கமலாவும் எலியும்
இரவு மணி பன்னிரண்டு இருக்கும். ஏழு ஸ்வரங்களையும் தாண்டி என் அருமை மனைவி கமலா (புதிதாகக் கண்டு பிடித்திருந்த) எட்டாவது ஸ்வரத்தில் குறட்டை விட்டு தூங்கிக் கொண்டு இருந்தாள்!

எனக்கு தூக்கம் வரவில்லை. அதற்குக் காரணம் முன் நாள் அவளுடைய அருமைத் தம்பி தொச்சு, "அத்திம்பேர், டூ தௌஸண்ட் லோன் வேண்டும்" என்று கேட்டிருந்தான். அவன் இங்கிலீஷில் பேசினால் கடன் கேட்கப் போகிறான் என்று அர்த்தம்! அவனிடமிருந்து எப்படித் தப்பிப்பது என்று கவலைப்பட்டுக் கொண்டிருந்தபோது சமையலறையிலிருந்து ’டமால்’ என்று ஓசை. ஏதோ ஓர் பாத்திரம் விழுந்து உருண்டோடிய ஓசை.

கமலா சட்டென்று விழித்துக் கொண்டு, "என்ன... சமையலறையில் நீங்க ஏதாவது பூனைக் காரியம் செய்றீங்களா?" என்று கேட்டாள்.

"பூனைக் காரியமும் இல்லை; பானைக்காரியமும் இல்லை. சமையலறையில் ஏதோ பாத்திரம் விழுந்திருக்குது" என்றேன்.

"பாத்திரம் எப்படித் தானாக விழும்? எலியாத்தான் இருக்கும். முதலில் சமையலறைக் கதவை இழுத்து மூடிட்டு வாங்கோ" என்றாள்.

"அப்படியே ஆகட்டும்" என்று சொல்லிவிட்டு மூடிவிட்டு வந்தேன்.

மீண்டும் ஒரு மணி நேரத்துக்குப் பிறகு மற்றொரு பாத்திரம் விழுந்த ஓசை.

"நாசமாகப் போகிற எலி. ஜன்னல் வழியாக ஓடிப் போகாமல் பிராணனை வாங்கறது. முதலில் எலியை விரட்டப் பாருங்கோ. போன வருஷம் எலி வந்ததே, அப்ப என்ன ஆச்சுன்னு ஞாபகம் இருக்கா?" என்று கேட்டாள்.

"சரிதான், பொங்கலுக்குப் பட்டுப்புடவை வேண்டும்னு நீ நேத்து கேட்டதே மறந்து போயிட்டுது. போன வருஷம் எலி வந்ததா எனக்கு ஞாபகம் இருக்கப் போகிறது!" என்றேன்.

"ஆமாம்... எப்படி ஞாபகம் இருக்கும்னேன்? அந்த எலி, உங்கம்மாவின் பட்டுப்புடைவையை ரிப்பனாகக் கடித்துக் குதறிப் போட்டதும், என்னவோ நான் வளர்த்த எலிதான் புடைவையைப் பாழ் பண்ணிவிட்ட மாதிரி, உங்கம்மா வாய்க்கு வந்த வசவுகளாலும், ஏன் வாய்க்கு வராத வசவுகளாலும் எனக்கு அர்ச்சனை பண்ணினாளே, அது எப்படி உங்களுக்கு ஞாபகம் இருக்கும்?"

விளம்பர இடைவேளைக்கு நிறுத்துவது மாதிரி அவள் பேச்சை (ஏச்சை?) நிறுத்த அப்போது மற்றொரு (கதா!) பாத்திரம் விழுந்து ஓசைப் படுத்தியது!

"பார்த்தீங்களா! எலி பண்ற பாட்டை? பாத்திரம் எல்லாம் பாழ். முதல்லே போய் எலிப்பொறி வாங்கிண்டு வாங்கோ!" என்றாள்.

"கமலா... இப்பவே போய் எலிப்பொறி வாங்கிண்டு வந்துடுவேன். 24 மணி நேர எலிப்பொறி ஷாப் இருக்கா என்று தெரியவில்லையே!" என்றேன். பொறி பறந்தது, கமலாவின் கண்களில்.

"விடிஞ்ச பிறகு பார்த்துக் கொள்ளலாம்" என்றாள் சாந்தமாக! அளவுக்கு மிஞ்சினால் கோபமும் பாசமாகிவிடுமோ!

*****


மறுநாள்....

"பாத்து நல்ல எலிப்பொறியாக வாங்கிக்கொண்டு வாங்க" என்று கமலா சொன்னாள். எலிப்பொறி எங்கு கிடைக்கும் என்பது தெரியாததால் பல கடைகளில் ஏறி இறங்கினேன். ஒருவாறாக ஒரு எலிப்பொறியை, அதன் மூடி, கம்பிகள் பொருத்தப்பட்டுள்ள இடம், நீளம், அகலம் ஆகியவை வாஸ்து பிரகாரம் உள்ளனவா என்று சரி பார்த்து வாங்கி வந்தேன். (அது ஒன்றுமில்லை. கமலாவுக்கு வாஸ்து பித்து, தும்ம வேண்டுமானால்கூட, வாஸ்துவை அனுசரித்து வடகிழக்கு மூலையைப் பார்த்துதான் தும்முவாள்!)

எலிப்பொறியைப் பார்த்ததும் அப்போதே எலி பிடிபட்டதைப் போல கமலாவுக்குக் குஷி ஏற்பட்டது!

"இப்பவே போய் போளி பண்றேன்" என்றாள்.

"என்ன கமலா, எலிப்பொறி வாங்கினதுக்காக ஸ்வீட் பண்ணிக் கொண்டாடணுமா?"

"உங்க உளறலுக்கெல்லாம் பதில் சொல்லிக் கொண்டிருக்க எனக்கு நேரம் இல்லை" என்று சொல்லிவிட்டு, போளி தயாரிப்பில் இறங்கினாள்.

அன்று இரவு, போளித் துண்டை எலிப்பொறியில் வைத்துவிட்டு கமலா படுத்துத் தூங்கி விட்டாள். எலிக்குத் தொந்தரவாக இருக்கும் என்றோ என்னவோ அவள் குறட்டையும் விடவில்லை.

அந்த சமயத்தில் தெருவில் குப்பை லாரி போக, எங்கள் ஃபளாட் வெடவெட என்று நடுங்கியது. அடுத்த கணமே, 'டமால்’ என்று எலிப்பொறியின் கதவு மூடும் ஓசை கேட்டது.

கமலா சட்டென்று விழித்து எழுந்து, "எலி விழுந்துவிட்டது" என்றாள், ஏதோ லாட்டரியில் பரிசு விழுந்துவிட்ட மாதிரி.

கிச்சனுக்குள் போய்ப் பார்த்தாள். பொறியில் எலி இல்லை! "எலி இல்லையே... ஆச்சரியமா இருக்கே!" என்றாள்.

"கமலா... லாரி போனப்போ வீடு குலுங்கியது. மூடி தானாக மூடிக் கொண்டது..."

"இருக்கும்... சரி, இதுக்கு ஒரு வழி சொல்லுங்கோ."

"குப்பை லாரி வராத இடத்தில் ஃப்ளாட் வாங்கிக் குடிபோய் விடலாம். ம்." என்றேன். கமலா லேசர் பார்வையை வீச, நான் அம்பேல் ஆனேன்!

மறுநாள் மசால் வடை செய்து வைத்தாள். அன்றும் எலி விழவில்லை.

மறுநாள் தோசை வைத்தாள். பலனில்லை.

மறுநாள் அதிரசம் செய்து வைத்தாள். பலனில்லை.

எலிக்கு டயபடீஸோ என்னவோ... என்று நினைத்தேனே தவிர சொல்லவில்லை. "சனியன் படிச்ச எலி. எப்படிப் பிடிக்கறதுன்னு தெரியலையே!" என்று கமலா அலுத்துக் கொண்டாள்.

'எலி பிடிக்க எலிய வழி' என்று ஏதாவது புத்தகம் கிடைக்கிறதா என்று பார்க்கிறேன் என்று சொல்ல நினைத்தேன். ஆனால் சொல்லவில்லை. "எலிமென்டரி பள்ளி ஆசிரியர்களைக் கேட்டுப் பார்க்கட்டுமா?" என்று கேட்க நினைத்து அடக்கிக் கொண்டேன்.

அன்று இரவு வழக்கம்போல் எலி ஓசை கேட்டதும், கமலா என்னை எழுப்பினாள். "வாங்கோ, இன்னிக்கு என்ன ஆனாலும் சரி. சமைலறையைக் காலி பண்ணி, மேலே உள்ள பரணைக் காலி பண்ணி எலியைத் துரத்தாவிட்டால் என் காதை அறுத்துக் கொடுத்து விடுகிறேன்."

"வைரத் தோட்டோடுதானே?" என்று கேட்க நினைத்து வழக்கம்போல் கேட்கவில்லை! ஆனால், "கமலா, இந்த ராத்திரியிலேயா?" என்று கெஞ்சலாகக் கேட்டேன்.

"சரி... நீங்க போய்த் தூங்குங்க. நான் எடுத்து வைக்கிறேன்." எரிச்சலாகச் சொன்னாள்

பாத்திர ஷெல்ஃபில் மேல் தட்டிலிருந்து பாத்திரத்தை எடுத்தாள். கை தவறி அந்த பாத்திரம் கீழே விழுந்து, மேடையின் கீழே இருந்த சிலிண்டரின் மேல் மோத... திடீரென்று ஓர் எலி எங்கிருந்தோ வெளிவந்து, லாங் ஜம்ப், ஹை ஜம்ப், எல்லாவற்றையும் செய்து, ஒரே தாவாகத் தாவி ஜன்னல் வழியாக வெளியே ஓடியது!

இப்போது எங்கள் வீட்டில் எலி மட்டுமல்ல; காற்றுகூட உள்ளே வர முடியாதபடி சமையலறை ஜன்னல்கள், வென்டிலேட்டர்கள் ஆகியவற்றை கமலா அடைத்து விட்டாள். பழையபடி கமலா நிம்மதியாகத் தூங்க ஆரம்பித்தாள். எனக்குத்தான் தூக்கம் இல்லை. காரணம், கமலா விடும் குறட்டையின் டெஸிபல் இரண்டு மடங்கு அதிகமாகி விட்டிருந்ததுதான்!

கடுகு

© TamilOnline.com