அரங்கேற்றம்: தீக்ஷா கந்தன்
ஜூலை 13, 2014 அன்று, பிரேரணா நடனப் பள்ளி மாணவி தீக்ஷா கந்தன் பரதநாட்டிய அரங்கேற்றம் Council Rock High School (Yardley, Pennsylvania) வளாகத்தில் நடைபெற்றது. அவரின் குரு திருமதி. லக்ஷ்மி ராகவனின் ஆசியுடன் புஷ்பாஞ்சலியில் கடவுள் வாழ்த்துடன் அரங்கேற்றத்தை அழகாகத் தொடங்கினார். தொடர்ந்து அலாரிப்பு மற்றும் ஜதிஸ்வரத்திற்கு லாவகமாக ஆடினார்.

"சுவாமிநாத சுவாமி" வர்ணம் அழகிய முத்திரைகள் மற்றும் பாவங்களுடன் சிறப்பாக அமைந்தது. அடுத்து வந்த ஷண்முகப்ரியா கீர்த்தனையில், தீக்ஷா தனது நிருத்த, அபிநயத் திறமைகளை சிறப்பாக வெளிப்படுத்தினார். தொடர்ந்து வந்த காவடிச்சிந்தில், நம்மை பழனிக்கே கூட்டிப் போனார். அழகிய தில்லானா மற்றும் மங்களத்துடன் நிறைவு செய்தார்.

திரு. சுதேவ் வாரியர் (பாட்டு), திரு. தியாகராஜன் ரமணி (புல்லாங்குழல்), திரு. சுதாமன் (மிருதங்கம்) ஆகியவை தீக்ஷாவின் அரங்கேற்றத்திற்குப் பெரும் பலம். ரூபா அவர்கள் தொகுத்து வழங்கிய முன்னுரை குறிப்பிடும்படியாக இருந்தது.

லதா சந்திரமௌலி,
காலேஜ்வில், பென்சில்வேனியா

© TamilOnline.com