12வது ஆண்டுவிழா கொண்டாடும் ஆல்ஃபெரட்டா தமிழ்ப் பள்ளி
அட்லாண்டா மாநகரத்தின் ஆல்ஃபெரட்டா/கம்மிங் நகரத்தில் செயல்பட்டு வரும் ஆல்ஃபெரட்டா தமிழ்ப் பள்ளி மே 10, 2014 அன்று பைனி குரோவ் நடுநிலைப் பள்ளியில் தனது 12வது ஆண்டு விழாவைக் கொண்டாடவுள்ளது. இந்தப் பள்ளி (ATS) 2002-2003ஆம் கல்வியாண்டில் சின்மயா மிஷனின் 'தாய் மொழி செறிவூட்டல்' என்ற நெறியுடன் தொடங்கப்பட்டது. திருமதி. சுந்தரி குமார் மற்றும் திருமதி. ராதிகா வால்மீகி இருவரும் சின்மயா மிஷன் பாலவிஹாருடன் இணைந்து இதனைத் துவக்கினர். பின்னர் திருமதி.நர்மதா ஜெகன்னாதன் மற்றும் திரு. குப்புசுவாமி ஆகியோர் இப்பள்ளியுடன் இணைந்து இதன் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்தார்கள்.

2002-03ல் ஐந்து மாணவர்களுடன் துவங்கிய இப்பள்ளி, இன்று 415 மாணவர்கள், நூற்றுக்கும் மேற்பட்ட தன்னார்வத் தொண்டர்களுடன் இயங்கிக் கொண்டிருக்கிறது. 2008ம் ஆண்டுவரை தமிழ்நாடு மற்றும் சிங்கப்பூர் பாடத் திட்டத்தைப் பின்பற்றிய பின்னர், 2009ம் ஆண்டில் கலிஃபோர்னியா தமிழ்க் கழகப் பாடத்திட்டத்தின்கீழ் வந்தது. பள்ளி ஜார்ஜியா அக்ரெடிடேஷன் கமிஷனின் மதிப்பீட்டுத் தரச்சான்றிதழைப் பெற்றுள்ளது.

வருடந்தோறும் தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகைகள் இங்கே கொண்டாடப்படுகின்றன. இவற்றில் இடம்பெறும் கலை நிகழ்ச்சிகள் தமிழ் சார்ந்து அமைக்கப்படுகின்றன. சென்ற ஆண்டில் பள்ளிக்கென ஓர் இணையதளம் தொடங்கப்பட்டது. இந்த வருடம் நூலகம் தொடங்கப் பட்டுள்ளது. இதில் தமிழ் கதைப் புத்தகங்கள், இலக்கியங்கள், நாவல்கள் அனைத்தையும் பெற்றோர்கள் பயன்படுத்தி வருகின்றனர். தாம் படித்த நூலின் கருத்தைக் குறித்துக் கலந்துரையாடுகின்றனர்.

நிர்வாகப் பணிகளை முதல்வர் திருமதி.சுந்தரி குமார், துணை முதல்வர்கள் திரு. ராஜா வேணுகோபால், திரு. தங்கமணி பால்சாமி, டாக்டர். ராஜா நிக்கோலஸ், பொருளாளர் திருமதி. ராஜி பெருமாள், பதிவாளர் திரு. சிவா சேதுகணேசன் ஆகியோர் கவனித்துக் கொள்கின்றனர்.

அட்லாண்டா தென்றல் வாசகர்

© TamilOnline.com