தமிழ் ஆன்லைன் அறக்கட்டளை: புதிய ஆலோசகர்கள்
தமிழ் சார்ந்த தனிநபர்களுக்கும் அமைப்புகளுக்கும் தமிழ் கற்கவும், காக்கவும், மேலெடுத்துச் செல்லவும் நிதியுதவி செய்வதை நோக்கமாகக் கொண்டு தமிழ் ஆன்லைன் அறக்கட்டளை செயல்பட்டு வருகிறது. வட அமெரிக்காவிலும் பிற நாடுகளிலும் நன்கறியப்பட்ட தென்றல் இதழின் பதிப்பாளர்களால் தொடங்கப்பட்ட இந்த லாபநோக்கற்ற 501(c)(3) அமைப்புக்கு சி.கே. வெங்கட்ராமன் (பதிப்பாளர், தென்றல்), பிரபாகர் சுந்தர்ராஜன், மதுரபாரதி (முதன்மை ஆசிரியர், தென்றல்) ஆகியோர் இயக்குனர்களாக இருந்து வழிநடத்தி வருகின்றனர். திரு. சந்திரா போடபட்டி அவர்கள் ஆலோசகர்.

தென்றலின் வீச்சும், அறக்கட்டளையின் செயல்பாடுகளும் அதிகரித்து வரும் நிலையில் அதற்கேற்ற ஆற்றல்மிக்க நெறியாள்கையும், இயங்கு சக்தியும் மேம்படும் வகையில் மேலும் இருவர் தமிழ் ஆன்லைன் அறக்கட்டளையின் ஆலோசனைக் குழுவுக்கு நியமிக்கப்பட்டுள்ளனர் என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறோம். அவர்களைப் பற்றிய அறிமுகம்:

திரு. கோம்ஸ் பாரதி கணபதி
தென்றல் ஆசிரியர் குழுவில் பங்கேற்பு ஆசிரியராக (Contributing Editor) இருந்து வரும் இவர் நெல்லையருகே பாளையங்கோட்டை தூய சவேரியார் கல்லூரியில் அறிவியல் பட்டம் பெற்றவர். உடன்பயின்ற வைகோ இன்றும் இவருக்கு நெருங்கிய நண்பர். கிண்டி பொறியியல் கல்லூரியில் BE, ME பயின்று விரிவுரையாளராகப் பணியாற்றினார். 1980-84ல் ஓக்லஹோமா மாநிலப் பல்கலைக்கழகத்தில் சிவில் எஞ்சினியரிங் துறையில் முனைவர் பட்டம் பெற்றபின், உலகளாகிய பெக்டல் நிறுவனத்தில் 25 ஆண்டுகள் பணியாற்றினார்.

2004-05ல் இராக்கில் பாஸ்ரா/பாக்தாதில் குடிநீர் பொறியாளராகப் பணியாற்றுகையில் அமெரிக்கப் பாதுகாப்புத் துறை சிறப்பு விருது பெற்றார். 2011-13ல் ஆஸ்திரேலியாவில் மைனிங்/மெட்டல்-கட்டுமானப் பகுதி பயிற்சித் துறை நிர்வாகியாகப் பணியாற்றுகையில் Bechtel Distinguished Scientist சிறப்பு விருது பெற்றார். நாக்ஸ்வில்-டென்னசி பல்கலைக் கழகம் பொதுப் பொறியியல் துறையில் நெடுநாளாக வருகைப் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார்.

தமிழில் பேரார்வம் கொண்டவர். சிறு வயது முதலே பாரதியை மானசீக குருவாகக் கொண்ட கோம்ஸ், அமெரிக்கக் குடிமகனான போது, தன் இடைப் பெயரில் பாரதியின் பெயரை இணைத்துக் கொண்டதில் பெருமையுறுகிறார்.

தமிழ் நாடு அறக்கட்டளையின் (TNF) தன்னலமற்ற பணிகளினால் கவரப்பட்டு, அதில் பல பொறுப்புக்களை ஏற்றுப் பணி செய்ததோடு 2001-02 ஆண்டுகளில் அதன் தலைவராகப் பணியாற்றினார். தமிழ்ச் சங்கங்களின் அழைப்பில், அவ்வப்போது சென்று உரையாற்றுகிறார். பாரதி, மாணிக்க வாசகர், சித்தர் பாடல்கள் இவருக்கு பிடித்தமான பேசுபொருளானாலும், வட்டாரத் தமிழில் நகைச்சுவையோடு பேசுவதில் மிக விருப்பம். தினமணி கதிர், மங்கை, குமுதம் பத்திரிகைகளில் ஓரிரு படைப்புகள் வெளியான போதிலும் தென்றல் பத்திரிகையின் கவிதைப் பந்தல் தன்னைப் பெரிதும் வளர்த்திட்ட தளமாயிற்று என்பதில் பெருமிதம் கொள்கிறார்.

திரு. பிரபு வெங்கடேஷ் (BS, MBA)
சான் ஃபிரான்சிஸ்கோ வளைகுடாப் பகுதி தமிழ் மன்றத்தின் முன்னாள் தலைவர். அவ்வாண்டில் மட்டும் முன்னெப்போதும் காணாத வகையில் 24 நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்தார். சங்கத்தின் 33 ஆண்டுக் காலத்தில் திரட்டப்பட்ட நிதியைவிட அதிகம் அந்த ஒரே ஆண்டில் திரட்டிக் கொடுத்தார். சங்கரா கண் அறக்கட்டளை, சிவ-முருகன் ஆலயம், கேன்சர் இன்ஸ்டிட்யூட் அறக்கட்டளை, அய்யப்ப சமாஜம், ICC, சேவத்தான் போன்ற பல தன்னார்வச் சேவை அமைப்புகளில் தீவிரப் பங்கேற்று வருகிறார். பல நிறுவனத் தலைவர்களைச் சேவைக் களத்துக்குக் கொண்டு வருவதில் முனைந்து செயல்படுகிறார்.

சமூக ஊடக மார்க்கெடிங், நிகழ்ச்சி நிர்வாகம், நிதி திரட்டுதல் ஆகியவற்றில் விரிந்த அனுபவம் கொண்டவர். விரிகுடாப் பகுதி கர்நாடக சங்கீத ஆர்வலர்கள், விரிகுடாப் பகுதி கோவில்கள், விரிகுடாப் பகுதி சினிமா அன்பர் என்று பலதரப்பட்ட ஆர்வமுடையோருக்கும் முகநூல் பக்கங்கள் தொடங்கி நடத்தி வருகிறார். முக்கியமாக, லாப நோக்கற்ற சேவை நிறுவனங்களுக்கு நிதி திரட்டுவதில் நற்பெயர் பெற்றுள்ளார்.

இண்டியா கரண்ட்ஸ், உள்ளூர் வானொலி மற்றும் டி.வி. நிறுவனங்களுடன் நல்லுறவு கொண்டுள்ள இவர் கலிஃபோர்னியாவில் 15 ஆண்டுகளாக வசித்து வருகிறார். ஓர் அமெரிக்கப் பிரஜையும் கூட.

திரு. கோம்ஸ் பாரதி கணபதி, திரு. பிரபு வெங்கடேஷ் ஆகியோரைத் தமிழ் ஆன்லைன் அறக்கட்டளையின் ஆலோசனைக் குழுவுக்கு வரவேற்பதில் தென்றல் மகிழ்ச்சியும் பெருமையும் அடைகிறது.

© TamilOnline.com