பிரச்சனை உங்களுடையதல்ல
அன்புள்ள சிநேகிதியே,

என்னுடைய மனக் குடைச்சலை இந்தப் பகுதியின் மூலம் மற்ற சிநேகிதிகளுடன் பகிர்ந்துகொள்ள வேண்டும் போலத் தோன்றியது. எழுதுகிறேன். உப்பு சப்பில்லாத விஷயம் என்று தோன்றினால் வெளியிடாதீர்கள். வருத்தப்பட மாட்டேன்.

நான் இங்கே (அமெரிக்கா) வசிப்பவள் அல்ல. 3 வருஷத்துக்கு முன் என் பெண் Gradutationக்கு வந்தேன். இது இரண்டாவது வருகை. அவள் திருமணம், அவளே நிச்சயித்துக்கொண்டு விட்டாள். நல்ல இடம். எனக்கு நிம்மதியாகப் போய்விட்டது. அந்தப் பையனின் வீட்டார் இங்கேயே இருப்பதால் நான் கிளம்பி வந்தேன், மிகவும் எதிர்பார்ப்புகளுடன். போன வாரம் அந்தப் பையனின் அம்மாவைப் பார்த்துப் பேசிய பிறகு எனக்கு ஒரே குழப்பம். கசப்பு. என்ன செய்வதென்று புரியவில்லை.

என் கதையைச் சொல்லி விடுகிறேன். என் அப்பா ஒரு பள்ளி ஆசிரியர். மிகவும் சாதாரண குடும்பம். எனக்கு 2 அக்கா, 1 தம்பி. ஆக, நாங்கள் நாலு பேர். என் பெரிய அக்கா மெடிகல் காலேஜிலும், இன்னொரு அக்கா ஆர்ட்ஸ் காலேஜிலும் சேர்ந்தார்கள். என்னைக் கல்லூரிக்கு அனுப்ப முடியாத நிதி நிலைமை. என் அப்பாவுடன் இன்னொரு டீச்சர் அதே ஸ்கூலில் இருந்தார்கள். அவர் ஒரு இளம்விதவை. அப்பாவும், அம்மாவும் அவருக்கு மிகவும் ஆதரவாக இருந்தார்கள். அவருக்கு ஒரே பையன் மிகவும் கஷ்டப்பட்டு எஞ்சினியரிங் படிக்க வைத்தார்கள். ஒருநாள் அந்த மாமி அப்பாவிடம் 'என் பையனின் படிப்பு முடிந்து ஒரு நல்ல வேலை கிடைத்து விட்டது. உங்கள் பெண்ணை (என்னை) திருமணம் செய்துவைக்க முடியுமா? எந்த டிமாண்டும் கிடையாது. அவள் அழகு என் பையனை ஈர்த்திருக்கிறது. அவளுடைய குணம் எனக்குப் பிடித்திருக்கிறது. நான் கண்ணாக அவளைப் பார்த்துக் கொள்வேன்' என்று உறுதி அளித்தார். அப்பாவும் அம்மாவும் முதலில் யோசித்தார்கள், இரண்டு மூத்த பெண்களை வைத்துக்கொண்டு என்னை எப்படித் திருமணம் செய்துகொடுப்பது என்று. ஆனால், எனக்கு ஆசையாக இருந்தது. அந்த மாமியை எனக்கு மிகவும் பிடிக்கும்.

மாமி, மாமியாராகிப் போனாலும் தாயாக இருந்து என்மேல் பாசத்தைப் பொழிந்தாள். என் கணவர் மிடில்-ஈஸ்டிற்கு வேலைக்குப் போன சமயத்தில் என்னை காலேஜுக்கு அனுப்பி மேலே படிக்க வைத்தார். பேங்கில் வேலைக்குப் போனேன். எனக்குப் பெண் பிறந்தாள். என் கணவர் எங்களைப் பிரிந்து வெளியில் வேலை பார்க்கும் சிரமத்தை உணராதபடி ஒருவருக்கொருவர் ஆதரவாக இருந்தோம். ஒருமுறை என் பெண் (அப்போது 8 வயது இருக்கும்) தன் அப்பா விடுமுறையில் வந்து திரும்பிப் பார்க்கும்போது மிகவும் மிஸ் செய்து அழுதாள். உடனே அவர் இந்தியாவிலேயே ஒரு MNCயில் வேலை தேடிக் கொண்டு திரும்பி வந்துவிட்டார். அப்பா! மூன்று வருடம் ரொம்ப சந்தோஷமான நாட்கள். நான் பார்த்துக் கொண்டிருந்த வேலையில் வேறு இடத்திற்கு டிரான்ஸ்ஃபர் செய்தார்கள். நான் வேலையை விட்டுவிட்டு உள்ளூரிலேயே ஒரு கம்பெனியில் நல்ல வேலையில் சேர இருந்தேன். அதற்கு ஒரு மாதம் அவகாசம் இருந்தது. இவர் கான்ஃபரன்ஸிற்கு கோவா போனார். நானும் போனேன். காரில் திரும்பி வரும்போது என்னுடைய விதி வேலை செய்துவிட்டது. விபத்து ஏற்பட்டு நான் மட்டும் உயிர் பிழைத்தேன். அந்த கோரத்தை விவரிக்கத் தயாராக இல்லை. இப்போது நினைத்தாலும் வயிற்றைப் பிசைகிறது.

எல்லாம் முடிந்து ஒரு வாரம் இருக்கும். என் மாமியார் என்னிடம் வந்தார். "அவன் அப்பா மாதிரி இப்படி அல்பாயுசில் போவான்னு தெரிஞ்சிருந்தா உன் வாழ்க்கையை நான் பாழ்படுத்தியிருக்க மாட்டேன். என்னை மன்னிச்சுடும்மா. எந்த நதியில் போய்க் குளித்தாலும் நான் உனக்குச் செஞ்ச பாவம் தீராது" என்று சொல்லி அழுதார். நான் பதறிப் போய் அவருக்கு ஆறுதல் கொடுக்க ஆரம்பித்தேன். இரண்டு பேரும் கொஞ்சம் நிதானத்துக்கு வந்தோம். பிறகு அவர் சொன்னார், "நான் ஒண்ணு உங்கிட்ட கேட்டுக்கப் போறேன். நான் உன்னைவிடச் சின்ன வயசிலயே இந்தக் கோலத்துக்கு வந்துட்டேன். எல்லாரும் என்னை நிர்க்கதியா விட்டுட்டா. உங்கப்பா போல இருக்கற நல்ல மனுஷாதான் எனக்கு ஒரு தொழிலைக் காண்பிச்சுக் கொடுத்தா. ஆனா அந்த வயசுல நான் பட்ட கஷ்டங்களை நீ படக்கூடாது. ஊர், உலகம் என்ன வேணும்னா சொல்லட்டும். எல்லார் கண்ணுக்கும் நீ சுமங்கலியாத்தான் தெரியணும். சின்ன வயசில பெரிய வேலைக்குப் போகப்போற. எத்தனை கழுகுகள் இருக்கிறதுங்கறது அனுபவப்பட்டவளுக்குத் தான் தெரியும். என் பிள்ளை இன்னும் வெளிநாட்டுலதான் இருக்கான்னு நான் நினைச்சிண்டு போறேன். எந்த சடங்குகளும் வேண்டாம்" என்று கையைப் பிடித்துக்கொண்டு அழுதார்.

எனக்கு அன்றைக்கு அறிவுரை கொடுத்த தெய்வம் இப்போது இல்லை. இருந்தால் இந்தப் பகுதிகு எழுதியிருக்கவே மாட்டேன். அவரிடம்தான் போயிருப்பேன் நியாயம் கேட்க.

நான் போனவாரம் என்னுடைய வருங்கால சம்பந்தியைப் பார்க்கப் போயிருந்தேன். எத்தனை வருடம் அமெரிக்காவில் இருந்தால் என்ன மனப்பான்மை மாறவேயில்லையே. இலை மறைவு காய் மறைவாக தான் எப்படி எப்படி சம்பிரதாயங்களைப் போற்றி வளர்க்கிறேன் என்பதைச் சொல்லிக்கொண்டே இருந்தார். கடைசியில், "என் பையன் சொன்னானே! அவளுக்கு அப்பா இல்லையென்று" என்று சொல்லி என் கழுத்தை உன்னிப்பாகப் பார்த்தார். எனக்கு ஜிவ்வென்று தலைக்குள் ஏதோ ஏறியது. கழுத்தில் மறைந்திருந்த தாலியை வெளியே காட்டி, "அவள் அப்பா இங்கே இருக்கிறார். கல்யாணத்துக்கும் வருவார். தேங்க் யூ" என்று சொல்லிவிட்டு வெளியில் நின்றேன், என் பெண் நாசூக்காக விடை பெற்றுக்கொண்டு வந்து காரை எடுக்கும்வரை. என் பெண் நான் ஏதோ அவள் வருங்கால மாமியாரை அவமரியாதை செய்துவிட்டது போல என்னிடம் நியாயம் பேச ஆரம்பித்தாள். ஆனால், என் கோபத்தைப் பார்த்து அடக்கிக்கொண்டு விட்டாள்.

இந்த விஷயம் என்னை ரொம்பப் பாதித்துவிட்டது. அவர் போன இந்த 15 வருடத்தில் என்னை யாரும் வெளிப்படையாகக் கேட்டதில்லை. முதுகுக்குப் பின்னால் யார், என்னைப் பற்றி என்ன பேசுகிறார்கள் என்று தெரிந்துகொள்ள முற்பட்டதில்லை. ஆனால், என்னுடைய மாமியாரின் அறிவுரையை நான் ஏற்றுக்கொண்டது எவ்வளவு பெரிய பாதுகாப்பு உணர்ச்சியைக் கொடுத்தது என்பது எனக்குத்தான் தெரியும்.

நான் நார்மலாக பதில் சொல்லியிருக்கலாமோ? ஓவர் ரியாக்ட் பண்ணி விட்டேனோ? என் பெண்ணின் திருமண சமயத்தில் என் கணவரை மிகவும் நினைத்துக் கொண்டிருந்தேனோ என்று தெரியவில்லை. மனதில் ஒரு சங்கடம், கிலி. இந்தக் கல்யாணம் நின்று போய்விடுமோ? இல்லை பிள்ளை வீட்டார் என்னைத் தனிமைப்படுத்தி விடுவார்களோ? அந்த மாமி முகத்தைத் தூக்கி வைத்துக்கொண்டு இருப்பார்களா? என்றெல்லாம் பல நினைப்புகள். அதை என் பெண்ணிடம் பகிர்ந்துகொள்ளக் கூடத் தயக்கமாக இருக்கிறது.

இப்படிக்கு
...................


அன்புள்ள சிநேகிதியே,


பெண்ணும் பிள்ளையும் தாங்களே முடிவெடுத்த திருமணம். இந்தச் சிறிய சம்பவத்தால் தங்கள் எதிர்காலத்தைக் கெடுத்துக்கொள்ள மாட்டார்கள். நன்றாக நடக்கும் கவலைப்படாதீர்கள்.

சடங்குகள், சம்பிரதாயங்களின் முக்கியத்துவம் அவரவர் வாழ்க்கை நிலையைப் பொறுத்து ஏற்றுக்கொள்ளப் படுகிறது. இல்லை மாற்றப்படுகிறது. வாழ்க்கை சுமுகமாக ஒரே பாதையில் செல்லும்போது சம்பிரதாயங்களை ஏற்றுக்கொள்வது சுலபம். சறுக்கல்கள் ஏற்படும்போது மாற்றங்கள் ஏற்படத்தான் செய்யும். தீவிர நம்பிக்கை கொண்டவர்கள் அந்த மாற்றங்களின் பின்னணியைப் புரிந்துகொள்ள முயல்வதில்லை.

நெருக்கம் விலகியிருக்கும் உங்களுக்கும் அந்த அம்மாவிற்கும். இல்லையென்று சொல்லவில்லை. வழக்கங்கள், வழிமுறைகளில் அதிகம் பற்று இருப்பது சிலருக்கு security blanket. அந்தப் பற்று இல்லாமல் இருப்பது சிலருக்கு security blanket. அவருக்கு அவருடைய கருத்துக்களைச் சொல்ல உரிமையிருக்கிறது. ஆனால், பலர் பிறர் மனது புண்படாமலிருக்க வெளிப்படையாகச் சொல்ல மாட்டார்கள். சிலருக்கு அந்தப் பக்குவம் இருப்பதில்லை. உங்களுக்கு உங்களுடைய வழியில் செல்ல உரிமையிருக்கிறது. பிறரை மனம்நோகும்படிச் செய்யவில்லை. சம்பிரதாயங்கள் தனிமனிதக் கட்டுப்பாட்டை உண்டு பண்ணுவதற்காக சமூகக் கோட்பாடுகளாகச் செயல்பட்டு வருகின்றன. நீங்கள் உங்கள் பாதுகாப்பிற்காக சமூகத்தைக் கட்டுப்படுத்தும் வழியைத் தேர்ந்தெடுத்தீர்கள். பலர் உங்களைப் புரிந்து கொள்வார்கள். இன்றைய நிலையில் எல்லாமே matter of individual convenience and mutual comfort தான். உங்கள் மகளின் திருமண நாளன்று அந்த அம்மாளைப் பார்த்து அழகாகச் சிரித்து விடுங்கள். அவர் திருப்பிச் சிரித்தால் மீண்டும் நெருக்கம். இல்லை முறைத்தால் பிரச்சனை உங்களுடையதல்ல.

வாழ்த்துக்கள்,
டாக்டர் சித்ரா வைத்தீஸ்வரன்

© TamilOnline.com