கடுகு
கல்கி, எஸ்.வி.வி., தேவன், சாவி, துமிலன், நாடோடி வரிசையில் வைத்து எண்ணத்தக்கவர் 'கடுகு', 'அகஸ்தியன்' என்ற புனைபெயர்களில் எழுதி வரும் பி.எஸ்.ரங்கநாதன். தனக்கென்று ஒரு தனிப்பாணியை அமைத்துக் கொண்டு எழுதிவரும் இவர் சிறுகதை, நாவல், கட்டுரை, பேட்டிகள், துணுக்குகள் என்று படைப்பின் சகல பரிணாமங்களையும் கையிலெடுத்தவர். நகைச்சுவைக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து எழுதுபவர். செங்கல்பட்டு செயின்ட் ஜோசஃப் பள்ளியில் படித்த காலத்திலேயே எழுத்து, நாடகம் இவற்றின் மீது ஆர்வம் தோன்றிவிட்டது. அங்கே சகமாணவர் கோபுவுடன் (பின்னாளில் சித்ராலயா கோபு) இணைந்து நகைச்சுவை நிகழ்ச்சிகள் நடத்தினார். ஆத்தூர் சீனிவாச ஐயர் (சோவின் தந்தை), டி.ஏ. மதுரம் உள்ளிட்ட பலரது பாராட்டை அந்நிகழ்ச்சிகள் பெற்றன. உடன் படித்த ஸ்ரீதர் (பின்னாளில் இயக்குநர் ஸ்ரீதர்) எழுதிய நாடகங்களை பலமுறை மேடை ஏற்றிய அனுபவமும் இவருக்கு உண்டு. அது பின்னாளில் இவர் ஒரு நாடக நடிகராக, நாடகக் கதை ஆசிரியராக உயரக் காரணமானது. பள்ளியிறுதி வகுப்பில் முதல் மாணவனாகத் தேர்ச்சி பெற்றபின் செங்கல்பட்டில் இயங்கிவந்த 'சேவா சங்கம்' அமைப்புடன் இணைந்து சமூக, இலக்கியப் பணி முயற்சிகளை மேற்கொண்டார். அப்போது ஏற்பட்ட கல்கி, ராஜாஜி போன்றவர்களின் அறிமுகம் இவரது வாழ்வின் திருப்புமுனையானது.

இவரது எழுத்துக்களால் ஈர்க்கப்பட்ட கல்கி, 1952ல் 'பொன் விளையும் பூமி' என்ற கட்டுரையை கல்கியில் வெளியிட்டார். அதுமுதல் தொடர்ந்து பல கட்டுரைகளையும், துணுக்குகளையும் கல்கியில் எழுதினார். சென்னை பொதுத் தபால் அலுவலகத்தில் பணி கிடைத்தது. அப்போதும் நிறைய நாடகங்களை எழுதி அரங்கேற்றினார். சோ, கே. பாலச்சந்தர் எழுதிய நாடகங்கள் உட்படப் பலரது நாடகங்களை அரங்கேற்றியிருக்கிறார். நடித்திருக்கிறார். 'பணம் பேசுகிறது' என்ற தலைப்பில் இவர் எழுதிய நாடகத்தை கே. பாலசந்தர் இயக்கியிருக்கிறார். வானொலிக்காக சிவாஜியை நேர்காணல் செய்த அனுபவமும் உண்டு. நாடகங்களோடு பேட்டிகள், கட்டுரைகள், கதைகள் எழுதி வந்த இவர், டெல்லிக்கு மாறுதலானார். அங்கும் இவரது எழுத்துப் பணி தொடர்ந்தது. 'அரே டெல்லிவாலா' என்ற இவரது துணுக்குக் கட்டுரை குமுதத்தில் வெளியானதைத் தொடர்ந்து கட்டுரைகள், துணுக்குச் செய்திகள், பேட்டிகளும் வெளியாகின. இந்நிலையில் சாவி, தினமணி கதிருக்கு எழுதும்படி வேண்டிக் கொள்ளவே, அதற்காக 'அகஸ்தியன்' என்ற புனைபெயரில் 'பஞ்சு கதைகள்' என்ற தலைப்பில் நகைச்சுவைக் கட்டுரைகளை எழுதினார். நல்ல வரவேற்புக் கிடைக்கவே தொடர்ந்து நகைச்சுவையாகச் சாவியில் நிறைய எழுதினார்.

கடுகு பற்றி, அமரர் ரா.கி.ரங்கராஜன், "நகைச்சுவையாக எழுதக் கூடியவகளின் எண்ணிக்கை மிகவும் குறைந்துவிட்டது. நல்ல வேளையாக நாலைந்து பேர்கள் இருக்கிறார்கள். அவர்களில் குறிப்பிடத் தக்கவராக இருப்பவர் கடுகு" என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் அவர், "சுஜாதாவையும் சுப்புடுவையும் போல் டெல்லியிலிருந்து தமிழ்நாட்டின்மீது படையெடுத்த எழுத்தாளர்களில் ஒருவர் கடுகு. இவரைக் கண்டுபிடித்துக் கொடுத்த பெருமை குமுதம் இதழையே சேரும் என்று நினைக்கிறேன். டெல்லியில் வாழும் சாதாரணத் தமிழர்களைப் பற்றி இவர் எழுதிய கட்டுரைகள்தான் இவரைப் பிரபலமாக்கின. 'அரே டெல்லிவாலா' அமெரிக்க 'டைம்' பத்திரிகையில் வருவது போன்ற தகவலும் நடையும் கொண்டிருந்ததால் அமரர் எஸ்.ஏ.பி.க்கு பி.எஸ்.ஆரை மிகவும் பிடித்துவிட்டது. டெல்லி காங்கிரஸ் கமிட்டியின் வாசலில் பட்டாணி விற்பவனையும், புரோகிதம் பார்க்க ஸ்கூட்டரில் செல்லும் சாஸ்திரிகளையும், கொத்துமல்லி விற்கும் கீரைக்காரியையும் பேட்டி கண்டு எழுதுவதற்கு ஊக்கம் கொடுத்தார். 'கடுகுச் செய்திகள்' என்று நாலைந்து வரிகளில் துணுக்குகள் எழுதவே 'கடுகு' என்ற புனைபெயரே நிரந்தரமாகி விட்டது" என்கிறார்.

தான் எழுத்தாளர் ஆனது பற்றி கடுகு, "கல்கி, தேவன், சாவி, நாடோடி, துமிலன், ஆர்.கே.நாராயணன், எஸ்.வி.வி போன்ற நகைச்சுவை விற்பன்னர்களால் ஈர்க்கப்பட்ட நான் நகைச்சுவை எழுத முற்பட்டபோது, எனக்குத் திறமையைவிட ஆர்வம்தான் அதிகம் இருந்தது. எழுத வேண்டும் என்ற ஆர்வத்தை என்னுள் கல்கி விதைத்தார். அதைச் செடியாக வளர்த்தவர் எஸ்.ஏ.பி. அவர்கள்தான்" என்று நன்றியோடு நினைவுகூர்கிறார். மேலும் அவர், "எழுபதுகளில் சுஜாதாவை ஒரு சினிமா நடிகர் அளவுக்குப் பாப்புலராக்கியவர் சாவிதான். என் எழுத்து வராத இதழே இல்லை என்று பெருமையடித்துக்கொள்ளும் அளவுக்கு அவர் எனக்கும் வாய்ப்புகள் கொடுத்தார்" என்கிறார் நெகிழ்ச்சியுடன்.

எழுத்து, நாடகம் மட்டுமல்ல; விளம்பரம் மற்றும் கணிப்பொறித் துறைகளில் கடுகு விற்பன்னர். அஞ்சல் துறையை விட்டு விலகி ஹிந்துஸ்தான் தாம்சன் விளம்பர நிறுவனத்தில் சேர்ந்து பல புதிய முயற்சிகளைச் செய்திருக்கிறார். ஆர்வத்தால் கணினியறிவியல் கற்றுக்கொண்ட இவர், தாமே எழுத்துரு அமைக்கும் அளவுக்கு திறன் மிக்கவர். பலரும் பயன்படுத்தும் 'அழகி' மென்பொருளில் பயன்படுத்தப்படும் தமிழ் எழுத்துரு கடுகு உருவாக்கியதுதான். கடுகிற்கு கல்கியிடம் பக்தி அதிகம். தான் கட்டிய வீட்டுக்குக் 'கல்கி' என்று பெயர் வைத்திருக்கிறார், மகளுக்கு 'ஆனந்தி' என்று பெயர் சூட்டியவர், தன் புத்தகங்களைப் பிரசுரிக்கும் நிறுவனத்துக்கு 'நந்தினி' என்று பெயர் வைத்துள்ளார். தான் உருவாக்கிய எழுத்துருக்களையும் கல்கியை நினைவு கூரும் விதமாக கல்கியின் கதாபாத்திரப் பெயர்களாகவே அமைத்துள்ளார். 'சிவகாமி', 'குந்தவை', 'நந்தினி', 'வந்தியத்தேவன்', 'புலிகேசி', 'ராஜராஜன்', 'காவேரி', 'தாமிரபரணி', 'பாலாறு', 'வைகை', 'பொன்னி', 'பொருநை - இவையெல்லாம் கடுகு உருவாக்கிய தமிழ் எழுத்துருக்கள். 'ஆனந்தி' என்ற தமிழ் மென்பொருளையும் உருவாக்கினார்.

கடுகு எழுதியுள்ள பல நூல்கள் குறிப்பிடத் தகுந்தவை. "அலை பாயுதே கண்ணா" என்ற நாவல் அகஸ்தியன் பெயரில் வெளியானது. "சொல்லடி சிவசக்தி" என்ற நாவலும் குறிப்பிடத் தகுந்தது. சாவியில் வெளியாகி பலத்த வரவேற்பைப் பெற்ற தொடர் "கைதி எண் 46325." இவர் கல்கியில் எழுதிய "கடுகு பதில்கள்" வரவேற்பைப் பெற்ற ஒன்று. இவருடைய "கேரக்டர்" கட்டுரைகள் மிகச் சிறப்பானவை. "கமலா, தொச்சு" சீரிஸ் கதைகள் இவருக்கு மேலும் புகழ் சேர்த்தன. "ஐயோ பாவம் சுண்டு", "கமலா டியர் கமலா", "கமலா கல்யாண வைபோகமே" போன்ற நூல்கள் மத்திய தர வர்க்கத்தினரின் வாழ்வை நகைச்சுவையோடு சித்திரிப்பவை. பஞ்சு, பிரியம்வதா, பஞ்சு மாமி, காயாம்பூ போன்ற பாத்திரங்கள் மறக்க இயலாதவை. தொச்சு கதைகளில் வரும் தொச்சு என்ற பாத்திரமும் நகைச்சுவையானது. இது பற்றி கடுகு, "தேவனின் கதாபாத்திரமான குடவாசலை மனதில் வைத்துக் கொண்டுதான் என்னுடைய கமலா - தொச்சுகதைகளில் வரும் என் மைத்துனன் தொச்சுவை உருவாக்கினேன். தொச்சுவும் இன்று வாசகர்களின் அபிமானம் பெற்ற கேரக்டராகி விட்டான்" என்கிறார். இவரது "ரொட்டி ஒலி" கதைகள் சிரிப்புக்கு உத்தரவாதம்.

"அகஸ்தியன் தன் கதைகளில் மனைவி கமலா, மச்சினன் தொச்சு, தொச்சுவின் மனைவி அங்கச்சி, கதவின் பின்னால் நின்று பேசும் மாமியார், இவர்களைக் கொண்டு படைக்கும் நகைச்சுவை நம்மை நினைத்து நினைத்து சிரிக்க வைக்கிறது. திரு அகஸ்தியன் 'ஐயோ பாவம் சுண்டு' என்ற நாவல் எழுதியிருக்கிறார். பல வருடங்களுக்கு முன்னால் தினமணி கதிரில் தொடராக வந்தது இது. ஓவியர் ஜெயராஜ் இந்தக் கதைக்கு படங்கள் வரைந்தார். சர்க்கஸில் பஃபூன் ஆக இருக்கும் ஒரு குள்ள மனிதனான சுண்டுதான் கதாநாயகன். இந்தக் கதையில் நகைச்சுவை மட்டுமல்ல, நிறைய சஸ்பென்ஸும் இருந்தது. கமலஹாசன் நடித்த 'அபூர்வ சகோதரர்கள்', 'மைக்கேல் மதன காமராஜன்' இரண்டு படங்களிலுமே இந்த நாவலின் சாயலும் அமைப்பும் நிறையவே இருந்தன" என்று குறிப்பிடுகிறார், எழுத்தாளரும் வலைப்பதிவருமான சீதாலக்ஷ்மி.
டில்லியில் இருந்த ஒரு ஒரு தமிழ் அமைப்பின் துணைத் தலவைராகவும் கடுகு சில காலம் பணியாற்றியிருக்கிறார். தனது வாழ்க்கை அனுபவங்களை 'டில்லி வாழ்க்கை' என்ற தலைப்பில் கணையாழியில் எழுதியிருக்கிறார். சிறுவயது முதலே இவருக்குச் சித்திர எழுத்துகளில் (Calligraphy) ஆர்வம் இருந்தது. அந்தத் திறனை மேலும் வளர்த்துக்கொண்டு இன்று தானாகவே பல "Stereogram" எனப்படும் 3டி படங்களை உருவாக்குவதில் வல்லவராகத் திகழ்கிறார். பல்துறைச் சாதனையாளரான கடுகு தம்மிடம் விரும்பிக் கேட்போருக்கு 'எழுத்துருக்கள்' செய்து தருகிறார். இவரது மிக முக்கிய சாதனை தன் மனைவி கமலாவுடன் இணைந்து 'நாலாயிர திவ்யப் பிரபந்தம்' நூலை மிக அழகாகப் பதம் பிரித்து பெரிய எழுத்துருவில் வெளியிட்டதுதான். இரண்டு பாகங்கள் கொண்ட, எண்ணூறு பக்கங்களுக்கு மேற்பட்ட இந்த நூலை லாபநோக்கற்று மிகக் குறைந்தவிலையில் (ரு.200/-) தருகிறார். இவரது சாதனைகளைப் பாராட்டி தேவன் அறக்கட்டளையினர் 2006ல் இவருக்கு 'தேவன் விருது' வழங்கி கௌரவித்தனர். kadugu-agasthian.blogspot.in என்பது இவரது வலைப்பதிவு. அதில் தொடர்ந்து விதவிதமான தலைப்புகளில் எழுதி வருகிறார்.

வாழ்க்கை போரடிக்கிறது; வெறுப்பாக இருக்கிறது என்றெல்லாம் சொல்பவர்கள், வயதாகி விட்டதால் பொழுது போகவில்லை எனப் புலம்புபவர்கள், 82 வயதைக் கடந்தும், இன்றைய இளைஞர்களுக்குப் போட்டியாக எழுத்து, கணினித் துறை, விளம்பரத்துறை, வலைப்பூ என சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருக்கும் கடுகிடம் எப்படி வாழ்வது என்பதைக் கடுகேனும் கற்றுக்கொள்ளலாம்.

அரவிந்த்

© TamilOnline.com