ICC சேவாத்தான் திரட்டியது $500K நிதி
ஜூன் 23, 2014 அன்று இந்திய சமுதாய மையம் (India Community Center) நடத்திய 'சேவாத்தான்-2014' நிகழ்ச்சியில் பங்கேற்ற 101 லாபநோக்கற்ற சேவை நிறுவனங்களுக்கு மொத்தம் 500,000 டாலர் நிதி திரட்டப்பட்டது. சன்னிவேலின் பேலேண்ட்ஸ் பார்க்கில் நடந்த வாக்கத்தான் (walkathon) மற்றும் அரை-மாரத்தான் நிகழ்வுகளில் ஏறத்தாழ 4,000 பேர் பங்கேற்றமை குறிப்பிடத் தக்கது.

இதன் மற்றுமொரு சுவையான அம்சம் 'சர்வலகு தாளவாத்ய மையத்தின் (Sarvalaghu Percussion Art Center) 50 மாணவர்கள் பங்கேற்ற 'மிருதங்கத்தான்'. "நடந்தும், ஓடியும் நிதி திரட்டலாம் என்றால் அதை ஏன் மிருதங்கம் வாசிப்பதன் மூலம் செய்யக்கூடாது என்று என் மனதில் எழுந்த கேள்வியே மிருதங்கத்தானாக வடிவெடுத்தது" என்கிறார் சர்வலகுவின் இயக்குனர் திரு. ரமேஷ் ஸ்ரீனிவாசன். இந்திய கலாசார அகடெமியின் (Academy of Indian Culture) ஆதரவில் நடந்த மிருதங்கத்தான், ஓய்வுபெற்ற கலைஞர்களை ஆதரிக்க நிதி திரட்டும் முயற்சியாகும்.

"முன்னெப்போதையும் விடப் பல இன மக்களும் பங்கேற்றது இந்த ஆண்டின் சிறப்பாகும்" என்றார் நிகழ்ச்சியின் இணைத்தலைவர் அனு ஜகதீஷ். "இந்திய சமூகத்தினரின் முக்கிய நிகழ்வாக இது இருந்தபோதும், எல்லாச் சமூகத்தினரும் நிறையப் பங்கேற்கும் அளவுக்கு முக்கியத்துவத்தை இது வரும் ஆண்டுகளில் பெறும்" என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

இது நிதி திரட்டும் நிகழ்ச்சி என்பதைத் தாண்டி, விரிகுடாப்பகுதி வாசிகளுக்கு உலகளாவிய சேவை நிறுவனங்களை அறியத்தரும் வாய்ப்பாகவும் அமைந்தது. சேவை அமைப்புகளின் நிர்வாகிகளுடன் வெற்றிகரமான தொழில்முனைவோரைத் தொடர்பு கொள்ளச் செய்த நிகழ்ச்சி ஒன்று இவ்வாண்டின் சிறப்பு அம்சமாகும்.
குடும்பங்களை மனமகிழ்வோடு உடல்நலப் பயிற்சியில் ஈடுபடுத்தியது மட்டுமல்லாமல், சமுதாயப் பணியிலும் ஈடுபட வைத்தது, ஆறாவது ஆண்டாக நடைபெறும் இந்த சேவாத்தான். சூரிய நமஸ்காரம், நாட்டியம், இசை, பிரபல கால்பந்து ஆட்டக்காரர் ரோனி லாட் (Ronnie Lott) பங்கேற்ற தீப்பந்த நகர்வலம் போன்றவை மக்களின் ஆர்வத்தைத் தூண்டிப் பெருமளவில் பங்கேற்க வைத்தன. சிறுவர்க்கான நிகழ்ச்சிகளில் பேட்மின்டன், குமிழி செய்தல், மருதாணி இடுதல் போன்றவை இடம்பெற்றன.
"தாங்கள் விரும்பும் சேவை நிறுவனங்களை ஆதரிக்க சேவாத்தானை மேலும் மேலும் மக்கள் நாடுவது எங்களுக்கு உற்சாகம் அளிக்கிறது. விரிகுடாப் பகுதியின் மிகப்பெரிய சமுதாய சேவைத்தளமாக இது அமைய வேண்டுமென்பதே எங்கள் நோக்கம்" என்றார் ICC நிர்வாக இயக்குனர் பிரகதி குரோவர்.

மேலதிக விவரங்களுக்கு www.indiacc.org

© TamilOnline.com