கலைமகள் தமிழ்ப் பள்ளி ஆண்டு விழா
ஏப்ரல் 19, 2014 அன்று ஷ்ரூஸ்பரி (மாசசூசட்ஸ்) கலைமகள் தமிழ்ப் பள்ளியின் மூன்றாம் ஆண்டு விழா நடைபெற்றது. இப்பள்ளி கலிஃபோர்னியா தமிழ்க் கழகத்தால் அங்கீகரிக்கப்பட்டு, அவர்களது பாடத்திட்டத்தைப் பயன்படுத்தும் பள்ளியாகும்.

மாணவர்கள் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடி நிகழ்ச்சியைத் துவக்கினர். தலைமை ஆசிரியை திருமதி. தேவி சுந்தரேசன் வரவேற்புரை ஆற்றினார். தமிழாசிரியர் திரு. கிருஷ்ணசுவாமி நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார். தொடக்கநிலைச் சிறார் பாடிய 'ஓடி விளையாடு பாப்பா' அழகாக இருந்தது. இவர்கள் தமிழில் ஆத்திசூடி எழுதி, அதற்கு ஆங்கிலத்தில் விளக்கம் கூறினர். இவர்களின் 'உனக்கு என்ன பிடிக்கும்' சிறுகதை மழலைத் தமிழில் கேட்க இனிமையாக இருந்தது. அடுத்த நிலை மாணவர்கள் கதை, விடுகதை, பாடல்களின் மூலம் தங்கள் தமிழ்த் திறனை வெளிப்படுத்தினர். மூன்றாம் நிலை மாணவர்களின் "வாழ்க்கைப் பாடம்" நாடகம் கருத்துள்ளதாக இருந்தது.

ஒன்றாம் வகுப்பு மாணவர்களின் 'அக்பர் பீர்பால்' நாடகமும், இரண்டாம் வகுப்பு மாணவர்களின் 'மாணவன்' நாடகமும் சிறப்பாக இருந்தன. மூன்றாம் வகுப்பு மாணவர்கள் நடித்த 'மரம் வளர்ப்போம்' நாடகம் மரம் நடுவதோடு, அதைப் பராமரித்தலின் முக்கியத்துவத்தை உணர்த்தியது. 'குமண வள்ளல்' நாடகத்தை நான்காம் வகுப்பு மாணவர்கள் திறம்படத் தமிழ் பேசி நடித்தனர். ஐந்தாம் வகுப்பின் 'முகநூல்' நாடகம் நகைச்சுவையுடன் ஜனரஞ்சகமாக இருந்தது. இடையிடையே வந்த 'ஒத்த கல்லு', 'காவடிச்சிந்து' நடனங்களை மாணவிகள் சிறப்பாக ஆடினார்கள். இறுதியில் மாணவ, மாணவிகள் பாடிய "வந்தே மாதரம்" சேர்ந்திசை மெய்சிலிர்க்க வைத்தது. பள்ளி உதவி தலைமை ஆசிரியர் திருமதி. கமலா சம்பத் நன்றியுரையுடனும், பரிசளிப்புடனும் நிகழ்ச்சி நிறைவுற்றது. பள்ளியின் தமிழ் ஆசிரியர்களான ரூபா, கீதா, லக்ஷ்மி, மாலதி, நித்யா, கிருஷ்ணசுவாமி, கமலா, உதவி ஆசிரியர்கள் மற்றும் தேவி ஆகியோரின் பணி மிகவும் பாராட்டப்பட வேண்டியதாகும்.

சரோஜ் பமீலா,
பாஸ்டன்

© TamilOnline.com