ஆயிரத்தெண் விநாயகர் ஆலயம், ஆறுமுகமங்கலம்
தூத்துக்குடி மாவட்டம் ஏரலிலிருந்து 7 கி.மீ. தூரத்தில் உள்ளது ஆறுமுகமங்கலம். ஆயிரத்தெண் விநாயகர் ஆலயம் இந்தக் கிராமத்தின் மத்தியில் அமைந்துள்ளது. சுற்றிலும் கிராம தேவதைகளான தோப்பாச்சி அம்மன், இளைய நாயனார், சுடலை மாடன் ஆகிய கோயில்கள் வடக்கு, தெற்கு, மேற்கு திசைகளில் அமைந்துள்ளன. கி.மு. ஐந்தாம் நூற்றாண்டில் கொற்கையைத் தலைநகராகக் கொண்டு பாண்டிய நாட்டை ஆண்டு வந்தான் சோமாற வல்லபன். ஆயிரம் யாகங்கள் செய்தவன் எனப் போற்றப்பட்டவன். யாகங்கள் செய்வதற்காக மேற்குக் கடற்கரைப் பகுதியிலிருந்து அந்தணர்களை வரவழைத்தான். 1008 அந்தணர்களைக் கொண்டு செய்த யாகத்தில் ஒருவர் கலந்து கொள்ளாமல் யாகம் தடைப்பட்டது. அப்போது அந்தணர்களின் வேண்டுகோளுக்கிணங்க விநாயகர் 1008வது அந்தணராகக் கலந்துகொண்டு யாகத்தைப் பூர்த்தி செய்ததால் அவர், "ஆயிரத்தெண் விநாயகர்" என்று அழைக்கப்பட்டார்.

யாகத்தைப் பூர்த்தி செய்த விநாயகருக்கு மன்னன் ஆலயம் எழுப்பி வழிபட்டான். அந்தணர்களும் குளத்திற்குத் தாமிரபரணியிலிருந்து நீர் வரத்து இருந்ததால் அங்கேயே ஆலயம் கட்டி விநாயகரை பிரதிஷ்டை செய்து வழிபடத் துவங்கினர். அவர்கள் குடியிருந்த பகுதி 'சதுர்வேதிமங்கலம்' என அழைக்கப்பட்டது. பிற்காலத்தில் இங்கு முருகன் வழிபாடு சிறப்பானதால் 'ஆறுமுகமங்கலம்' எனப் பெயர் மாற்றம் கண்டது. சில காலத்திற்குப் பின் காளஹஸ்தீஸ்வரர், கல்யாணி அம்மனுக்கு தனிச்சன்னதிகள் அமைக்கப்பட்டு மண்டபம் கட்டப்பட்டது. பின் முருகன், வள்ளி, தெய்வானை சன்னதி கட்டப்பட்டது. பலரது உதவிகளால் விரிவாக்கப்பட்டு கோவில் இன்று ஐந்துநிலை ராஜகோபுரத்துடன் காட்சி தருகிறது. மண்டபத்தூணில் உள்ள ஆஞ்சநேயர் உருவம் சிறப்பு.

கொடிமரம், திருத்தேருடன் விழாக்காணும் ஒரே விநாயகர் கோயில் இதுதான். 108 அல்லது 1008 தேங்காய்கள் சாற்றி வழிபடுவது இவ்வாலயத்தின் சிறப்புக்களில் ஒன்றாகும். பஞ்சமுக நர்த்தன விநாயகரின் தோற்றம் அற்புதம். கேதுவின் அதிதேவதை விநாயகர் என்பதால் இது கேது பரிகார ஸ்தலமாகவும், காளஹஸ்தீஸ்வரர் கல்யாணி அம்மையுடன் காட்சி தருவதால் இது காலசர்ப்ப தோஷ பரிகார ஸ்தலமாகவும் விளங்குகிறது. திருவாவடுதுறை மடத்தினர், நாயக்க மன்னர்கள், அவர்கள் வழி வந்தவர்கள், பொதுமக்கள், உபயதாரர்கள் எனப் பலர் இந்த ஆலய வளர்ச்சிக்கு உதவி வருகின்றனர். ஆலயத்தின் அருகே ஆடுதுறை மடத்தினரின் ஈசான மடம் அமைந்துள்ளது. அவர்களால் திருவிழாக்கள் மிகச் சிறப்பாக நடத்தப்பட்டு வருகின்றன. ஆலயத்தில் உள்ள பஞ்சலோகத்தாலான நடராஜர் சிலை கிரீடம், திருவாச்சியுடன் வெகு அழகாக விளங்குகிறது. ஆலயம் ஹிந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது.

சித்திரை மாதம் பத்து நாட்கள் திருவிழா சிறப்பாக நடக்கிறது. அமாவாசையன்று தீப வழிபாடு அற்புதக் காட்சி. பக்தர்கள் வேண்டிக்கொண்டு அது நிறைவேறியதும் சன்னதியில் மணி கொண்டுவந்து கட்டுகின்றனர். 108 அல்லது 1008 தேங்காய் மாலை அணிவித்தும், தீபமேற்றியும் பிரார்த்தனை செய்து கொள்கிறார்கள். சிறப்பு ஹோமங்களும் செய்யப்படுகின்றன. தொழில் சிறக்க, குடும்ப வாழ்வு மேம்பட, திருமணத் தடை நீங்க, வீடு கட்ட, குழந்தை பிறக்க எனப் பல வேண்டுதல்களுடன் மக்கள் வந்து செல்கின்றனர், விநாயகர் மிகுந்த வரப்ரசாதி என்பதால் பக்தர்களின் பிரார்த்தனைகள் நிறைவேற அருள் புரிகிறார்.

சீதா துரைராஜ்,
சென்னை

© TamilOnline.com