மானஸா சுரேஷின் இரட்டை அரங்கேற்றம்
கர்நாடக சங்கீத அரங்கேற்றம், பரதநாட்டிய அரங்கேற்றம் எனக் கேள்விப்பட்டிருக் கிறோம். ஆனால் ஒரு கலைஞரே இரு அரங்கேற்றங்களையும் ஒரே நாளில் அளிப்பது அபூர்வ சாதனையாகும்.

நவம்பர் 19, 2005 அன்று ·ப்ரீமாண்ட்டில் உள்ள ஓலோனே கல்லூரியின் ஸ்மித் மைய அரங்கத்தில் மானஸா சுரேஷ் இந்தச் சாதனையை நிகழ்த்தினார். முதலில் சங்கீத நிகழ்ச்சியும், சிறு இடைவேளைக்குப் பிறகு பரதநாட்டிய நிகழ்ச்சியும் நடைபெற்றன.

மானஸாவின் தயா¡ரும் குருவும் ஆன அனுராதா சுரேஷ் ஸ்ருதி ஸ்வர லயா என்ற நுண்கலை அமைப்பின் நிறுவனர் ஆவார். இந்தப் பள்ளியில் கர்நாடக மற்றும் வட இந்திய பாணியில் குரலிசை மற்றும் பல இசைக்கருவிகள் கற்றுத் தரப்படுகின்றன.

ஐந்து வயதிலேயே சங்கீதம் பயிலத் தொடங்கிய மானஸா, 9 ஆண்டுகளாக பயிற்சிக்குப் பின் அரங்கேறியிருக்கிறார். முதலில் நிர்மலா மாதவன் பிறகு சுகந்தா ஸ்ரீநாத் ஆகியோரிடம் கற்றபின், தற்போது வித்யா வெங்கடேசனிடம் பயின்று வரும் மானஸா 'ஸ்ருதி ஸ்வர லயா'வின் பல நாட்டிய நிகழ்ச்சிகளில் பங்கு கொண்டுள்ளார். மிஷன் சான் ஹோஸே உயர்நிலைப்பள்ளியில் பயின்றுவரும் அவர் கூடைப்பந்து, கால் பந்து விளையாட்டு களிலும் ஆர்வம் உள்ளவர். குரு வித்யா வெங்கடேசன் கலா§க்ஷத்திர பாணி பரதநாட்டியத்தில் தேர்ச்சி பெற்றவர். பல்வேறு நடன நிகழ்ச்சிகளை இந்த நடன சங்கீதப் பள்ளியில் இயக்கியுள்ளார்.

சங்கீத அரங்கேற்றம்

சங்கீத அரங்கேற்ற நிகழ்ச்சி குரு வணக்கத்திற்குப் பின் நாட்டக்குறிஞ்சி ராகத்தில் அமைந்த 'வாரண முகவா' என்ற வினாயகர் துதிப்பாடலுடன் தொடங்கியது. அடுத்து 'வந்தி சுருதாதியன்னி கணநாதா' என்ற புரந்தரதாசரின் பாடலை நாட்டை ராகத்தில் பாடிய மானஸா ஸ்வர ப்ரஸ்தாரத்தில் தனது நல்ல ஞானத்தையும், துரித நடையில் தனக்குள்ள தாளக் கட்டையும் வெளிப்படுத்தினார். பஞ்சரத்னக் கீர்த்தனைகளில் ஒன்றான 'ஸாதிஞ்சனே' (ஆரபி) பாடலில் மானஸா வின் கடும் உழைப்பு தெரிந்தது.

'மாதா மனம் இரங்கிடல்' (பூர்வி கல்யாணி) ராகக் கீர்த்தனையில் அவர் மேல் ஸ்தாயியை அனாயாசமாக எட்டிப்பிடித்து பிருகாக்கள் உதிர்த்தது அருமை. பிலஹரி ராக ஆலாபனைக்குப் பிறகு 'பரிதான மிச்சிதே' என்ற பாடலின் நிரவலில் ராகத்தில் சாயையை இனிமையாக எடுத்துக்காட்டி சபையோரின் கரகோஷத்தைப் பெற்றார்.

அடுத்து 'உன்னையல்லால் கதி ஏதையா' (பந்துவராளி) பாடலில் துரித நடை ஸ்வரங்களைக் கையாண்டார். செஞ்சுருட்டி ராக தில்லானாவிற்குப் பிறகு 'பாதிமதி நதி போது' என்ற திருப்புகழ் சிந்து பைரவி ராகத்தில் சுகமாக அமைந்தது.

அடுத்து செளக்க காலத்தில் எடுத்துக்கொண்ட 'ஸ்ரீ கமலாம்பிகே' என்ற தீட்சதர் கிருதியை உருக்கமாகப் பாடினார் மானஸா. நிகழ்ச்சியின் முடிவாக 'மங்களமுரளி' என்ற ஸ்யாம் கல்யாண் ராக துளசிதாஸ் பஜன் நளினம் நிரம்பியிருந்தது.

வயலின் வாசித்த கீதா சேஷாத்திரியும், மிருதங்கம் வாசித்த ரவி ஸ்ரீதரனும் பாடகிக்கு உறுதுணையாக இருந்து கச்சேரியைச் சிறப்பித்தனர்.

நாட்டிய அரங்கேற்றம்

சுமார் ஒருமணி நேர இடைவெளிக்குப் பிறகு புஷ்பாஞ்சலியுடன் மானஸாவின் நடன அரங்கேற்றம் தொடங்கியது.

குருஸ்துதிக்குப் பின் 'கைத்தல நிறைகனி' என்ற வினாயகரைப் போற்றும் பாடலுக்கு அவர் தாளக்கட்டுடன் அபிநயம் பிடித்த போதே களை கட்டிவிட்டது. ஊத்துக்காடு வேங்கட சுப்பையரின் 'ஆனந்த நர்த்தன கணபதி' (நாட்டை) என்ற பாடலில், செல்வி மானஸா இடர்களை நீக்கும் வினாயகரைத் துதித்து அரங்கேற்றம் இனிதே நிறைவேற ஆசியை வேண்டுகிறார். அபிநயம் மூலம் நடனமாடும் தும்பிக்கை கணபதியை நம் கண்முன்னே இப்பாடலுக்குக் கொண்டு வந்து நிறுத்தினார்.

'ஆனந்தக் கூத்தாடினார்' (ரிஷபப்ரியா) என்ற பாடலில் தில்லையம்பலத்தாரின் ஆனந்தத் தாண்டவத்தை அழகாகச் சித்தரித்தார். அபிநயத்திலும் தாளக்கட்டிலும் அவரது தேர்ச்சியும் தனித்தன்மையும் வெளிப்பட்டன.

நிகழ்ச்சியின் மகுடமாக அமைந்தது பெரியாழ்வார் பாசுரம். 'முடியொன்று மூவுலகங்களும்' என்ற ராகமாலிகைப் பாடலில் ராமாயணத்தின் ஒரு பகுதியான 'பாதுகா பாட்டாபிஷேகம்', அடுத்து ஸ்ரீ கிருஷ்ணரின் 'காளிங்க நர்த்தனம்', சகடாசுரன் வதம், இறுதியாக ஸ்ரீ ராமர் இலங்கை சென்று இராவணனை வதம் செய்தது ஆகிய நிகழ்ச்சிகைள மானஸா மாற்றி மாற்றிச் சித்தரித்துச் சபையோரை மெய்மறக்கச் செய்தார்.

அடுத்து வந்தது பரதநாட்டியத்தில் முக்கியமான அம்சமான 'வர்ணம்'. வர்ணத்தில் ஜதியும் முத்திரைகளும் பாடலும் எப்படி ஒன்றுக்கொன்று இணைந்து செயல்படுகின்றன என்பதைப் பாடலில் வரும் 'சகியே இந்த ஜாலம் ஏன்? எனது காதலனை என்முன் உடனே கொண்டு வா' என்ற வரிக்கு மானஸா நேர்த்தியான பாவங்களுடன் சபையோருக்கு எடுத்துக் காட்டினார். சங்கராபரண ராகத்தில் அமைந்த இந்த வர்ணத்திற்கு அவர் சுமார் 30 நிமிடங்கள் நடனமாடியபோது ஒவ்வொரு ஜதியிலும் சபையோரின் இடைவிடாத கரகோஷத்தைப் பெற்றார்.

'வெள்ளிக்கிழமையிலே' (ஆனந்தபைரவி) சூடிக்கொடுத்த நாச்சியாராகிய ஆண்டாளைப் பற்றியதாகும். இப்பாடலுக்கு நடனமாடிய மானஸா நம் கண்முன்னே ஆண்டாள் ஸ்ரீரங்கநாதரிடம் கொண்ட தீவிர பக்தியை அபிநயங்கள் மூலம் அழகாக விளக்கினார். செளராஷ்டிர ராகத்தில் அமைந்த 'அதுவும் சொல்லுவாள்' என்ற பதத்தில், தெய்வயானை வள்ளியை நோக்கி எள்ளிநகையாடுவதைப் பொறாமை, ஏளனம், கோபம், இறுமாப்பு ஆகிய முகபாவங்களுடன் காண்பித்தார்.

அடுத்து சங்கீதமேதை டாக்டர் எம். பாலமுரளிகிருஷ்ணாவின் குந்தலவராளி ராகத் தில்லானாவிற்குப் பிறகு விழாவின் நிறைவாக 'நீரையா காவேரி' என்ற காவடிச் சிந்துப் பாடலுக்கு மானஸா, முருகனின் அழகையும் தேரில் வலம் வருவதையும் மக்கள் அவருக்கு புஷ்பாஞ்சலி செய்வதையும் சித்தரித்து நளினமாகக் காவடியுடன் நடனமாடி நம்மை முருகனின் சந்நிதிக்கே அழைத்துச் சென்றார்.

அறிவிப்பாளர்கள் மாலா சிவகுமார் மற்றும் முரளி ஒவ்வொரு நிகழ்ச்சியையும் வெகு அழகாகச் சித்தரித்து விளக்கியது சிறப்பாக இருந்தது. அனுராதா சுரேஷ் மற்றும் ப்ரசன்னாவின் இனிய பாட்டும் வித்யா வெங்கடேசனின் சிறந்த நட்டுவாங்கமும் நடன நிகழ்ச்சிக்கு மெருகூட்டின.

வயலின் வாசித்த மைதிலி ராஜப்பன் மற்றும் மிருதங்கம் வாசித்த ரவி ஸ்ரீதரன் தத்தம் பணியைச் செவ்வனே செய்தனர்.

திருநெல்வேலி விஸ்வநாதன்

© TamilOnline.com