அரங்கேற்றம்: பிரதீபா ஸ்ரீராம்
ஆகஸ்ட் 23, 2014 அன்று, சான்டா கிளாராவிலுள்ள மிஷன் சிடி நிகழ்கலை மையத்தில் குரு ஸ்ரீலதா சுரேஷின் விஸ்வசாந்தி நாட்டிய அகாடமி மாணவி பிரதீபா ஸ்ரீராமின் பரதநாட்டிய அரங்கேற்றம் சிறப்பாக நடந்தேறியது.

முதலில் பஞ்சமூர்த்தி அஞ்சலி மூலம் கணபதி, முருகன், நடராஜர் ,சிவகாமசுந்தரி மற்றும் சண்டிகேச்வரர் பிரார்த்தனையுடன் தொடங்கிய நிகழ்ச்சி "வர வல்லபா" என்ற பிள்ளையார் வணக்கத்துடன் தொடர்ந்தது. அடுத்து வந்த கல்யாணி ராக ஜதிஸ்வரம், முத்துசுவாமி தீட்சிதரின் தேவகந்தாரி ராக பஞ்சாஷட் பீடரூபிணி என்ற ராஜராஜேஸ்வரி மற்றும் அவளுடைய ஒரு அவதாரமான மீனாக்ஷியை துதித்த பாட்டிற்கு பிரதீபாவின் அடவுகளும் பாவங்களும் பாராட்டுக்குரியன.

அடுத்து பிரதீபா ஆடிய "அறுபடை வீடுகொண்ட திருமுருகா" என்ற முருகனின் அறுபடை வீடுகளைப் பற்றிய நடனம் அதற்கு முதலில் அவர் கொடுத்த அபிநய விளக்கமும் மிகச்சிறப்பு. திருநாவுக்கரசர் தேவாரத்திலிருந்து சில பாடல்களை குரு கிருஷ்ணமூர்த்தி தொடுத்து ஒரு அழகிய நடனப் பாடலாக அமைத்து வழங்க, அதற்கு பிரதீபா ஆடியது பக்தி விருந்தாக அமைந்தது. கண்ணனின் அழகையும் அவன் லீலைகளையும் வர்ணித்த "அசைந்தாடும் மயிலொன்று கண்டால்" என்ற பாட்டும், அருணாசல கவியின் "யாரோ இவர் யாரோ" என்ற ராமநாடகப் பாடலும், ஹிந்தோள ராகத் தில்லானாவும் நிகழ்ச்சிக்கு மேலும் சிறப்புச் சேர்த்தன.

குரு ஸ்ரீலதா சுரேஷ் (நட்டுவாங்கம்), டில்லியிலிருந்து வந்திருந்த அவருடைய குரு கிருஷ்ணமூர்த்தியின் வளமான, தெளிவான குரலிசை திரு. நாராயணன் (மிருதங்கம்), சாந்தி நாராயணன் (வயலின்) ஆகியவை நிகழ்ச்சிக்கு மெருகூட்டின.

ராமமூர்த்தி நடேசன்,
சான்ட க்ளாரா, கலிஃபோர்னியா

© TamilOnline.com