கடப்பாறைக்கு சுக்கு கஷாயம்!!
ஜானகிராமனுக்கு தெய்வநாட்டம் மிகுதி. அவருடைய வழி வேறு. என் வழி வேறு.

இந்தோனேஷியாவில் ஒரு குரு தேவராம் (அப்படித்தான் ஞாபகம்). எனக்கு அவர் பெயர் மறந்துவிட்டது. அவர் ஒரு புதிய தியான முறையைப் போதிக்கிறாராம். அவருக்கு உலகம் எங்கும் சீடர்களாம். அவருடைய ஆசி பெற்ற தலைமைச் சீடர் ஒருவர் மயிலாப்பூரிலேயே இருக்கிறாராம். அவருக்கு தியான முறை போதிக்கும் அதிகாரம் இருக்கிறதாம். அவரது சீடர்கள் வாரம் ஒருமுறை அவர் இல்லத்தில் கூடி தியானப் பயிற்சி செய்வது வழக்கமாம். ஜானகிராமனும் ஒரு சீடர். அவர் தியானத்திற்கு என்னையும் கூப்பிட்டார்.

"அது என்ன புதிய தியான முறை?" என்று கேட்டேன்.

"எல்லோரும் ஒரே ஹாலில் கூடுவோம். தனித்தனியாக அமருவோம். ஆசனம் என்று எதுவுமில்லை. மந்திரம் இல்லை. சிரிப்பு வந்தால் சிரிக்கலாம். அரிப்பு வந்தால் சொரிந்து கொள்ளலாம். கொட்டாவியை அடக்க வேண்டாம். கவனம் மட்டும் அகத்தில் இருக்க வேண்டும், இருக்க முயல வேண்டும்."

"எனக்கு நம்பிக்கை உண்டாகவில்லை. இந்தோனேஷிய குருவை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா?"

"இல்லை. அடுத்த வருடம் இந்தியா வருகிறார், பார்ப்பேன். தியானத்தில் கலந்து கொண்டால் உங்களுக்கு நன்மை உண்டாகும்."

"என்னைச் சேர்த்துக் கொள்ள மாட்டார்கள்"

"நான் பேசி ஏற்பாடு செய்கிறேன்"

இருவரும் தலைமைச் சீடர் (வக்கீல் என்று ஞாபகம்) வீட்டுக்குப் போனோம். ஜானகிராமன் அங்கே கூடியிருந்த ஒரு டஜன் சீடர்களிடமும் என் கஷ்டத்தைச் சொல்லி, என்னை அன்றைய தியானத்தில் கலந்துகொள்ள அனுமதி கேட்டார். "இது எங்களால் ஆகாத காரியம். குருதேவர் நேரில் பார்க்க வேண்டிய கேஸ்" என்று சொல்லி சீடார்கள் மறுத்து விட்டார்கள்.

ஜானகிராமன் திரும்பியதும் கேட்டேன். "என்னய்யா இது என்னைப் பார்த்து இவர்கள் இப்படி பயப்படுகிறார்கள்?"

"ம்ம்ம். இம்மாதிரி பயங்கரமான சமாசாரங்களை (காதில் குரல் கேட்பது, கண்களுக்கு பலவகைக் காட்சிகள், தோற்றங்கள் தெரிவது இப்படி) அவர்கள் கேட்டதில்லையாம். இந்தோனேஷியாவுக்கு எழுதி குருவின் யோசனையைக் கேட்பதாகச் சொன்னார்கள். நாளைக்கே எழுதி விடுவார்கள்."

"நான் விழுங்கி இருப்பது கடப்பாறை. சுக்குக் கஷாயம் என்ன செய்யும்?"

எம்.வி. வெங்கட்ராம் எழுதிய "நானும் என் இலக்கிய நண்பர்களும்" நூலிலிருந்து...

© TamilOnline.com