பி.எஸ். ராமையா
பத்திரிகை ஆசிரியராகவும் எழுத்தாளராகவும் கோலோச்சி வெற்றி பெற்றவர்களாக மகாகவி பாரதி தொடங்கி, வ.வே.சு. ஐயர், வ.ரா., சங்கு சுப்ரமணியம், சி.சு.செல்லப்பா, கல்கி எனப் பலரைச் சொல்லலாம். இவர்களுள் "இதழ் அல்ல; இயக்கம்" என்னும் அளவுக்கு ஓர் இதழைத் திறம்பட நடத்தி, இலக்கிய உலகின் கூனை நிமிர்த்திய பெருமைக்குரியவர் பி.எஸ். ராமையா. இவர் வத்தலகுண்டில், மார்ச் 24, 1905 அன்று சுப்பிரமணிய ஐயர் - மீனாட்சியம்மாள் தம்பதியினருக்கு மகனாகப் பிறந்தார். வறுமைச் சூழலில் பள்ளியிறுதி வகுப்புவரை மட்டுமே படிக்க முடிந்தது. பின்னர் ஜவுளிக்கடை விற்பனையாளர், உணவு விடுதிப் பணியாளர், கதர் விற்பனைப் பிரதிநிதி எனப் பல துறைகளில் சுமார் பத்தாண்டுகள் பணியாற்றினார்.


அது நாடெங்கும் சுதந்திரக் கனல் வீசிக் கொண்டிருந்த காலம். ராமையாவையும் அது ஈர்த்தது. சங்கு சுப்ரமணியத்தின் 'சுதந்திரச் சங்கு' இதழில் வெளியான கட்டுரைகள் இவரது உணர்ச்சியைத் தூண்டின. வேதாரண்யத்தில் நடந்த உப்பு சத்தியாக்கிரகத்தில் கலந்துகொண்டார். உப்பு காய்ச்சியதற்காக ஆறுமாதம் திருச்சி சிறைச்சாலையில் அடைக்கப்பட்டார். சிறையில் அவருக்கு ஏ.என். சிவராமன், வ.ரா., டி.வி. சுப்பிரமணியம் போன்றவர்களின் நட்புக் கிடைத்தது. அவர்களுடனான எண்ணப் பரிமாற்றமும், சிறை அனுபவமும் அவரது சிந்தனையை மேம்படுத்தின. கிடைத்த ஒய்வு நேரத்தில் ஹிந்தி கற்றுக்கொண்டார். சிறையிலிருந்து வெளிவந்ததும் மகாத்மாவின் தொண்டர் படை முகாமில் பயிற்றுனராகப் பணியாற்றத் துவங்கினார். கதராடைகளைத் தோளில் சுமந்து விற்றும், சுதந்திர இயக்கப் பிரசுரங்களைப் பல இடங்களுக்கும் சென்று விற்றும் இயக்கப்பணி செய்தார்.

இந்நிலையில் 'சுதந்திரச் சங்கு' இதழை நடத்தி வந்த சங்கு சுப்ரமணியத்துடன் அறிமுகம் ஏற்பட்டது அது ராமையாவின் வாழ்வில் திருப்புமுனை ஆனது. சங்கு சுப்ரமணியம், ராமையாவை ஆனந்த விகடனின் சிறுகதைப் போட்டிக்குக் கதை எழுதி அனுப்பத் தூண்டினார். ராமையாவும் 'மலரும் மணமும்' என்ற சிறுகதையை அனுப்பினார். கதை தேர்ந்தெடுக்கப்பட்டு வெளியானதுடன் சிறப்புச் சன்மானமாக பத்து ரூபாய் கிடைத்தது. இலக்கிய உலகில் காலடி எடுத்து வைத்தார் பி.எஸ். ராமையா. கல்கி, வ.ரா., சங்கு சுப்ரமணியம், ஏ.என். சிவராமன் உள்ளிட்ட பலர் அந்தக் கதையைப் பாராட்டியதுடன் அவரைத் தொடர்ந்து எழுத ஊக்குவித்தனர். விகடன், சுதேசமித்திரன், காந்தி, கலைமகள் போன்ற இதழ்களில் அவரது சிறுகதைகள் வெளியாகின.

'ஜயபாரதி' என்ற இதழில் உதவியாசிரியர் பணி கிடைத்தது. ஆனால், சில மாதங்களிலேயே கருத்து வேறுபாட்டால் அதிலிருந்து வெளியேறினார். மணிக்கொடி இதழ்பற்றி அறிந்து அதன் நிறுவனர் சீனிவாசனைச் சந்தித்தார். அவர், ராமையாவை விளம்பர சேகரிப்பாளராகப் பணியமர்த்தினார். அப்போது மணிக்கொடி சமூக, அரசியல் இதழாக வெளிவந்து கொண்டிருந்தது. அவ்வப்போது அதில் சிறுகதைகளும் வெளிவந்தன. ராமையா அதில் பல சிறுகதைகளையும், மொழிபெயர்ப்புக் கதைகளையும் எழுதினார். கருத்து வேறுபாட்டால் அதன் ஆசிரியர்கள் அதிலிருந்து விலகியபோது, ராமையா மணிக்கொடியின் ஆசிரியராகப் பொறுப்பேற்றார். வாரப்பதிப்பாக வெளிவந்து கொண்டிருந்த மணிக்கொடியை சிறுகதைகளுக்கென்றே வெளியாகும் மாதமிருமுறை இதழாக வளர்த்தெடுத்தார். வ.ரா., சி.சு. செல்லப்பா, புதுமைப்பித்தன், கு.ப.ரா., ந.பிச்சமூர்த்தி, சிட்டி, அழகிரிசாமி, ஜானகிராமன், க.நா.சு., எம்.வி. வெங்கட்ராம் எனப் பலரின் மிகச்சிறந்த படைப்புகள் மணிக்கொடியில் வெளியாகின. பிற்காலத்தே புகழ்பெற்ற பல எழுத்தாளர்களின் முதல் சிறுகதை மணிக்கொடியிலேயே வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது. அதில் எழுதிய எழுத்தாளர்கள் "மணிக்கொடி எழுத்தாளர்கள்" என்றும் அக்காலகட்டம் தமிழ் இலக்கிய உலகின் பொற்காலமான "மணிக்கொடி காலம்" என்றும் புகழ் பெற்றது.

தமிழில் சிறுகதைகளுக்கென்று தனியாக முதன்முதலில் வெளியான இதழ் 'மணிக்கொடி'தான். புதுமைப்பித்தனின் 'கவந்தனும் காமனும்', 'துன்பக்கேணி' உள்ளிட்ட புகழ்மிக்க பல கதைகள் மணிக்கொடியில் வெளியானவையே! சி.சு. செல்லப்பாவின் 'ஸரஸாவின் பொம்மை', மௌனியின் 'அழியாச்சுடர்' போன்ற காலத்தாலழியாத கலைப்படைப்புகளும் மணிக்கொடியில் வெளியாகின. ராஜாஜி, பேராசிரியர் அ. சீநிவாசராகவன், பி.எஸ். சங்கரன், பி.எம். கிருஷ்ணசுவாமி போன்றோரும் மணிக்கொடிக்கு எழுதிப் புகழ் சேர்த்தனர். இதழின் உள்ளடக்கத்தில் பல்வேறு புதுமைகளைக் கையாண்டார் ராமையா. அவரும், கி. ராமச்சந்திரனும் இணைந்து சிறந்த வெளிநாட்டுக் கதைகளை மொழிபெயர்த்து வெளியிட்டனர். ஓவியங்களுடன் கதையை வெளியிடுவது, ஓவியரின் பெயரை வெளியிடுவது, ஆசிரியரைப் பற்றிய குறிப்பு, சிறுகதையைப் பற்றிய குறிப்பு, புதுமையாகக் கதை சொல்லும் பாணி, நாடகபாணிக் கதைகள், இதிகாச பாணியில் கதை சொல்வது என அதில் பல்வேறு உத்திகளைக் கையாண்டார் ராமையா. அந்தக் காலத்திலேயே முழுக்க முழுக்கப் பெண் எழுத்தாளர்கள் மட்டும் எழுதிய சிறுகதைகளை வைத்துப் பெண்கள் சிறப்பிதழை வெளியிட்டிருக்கிறார். வை.மு. கோதைநாயகி அம்மாள், எஸ். விசாலாட்சி (சங்கு சுப்ரமணியத்தின் சகோதரி), சேது அம்மாள் (கு.ப.ரா.வின் சகோதரி) க. பத்மாவதி உள்ளிட்ட பலர் மணிக்கொடியில் சிறுகதைகள் எழுதியுள்ளனர்.

அதேசமயம் ஓர் எழுத்தாளராகவும் அழுத்தமாக அவர் தன் முத்திரையைப் பதித்தார். 'கார்னிவல்', 'நட்சத்திரக் குழந்தைகள்' போன்ற அவரது கதைகள் மிகவும் புகழ்பெற்றவை. இவரது புகழ்பெற்ற சிறுகதைகள் தொகுக்கப்பட்டு 'மலரும் மணமும்', 'ஞானோதயம்', 'பாக்யத்தின் பாக்கியம்', 'புதுமைக்கோவில்', 'பூவும் பொன்னும்' போன்ற தலைப்புகளில் வெளியாகின. முந்நூற்றுக்கும் மேற்பட்ட சிறுகதைகளை ராமையா படைத்திருக்கிறார். நாவலாசிரியராகவும் குறிப்பிடத்தக்க பங்களிப்புச் செய்திருக்கிறார். 'பிரேம ஹாரம்', 'நந்தா விளக்கு', 'தினை விதைத்தவன்', 'சந்தைப் பேட்டை', 'கைலாச ஐயரின் கெடுமதி', 'விதியின் விளையாட்டு கோமளா' போன்றவை இவரது முக்கியமான நாவல்களாகும். 'தேரோட்டி மகன்', 'மல்லியம் மங்களம்', 'பூ விலங்கு', 'பாஞ்சாலி சபதம்', 'களப்பலி' போன்றவை இவரது நாடகங்களாகும். இவருடைய 'தேரோட்டி மகன்' மிகவும் புகழ்பெற்ற ஒன்று. 'வைவஸ்வதன்', 'ஸ்ரீமதி சௌபாக்கியம்' போன்றவை இவரது புனைபெயர்கள். இவை தவிர வேறு சில பெயர்களிலும் அவர் மணிக்கொடி இதழில் எழுதியுள்ளார். 'நவயுகப் பிரசுரலாயம்' என்ற புத்தக வெளியீட்டு நிறுவனம் தொடங்கி நல்ல நூல்கள் வெளியாகவும் ராமையா முழுமுதற் காரணமாக இருந்தார். காத்திரமான பல சிறுகதைகளை ராமையா எழுதியதால் 'சிறுகதைச் சக்கரவர்த்தி' என்று அக்கால இலக்கியவாதிகளால் இவர் போற்றப்பட்டார்.

மணிக்கொடி என்றால் பி.எஸ். ராமையா என்று அடையாளப்படுத்துமளவிற்கு அந்த இதழைப் பல்லாண்டு காலம் உழைத்து நிலை நிறுத்தினார். ஆனால் ஆசிரியர்கள் மற்றும் நிர்வாகத்திடையேயான கருத்து வேறுபாட்டால் திடீரென முன்னறிவிப்பின்றி மணிக்கொடி ஆசிரியர் பொறுப்பிலிருந்து ராமையா நீக்கப்பட்டார். ஆனாலும் மனம் சோர்ந்துவிடாமல் திரைத்துறையில் கவனம் செலுத்தினார். கதை விவாதங்களில் கலந்துகொண்டார். ஏற்கனவே சிறுகதை, நாடகங்களை எழுதிய அனுபவம், இவருக்கு திரைப்படங்களுக்கு வசனம் எழுதக் கைகொடுத்தது. இவரது 'பிரசிடென்ட் பஞ்சாட்சரம்', 'போலீஸ்காரன் மகள்' போன்ற நாடகங்கள் திரைப்படங்களாக வெளிவந்து வெற்றி பெற்றன. ஜெமினி ஸ்டூடியோவிலும் சில காலம் பணியாற்றினார். பூலோக ரம்பை, மதனகாமராஜன், பக்த நாரதர், பரஞ்சோதி, சாலிவாஹனன், அர்த்தநாரி, விசித்திர வனிதை, மகாத்மா உதங்கர், தன அமராவதி, ராஜ மகுடம், மாய ரம்பை, பணத்தோட்டம் என பல படங்களின் கதை, வசனத்தில் பங்காற்றியிருக்கிறார் ராமையா. 'குபேர குசேலா' என்ற படத்தை ஆர்.எஸ். மணியுடன் இணைந்து தயாரித்திருக்கிறார். திரைத்துறையில் இருந்தாலும் இலக்கியப் பணியைக் கைவிடாமல், இதழ்களில் சிறுகதை, நாடகங்கள் எழுதி வந்தார்.

"வ.ரா.வின் வார மணிக்கொடிக்குப் பின் சிறுகதைக்கு என்றே அந்தப் பத்திரிக்கையைச் சாதனமாக ஆக்கி, தானும் எழுதி அதில் பல புதிய கதாசிரியர்களை எழுதவைத்து, சிறுகதை வளம் பெருக மூலகாரணமாக இருந்தவர் ராமையா" என்கிறார், 'ராமையாவின் சிறுகதைப் பாணி' என்ற தன் நூலின் முன்னுரையில் சி.சு. செல்லப்பா. மேலும் அவர், "ராமையா, உலகச் சிறுகதை துறையில் இடம் பெறக்கூடியவர், ஆன்டன் செகாவ், மாப்பஸான், ஓஹென்றி, கேத்தரீன் மேன்ஸ்ஃபீல்ட், டி.எச். லாரன்ஸ், ஃபிராங்க் ஓ'கானர், ஹென்றி ஜேம்ஸ், எர்னஸ்ட் ஹெமிங்வே, எச்.ஈ. பேட்ஸ் ஆகியோர் அடங்கிய முன்வரிசைச் சிறுகதையாளர்களில் ராமையாவும் ஒருவர் என்பது என் துணிபு" என்று மதிப்பிடுகிறார். ராமையாவின் சிறுகதை பற்றிய விமர்சன நூலான அதில் "பரந்துபட்ட கதைக்கருக்களும் மாறுபாடான பாத்திரங்களும் இவரது படைப்புச் சிறப்பு" என்று பாராட்டும் செல்லப்பா, ராமையாவை "சிறுகதை வியாசர்" என்று புகழ்ந்துரைக்கிறார். ராமையாவின் புத்தகங்களை நூற்றாண்டு கண்ட அல்லயன்ஸ் பதிப்பகம் வெளியிட்டுள்ளது.

60 ஆண்டுக்கும் மேலாக இலக்கியப்பணி ஆற்றிய ராமையா, நா. பார்த்தசாரதியின் அன்பான வற்புறுத்தலுக்கிணங்கி, மணிக்கொடி கால அனுபவங்களைத் தொடராக 'தீபம்' இதழில் எழுதி வந்தார். பின்னர் அவை தொகுக்கப்பட்டு 'மணிக்கொடி காலம்' என்ற நூலாக வெளியானது. 1982ல் அந்நூலுக்கு 'சாகித்திய அகாதமி' பரிசும் கிடைத்தது. ராமையாவுக்கு வெற்றிலை, சீவல், புகையிலை போடும் பழக்கம் உண்டு. அதனால் ஏற்பட்ட தொண்டைப் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட அவர் மே 18, 1983 அன்று 78ம் வயதில் காலமானார்.

தமிழ்ச் சிறுகதை உலகுக்குப் புதிய பாதையை உருவாக்கி, அதை ஒரு இயக்கமாகப் பரிணமிக்கிச் செய்த பி.எஸ். ராமையா, இலக்கிய உணர்வாளர்களால் என்றும் நினைவுகூரத் தக்கவர்.

அரவிந்த்

© TamilOnline.com