தென்றல் பேசுகிறது...
அதிபர் ஒபாமா கொண்டுவந்த 'ஒபாமா கேர்' என்றழைக்கப்படும் உடல்நலக் கவனிப்புத் திட்டம் 'இறந்தே பிறந்ததாக' எதிர்க்கட்சியினரால் கூறப்பட்டு வந்துள்ளது. உடல்நலக் காப்பீட்டுக்குச் செலவழிக்க முடியாத, மிகக் குறைந்த வருமானமுள்ளவர்களின் நலன் கருதிக் கொண்டுவரப்பட்டது அது. "அதை யாரும் விரும்பமாட்டார்கள்" என்றார்கள் முதலில். வரவேற்பு முதலில் கொஞ்சம் மந்தமாகத்தான் இருந்தது. ஆனால், அதைப் பெற விரும்பியோர் எல்லோரும் ஏககாலத்தில் அரசு வலைத்தளத்தை மொய்த்து அதன் சர்வரையே திணறடித்தார்கள். அதையும் ஒரு "தோல்வி" என்பதாகத்தான் எதிரணி ஊடகங்கள் சித்திரித்தன. இவர்கள் எல்லோரையும் ஏமாற்றிவிட்டது ஒபாமா கேர்! இந்த மக்கள்நலத் திட்டத்தின் காரணமாகக் காப்பீடு பெறாத அமெரிக்கர்களின் எண்ணிக்கை பெரும் எண்ணிக்கையில் குறைந்திருப்பதாக the Commonwealth Fund, the Urban Institute, Gallup ஆகியவற்றின் கணிப்புகள் திட்டவட்டமாகச் சொல்கின்றன. ஆனால், எதிர்மறைச் செய்திகளைப் பரப்பிக் கொண்டாடும் ஊடகங்களுக்கு, இந்த முக்கியமான, வரவேற்க வேண்டிய சீர்திருத்தத்தை எடுத்துச் சொல்ல நேரமில்லை.

ஒபாமா கேர் விஷயத்தில் அதிபர் தமது அதிகார வரம்பை மீறியிருக்கிறார் என்று அவர்மீது வழக்குத் தொடர, குடியரசுக் கட்சியினரை அதிகமாகக் கொண்ட அமெரிக்கப் பிரதிநிதிகள் சபை அண்மையில் அனுமதித்துள்ளது சற்றே வியப்புக்கு உரியது. யாருக்கு மருத்துவக் காப்பீடு எட்டாக் கனியாக இருந்ததோ, அவர்கள் பெரிதும் ஆதரித்துள்ள ஒரு நலத்திட்டத்தைக் காரணம் காட்டி அதிபரைக் கோர்ட்டுக்கு இழுக்க முயற்சிப்பவர்கள், நாளை ஆட்சியைப் பிடித்தால் எளியோரின் கதி என்ன ஆகும் என்பதை யோசிக்கவே அச்சமாக இருக்கிறது.

*****


சென்ற ஆறாண்டுக் காலகட்டத்தின் மிகக்குறைந்த பற்றாக்குறை பட்ஜெட்டாக இந்த ஆண்டு இருக்கப் போகிறதென்பதை நாம் முன்னரே இங்கு பேசியிருந்தோம். இந்தக் கருத்தை மேலும் வலுப்படுத்தும் விதமாக ஜூன் மாதம் $71 பில்லியன் உபரி கண்டுள்ளதாகத் தகவல் வந்துள்ளது. இந்த ஜூன் வரையிலான முதல் 9 மாதங்களுக்கான பற்றாக்குறை $336 பில்லியன். இதே காலத்துக்கான சென்ற ஆண்டைவிட இது 28 சதவீதம் குறைவு. மற்றொரு உற்சாகமூட்டும் செய்தி என்னவென்றால், ஏப்ரல்-ஜூன் காலாண்டில் பொருளாதாரம் மிக ஆரோக்கியமான 4 சதவீத வளர்ச்சி கண்டுள்ளது என்பதுதான். முந்தைய காலாண்டில் இது 2.1 சதவீதம்தான் இருந்தது. வரும் நாட்களிலும் இது தொடரும், பொருளாதாரம் மீண்டும் சுறுசுறுப்படையும் என்று நம்பிக்கையோடு நிபுணர்கள் கூறுகிறார்கள். நவம்பர் மாதம் தேர்தல் வரும்போது, அமெரிக்காவின் பொருளாதாரப் புத்துணர்வு, தேர்தல் முடிவைத் தீர்மானிப்பதில் ஒரு முக்கியக் காரணியாக அமையும்.

முதலீடு, உற்பத்தி போன்ற அம்சங்களில் அமெரிக்கா விவேகத்துடன் சீனாவைக் கையாண்டால், அது அமெரிக்காவை மீண்டும் வளர்ச்சிப் பாதையில் விரைய வைக்கும். இது குறித்துப் பேச்சுவார்த்தை நடத்தச் சீனாவை மேஜைக்குக் கொண்டு வந்துவிட்ட அமெரிக்கா, சரியான திறக்கில் இதைக் கொண்டுசெல்ல வேண்டும். ஏனென்றால், இத்தகைய கொடுக்கல்-வாங்கலில் சீனர்களின் சாமர்த்தியத்தைக் குறைத்து மதிப்பிட முடியாதென்று அனுபவம் கூறுகிறது.

*****


'நல்ல கீரை' ஜெகன்னாதன் சில அடிப்படை உண்மைகளைத் தமது நேர்காணலில் சொல்கிறார். ரசாயனப் பூச்சிக் கொல்லிகளும் உரங்களும் நமது உணவை விஷமாக்கிவிட்டதை மாற்ற முனைவதோடு, வேளாண்மையில் நஷ்டமடைய வேண்டுவது அவசியமில்லை என்பதையும் அவரது செயல்பாடுகள் மூலம் நிரூபிக்கிறார். நாடகம், ஊடகம் என்று இரண்டிலும் மக்களை வசீகரித்தவர் டி.வி. வரதராஜன். அவரது நேர்காணல் மற்றொரு சுவை. தவிர, பல இளம் சாதனையாளர்கள் இந்தத் தென்றலில் அணிவகுத்து நிற்கிறார்கள். உங்கள் வாழ்த்தும் பாராட்டும் அவர்களை மேலும் சாதிக்க ஊக்குவிக்கும். நீங்கள் சதுரங்கப் புலியா என்று சோதித்துக் கொள்ளவும் இந்த இதழிலிருந்து சவால்கள் தொடங்குகின்றன. வாசியுங்கள், நேசியுங்கள்.

வாசகர்களுக்கு வினாயக சதுர்த்தி, கிருஷ்ண ஜயந்தி மற்றும் இந்திய சுதந்திர தின வாழ்த்துக்கள்!


ஆகஸ்டு 2014

© TamilOnline.com