க்ரியா வழங்கிய 'கலக்கற சந்துரு பிரமாதம்'
19 நவம்பர் 2005 அன்று சான்ஹோசே CET மையத்தில் தொலைக்காட்சி புகழ் வரதராஜனின் 'கலக்கற சந்துரு பிரமாதம்' எனும் நகைச்சுவை நாடகத்தை க்ரியா கிரியேஷன்ஸ் வழங்கியது.

சந்துரு ஒரு கட்டை பிரம்மசாரி. நண்பர்கள் அவனைக் கல்யாணம் செய்துகொள்ள வற்புறுத்துகின்றனர். 'நான் பிரம்மசாரியாகவே வாழ்ந்து காட்டுகிறேன். வேண்டுமானால் செய்தித் தாளில் விளம்பரம் கொடுத்து வாடகை மனைவியைத் தேர்வு செய்கிறேன்' என்று சவால் விடுகிறான். வாடகை மனைவியாக தைரியஸ்ரீ என்ற பெண்ணை அமர்த்து கிறான். அவளது தந்தை தனது பெண்ணுக்கு நல்ல வரன் அமையவில்லை என்று கவலைப்படுகிறார்.

அவரும் சந்துருவின் நண்பர்களும் சேர்ந்து திட்டமிட்டு அட்லாண்டா ரகுபதி என்ற பையனைப் பெண் பார்க்க வரச் செய் கிறார்கள். நண்பர்களையும் ஒவ்வொரு வராக தைரியஸ்ரீயிடம் ஜொள்ளுவிடச் செய்து சந்துருவின் வயிற்றெரிச்சலைக் கொட்டிக்கொள்கிறார்கள். இதனால் சந்துருவுக்கே தைரியஸ்ரீயிடம் காதல் ஏற்பட்டுவிடுகிறது. இருவரும் எப்படித் திருமணம் செய்துகொள்கிறார்கள் என்பது தான் கதை.

முழுநீள நகைச்சுவை நாடகம் என்பதற் கேற்பக் கதையை நகைச்சுவையோடு எடுத்துச் சொல்லியிருக்கும் விதம் விறுவிறுப்பாக இருந்தது. வசனங்கள் நறுக் நறுக்.

வேலைக்குத் தேர்வு செய்யும் தைரியஸ்ரீ யிடம் சந்துரு 10,000 ரூபாய் சம்பளம் கேட்டதும் அவள் மலைக்க, 'இப்போதைக்கு 3000 ரூபாய் போதும். கூடிய சீக்கிரம் முழுச் சம்பளமும் கேட்கப்படும்' எனச் சொல்வது படுயதார்த்தம்.

தெலுங்கு தம்பதிகள் பேச்சில் 'எவரு காவலியா? யாரை காவாலி என்கிறாய்', 'மாமாகாருவாவது மாருதிகாராவது' என்று தமிழும் தெலுங்கும் கலந்து அள்ளி வீசிய வசனங்கள் கலகலக்கச் செய்தன. வாடகை மனைவி கோலம் போடுவதும், நிஜமனைவி கோலம் போடும் கணவனிடம் 'ஆயி போயிந்தா' எனக் கேட்க கணவன் தந்த தமிழ் பதிலில் ஒரே கிண்டல்.

சந்துருவின் வாடகை மனைவி தைரியஸ்ரீ யிடம் மானேஜர் சிவா, பக்கத்தாத்து பாச்சு, டாக்டர், சுப்ரமணி என மாற்றி மாற்றி ஜொள்ளுவிடுவது கொஞ்சம் மிகையாக இருந்தாலும் கடுப்பு ஏற்றிவிடப்பட்ட சந்துரு சுற்றிச்சுற்றி வந்து விரட்டி எல்லோரையும் சமாளிக்கும் விதம் அசத்தல்.

அட்லாண்டா மாப்பிள்ளையை 'அட்ல எண்டலா அட்லாண்டாக்கு போசினாரு' என்பதும் சந்த்ரமுகி பாணியில் கண்ணை உருட்டி 'ராரா' என சொல்லி 'மீரு ஒரு தடவை செப்பே' எனச் சொல்லி விரட்டுவதும் மனோஹரியின் நடிப்பு தத்ரூபம். ஒரு நிமிட நாட்டியம் மிக ஜோர். டாக்டர், இனி தெலுங்கே பேசமாட்டேன் என்று காலில்விழும் காட்சி கனகச்சிதம்.

நிகழ்ச்சியின் உச்சகட்டம். கடைசிக் காட்சியில் சந்துரு 'ஐ லவ் யூ' என தைரியஸ்ரீயிடம் அசடுவழிய பெண்ணின் அபிப்ராயத்தைக் கேட்க, பெண், பையனின் தந்தை இருவரும் தட்டை மாற்றிக்கொள்ளத் தடுமாற, இறுதியாக தைரியஸ்ரீ சந்துருவின் பக்கத்தில் போய் நின்றுகொண்டு 'இன்று முதல் தேதி, சம்பளம் பூராவும் என்னிடம் கொடுத்துவிடு' என்று சொல்லும்போது அவையோரின் கைதட்டல் அரங்கைக் கலக்கியது உண்மை.

தீபா ராமானுஜம் தனது தத்ரூபமான நடிப்பினால் நாடகத்தைப் பிரகாசிக்கச் செய்தார். வரிக்குவரி நகைச்சுவை வசனங்களை அள்ளிவீசிய வரதராஜன் அவர்களைப் பாராட்டியே ஆகவேண்டும்.

சீதா துரைராஜ்

© TamilOnline.com