சங்கரா கண் அறக்கட்டளைக்கு $2 மில்லியன் நிதிக்கான வாக்குறுதி!
2020ம் ஆண்டுக்குள் இந்தியாவெங்கிலும் குறைந்தது 20 கண் மருத்துவ மனைகளையாவது திறந்துவிட வேண்டும் என்ற சங்கரா கண் அறக்கட்டளையின் 'விஷன் 2020' திட்டத்துக்கு சிகாகோவில் ஒரு வலுத்த உந்துதல் கிட்டியது. பெயர்சொல்ல விரும்பாத கொடையாளர் ஒருவர் மேற்கு வங்கத்தில் ஒரு மருத்துவமனை ஏற்படுத்த $2 மி. தொகைக்கு வாக்குறுதி அளித்துள்ளார்.

மார்ச் 9, 2014 அன்று அறக்கட்டளைக்கு நிதி திரட்டுவதற்காக, சித்திரவீணை ரவிகிரண், சந்தூர் வித்தகர் பண்டித். தருண் பட்டாசார்யா இவர்களோடு ஒடிசி வித்தகர் சஞ்சிதா பட்டாசார்யா சேர்ந்து வழங்கிய இந்த 'ட்ரைகல்பந்தி' நிகழ்ச்சியில் இத்தகைய நன்கொடைக்கான வாக்குறுதி தரப்பட்டது. "மிகப் புகழ்வாய்ந்த மூன்று கலைஞர்களும் மிகக்குறைந்த சன்மானத்தைப் பெற்றுக்கொண்டு நிதி திரட்டும் முயற்சிக்கு உதவி வருவது குறிப்பிடத் தக்கது." என்கிறார் அறக்கட்டளையின் அமெரிக்கப் பிரிவை நிறுவி நிர்வகித்து வரும் திரு. முரளி கிருஷ்ணமூர்த்தி. "எட்டு மருத்துவ மனைகளோடு ஆண்டுக்கு 1,50,000 அறுவை சிகிச்சைகள் செய்துவரும் எமது நிறுவனம் உலகிலேயே மிகப் பெரிய கண்மருத்துவ அறநிறுவனம் ஆகும்" என்றும் அவர் கூறினார். புகழ்வாய்ந்த இந்த மூவரின் நிகழ்ச்சிகள் மேற்கொண்டு லாஸ் ஏஞ்சலஸ், டாலஸ், நியூ யார்க், டெட்ராயிட் உட்பட அமெரிக்காவின் 15 நகரங்களில் நடக்கவுள்ளன.

"இதை ஏற்பாடு செய்தவர்களும், கொடையாளர்களும் பாராட்டுக்குரியவர்கள் என்ற போதும், இந்தக் கொடை சாஸ்திரீய சங்கீதம் மற்றும் நடனத்தின் ஊக்க சக்தியைப் பிரதிபலிக்கிறது" என்கிறார் ரவிகிரண். "இதில் பெருமிதமும், பணிவும் ஒருசேர ஏற்படுகிறது" என்றார் அவர்.

"இந்தக் கொடை எங்கள் மாநிலத்துக்கானது என்பதில் எங்களுக்குப் பெருமகிழ்ச்சி" என்கிறார்கள் தருண்-சஞ்சிதா பட்டாசார்யா தம்பதிகள்.

இது குறித்து மேலும் அறியவும், பங்கேற்கவும்: www.giftofvision.org

தகவல்: செய்திக்குறிப்பிலிருந்து
படம்: ராஜ் நிழற்படங்கள்

© TamilOnline.com