NRI செய்திகள்
அசையாச் சொத்து விற்ற பணம்
NRI இந்தியர்கள் அசையாச் சொத்துக்களை விற்ற தொகையைத் தாமிருக்கும் நாட்டுக்குக் கொண்டு செல்ல, அந்தச் சொத்தினை வாங்கி 10 ஆண்டுகள் ஆகியிருக்க வேண்டும் என்ற நியதியை அண்மையில் இந்திய ரிசர்வ் வங்கி மாற்றியுள்ளது (Ref. RBI/2013-14/496 February 18, 2014; A.P (DIR Series) Circular No. 106). சொத்து விற்ற தொகையை ஒவ்வொரு நிதியாண்டிலும் (ஏப்ரல்-மார்ச்) ஒரு மில்லியன் டாலர் வரை, வங்கிகள் போன்ற அனுமதிக்கப்பட்ட அன்னியச் செலாவணி டீலர் வழியே தமது NRO கணக்கிலிருந்து கொண்டு செல்லலாம்.

PIOக்கள் சொத்து வாங்க
வெளிநாட்டில் வசிக்கும் இந்திய வம்சாவளியினர் (Person of Indian Origin) இந்தியாவில் விவசாய நிலம், பண்ணை நிலம், பண்ணை வீடு தவிர்த்த வேறு அசையாச் சொத்துகளை வாங்கலாம். இதற்கான தொகை அவர்களது NRI/NRO வங்கிக் கணக்குகளிலிருந்து பயன்படுத்தலாம். அதேபோல, இந்தியாவுக்குள்ளே அல்லது வெளியே வசிக்கும் இந்தியர் ஒருவரிடமிருந்து, அப்போதைய அன்னியச் செலாவணிக்குட்பட்டு அவர் கைக்கொண்ட அசையாச் சொத்துகளை PIO ஒருவர் வாரிசுரிமையாகவும் பெறலாம்.

PIO ஒருவர் குடியிருப்புக்கான அல்லது வணிகச் சொத்துக்களை (விவசாய நிலம், பண்ணை நிலம், பண்ணை வீடு தவிர்த்தவை) ஓர் இந்தியர், NRI அல்லது PIOவுக்கு விற்பனை அல்லது அன்பளிப்பின் மூலம் கைமாற்றலாம். அவர் கொடுப்பது மற்றொரு PIOவுக்காக இருக்கும் பட்சத்தில், ரிசர்வ் வங்கியிடம் முன்கூட்டி அனுமதி பெறவேண்டும். விவசாய நிலம், பண்ணை நிலம், பண்ணை வீடு போன்றவற்றை PIO ஒருவர், இந்தியாவில் வசிக்கும் இந்தியருக்கு விற்பனை செய்யவும் அன்பளிப்பாகத் தரவும் அனுமதி உண்டு.

தொகுப்பு: V. நாகராஜன்,
ப்ரியா பப்ளிகேஷன்ஸ், சென்னை

© TamilOnline.com