தீபிகா ரவிச்சந்திரன்
தீபிகா ரவிச்சந்திரன் அதிவேகமாக ஜிக்ஸா புதிர் (jigsaw puzzle) தீர்க்கும் தனித்திறனை நிரூபித்து 15 வயதில் கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்திருக்கிறார். இவரது பூர்வீகம் தமிழ்நாடு. கனெக்டிகட்டில் வசிக்கும் தீபிகாவும், தாயார் கீதா ரவிச்சந்திரனும் பேசும்போது பல சுவையான தகவல்கள் வெளிவந்தன.

Click Here Enlargeமுதல் கின்னஸ் சாதனை முயற்சி முப்பது நொடிகள் வித்தியாசத்தில் தவறிப் போனதாம். இருப்பினும் விடாமல் முயலத் தனக்கு ஊக்கம் கொடுத்த பெற்றோரே இந்த சாதனையைச் செய்யக் காரணம் என்கிறார் தீபிகா. 12 வயதில், முதல் சாதனை முயற்சியின்போது, பார்வையாளர்களிடம் நிதி திரட்டி பார்வையற்றோர் அறக்கட்டளைக்கு உதவி செய்திருக்கிறார். இதற்காக, India New England (indianewengland.com) இருபது வயதுக்குக் கீழுள்ளோர் பட்டியலில் இவரைக் கவுரவித்திருக்கிறது. அந்தப் பட்டியலில் அன்றுவரை கவுரவிக்கப்பட்டவர்களில் மிகவும் குறைந்த வயதுப் பெண் தீபிகாதானாம்.

படிப்பிலும் மிகவும் சுட்டியான தீபிகாவின் அறிவியல் ஆராய்ச்சி, பல பாராட்டுக்களையும் பரிசுகளையும் வென்றுள்ளன. நாசாவின் கடைசி விண்கலத்தில் தீபிகாவின் அறிவியல் ஆராய்ச்சியும் ஓர் அங்கம் வகிக்கிறது. சென்ற ஆண்டு நோபெல் பரிசு பெற்ற ஆராய்ச்சியாளர் ஸ்டைஸ் (Stietz) அவர்களின் ஆராய்சிக் கூடத்தில் அவரோடு ஆய்வுசெய்த பெருமையும் இவருக்குண்டு. பரதநாட்டிய அரங்கேற்றம் செய்யத் தயாராய் இருக்கும் இவர் கர்நாடக சங்கீதமும் முறைப்படி பயில்கிறார்.

Click Here Enlargeவிளையாட்டாக தீபிகா மூன்று வயதிலேயே 250 துண்டுகள் கொண்ட ஜிக்ஸா புதிரை ஒரு மணி நேரத்துக்குள் செய்து முடித்ததைப் பார்த்து அவரது திறமையை உணர்ந்தாராம் தாயார் கீதா ரவிச்சந்திரன். இந்த தனித்திறனையும், விடாமுயற்சியையும் தாண்டி, பெற்றோர் வகுத்த தினசரி அட்டவணைப்படி படிப்பு, விளையாட்டு, உணவு என்று நேரம் தவறாமல் கடைப்பிடித்ததே உலக சாதனைக்கு முக்கியக் காரணம் என்கிறார் கீதா. தீபிகா தினசரி ஒரு மணி நேரம் ஜிக்ஸா புதிருக்கென்று தவறாமல் செலவிட்டே இந்தச் சாதனையை நிகழ்த்தியதாகக் கூறுகிறார்.

தன் தம்பி, தங்கைக்கு முன்மாதிரியாகத் திகழும் தீபிகா தன் வெற்றிக்குப் பெரிதும் உதவியது தன் தங்கைதான் என்கிறார். அதிவேகமாக விளையாடச் சில யுக்திகளைக் கூறியதும், பயிற்சியின் போது தவறுகளைச் சுட்டிக்காட்டியதோடு, நேரத்தைக் கணக்கிட்டுத் தனது வெற்றிக்குத் தங்கை உதவியதை அன்போடு நினைவுகூர்கிறார் தீபிகா.

Click Here Enlargeபன்னிரெண்டே மணித்துளிகளில் ஜிக்ஸா புதிரை விடுவித்துத் தன் சாதனயைத் தானே முறியடிக்கப் போவதாக சொல்லும் தீபிகா, ஹூப்பிங் சுழற்றியபடியே கொண்டே ரோலர் ஸ்கேடிங் செய்வதிலும் புதிய உலக சாதனை படைக்கப் போகிறேன் என்கிறார். மருத்துவம் படித்து ஆராய்ச்சியாளராகி அதில் நோபெல் பரிசு வாங்கவேண்டும் என்பது தீபிகாவின் கனவு. அதனைச் சாதித்துப் பெற்றோரையும் இந்தியாவையும் பெருமைப்படுத்த அவரைத் தென்றல் வாழ்த்துகிறது.

ஸ்ரீவித்யா

© TamilOnline.com