அரங்கேற்றம்: ஸ்ரீநிதி கலைச்செல்வன்
ஆகஸ்ட் 23, 2014 அன்று, திருமதி. கீதா பென்னெட்டின் மாணவியான ஸ்ரீநிதி கலைச்செல்வனின் கர்னாடக சங்கீத அரங்கேற்றம் இர்வைன் மந்திரில் நடைபெற்றது. செல்வி. அனு மூர்த்தியின் வயலின், திரு. கார்த்திக் வாசனின் மிருதங்கம் என்று தேர்ந்த பக்கவாத்தியக் கலைஞர்கள் கைகொடுக்க ஸ்ரீநிதி சஹானா ராகத்தில் 'கருணிம்ப' என்ற திருவொற்றியூர் தியாகையரின் வர்ணத்தோடு தொடங்கினார். அடுத்து ருத்ரப்ரியாவில் தீட்சிதரின் 'கண நாயகம்' கிருதியில் கச்சேரி களைகட்டியது. பின்னர் வந்த நாகஸ்வராளி 'ஸ்ரீ சங்கர குருவரம்' கிருதிக்கு ஆலாபனை, கல்பனா ஸ்வரம் போட்டு ஸ்ரீநிதி தன் வித்வத்தை நிறுவினாள்.

ரஸிகப்ரியாவில் துளி ராக ஆலாபனை செய்து கோடீஸ்வர அய்யரின் 'அருள்செய்ய வேண்டுமையா' பாடி, முக்கிய ஐட்டமாக கல்யாணி ராகத்தில் தியாகராஜரின் 'சுந்தரி நீ' கிருதியை வழங்கினாள். ஆலாபனையில் பேதம் பண்ணி மோஹன ராகத்தைக் கோடி காட்டியதும், 'ஓ மஹா', 'மஹா', 'த்ரிபுர' 'சுந்தரி' என்று பல்லவியில் பல்வேறு இடங்களில் கல்பனாஸ்வரம் பாடியதிலும் கடின உழைப்புத் தெரிந்தது. கீதா பென்னெட்டின் குருவும், தந்தையுமான டாக்டர். எஸ். இராமனாதனின் சிவரஞ்சனி 'வா வேலவா' பாட்டிற்கு முன்னால் 'பாதி மதி நதி' என்ற திருப்புகழிலிருந்து சில வரிகளை எடுத்துக்கொண்டு கேதார கௌளை, தன்யாஸி, கரஹரப்ரியா, மிஸ்ர சிவரஞ்சனி ராகங்களில் விருத்தமாகத் தொகுத்து கொடுத்தபோது ரசிகர்கள் தலையாட்ட மறந்து ரசித்தார்கள். லால்குடி ஜயராமனின் ரேவதி தில்லானாவிற்குப் பிறகு ஊத்துக்காடின் 'விஷமக்கார கண்ணனை' கண்முன் நிறுத்திக் கைத்தட்டல் பெற்றாள்.

வால்நட், கலிஃபோர்னியா ஹைஸ்கூலில் படிக்கும் ஸ்ரீநிதி கலைச்செல்வன் வாய்ப்பாட்டு, பரத நாட்டியம், நடிப்பு என்று கலைகளில் மிகுந்த ஆர்வத்தோடு பயிற்சி பெற்றுச் சிறந்து விளங்குகிறார். திருமதி. மாலதி ஸ்ரீனிவாஸன், வித்தியாசமான ராகங்கள், மொழிகள், கிருதிகள் என்று தேர்ந்தெடுத்ததைப் பற்றியும், ஸ்ரீநிதியின் இசைத்திறமையை அறிந்து மேடையேறிக் கச்சேரி அளிக்கத் தயார் பண்ணிய கீதா பென்னெட்டையும், பக்கவாத்தியக் கலைஞர்களைப் பற்றியும் இறுதியில் பாராட்டிப் பேசினார்.

அலோகா நாராயணன்,
கலிஃபோர்னியா

© TamilOnline.com