ஆத்ம சாந்தி
அத்தியாயம்-3

நண்பன் தந்த அதிர்ச்சி
தாம்பரம் தாண்டியதும் பரத் இருந்த மின்வண்டிப் பெட்டி மொத்தமாகக் காலியானது. பரத் ஜன்னலிலிருந்து பார்வையைக் கழட்டி பெட்டிக்குள் செலுத்தினான். இஞ்சி மொரப்பா, சேஃப்டி பின் வாங்குமாறு கெஞ்சிக்கொண்டே இருந்த சிறுவன் கூட்டம் காலியானதும் ஓய்ந்து போய் ஒரு ஓரமாக உட்கார்ந்து காசை எண்ணிக் கொண்டிருந்தான். அவனைத் தவிர ஹிண்டுவில் வரும் லெட்டர்ஸ் டு எடிட்டர் கடிதங்களைப் பற்றி விரிவாகப் பேசிக்கொண்டு வந்த இரண்டு வயதானவர்களைத் தவிர வேறு எவரும் அந்தப் பெட்டியில் இல்லை. இன்னுமே, அந்த சூழ்நிலைக்கு ஒட்டாமல் தெரிந்த பரத் பார்வையை யாரும் இல்லாத எதிர்ப்பக்கம் செலுத்தினான். அஞ்சால் அலுப்பு மருந்து, ஆறே நாளில் ஆங்கிலம், சகாயவிலையில் சகல வசதிகளோடு ஃப்ளாட்டுகள், ஜேப்படி திருடர்கள் எச்சரிக்கை போன்ற விளம்பர நோட்டீசுகளின் மத்தியில் பத்தாவது படித்தவர்களுக்கு துபாயில் வேலை என்ற விளம்பரம் பரத்தின் பார்வையை ஈர்த்தது. துபாய்... துபாய்... போன வாரம் நாயர் கடையில் மனோகரோடு நடத்திய விவாதம் பரத்தின் மனதில் ஓடியது.

பரத்தும் மனோகரும் ஒன்றாகத்தான் பள்ளிப்படிப்பை முடித்தார்கள். மேல்படிப்பும் ஒரே இடத்தில் படிக்கவேண்டும் என்று நினைத்தார்கள். பரத் மேல்படிப்புக்கு ஏதாவதொரு கல்லூரியில் இடம் கிடைக்காதா என்று தன் அப்பாவோடு அலைந்து கொண்டிருந்த போது, கனகராஜ் மனோகரை திட்டவட்டமாக எஞ்சினீயரிங் கல்லூரியில் சேர்ந்தே ஆகவேண்டும் என்று ஒற்றைக்காலில் நின்றார். பரத்தைப் போலவே மிகக் குறைவாகவே மதிப்பெண்கள் வாங்கியிருந்தபோதும் கீழக்கரையில் ஒரு செல்ஃப் ஃபைனான்சிங் கல்லூரியில் அதிகப் பணம் கட்டி மனோகரை சிவில் எஞ்சினீயரிங் படிக்க இடம் பிடித்துவிட்டார்.

மனோகருக்குக் காமர்ஸ் படித்து அலுவலக வேலைக்குப் போக ஆர்வம். தவிர எஞ்சினீயரிங் படிக்கும் அளவுக்குத் தனக்கு அறிவோ உழைப்போ இருப்பதாக அவன் நம்பவில்லை. இதற்கெல்லாம் மேலே பரத்தை விட்டுப் பிரிந்து போய் வேறெங்கோ படிக்கவேண்டும் என்று நினைக்கும்போதே அவனுக்கு பாஸ் பண்ணாமலேயே இருந்திருக்கலாமோ என்று தோன்றியது. ஆனாலும், கனகராஜை எதிர்த்துப் பேச தைரியம் இல்லாததால் வாயை மூடிக்கொண்டு கீழக்கரைக்குப் பெட்டியைக் கட்டினான். கனகராஜ் பரத்தையும் மனோகரோடு எஞ்சினீயரிங் சேரச் சொல்லி மோகனிடம் சிபாரிசு செய்தார். கல்லூரியில் சேர்க்கத் தேவையான பணத்தைக் கடனாகத் தானே தருவதாகவும் சொன்னார். ஆனால், மோகன் அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை. கடன் வாங்குவதோ, தகுதிக்கு மீறி ஆசைப்படுவதோ அவருக்குப் பிடிக்காததால் பெரும் முயற்சிக்குப் பிறகு, சட்டக்கல்லூரியில் அவனுக்கு இடம் பிடித்தார்.

இப்படியாக, மேல்படிப்பின் காரணமாக பரத்துக்கும். மனோகருக்கும் இடையே இருந்த நட்பில் முதல்முறையாக ஒரு இடைவெளி விழுந்தது. இருவரும் கடிதப் போக்குவரத்து, ஈமெயில், விடுமுறை நாட்களில் சந்திப்பு என்று எப்படியோ அந்த இடைவெளியைக் கடந்துவிட்டார்கள். பரத்துக்கும் ஆறு மாதம் முன்பே மனோகர் தன் பட்டப்படிப்பை முடித்திருந்தான். அவனும் அரியர்மேல் அரியர் வைத்திருந்தாலும், பரத்தோடு ஒப்பிடும்போது பரவாயில்லை. இனியாவது, மேலே எது செய்வதாயிருந்தாலும் இருவரும் ஒரே ஊரில், ஒரே இடத்தில் ஒன்றாக செய்வது என்று எழுதிக் கையெழுத்திடாமல் ஒரு ஒப்பந்தமே போட்டிருந்தார்கள். இருவருமே மிகவும் அசுவாரசியமாகத்தான் வேலை தேடிக்கொண்டிருந்தார்கள்.

மனோகரை கனகராஜ் தன்னோடு கடைக்கு வந்து பொறுப்பு எடுத்துக்கொள்ள அழுத்தம் கொடுத்துக் கொண்டே இருந்தார். "நான் ஒரு சிவில் எஞ்சினியர், என்னை உங்க ஆட்டோமொபைல் ஸ்பேர் பார்ட்ஸ் கடையிலே வந்து உக்கார சொல்றீங்களே. என் மொத்தப் படிப்பும் வேஸ்ட் ஆயிறாதா. மொதல்ல என் துறையிலே கொஞ்சம் எக்ஸ்பீரியன்ஸ் கிடைக்கட்டும், அப்புறம் உங்க கடைக்கு நானும் வந்து பொறுப்பு எடுத்துக்கறேன்" என்றான் மனோகர். மகன் முதல்முறையாகத் தன்னை மறுத்துப் பேசுகிறானே என்று கனகராஜ் திடுக்கிட்டாலும், அவன் தெளிவாகவும் பொறுப்பாகவும் பேசியது கேட்டுச் சந்தோஷப்பட்டார். "நீ என்ன செய்யிறயோ செய். ஆனா வீட்ல சும்மா உக்காராதே. நீயே ஒரு கன்ஸ்ட்ரக்‌ஷன் கம்பெனி ஆரம்பிக்கணும்னாலும் நான் பணம் தரேன். சீக்கிரம் லைஃப்ல செட்டில் ஆகணும்."

"இல்லப்பா சீக்கிரம் நான் ஒரு வேலை தேடிக்கிறேன். ரெண்டு இல்லை மூணு வருஷத்துலே நான் சம்பாதிக்கிற பணத்தை வெச்சு சொந்தமா நானே கன்ஸ்ட்ரக்‌ஷன் கம்பெனி ஆரம்பிக்கிறேன். அப்ப உங்க உதவி தேவைப்பட்டா கேக்கறேன். அதைக் கொஞ்சம் நிலை நிறுத்திட்டு, நம்ம கடை பொறுப்பையும் ஏத்துக்கிறேன். போதுமா."

கனகராஜ் பையன் உண்மையிலேயே சொந்தக்காலில் நின்று, சொந்தமாகத் தொழில் ஆரம்பிக்க முனைப்பாக இருப்பதாக மனோகர் சொன்னதை வைத்து நம்பிவிட்டார். அப்பா, மனோகர் இதை அவகாசம் தேடுவதற்கான உத்தியாக உபயோகப்படுத்துவான் என்று சந்தேகம் கொள்ளவில்லை. பிள்ளைகள் நிற்பது, நடப்பது, ஏன் நினைப்பதற்குக் கூட சரியாக அர்த்தம் கண்டுபிடிக்கும் பெற்றோர்கள், அவர்கள் வளர வளர ஏதோ ஒரு தருணத்தில் எதனாலோ அந்தத் திறமையை இழந்துதானே போகிறார்கள்? பிள்ளைகளும் பெற்றோர்கள் கண்டுபிடிக்கமுடியாமல் பொய் சொல்லும் சாமர்த்தியத்தை கற்று கிராஜுவேட் ஆகும் அந்தத் தருணத்தில், முதல் முறையாக அன்னியமாகப் போகிறார்கள்.

மனோகர் எப்படியாவது ஒரு வேலை தேடிக்கொண்டு சொந்தக்காலில் நின்று அதில் நல்லபடியாக முன்னுக்கு வந்தால், அப்பாவின் சொந்த பிசினஸ் ஆசையை ஒதுக்கிவிடலாம் என்று நினைத்தான். அவன் நினைத்தாற் போல் சென்னையில் அவ்வளவு எளிதாக வேலை கிடைக்கவில்லை. புது கட்டடம் கட்ட வந்து குவியும் ஜல்லி மாதிரி வருஷா வருஷம் எஞ்சினீயர்கள் சந்தையில் குவிந்து கொண்டிருந்தார்கள். இதில் பாதிப்பேர் தங்கள் துறையில் நன்கு தேறியவர்கள். இவர்களே இருக்கிற வாய்ப்புக்களை மொத்தமாக அள்ளிக்கொண்டார்கள். சிங்கம் சாப்பிட்டு வேண்டாம் என்று போட்ட மிச்சத்தை நரிகளும், கழுதைப்புலிகளும் தின்ன அலைவது போல, ஒரு மாதிரி கலந்துகட்டி எஞ்சினீயரிங் முடித்த மனோகர் வகையறாக்கள், இந்த நன்கு தேறிய வகையறாக்கள் சீண்டாத மிச்ச சொச்ச வேலை வாய்ப்புக்கு ஆலாய்ப் பரந்தார்கள்.

இரண்டே மாதத்தில் மனோகர் இது வேலைக்காகாது என்று புரிந்துகொண்டான். எஞ்சினீயரிங் முடித்துவிட்டானே ஒழிய அவனுக்குச் சரியாக ஒரு ப்ளூ ப்ரிண்ட் கூட போடத் தெரியாது. சும்மா இருந்தால் கனகராஜ் கண்ணில் அடிக்கடி பட்டு, மறுபடி கடைக்கு வா என்று புராணம் பாடுவாறே என்று பயந்து ஜாவா படிக்க கம்ப்யூட்டர் கோர்ஸில் செர்ந்தான். இப்படி அவன் ஆறு மாதம் ஓட்டிய சமயத்தில்தான் பரத் தட்டுத்தடுமாறி பி.எல். முடித்தான். அவனுக்கு மனோகர் படிப்பு முடித்து சென்னைக்கே மறுபடி வந்து சேர்ந்தது பெரும் மகிழ்ச்சியைத் தந்தது. இருவருக்கும் மற்ற வேலைகள் போக நிறைய நேரம் கிடைத்ததால், முடிந்த போதெல்லாம் பீச்சிலோ, நாயர் கடையிலோ போய் உட்கார்ந்துகொண்டு இத்தனை நாள் விட்டுப் போனதற்கும் சேர்த்து வைத்துப் பேசிக்கொள்வார்கள்.

எதை எதையோ பேசினாலும் எப்படியாவது கடைசியில் யாருடைய அலுவலகத்திலோ அடுத்தவருக்குப் பணிந்து வேலை பார்ப்பது நல்லதா? இல்லை சொந்தமாகத் தொழில் செய்வது நல்லதா? என்ற விவாதத்தில்தான் வந்து முடிப்பார்கள். பரத்துக்கு மனோகர் கம்ப்யூட்டர் கோர்ஸ் சேர்ந்தது சுத்தமாகப் பிடிக்கவில்லை. "இதெல்லாம் டிப்ளமா, கரஸ்பாண்டன்ஸ்ல டிகிரி முடிச்சவங்கல்லாம் பண்ற வேலை. எஞ்சினீயரிங் முடிச்சிட்டு இப்ப எதுக்குடா நீ கம்ப்யூட்டர் கோர்ஸ், ப்ரோக்ராமிங் எல்லாம் கத்துக்கற?"

"எந்த இண்டர்வியூ போனாலும், இதைப் பண்ணியா அதை பண்ணியானு நாம வாங்கின டிகிரிக்கு மேலே கேக்கறாங்க. சும்மா சுத்திட்டிருக்கறதுக்கு இதாச்சும் பண்ணிறலாம்னுதான். எந்த சிவில் எஞ்சினீயரிங் வேலையும் கெடைக்கலைன்னா ஏதாவது கம்பெனில ப்ரோக்ராமரா சேந்துடலாம்னு இருக்கேன்."

"ஏண்டா உன்னையே இப்படி மட்டமா இந்த கார்ப்பரேட் சமூகத்துக்கு வித்துக்கற? உருப்படியா மாசாமாசம் சம்பளம், அப்புறம் ஒரு ரொடீன் ப்ரமோஷன், ஏசி ரூம்ல ஆபீஸ், ஒரு கம்ப்யூட்டர், உக்காந்து தேய்க்க ஒரு சேர் கிடைச்சாப் போதும், அது என்ன வேலைன்னாலும் ஓகே, அப்படித்தானே. உனக்குனு சுயமா இந்த வேலைதான் பாக்கணும், இந்தத் துறைல இதைப் பண்ணனும்னு ஒரு ஆசை, லட்சியமெல்லாம் இல்லையா?"

"ஏய் இவ்வளவு பேசுற ஒனக்கு லட்சியம் இருக்கா?"

"இருக்கு, எனக்கு சொந்தமா நானே ஒரு தொழில்ல முன்னுக்கு வரணும். ஆட்டோமொபைல் இல்லை அது மாதிரி ஒரு இண்டஸ்ட்ரீல ஒரு பெரிய கண்டுபிடிப்பு, மாற்றம் கொண்டுவந்து அப்படியே இந்த உலகத்தையே கலக்கணும். பெரிய பணக்காரனாகணும். உலகத்தையே சுத்தி வரணும்."

"நல்லா கண் முழிச்சிக்கிட்டே கனவு காணு, பரத், தூங்கிட்டியா?" செல்லமாகக் கிள்ளினான். பரத் கோபமாக முறைத்ததும், "கோச்சுக்காதேடா, என்னவோ பெருசு பெருசா கனவு வெச்சிருக்க, சம்மந்தமே இல்லாம முக்கி முக்கி ஒரு பி.எல். பாஸ் பண்ணியிருக்க. இதுக்கும் நீ சொன்னதுக்கும் என்னடா சம்மந்தம்?"

இப்போது பரத் வெறுமையாகப் பார்த்து "இப்ப வரைக்கும் சம்மந்தம் இல்லைதான். ஆனா எனக்குள்ள ஏதோ ஒண்ணு சொல்லுது, நான் அடையணும்னு நெனைக்கறதை எப்படியும் நான் எட்டுவேன்னு. எப்படினு இன்னும் தெரியலை"

"சரிடா என்ன வழக்கத்துக்கு விரோதமா எமோஷனலாவுற? கூல் கூல். சரி உன் லட்சியத்தை சொல்லிட்ட, என் லட்சியம் என்னன்னு கேட்டீயில்ல, என் லட்சியம் எங்க அப்பா கடைல நானும் போய் ஒக்காராம, 9-5 உத்தியோகத்துக்கு போறது. அது நான் படிச்சதுக்கு ஏத்த துறையாயிருந்தா நல்லது. இல்லைனா, எங்க வேலை கிடைக்குதோ அங்க போயி சேற எது வேணா செய்வேன்."

"உன்னையெல்லாம் திருத்தவே முடியாதுடா, எங்க வேணா வேலைக்குப் போ, ஆனா இனிமே இந்த சென்னையை விட்டு, என்னை விட்டு எங்கியும் போயிறாத. நானும் போவமாட்டேன். சத்தியம் நெனப்பிருக்கில்ல" என்றான் பரத். இருவரும் கலகலவென சிரித்தார்கள்.

போன வாரம் இதேபோல் இரவு ஒன்பது மணி அளவில் ஊரடங்கும் நேரத்தில், நாயர் கடையில் பரத்தும் மனோகரும் சந்தித்துக் கொண்டார்கள். நாயர் கடையை சரியாக பத்து மணிக்கு மூடிவிடுவார். ஒரு சில வழக்கமான ஆட்டோக்காரர்களும், வண்டிக்காரர்களும் ஒன்பதரை அளவில் வந்து போனபிறகு, மிச்சம் மீதாரமான பண்டங்களை ஒழித்துப் போட்டுவிட்டு கடையைச் சாத்திவிட்டுப் போகும்வரை பரத்தும் மனோகரும் உட்கார்ந்திருந்து விட்டுப் போவார்கள். நாயர் போட்டுத் தரும் அந்த நாளின் கடைசி டீ, காலையில் அவர் போட்டுத்தரும் முதல் டீயைப் போலவே தரமும், சுவையும் குறையாமல் இருக்கும். அன்றும் அப்படித்தான் இருந்தது.

"நாயர் உங்களை ஒண்ணு கேக்கணும்னு ரொம்ப நாளா நெனச்சிட்டிருப்பேன். இன்னிக்குக் கேட்டுடறேன்."

"ஓ!"

"அது எப்படி காலைல ஃப்ரெஷ்ஷா இருக்கும்போது எப்படி சூப்பரா ஒரு டீ போடறீங்களோ, அதே மாதிரி நைட் கடைய சாத்தும்போது கூட போடறீங்க?"

"அது மேஜிக் ஒண்ணுமில்லா. பட்சே ஒரு சிறிய லோஜிக் உண்டு. ஞான் எண்ட ஜோலியை ஹிருதய பூர்வமாய் நேசிக்குன்னு. அதே எப்ப டீ போட்டாலும், சேம் டேஸ்ட், சேம் க்வாலிடி. எந்தொக்க ஜோலியையும் நேசிச்சால் சக்சஸ்தான். இதானும் சூட்சுமம்."

"கேட்டுக்கடா மனோகரா, சூட்சுமத்தை. டீக்கடை நாயருக்குத் தெரியுது உனக்குப் புரியலையேடா. யார் யாரையோ பிசினஸ் மேனேஜ்மெண்ட் ஸ்கூல்ல கூப்புட்டு லெக்சர் குடுக்கச் சொல்றாங்க, உங்களை மாதிரி சொந்தக் கால்ல நிக்கிற, தொழில்ல அக்கறை காட்டறவங்களைக் கூப்பிட்டு லெக்சர் குடுக்க சொன்னாவே இப்படி கம்பெனில எவனுக்கோ காவடி தூக்கணும்னு நெனைக்கிற ஜென்மங்கள் திருந்தும்."

மனோகர் சாதாரணமாக இப்படியெல்லாம் உசுப்பேத்தினால் பொங்கிவிடுவான். ஆனால் அன்று ஏனோ அமைதியாக, வேறெதையோ யோசித்துக் கொண்டிருந்தான்.

"அது சரி நாயர். என்னதான் இந்த தொழில் உங்களுக்குப் பிடிச்சிருந்தாலும் இப்படி காலைல அஞ்சு மணிலேருந்து ராத்திரி பத்து மணிவரைக்கும் செஞ்ச வேலையைவே செய்துகிட்டு, இப்படி அடுப்படில வாடறது உங்களுக்கு எப்படி முடியுது?" பரத் தொடர்ந்தான்.

"பரத் ஏட்டா. ஞான் நிங்களை ஒண்ணு சோதிக்கும். நிதம் நீயும், ஈ மனோஹரனும் எடம் எடமாய் போயிட்டு இதோ ஈ டீ ஷோப்புக்கு வந்து பேசினதையே பேசிட்டு டீயையும் குடிச்சுட்டு போறீங்க. நிதம் இதே ஜோலி. இது நிங்களுக்கும் போரடிக்கலையா?"

"போரா, என்ன நாயர் இது எங்களுக்கு ஜாலியா இருக்கு. இதையே ஆயுசு பூரா பண்ணனும்னாலும் நான் பண்ணிட்டிருப்பேன். இதோ இவனும் பண்ணுவான். எப்பவும் நாங்க ஒண்ணா ஒரே ஊர்ல வேலை, குடும்பம்னு இருக்கணும்னு டிசைட் பண்ணியிருக்கோம்." மனோகரைத் திரும்பிப் பார்த்தான். இப்போது மனோகர் இன்னும் கவலையோடு அந்த சம்பாஷணையில் கலந்து கொள்ளாமல் தலையைத் திருப்பிக் கொண்டான்.

"அதே அதே. எனிக்கும் அதே. நிதம் டீ போடறது, கஸ்டமருக்கு வேணம்கிறதை சிரிப்போட செய்யறது, பதிலுக்கு கஸ்டமர் திருப்தியோட காசைக் குடுத்துட்டு போறது எனிக்கு ஜாலியா இருக்கு."

"அதுவும் ஓகே நாயர். ஆமா ஒரு அசிஸ்டன்ட் இருந்தானே உங்களுக்கு எங்க ரெண்டு மாசமா காணும்? கூடமாட ஒத்தாசைக்கு ஆளுங்க வெச்சுக்கக் கூடாதா? இதே கடைய பெரிசாக்கி இன்னும் வளரலாமே?"

"யாரு அந்த நாணாவா? அவன் ஓடிப்போயி. ஆனா நல்லபடி செட்டிலாயி. ஆயாளு இப்ப துபாயில் ஒரு வேலையில் சேந்து."

"துபாயா? அவனுக்கு என்ன வேலை தெரியும்? டீக்கடைலயே கஸ்டமருங்ககிட்ட பம்மிகிட்டே நிப்பானே!"

"எல்லாம் லேபரர் வேலை, அங்க ஈச்சமரத்துக்கு வெள்ளம் வார்க்க, பில்டிங் வேலை இப்படி ஏதானும். ஏஜெண்ட் மூலம் போயிருக்கு. ஏதோ நல்லபடி ஜீவிச்சா மதி. சரி, சரி கடை க்ளோஸ் செய்யணும்,. ஒன் பை டூ டீ கேட்டில்லே, இதோ..." டீ கிளாசை பரத்திடமும் மனோகரிடமும் தந்தார். மனோகர் கண்களை நேரடியாகச் சந்திக்காமல் டீயை சட்டென வாங்கிக் கொண்டான்.

சுற்றிலும் இப்போது நிசப்தமாகியிருந்தது. தூரத்தில் குரைத்துக் கொண்டிருந்த நாய்கள்கூட ரோட்டோரம் அடங்கிவிட்டன. அவை விட்டுக்கொடுத்த மிச்ச இடத்தில், ரோட்டோரத்தில் அடங்கும் பாவப்பட்ட மனித ஜென்மங்கள் கிழிசல் போர்வை, வால் போஸ்டர் படுக்கை இவற்றுள் ஒடுங்கிவிட்டன. அந்த நிசப்தத்தை குலுக்குவது போல் மனோகர் பரத்தை நேருக்குநேர் பார்த்து "பரத் நான் உங்கிட்ட ஒரு முக்கியமான விஷயம் சொல்லணும்னு காலைலேருந்து நெனச்சிட்டிருந்தேன். எப்படி சொல்றதுனு தெரியலை. நானும், நானும் இன்னும் ரெண்டு வாரத்துலே துபாய் போகப் போறேன். அப்பாயிண்ட்மெண்ட் ஆர்டர் இன்னிக்குத்தான் கெடச்சுது" என்றான்.

குடிக்க வாய்வரை எடுத்துப்போன டீயைக் குடிக்காமல் பக்கத்தில் வைத்துவிட்டு அதிர்ச்சியாக "என்னடா சொல்ற மனோ. எப்ப துபாய் போக வேலைக்கு அப்ளை பண்ணின? எங்கிட்ட கூட சொல்லலை. இந்த வேலைய ஒப்புக்கவா போற?"

"அவசரப்படாத பரத். எனக்கு வேற வழி இல்லை. எனக்கு என் துறையில இந்த ஊர்ல வேலை கிடைக்காதுனு தெரிஞ்சு போச்சு. சரின்னு கம்ப்யூட்டர் கோர்ஸ் சேந்தேன். அங்கியும் இதே பிரச்சனை. கொத்து கொத்தா, எனக்கு பத்து மடங்கு திறமையோட ஆளுங்க எங்க போனாலும் போட்டிக்கு இருக்காங்க. அப்பா வேற தெனமும் வேலை கிடைக்கலைனா, கடைக்கு வான்னு டார்ச்சரை மறுபடி ஆரம்பிச்சிட்டாரு. அதனாலே போன மாசம் துபாயில இருக்கிற எங்க மாமாகிட்ட என் நிலைமையைச் சொன்னேன்."

"யாரு மலர் அக்காவோட ஹஸ்பண்ட் கிட்டயா?"

"ஆமா, அவர் கேட்ட உடனேயே ரொம்ப சந்தோஷமாயிட்டாரு. உடனே உனக்கு இங்க கன்ஸ்ட்ரக்‌ஷன் கம்பெனில சூப்பர்வைசர் உத்தியோகம் வாங்கித் தரேன். எங்ககூட இங்க இரு, மலருக்கும் சந்தோஷமாயிரும்னு சொன்னாரு. சொன்ன மாதிரியே வேலை வாங்கிக் குடுத்துட்டாரு. என்ன, ஆபீசுல ஒக்காந்து வேலை பாக்கணும்னு பாத்தேன். இது முழு நேரமும் வெளியிலே நிக்க வேண்டிய வேலை. எங்க அப்பா கடைல உக்கார்றதை விட இது மேலுன்னு ஒத்துக்கிட்டேண்டா."

"ஒத்துக்கிட்டயா? என்னடா சொல்றே? அப்ப என்னை விட்டுட்டு துபாய் போகப்போறியா? இங்கியே நாம ரெண்டு பேரும் ஒரே ஊர்ல வேலை செய்யலாம்னு சொன்னியேடா!"

"சொன்னேந்தான் பரத் ஆனா, நாம கொஞ்சம் ப்ராக்டிகலா பாக்கணும். நம்ம சுத்தி இருக்கிற இந்த சமூகமும், பொருளாதாரமும் நம்ம நெனச்ச மாதிரி இருக்கவிடாது. என்னாலே இங்க எங்க அப்பா கடையில உக்கார முடியாது. இப்ப துபாய் போனா, மூணே வருஷத்துல கை நிறைய பணத்தோட திரும்பமுடியும், அப்ப அந்த எக்ஸ்பீரியன்சை வெச்சு இங்க வேலை தேடிக்கலாம். இப்ப போகலைனா, நான் எப்பவும் வெளியில வேலைக்குப் போகமுடியாது. புரிஞ்சிக்க."

பரத் மனோகர் சொன்னதை முழுதும் இன்னும் செரிக்கவில்லை. அதனால் பதிலேதும் சொல்லாமல் இருந்தான்.

"பரத் நீயும் நான் சொல்றபடி கேளு. ஏதோ கனவை என்னிக்கோ நிச்சயம் அடையப் போறேன்னு சொல்லிக்கிட்டு நேரத்தை இப்ப வீணடிச்சுக்கிட்டு, உன்னை மத்தவங்க ஏளனமா பாக்கற மாதிரி வெச்சுக்காதே. அதைவிட, சீரியசா உன் படிப்புக்கேத்த வேலையைத் தேடு. ஒரு வேலையில சேந்துக்கிட்டு உன்னோட கனவைத் துரத்து. உன்னோட குடும்ப சூழ்நிலைக்கும் இதுதான் சரியாயிருக்கும். உன் அப்பா ரிடையர் ஆயிட்டாரு ஞாபகம் வெச்சுக்க, டேய், நாம உலகத்துல எங்க இருந்தாலும் பிரியமாட்டோம்டா. தூரம், காலமெல்லாம் நம்ம ஃப்ரெண்ட்ஷிப்பை பிரிக்கமுடியாதுடா. நாம நிச்சயம் ஜெயிப்போம்டா," குலுங்கிக் குலுங்கி அழ ஆரம்பித்தான் மனோகர்.

"மனோ, மனோ அழாதடா. நீ எதையும் யோசிச்சுதான் சொல்லுவே. நீ சொன்னா சரிதாண்டா. நானும் வேலை தேடறேன். நீயும் கவலையில்லாம துபாய் போடா. அழாதேடா" என்று பரத்தும் அழுதவாறே அவனைத் தேற்றினான்.

நாயர் இந்தக் காட்சியைக் கண்கள் பனிக்கப் பார்த்தவாறே "எண்ட குருவாயூரப்பா ஈ ரண்டு ஃப்ரெண்ட்சினையும் எப்பவும் நல்லபடியா ரட்சிக்கணும். சந்தோஷமாயிட்டு, ஜெயிக்க வெக்கணும்" என்று உளமாறப் பிரார்த்தித்தார்.

(தொடரும்)

சந்திரமௌலி,
ஹூஸ்டன்

© TamilOnline.com