அரங்கேற்றம்: மதுரா ராமகிருஷ்ணன்
ஜூன் 8, 2014 அன்று சிகாகோ நகரின் ஆஸ்வீகோ மேல்நிலைப் பள்ளி கலையரங்கத்தில், 'நிருத்ய சங்கீத்' கலைப் பள்ளி மாணவி செல்வி. மதுரா ராமகிருஷ்ணனின் பரதநாட்டிய அரங்கேற்றம் நடைபெற்றது. ஜார்ஜியா தொழில்நுட்பக் கல்லுரியில் வேதிப்பொறியியல் படிக்க இருக்கும் மதுரா பதினான்கு ஆண்டுகள் பயிற்சிக்குப் பிறகு அரங்கேறுகிறார். குரு திருமதி. சௌம்யா குமரனின் பயிற்சியில், மதுரா கம்பீர நாட்டையில் மல்லாரி தொடங்கிய விதமே அற்புதம். அடுத்து திலங் ராகத்தில் விநாயகர் ஸ்துதியைத் தொடர்ந்தார். மதுரை முரளீதரன் இயற்றிய "மாயே மனம் கனிந்து" (சிம்மேந்திர மத்யமம்) வர்ணத்திற்கு மதுரா விறுவிறுப்புடன் ஆடினார். இதற்கு குரு சௌம்யா அமைத்திருந்த அபிநயங்களும், அவரது சிறப்பான நட்டுவாங்கமும் பலத்த கரவொலி பெற்றன.

பாரதியாரின் "தீராத விளையாட்டுப் பிள்ளை", செங்சுருட்டியில் "வள்ளி கணவன் பேரை" என்னும் காவடிச்சிந்து, "சங்கர ஸ்ரிகிரி" (ஹம்சாநந்தி), ஆகியவை வெகு நேர்த்தி. டாக்டர். பாலமுரளி கிருஷ்ணாவின் குந்தளவராளி தில்லானாவில் விறுவிறுப்பான ஜதியுடன் சென்ற நிகழ்ச்சி மங்களத்துடன் இனிதே நிறைவேறியது.

திரு. முரளி பார்த்தசாரதி (வாய்ப்பாட்டு), திரு. M.S. சுகி (மிருதங்கம்), திரு. N. வீரமணி (வயலின்) ஆகியோர் சிறந்த பக்கபலமாக இருந்தார்கள். சௌம்யா குமரன் இனிய குரலில் நட்டுவாங்கம் செய்தார். இவர் கலைமாமணி திரு. காத்தாடி ராமமூர்த்தியின் மகள் ஆவார்.

இறுதியாக மதுராவின் பெற்றோர் ராமகிருஷ்ணன் மற்றும் பொம்மு மனநெகிழ்வுடன் நன்றி கூறினர். மதுரா படிப்பு, நடனம் மட்டுமல்லாமல், பொதுச் சேவையிலும் ஈடுபடுவது தங்களுக்கு பெருமை என்றும் குறிப்பிட்டார்கள்.

பூரணா சேதுராமன், நேப்பர்வில்;
மணி குணசேகரன், ரோமியோவில்

© TamilOnline.com