விருந்தாவன் நாட்டிய அகாடமி: ஆண்டு விழா
ஏப்ரல் 6, 2014 அன்று விருந்தாவன் இந்திய நாட்டிய அகாடமியின் ஒன்பதாம் ஆண்டு விழா சான் ரமோன் நிகழ்கலை மையத்தில் நடைபெற்றது. அகாடமியின் டைரக்டர் டாக்டர். பிந்துஷங்கர் வரவேற்புரை வழங்கினார். ஒவ்வொரு நிகழ்ச்சி பற்றியும் விவரத்தைச் சுருக்கமாக பிந்துவின் கணவர் திரு. ஷங்கர் கூறியது பயனுள்ளதாக இருந்தது.

முதலில் பிரம்மபுத்ரா நதியின் சரித்திரத்துக்கு நாட்டிய வடிவம் அமைத்து, பிந்து ஷங்கர் தனது குழுவின் மூத்த நாட்டியக் கலைஞர்கள் மற்றும் மாணவர்களுடன் மிகத் திறம்பட நடனமாடினர். அடுத்து கல்யாணி ராகத்தில் அமைந்த ஜதிஸ்வரம் இடம்பெற்றது. தொடர்ந்து தேவமனோஹரி ராக வர்ணத்திற்கு மூத்த மாணவர்கள் நடனமாடினர். சென்னை கலாஷேத்ராவைச் சேர்ந்த ஸ்ரீமதி சாரதா ஹாஃப்மேன் இதற்கு நடன வடிவமைத்திருந்தார். பின்னர், ஆரம்பநிலை மாணவர்கள் கோலாட்டத்திற்க்கும் குஜராத்தி கர்பாவிற்கும் ஆடினர்.

பார்வதியையும் துர்க்கையையும் துதிக்கும் 'அம்பே சரண் கமல் ஹை தேரே' என்ற ஹிந்தி பஜனுக்கு மாணவர்கள் நாட்டியமாடினர். அடுத்து, ருக்மணிதேவி அருண்டேல் அவர்கள் வடிவமைத்த தோடி ராகத்தில் அமைந்த 'ரூபமு ஜூசி' என்ற தியாகராஜ சுவாமிகளின் வர்ணத்திற்கான நாட்டியம் இடம்பெற்றது. நடுநிலை மாணவர்கள் வழங்கிய நடபைரவி ராகத் தில்லானா திருமதி. அருண்டேல் அவர்களைப் புகழ்வதாக அமைந்திருந்தது. பிறகு விருந்தாவன் அகாடமி ஆசிரியர்கள் பிந்து ஷங்கர், ரூபல் படேல் மற்றும் சம்விகா மெஹ்ரா ஆனந்தபைரவி ராக க்ஷேத்ரஞான பதத்திற்கு நாட்டியமாடினர்.

இளம் பெண்ணான பார்வதி தன் தோழியிடம் தான் சிவனைச் சந்தித்தது பற்றிக் கூறும் கேதார ராக ஜாவளிக்குப் பின் ரூபல் படேலின் மாணவர்கள் கிருஷ்ணன் மேல் ஒரு குஜராத்தி பஜனுக்கு நாட்டியமாடினர். பின்னர் மஹிஷாசுர மர்தனி ஸ்லோகம் சேர்ந்திசைக்கு நாட்டியமாடினர். நிறைவாக, பாலமுரளி கிருஷ்ணாவின் குந்தலவராளி ராகத் தில்லானாவுக்கு மூத்த நாட்டியக் கலைஞர்கள் ஆடினர். பிந்து ஷங்கர் அவர்களின் நன்றியுரைக்குப் பின், மங்களம் பாடி விழா நிறைவெய்தியது.

E.K. ஜகந்நாதன்,
சான் ரமோன், கலிஃபோர்னியா

© TamilOnline.com