வாண்டுமாமா
குழந்தை இலக்கியப் பிதாமகரும், வாழ்நாளின் இறுதிவரை குழந்தைகளுக்காக எழுதிக் கொண்டிருந்தவருமான வாண்டுமாமா (89) ஜூன் 12, 2014 அன்று சென்னையில் காலமானார். 21 ஏப்ரல் 1925 அன்று புதுக்கோட்டை மாவட்டம் அரிமளத்தில் பிறந்த இவரது இயற்பெயர் கிருஷ்ணமூர்த்தி. புதுக்கோட்டை, திருச்சியில் இளம்பருவத்தைக் கழித்த இவர் சிவாஜி, மின்னல், காதல், கிண்கிணி, வானவில், கல்கி, கோகுலம் எனப் பல இதழ்களில் துணையாசிரியர், ஆசிரியர் எனப் பல பொறுப்புகளை வகித்தவர். சிறுவர்களுக்கு மட்டுமல்லாமல் பெரியவர்களுக்காகவும் பி.கே. மூர்த்தி, கௌசிகன் என்ற புனைபெயர்களில் பல படைப்புகளைத் தந்திருக்கிறார். 'பூந்தளிர்' இதழ் இவரை அடுத்த தலைமுறை வாசகர்களிடமும் கொண்டு சேர்த்தது. அதில் பல சித்திரக் கதைகளையும் மொழிபெயர்ப்புக் கதைகளையும் எழுதினார். வேட்டைக்கார வேம்பு, சுப்பாண்டி, கபீஷ், காளி போன்ற கதாபாத்திரங்கள் அன்றைய குழந்தைகளான இன்றைய முது இளைஞர்களால் என்றும் மறக்க முடியாதவை. பிரபல எழுத்தாளர்கள் அளவுக்கு வாண்டுமாமாவின் எழுத்திற்கும் அக்காலத்தில் பலத்த வரவேற்பு இருந்தது. "வாண்டுமாமாவின் மகத்தான தொடர் ஆரம்பம்" என்று விளம்பரம் செய்யுமளவிற்கு அவருக்கு வாசக ஆதரவு இருந்தது. நீதிக் கதைகள், அறிவியல் கதைகள், புதிர்கள், விளையாட்டுகள், சிறுவர் கதைகள் என 230க்கும் மேற்பட்ட குழந்தைகள் நூல்களைத் தந்திருக்கிறார். சிறுவர் இலக்கியத்தை வளர்த்தெடுத்ததில் இவருக்கு மிக முக்கியமான பங்குண்டு. (பார்க்க: தென்றல் ஜனவரி, 2011 இதழ்)

புற்றுநோயின் பாதிப்பினால் பேச, கேட்க முடியாமல் போனாலும், சலிக்காது மூன்று தலைமுறையைக் கடந்து நான்காம் தலைமுறை வாசகர்களையும் கவரும் விதத்தில் பல படைப்புகளைத் தந்தவர். தன்னைப் பேணிவந்த மனைவியைக் கடந்த வருடம் இழந்த இவர், நோயால் உடல் நலிவுற்றுச் சென்னையில் காலமானார். அறுபத்தைந்து ஆண்டுகளுக்கும் மேலாகப் பத்திரிகைத் துறையில் பணியாற்றிய வாண்டுமாமா, தமிழில் குழந்தை இலக்கியத்தின் மறக்கமுடியாத எழுத்தாளர்.

© TamilOnline.com