SIFA வழங்கிய ஊர்மிளா சத்யநாராயணாவின் பரதநாட்டியம்
நவம்பர் 6, 2005 அன்று தென்னிந்திய நுண்கலைக் குழுமத்தின் (SIFA) ஆதரவில் ஊர்மிளா சத்யநாராயணா அவர்களின் பரதநாட்டிய கச்சேரி CET, சான் ஹோசேவில் நடைபெற்றது.

கம்பீர நாட்டையில் ஜம்மென்று மல்லாரி முழங்க ஊர்மிளாவின் நடனம் துவங்கியது. தொடர்ந்து ராகமாலிகை வர்ணம் 'சாமியை அழைத்தோடி வா'. இதன் ஒவ்வொரு அடியிலும் ராகத்தின் பெயரோடு வரும் வரிகளின் அர்த்தபூர்வமான பாவங்கள், அருமையான அபிநயம் யாவும் ரசிக்கத் தக்கதாக நன்றாக இருந்தது. 'மாமதிமுகமோ கனலாய் வீச' என்னும் வரியை மோகன ராகத்தில் பாடும்போது காண்பித்த பாவம் மிகவும் தத்ரூபம். வர்ணம் நீளமாய் இருந்தாலும்கூட அடுத்தடுத்துக் காண்பித்த அசைவுகளில் அனயாச துள்ளலுடன் கூடிய சுறுசுறுப்பு, ஜதி சொல்கட்டு, தீர்மானங்கள் யாவும் நல்ல விறுவிறுப்பு.

அடுத்து ஜயதேவர் அஷ்டபதியில் ராதை கண்ணனை நினைந்து உருகுவதை தோழியிடம் சொல்வதை தத்ரூபமாக ஆடிய விதம், அன்னமாசார்யாவின் குறிஞ்சி ராகப் பாடலில் யசோதையின் வாத்சல்ய பாவத்தை அபிநயத்தில் காண்பித்தது கனஜோர்.

நிறைவாக ஊத்துக்காடு அவர்களின் காளிங்க நர்த்தன தில்லானா நிகழ்ச்சியின் மகுடம் எனச் சொல்லலாம். யமுனா தடாகத்தையும் காளிங்கனை வதம் செய்த கிருஷ்ணனையும் கண்முன்னே கொண்டு வந்து நிறுத்தியதும், வேகமாக ஆடும்போது பாவபூர்வமாக ஆடுவதிலும் அக்கறை செலுத்தி தாளகதியுடன் இணைந்து ஆடியதும் மெச்சத்தக்கன.

பாட்டும் நட்டுவாங்கமும் இணைந்து தஞ்சாவூர் பாணிக்கு உரிய அழுத்தத்துடன் பாடிய தோடி வெகு நேரம் மனதில் ஓடியது. பாட்டு, வயலின், மிருதங்கம் வாசித்த குழுவினர் நிகழ்ச்சியை நன்கு சிறப்புறச் செய்தனர்.

சீதா துரைராஜ்

© TamilOnline.com