 அன்று செல்வி சரஸ்வதி மங்கை காசியின் பரதநாட்டிய அரங்கேற்றம் குரு ஸ்ரீமதி வித்யா பாபுவின் ஆசியுடன் எல்ஜின் கம்யூனிடி கல்லூரி வளாகத்தில் சிறப்பாக நடைபெற்றது. "கைத்தல நிறைகனி"யில் துவங்கி, சொல்கட்டு நிறைந்த மயில்விருத்தக் காப்புக்கும் அழகாக ஆடி, "அம்மா ஆனந்த தாயினி" என்ற கம்பீர நாட்டை வர்ணத்திற்கு அபிநயம், நிருத்தம் இரண்டையும் கலந்து துள்ளலுடன் சுழன்றாடிப் பாராட்டுப் பெற்றார் சரஸ்வதி.

ஊத்துக்காடு வெங்கடகவியின் "நின்றந்த மயில்", சிவபெருமானின் பெருமையை விளக்கும் "காக்கவென்றோ", மகாகவி பாரதியின் "பாரத சமுதாயம் வாழ்கவே", பாலமுரளியின் தில்லானா ஆகிய அனைத்திலும் அவரது 11 வருடக் கடினப் பயிற்சியைக் காண முடிந்தது. நிகழ்ச்சி மங்களத்துடன் இனிதே நிறைவேறியது.

லக்ஷ்மியும் அனிதாவும். நிகழ்ச்சியை அழகாகத் தொகுத்து வழங்கினர். குரு வித்யா பாபு (நட்டுவாங்கம்), நிவேதா சந்திரசேகர் (பாட்டு), டாக்டர் ஸ்ரீராம் பாலசுப்ரமணியன் (மிருதங்கம்), செல்வன் சந்தீப் பரத்வாஜ் (வயலின்) என அனைவரும் நிகழ்ச்சிக்குப் பக்கபலமாக இருந்தனர்.

பள்ளியில் படிக்கும்போதே Health Occupation Students of America, Technology Students Association and South Asian Students Association எனப் பல்வேறு சங்கங்களில் பங்கெடுத்ததோடு, வயலின் வயோலோ வாத்தியக் கருவியிலும் வல்லவராக விளங்கிய சரஸ்வதி, இல்லினாய் மாநிலத்தின் Certified Nursing Assistant ஆவார். மருத்துவத் துறையில் இவர் பட்டம் பெற விரும்புகிறார். பொதுச் சேவையிலும் இவருக்கு ஆர்வம் இருப்பதைப் பெற்றோர்கள் பெருமையுடன் கூறி, நன்றியுரை வழங்கினர்.

மீனா சுபி,
சிகாகோ, இல்லினாய்ஸ்

© TamilOnline.com