தந்தூரி பருப்புப் புட்டு
தேவையான பொருட்கள்
பாசிப்பருப்பு - 1/4 கிண்ணம்
கடலைப்பருப்பு - 1/4 கிண்ணம்
துவரம் பருப்பு - 1/4 கிண்ணம்
காரட் - 2
பீட்ரூட் - 1
உருளைக்கிழங்கு - 2
வெங்காயம் - 4
பச்சை மிளகாய் - 8 அல்லது 10
தேங்காய்த் துருவல் - 1 கிண்ணம்
இஞ்சி - 1 துண்டு
பச்சைப் பட்டாணி - 100 கிராம்
கசகசா - சிறிதளவு
லவங்கம் - சிறிதளவு
சோம்பு - சிறிதளவு
பட்டை - சிறிதளவு
உப்பு - தேவைக்கேற்ப
எண்ணெய் - தாளிக்க
கடுகு - சிறிதளவு
மஞ்சள்தூள் - தேவைக்கேற்ப
கொத்துமல்லித் தழை - சிறிதளவு
புதினா தழை - சிறிதளவு
தக்காளித் துண்டங்கள் - சிறிதளவு

செய்முறை
பாசிப்பருப்பு, துவரம்பருப்பு, கடலைப்பருப்பு மூன்றையும் ஊறவைத்து, கரகரப்பாக கெட்டியாக அரைத்துக் கொள்ளவும். (பருப்புகளை ஒன்றிரண்டாக அரைப்பது அவசியம்). பச்சை மிளகாய், இஞ்சி, மசாலாச் சாமான்கள், தேங்காய்த் துருவல் இவற்றை நைசாக அரைத்துக் கொள்ளவும். காரட், பீட்ரூட், உருளைக்கிழங்கு தோல் சீவி சிறுசிறு துண்டுகளாக நறுக்கவும். வெங்காயத்தை நீளவாக்கில் மெல்லியதாக நறுக்கவும். பச்சைப் பட்டாணி, உருளைக்கிழங்கு, பீட்ருட், கேரட் துண்டுகளை நீரில் வேக வைக்கவும். அரைத்து வைத்திருக்கும் பருப்புகளை விழுதாக ஒரு அகலமான தட்டின் உட்புறமாக எண்ணெய் தடவி அதனுடன் சமமாகப் பரப்பி ஆவியில் வேகவிடவும். ஆறியதும் கைகளால் உதிர்த்துக் கொள்ளவும். உதிர்த்தால் புட்டுபோல் உதிர்ந்துவிடும்.

அடி கனமான வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் விடவும். கடுகு தாளிக்கவும். வெங்காயம், கொத்துமல்லி போட்டு வதக்கியவுடன் வேக வைத்த காய்கறிகளைச் சேர்த்துக் கிளறவும். பின் அரைத்து வைத்திருக்கும் மசாலாச் சாமான்களின் விழுதைக் கொட்டிக் கிளறவும். இது கொதிக்க ஆரம்பித்ததும் விரும்பினால் மஞ்சள் பொடி போடவும். ஒரு நிமிடம் கழித்து உதிர்த்து வைத்திருக்கும் பருப்பு வகைகளைப் பிசிறினாற்போலத் தூவவும். விடாமல் கிளறி இறக்கவும். இது மசாலா வாசனையுடன் சாப்பிட மிகச் சுவையாக இருக்கும்.

பச்சைக் கொத்துமல்லி, புதினா தழையுடன் காய்வெட்டான சிகப்புத் தக்காளியை வட்ட வட்டமாக நறுக்கி இந்தப் புட்டை அலங்கரித்து விருந்தினர்களைக் கவரலாம். வெங்காயத் தயிர்ப் பச்சடி, வெள்ளரி தயிர் பச்சடியோடு தொட்டுக்கொள்ள ருசியாக இருக்கும்.

வசந்தா

© TamilOnline.com