ராமலக்ஷ்மியின் இரண்டு நூல்கள்
அடை மழை
'அடை மழை' சிறுகதைத் தொகுப்பு மகிழ்ச்சி வெள்ளம், கண்ணீர் வெள்ளம் என இரண்டையும் ஏற்படுத்த வல்லது. கதை மாந்தரின் உணர்வுகள் ஏற்படுத்தும் தாக்கம் தவிர்க்க முடியாதது. ராமலக்ஷ்மியின் இந்த முதல் சிறுகதைத் தொகுப்பு இப்படிப் பல்வேறு விதமான உணர்வுகளின் உச்சங்களைத் தொடுவதாக அமைந்துள்ளது.

பூசி மெழுகாமல் யதார்த்தத்தை மையமாகக் கொண்டு கதைகள் வரையப்பட்டுள்ளன. கதைக்கருவுக்காக தொலைதூரம் அலையாமல், அன்றாடம் நாம் சந்திக்கும் சாமான்யர் வாழ்வின் மற்றொரு முகத்தைப் படம் பிடித்திருப்பதோடு, அவர்களின் வலியையும் அதனூடே ஓடும் மகிழ்ச்சியின் ரேகையையும் உணரச் செய்வதில் கதாசிரியர் வெற்றி கண்டிருக்கிறார். வாசிக்கையில் நம் தோழியிடம் உரையாடிக் கொண்டிருக்கும் உணர்வு ஏற்படக் காரணம் இயல்பான, அரிதாரம் பூசாத எழுத்து நடைதான். அச்சிதழ்கள், இணைய இதழ்கள் என்று பல தளங்களிலும் இவருடைய படைப்புகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. அத்தகைய பதிமூன்று கதைகளின் தொகுப்பே 'அடைமழை'. வறுமையில் போராடும் எளிய மனிதர்களுடன் தான் பயணிப்பதோடு நம்மையும் கைப்பிடித்து அழைத்துச் செல்கிறார்.

அன்றாடம் நாம் முதலில் சந்திக்கும் நபர் செய்தித்தாள் போடும் சிறுவனாகத்தான் இருக்கும். சிறுவர்களைப் பணியமர்த்துவது சட்டப்படி குற்றம் என்றபோதும் அது நடந்து கொண்டுதான் இருக்கிறது. சம்பந்தப்பட்ட அதிகாரி வீட்டிற்குக்கூட அச்சிறுவன் செய்தித்தாளை வீசிச் செல்கிறான். இதை ஒரேயடியாக நிறுத்த முடியாமல் போவதற்கான வலுவான காரணமும் இருக்கத்தான் செய்கிறது. 'வசந்தா' என்கிற முதல் கதை இதைச் சுருங்கச் சொல்லி விளங்க வைக்கிறது.

'பொட்டலம்' சிறுகதை அரக்கத்தனமான ஓர் ஆசிரியையின் செயலால், ஒரு குழந்தையும், தாயும் படும் வேதனையை யதார்த்தமாகச் சொல்கிறது. கதையின் முத்தாய்ப்பான வரிகள்: "வேகமாக வீட்டுக்கு வெளியில் வந்தவள் தெருவின் எதிர் முனையிலிருந்த குப்பைத் தொட்டியை நோக்கிச் சென்றாள். மகனின் ஆசிரியையாக அதை நினைத்துக்கொண்டு, ஆவேசமாக அதன்மேல் விசிறி எறிந்தாள். பொட்டலத்தை மனதிலிருந்து வழித்து எறிய முடியாத தன் இயலாமையையும் குற்ற உணர்வையும் எண்ணி நொந்தபடி." ஆனால் பொட்டலத்தை நம் மனதிலிருந்து வீசி எறிய முடியாது, நெடுநாளைக்கு.

"காலையிலிருந்து நேர்கொள்ள நேர்ந்த பல மனிதர்களின் உள்ளங்களில் காணக்கிடைக்காத ஈரம், அங்கு சிதறப்பட்ட வார்த்தைகள் தந்த அதே வலி மிகுந்த வீரியத்துடன் வெளிப்பட்டு நெஞ்சை நனைத்து விட்டிருக்க, வேகம் பிடித்து விரையத் தொடங்கிய வெண்டிக்கு ஈடாகப் போட்டி போட்டுக்கொண்டு காற்றில் படபடத்த துப்பட்டாவை நடுங்கிய விரல்களால் இழுத்து இறுகப் பற்றிக்கொண்டு உலர்ந்த கண்களால் மௌனமாகச் சன்னல் வழியே வேடிக்கை பார்க்க ஆரம்பித்தாள்" என்று 'ஈரம்' பேசுகிறபோது நம் மனமும் படபடக்கிறது. வேலைக்குச் செல்லும் ஒரு இளம்தாயின் மனஉளைச்சலைப் படம்பிடித்துக் காட்டுகிறது இந்தக் கதை.

ஒரு மனிதருக்குப் பெயர் என்பது ஒரு அடையாளமே தவிர, அதுவே அந்த மனிதனாக ஆகிவிட முடியாது என்ற ஓஷோவின் தத்துவத்தை நினைவு படுத்துகிறது 'அடையாளம்'. இதில் ஒரு மாற்றுத் திறனாளியின் ஏழைமையும், வாழ்க்கைப் போராட்டமும் உணர்வு பூர்வமாகச் சொல்லப்பட்டிருக்கிறது. "தாங்கு கட்டையை ஓரமாக வைத்துவிட்டுத் துண்டை விரித்துப் படுக்கப் போனவனைத் தூக்கம் கலைந்து தலையைத் தூக்கிப் பார்த்தது 'ஓ நீயா' என்பது போல், தினம் அதே கம்பத்தின் கீழ் நாலடி தள்ளிச் சாலையோரம் உறங்குகிற நாய். உற்று ஒரு நொடி அதைப் பார்த்தவன் 'எம் பேரு மூர்த்தி' என்றான்" என்று சொல்லும்போது மனிதரிடம் கிடைக்காத தோழமையை அந்த நாயிடம் அவன் உணர்வதை நாம் புரிந்து கொள்கிறோம்.

இறுதியாக, 'அடைக்கோழி' கருப்பி பதவிசாக முட்டையை அடைகாக்கும் கோலாகலம், சிறுசுகளின் கொண்டாட்டம் என்று சுவையாக ஆரம்பிக்கிறது கதை. "கருப்பிக்கு நான்கு வயதாகிறது. முட்டை போடும் ஒவ்வொரு பருவத்திலும் இப்படிதான் செல்லமாக முனகியபடி வாசலில் வந்து நிற்பாள், கருப்பி. பரிசோதித்து 'இரு, இரு, இன்னும் ஒரு மணியாகும்டி' தேர்ந்த மருத்துவச்சியாகவும், வாஞ்சையான தாயாகவும் தலையைத் தடவிச் சாக்கை விரித்துக் கூடையைப் போட்டு இவள் மூடுகையில், 'உக்கும் என்னமோ பிரசவத்துக்கு பெத்தமவ வந்தாப்ல அடுத்த இருவது நாளுக்கு ஒரே கொஞ்சலு கொலாவலுதான்' மருமகள் நொடித்துக்கொள்வாள்." ஆனால் அந்தக் கொலாவலு நம்மையும் தொற்றிக்கொள்ளா விட்டால்தான் ஆச்சரியம்.

சுப்பையா தாத்தா எதனால் 'ஜல் ஜல் மாட்டுக் கதை'யை சொல்லவே இல்லை என்பதைச் சொல்வதாகட்டும், 'சிரிப்பு', 'உலகம் அழகானது', 'பயணம்' போன்றவை ஆகட்டும், ஒவ்வொரு கதையும் ஒவ்வொரு சுவை. மொத்தத்தில், நேர்த்தியான கதைகளின் நிறைவான தொகுப்பு.

*****


இலைகள் பழுக்காத உலகம்
இது ராமலக்ஷ்மியின் முதல் கவிதைத் தொகுப்பு. அந்த உலகம் எப்படி இருக்கும்? பழையன கழிந்தால்தானே புதியன பிறக்க முடியும்? புதியன வாழ இடம் வேண்டுமே. கவிஞரின் வார்த்தைகளின் எளிமையில் கருத்துகளின் கனமும் சுகமான சுமையாகத்தான் ஆகிவிடுகிறது:

விருப்ப ஓய்வு வேண்டி
விருட்சத்தினின்று
சுழன்று கொண்ட அதன் நடுவே"


பழுத்த இலைகள் ஓய்வு பெறுவது, குருத்திலைகளை வாழ்விப்பதற்கே என்பதை அழகாகச் சொல்லிச் செல்கிறது 'அன்பின் வரிகள்'

'பூக்குட்டி' யில், மென்மனம் கொண்ட பாத்திரங்களின் எண்ண ஓவியங்கள், இயற்கை வண்ணங்களைப் பூசிக்கொண்டு அழகோவியமாய் அணி வருகின்றன:

சோற்றுப் பருக்கைகளை
கொத்தும் குருவிகளையும்
ஓடிவரும் அணில்களையும்
அவற்றை விரட்டுகிற காகங்களையும்
வேடிக்கைப் பார்க்கிறது
கைப்பிடிச் சுவரில் அமர்ந்து
நேற்றையப் பிறை நிலா


சூதாட்ட(ம்)ச் சதுரங்கத்தின் ஏற்றத் தாழ்வுகள் தவிர்க்க இயலாதவை! சக்தியும், புத்தியும் ஆட்சி செய்தாலும்,

விதியை எதிர்த்து
விதிமுறைக்கு உட்பட்டே
நகர வேண்டிய களத்தில்
சீறவும் சீவவும் தாராளமாக அனுமதி


சுயநலப் பிரார்த்தனைகளின் வார்த்தைகள், நீல வானத்தை நிரப்பிக் கொண்டிருந்தாலும், மனிதம் மலரச் செய்யும் ஒரு பிஞ்சு உள்ளத்தின் சுயநலமற்ற பிரார்த்தனை:

முட்செடியில் மாட்டிக்கொண்ட
சிட்டுக் குருவிக்காக
அதன் சிறகுகளை
மெல்ல விடுவித்தபடி
சிறுமி முணுமுணுத்த
"காப்பாத்து கடவுளே"
அம்பாகப் பாய்ந்து
ஆகாயத்தைக் கிழிக்க..
பேரிடியுடன் ஊற்றிய மழையில்
குளிர்ந்தது பூமி.


நாமக்கல் கவிஞர் வே. ராமலிங்கம் பிள்ளை அவர்களின் வரிகள், மகாத்மா காந்தி அவர்களின் அகிம்சைப் போராட்டத்தை, "கத்தியின்றி ரத்தமின்றி யுத்தமொன்று வருகுது / சத்தியத்தின் நித்தியத்தை நம்பும் யாரும் சேருவீர்!" என்று சாத்வீகமாக வர்ணித்தன. ஆனால் ராமலஷ்மியின் 'யுத்தம்' மழை விட்டும் தூவானம் விடாதது போன்றது:

போர்க்களமெங்கும்
அவை விட்டுச்சென்றிருந்த எச்சங்கள்
காலத்தாலும் கழுவ இயலா
கசப்பான மிச்சங்களாக.


ஒன்றல்ல இரண்டல்ல
ஒரு நூறு முகமூடிகள்


'இலைகள் பழுக்காத உலகம்' சிற்றாடை கட்டும் இளஞ்சிறுமியின் இழந்துவிட்ட தந்தைப் பாசத்தைக் கூறுபோட்டுக் காட்டுகிறது. நிழற்படங்களின் மூலமாகவே நினைவில் நிற்கும் பிம்பத்தை கனவில் கண்டு, வெகு எளிதாகக் கதைபேசிச் செல்கிறது குறுகலான அக்கவிதை.

ஏற்றுக்கொள்ள இயலவில்லை மகளென்று
அங்கொன்றும் இங்கொன்றுமாய்
நரையோடும் சிகையோடு
அவரினும் அதிக வயதாகி நின்றிருந்த என்னை


மறையாத சூரியனின் வெளிச்சத்தில்
தேயாத முழு நிலவைக் காண முடிகிற
தான் வாழும் உலகில்
வாடாத மலர்களையும்
பழுக்காத இலைகளையுமே
பார்த்துப் பழகிவிட்டவருக்கு.


'கேள்வியைத் தேடி' அலைபவருக்கும் இதே பிரச்சனை பாருங்கள். பதிலே கேள்வியாகிப் போன ஒரு கவித்தருணம் இதோ:

சிந்தனை வெளியில்
சூறாவளியாய்ச் சுழன்றடித்து
துரத்திய சந்தேகங்களுக்கு
பதில்களைத் தேடித்தேடிப்
பயணித்துக் களைத்தவன்
ஒரு புள்ளியில்
எதைத் தேடுகிறோமென மறந்து
தேடத் தொடங்கினான்
கேள்விகளை.


பறப்பதை உயர்வென்று நினைக்கிறோம். ஆனால், தரையில் கால் பதித்து நடக்கத் தொடங்கினால்....

இறக்கைகளைக் கழற்றிவிட்டு
நடக்கத் தொடங்கிய என் கைகளை
ஒரு குழந்தையின் குதூகலத்துடன்
பற்றிக் கொண்டு
தளிர்நடை போடுகிறது காலம்.


வாழ்வியல் களங்களைத் தேர்ந்தெடுத்து அதில் யதார்த்தத்தைச் சரிவிகிதமாகப் புகுத்தி அழகிய கவிமாலை புனைந்திருக்கிறார் ராமலக்ஷ்மி. எளிய நடையில் எவரும் சுவைக்கும் வகையில் தெள்ளுதமிழில் கவி வழங்குவது சிறப்புச் சேர்க்கிறது. ராமலஷ்மியின் 61 கவிதைகளும் ஒவ்வொருவரின் அனுபவமாக, ஆனால் பார்க்கத் தவறிய கோணமாக இருப்பது கவிப்பார்வையின் புதுப்பரிமாணம்.

இரண்டு நூல்களும் அகநாழிகை பதிப்பகம் வெளியீடு சென்னை. இணையத்தில் வாங்க: aganazhigaibookstore.com

(திருமதி. பவள சங்கரி 'வல்லமை' (www.vallamai.com) இணைய இதழின் ஆசிரியர்.)

பவள சங்கரி

© TamilOnline.com