கூகிளுக்குப் போன கோவிந்து
மேஜைமேல் அன்று வந்த கடிதங்கள் இருந்தன. மனைவியின் முகம் சுரத்தில்லாமல் இருந்தது. "என்ன லெட்டர்?" என்று கேட்டேன்.

"வழக்கமா வர எலக்ட்ரிக், கேஸ் பில்தான். உங்களுக்கு ஸ்பெஷலா ஒரு லெட்டர் இருக்கு."

"யாருகிட்டேருந்து?"

"எல்லாம் உங்களுக்கு வேண்டப்பட்ட மனுஷாதான்..."

கடிதம் மாயவரத்தில் இருந்த என் ஒன்றுவிட்ட அக்கா அம்முலுவிடமிருந்து வந்திருந்தது. ஓ அதனால்தான் சுணக்கமோ?

அம்முலு எழுதியிருந்தாள்: என் பிள்ளை கோவிந்து அமெரிக்கா வந்திருக்கிறான். ஏதோ கம்ப்யூட்டர் ப்ராஜெக்டாம். மாச சம்பளம் முப்பத்தியோராயிரம் ரூவாயாம். அவன் பள்ளிக்கூடத்தில் படிக்கும்போது 'கோவிந்து உருப்படமாட்டான். காளியாகுடி ஓட்டல்ல மேஜை தொடைக்கத்தான் போவான்'னு நீ கேலி பண்ணுவே. கடவுள் புண்ணியத்தில படிச்சு முன்னுக்கு வந்துட்டான். அங்க அவனுக்கு வேண்டிய உதவிய செய். வெளியில தங்கி ஓட்டல்ல சாப்பிட்டு உடம்பக் கெடுத்துக்காம, உங்க வீட்லயே வெச்சுக்கோ. உனக்கு ஆகிற செலவை வாங்கிக்கோ. ஒரு வத்தக்குழம்பு சுட்ட அப்பளாத்துக்கு என்ன செலவாகப் போறது? என்னதான் செலவுன்னாலும் ஆயிரம் ரூவாய்க்கு மேல போகாது. பாக்கி முப்பதாயிரத்தை இந்தியன் பேங்கில என் கணக்கில (எண் 3445) கட்டிடச் சொல்லு. மறக்காம வள்ளலார் தெரு பிராஞ்சுன்னு போடச் சொல்லு. புதுத்தெரு பிராஞ்சுக்கு அனுப்பிட்டா பணத்தை லேசில வாங்கமுடியாது. கையில் டோக்கன் குடுத்துட்டு மணிக்கணக்கா காக்க வெச்சிடுவாங்க.

அவனுக்கு வேலை கிடைச்ச பிறகுதான் கல்யாணம் பண்ணனும்னு செம்பனார் கோயில் சுந்தர ஜோசியர் சொல்லியிருக்கார். உன் பெண் சித்ராதான் எனக்கு நினைவுக்கு வறது. நான் பரக்காவட்டி மாதிரி வரதட்சிணை எல்லாம் கேட்கமாட்டேன். ஒரு ஃப்ளாட்டோட, ஸ்கூட்டரோ காரோ எதாவது கொடுத்து கணிசமாக ஒரு தொகை அவன் பேருல பேங்குல டிபாசிட் பண்ணினா போதும்.

உன் பெண்டாட்டிக்கு பருப்புப்பொடி செய்யத் தெரியலன்னு குறைப்பட்டுண்டாய். கோவிந்துகிட்ட ஒரு பாட்டில் கொடுத்து அனுப்பியிருக்கேன்.

உனக்கும் உன் மனைவிக்கும் உன் பெண்ணுக்கும் என் ஆசிகள்.

உன் பிரியமுள்ள அக்கா..."

"கோவிந்து அமெரிக்கா வந்துட்டானாம். நம்பவே முடியல அதிசயமா இருக்கு" என்றேன். என் மனைவி அதை லட்சியம் செய்யவில்லை.

"எனக்கு இன்னும் எதெல்லாம் செய்யத் தெரியலன்னு அக்காகிட்ட அழுதிருக்கீங்க!"

"ரொம்ப நாளைக்கு முன்னால நாம பிளெண்டர் வாங்கறதுக்கு முன்னால, உனக்கு இரும்பு உரல்ல இடிச்சு பருப்புப்பொடி பண்ணத் தெரியாதுன்னு சொன்னேன். அதை அவ தப்பா புரிஞ்சிண்டு... சரி விடு. கோவிந்து வந்துட்டான் பாரு.

நீங்களாச்சு உங்க மருமானாச்சு நான் ஊருக்குப் போறேன். நீங்க அவனுக்கு சமைச்சுப் போடுங்க. உங்க அக்கா நம்ம பெண்ணை கோவிந்துக்கு கொடுப்போம்னு நினைக்கறாப் போல. அது நடக்கற காரியம் இல்ல. சித்ராகிட்ட ஒண்ணும் சொல்ல வேண்டாம். சொன்னாக் காச்சு மூச்சுனு கத்தும்."

"எனக்குத் தெரியாதா? இந்தப் பிள்ளை வரதுக்கு முன்னால ஒரு ஈமெயில் போடாதோ?"

அன்றிரவே இரவு இரண்டு மணிக்கு ஒரு டெலிஃபோன் வந்தது.

"கோவிந்து பேசறேன்."

"வெல்கம் டு அமெரிக்கா. எங்கேருந்துடா பேசற?"

"மெயின் ஸ்ட்ரீட்லேருந்து."

"எந்த ஊரு, எந்த ஸ்டேட்டுனு சொல்லித் தொலை."

"சான் டியேகோ கலிஃபோர்னியா கிட்ட இருக்கேன்."

"லாஸ் ஏஞ்சலஸ் வர வாய்ப்பு இருக்கா?"

"யெஸ். தேங்ஸ்கிவிங் லீவுக்கு கார்ல வரேன்."

மேலே பேசுமுன் இணைப்பு துண்டிக்கப்பட்டது.

"கோயிந்து கூப்பிட்டான். சான் டியேகோக்கு வந்திருக்கானாம். தேங்ஸ்கிவிங்குக்கு வரானாம்."

"அப்பாடா. ரொம்பக் கவலைப் பட்டுண்டுருந்தேன். பேசாம தூங்குங்க. மருமானோட சீராட நேரம் காலம் இல்லையா?"

தேங்ஸ்கிவிங் வந்தது. அது நாலுநாள் விடுமுறை தினம். என் மனைவி நூடுல்ஸ், லெமன் சாதம், கிரான்பெரி பாயசம்னு என்று ஏதோ சமைத்திருந்தாள். அன்று பகல் முழுவதும் கோவிந்து வரவில்லை.

அசட்டுப் பிள்ளை. வர முடியலன்னா ஒரு ஃபோன் பண்ணாது?

இரவு ஏழுமணிக்கு ஒரு கால் வந்தது. "கிளம்பறச்சே வேலையில கூப்பிட்டாங்க. நேரமாயிடுச்சு. இப்பதான் கிளம்பறேன். பத்து மணிக்குள்ள வருவேன்."

"எனக்கு அசதியா இருக்கு. இருக்கிறதை சுட வெச்சுப் போடுங்கள்" என்று சொல்லிவிட்டு என் மனைவி படுக்கப் போய்விட்டாள்.

பதினோரு மணிக்கு கோவிந்து தன் அறைத்தோழன் பல்பீர்சிங்குடன் வந்தான். "உங்களுக்குனு அம்மா பருப்புப்பொடி கொடுத்து அனுப்பினாங்க. என்னோட இங்ககூட இருக்கிற சினேகிதங்க ஆளுக்காள் டேஸ்ட் பார்த்தே முடிச்சிட்டாங்க. ஆமா, சாப்பிட என்ன இருக்கு அங்கிள்?" என்று கேட்டு, மேஜைமேல் இருந்த பண்டங்களைப் பார்த்தான். அவன் பார்வை திருப்திகரமாக இல்லை.

அவன் சினேகிதன் பல்பீர், "இட்லி, வடை, மசாலா தோசா ஓகே" என்றான். ரொம்பத்தான் ஆசை இவனுக்கு. நானே ராத்திரிக்கு சமத்தா கிடைச்ச ஓட்ஸ் கஞ்சியைக் குடிச்சிட்டு தூங்கறேன். இவனுக்கு இட்லி, வடை, மசால் தோசை கேட்கிறதாம் என்று எண்ணிக் கொண்டேன்.

"இதெல்லாம் வேண்டாம் அங்கிள். நாங்களா எதாச்சும் பண்ணிக்கிறோம்" என்று சொல்லி பல்பீருடன் பேசினான்.

அதற்குள் ரிப்ரிஜரேட்டரைத் திறந்து பார்த்த பல்பீர், "அச்சா ஆலு ஹை, ஆனியன் ஹை, ஆட்டா கஹாங் ஹை" என்று கறிகாய்களை எடுத்தான். தோ ஆலு கட்கடா ஆதா ஆனியன் பட்படா தீன் டொமாடோ துக்டா சார் பீஸ் மிர்ச்சி ஆதா ஸ்பூன் ஹல்தி அவுர் ஏக்ஸ்பூன் மேத்தி என்ற பாட்டுடன் ஒரு சப்ஜி செய்தான். மாவில் தண்ணீர் ஊற்றிப் பிசைந்து சப்பாத்தி இட்டான். டஜன் சப்பாத்திகள், சப்ஜி என்று அரைமணியில் மேஜைமேல் வைத்தான்.

"கானா தையார் ஹை, சாச்சாஜி" என்றான். நாங்கள் சாப்பிட்டோம். சும்மா சொல்லப்படாது. பல்பீர் அருமையாகவே செய்திருந்தான். என் மனைவியும் வாசனையால் கவரப்பட்டுக் கீழே வந்து ரெண்டு சப்பாத்தி சாப்பிட்டாள்.

"முன்னாடியே சொல்லியிருந்தா நானே பண்ணியிருப்பேன். நான் மாவில ஆலிவ் ஆயிலும் கலந்து பண்ணுவேன் ஸாஃப்டா வரும். போனவாரம் உங்களுக்கு பண்ணிக் கொடுத்தனே நினைவு இருக்கா?" என்றாள்.

ஏன் இல்லாமல்? இன்னும் அது என் வயிற்றைப் படுத்துகிற விஷயத்தைச் சொல்ல விருப்பமில்லாமல் தலையாட்டினேன்.

சாப்பிட்டபின், கோவிந்துவிடம் கொஞ்ச நேரம் பேசினேன்.

"எங்க கம்ப்யூட்டர் படிச்சே, கோவிந்து?"

"தஞ்சைப் பெருவழுதி தனியார் கல்லூரியில."

"என்ன படிச்ச?"

"இளங்கலை தமிழ்வழி கணினிப் பொறியியல்."

"இப்ப என்ன ப்ராஜெக்ட் செய்யற?"

"தரவுதள இடைமுக நிரல் நிறுவல்."

சில கேள்விகளுக்குப் பிறகு டேடாபேஸ் இன்டர்ஃபேஸ் ப்ரொகிராம் இன்ஸ்டலேஷன் என்பதாகப் புரிந்து கொண்டேன்.

"உங்க கம்பெனி எங்க இருக்கு?"

"எங்க கம்பெனி சென்னையில இருக்கு. மென்பொருள் தயாரிப்பு. எங்க கம்பெனி கிளையண்ட் கேஜியார் சான் டியேகோ கலிஃபோர்னியால இருக்கு. இந்தியாலேருந்து சுபா மேடம் சேர்த்து பத்துபேரு இங்க வந்து வேலை செய்யறோம்."

"யாருடா சுபா மேடம்?"

"ப்ராஜெக்ட் லீடர். ரொம்ப வேலை வாங்கறாங்க. சில சமயம் மூடியா இருக்காங்க. சிடுமூஞ்சியா இருக்காங்க. பெண்ணும் கம்ப்யூட்டரும் ஒண்ணுதான்கிற மாதிரி ஒரு வெண்பா எழுதி வெச்சிருக்கேன்."

பர்சிலிருந்த தன் கவிதையைக் காட்டினான்.

அடிக்கடி சண்டியாகும்; ஆணைகள் மறுக்கும்;
அகத்துளது சொலாது; எனக்குப் படிந்தே
இணங்காது; என்னை வெறுத்து விலக்கும்
அணங்கும் கணினிக்கு நேர்.


எனக்கு நன்னா வேணும். ராத்திரி பன்னண்டு மணிக்கு இந்த வெண்பா வேதனை.

"கவிதை எழுதற வேலைய மூட்டை கட்டிவை. இதை சுபாட்ட காட்டாத. கிழிச்சிப் போட்டுருவா உன்னையும் உன் கவிதையும். ஆமா, உனக்கு என்னடா டைட்டில்?

"திட்ட துணைத்தலைவர்."

"அப்படின்னா?"

"அசிஸ்டன்ட் ப்ராஜக்ட் லீடர்."

"இந்த ப்ராஜக்ட்னு சொல்றியே....என்னதாண்டா செய்யறீங்க இந்த ப்ராஜக்ட்ல?"

"ஏலத்தொகை நிர்ணய நிரல் நிறுவல்."

அரைமணி கேள்விகளுக்குப் பிறகு எனக்குப் புரிந்தது இதுதான். கேஜியார் கம்பெனி எஞ்சினீயரிங் காண்டிராக்ட்கள் ஏலத்தில் எடுக்கிறார்கள். என்ன விலைக்கு ஏலம் கேட்டால் எவ்வளவு லாபம் வரும் என்று காட்ட அவர்களுக்கு ஒரு புரோகிராம் தேவை. அவர்கள் செய்யும் வேலைக்கான தொகைகளை வரிசைப்படுத்தி எளிதில் ஏலவிலை நிர்ணயம் பண்ண முயல்கிறார்கள். எல்லாம் சரி. இதில் கோவிந்து ரோல் என்ன? ஒண்ணும் சரியா புரியல.

சிஸ்டம் அனாலிசிஸ்னு வேற சொல்றான். இவன் என்னத்தை அனலைஸ் பண்ணுவான்? அவன் தமிழிலேயே கம்யூட்டர் பத்தி பேசுவது எனக்குச் சற்று வியப்பையும், என்னுள் ஒரு குற்ற உணர்வையும் கொடுத்தது. எந்த மொழியில படிச்சா என்ன, எப்படியோ சரி. ஒருவழியாக உருப்பட்டு அமெரிக்கா வந்துவிட்டான். மெதுவாக முன்னுக்கு வந்துவிடுவான் என்ற நம்பிக்கை எழுந்தது.

*****


அவர்கள் காலை உணவுக்கு பிரெட் போதும் என்று சாப்பிட்டார்கள். சித்ராவும் வர, அவர்களை அறிமுகப்படுத்தி வைத்தேன். "என்ன படிக்கிறீங்க?" என்றான் கோவிந்து.

"ஹ்யூமநாய்ட் ரொபாட்டிக்ஸ்" என்றாள் சித்ரா.

"எந்திரன் பாத்தீங்களா? ரஜினி சூப்பரா செய்திருப்பார்."

அவள் விழிக்க, நான் அவளுக்கு அதை விளக்கினேன்.

அவள் ஒரு ஃப்ரெஞ்ச் படத்தைக் குறிப்பிட்டு "நேத்து நைட் படம் பார்த்தேன். எக்சலண்ட். இட்ஸ் அபெளட் ஸ்பேனிஷ் சிவில் வார்" என்றாள். கோவிந்து விழித்தான்.

படமும் ஃப்ரெஞ்ச். சப்ஜெக்டும் ஸ்பேனிஷ் சிவில் வாராம். வெளங்கினாப் போலத்தான் என்று நினைத்துக் கொண்டேன்.

அவர்கள் விடை பெற்றுக்கொண்டு கிளம்பினார்கள்.

"கோவிந்து. கஷ்டப்பட்டு வேலை செய். தெரியாதது எல்லாம் கேட்டுத் தெரிஞ்சிக்கோ. நீ முன்னுக்கு வந்ததுல எனக்கு சந்தோஷம். ஏதாவது உதவி வேணும்னா தயங்காம என்னைக் கேளு" என்று சொல்லி அனுப்பினேன்.

அவர்கள் போனபிறகு, "சித்ரா. கோவிந்து பத்தி நீ என்ன நினைக்கிற?" என்றேன்.

"ஹீ இஸ் அ நெர்ட்" என்றாள்.

"உனக்குப் பிடிச்சா கல்யாணம் பண்ணிடலாமா?"

அவள் என்னை முறைத்துப் பார்த்தாள். "அப்பா. எனக்கு ஒருத்தரைப் பிடிச்சா உங்களுக்கு சொல்றேன். நீங்களா ஒருத்தரை எனக்குன்னு பிடிச்சுத் தரவேண்டாம். மாரியேஜ் ஈஸ் நாட் டன் திஸ் வே. அண்டர்ஸ்டாண்ட்?" என்றாள் கடுமையுடன்.

"உங்க அப்பாக்கு எப்ப என்ன பேசணும்னு தெரியாது. சித்ரா இங்க வா, இந்த டிஷ் எல்லாம் டிஷ்வாஷர்ல போடு" என்று என் மனைவி அவளைச் சமயலறைக்கு அழைத்தாள்.

*****


இரண்டு வாரம் கழித்து கோவிந்து எப்படியிருக்கிறான் என்று பார்க்க சான் டியேகோ கம்பெனியை அழைத்தேன். அவன் ஊருக்குத் திரும்பிப் போய்விட்டதாய் தகவல் கிடைத்தது. அவனுடைய மேலாளர் சுபாவைத் தொடர்பு கொண்டு பேசினேன்.

"என்னாச்சும்மா? ஏன் கோவிந்து இந்தியாக்கு திரும்பிட்டான்?"

"கோவிந்துவும் பல்பீரும் எங்க ப்ராஜக்டுக்கு சரியான ஆளுங்களில்ல சார். அவங்களுக்கு ப்ராஜக்டே புரியல. இங்லீஷ் தெரியல. மீட்டிங்ல கிளையண்ட் பேசறதும் புரியல. இவங்களுக்குப் பேசவும் வரல. அவங்களை டூ வீக்ஸுக்கு ஜஸ்ட் ஃபார் பில்லிங் யூஸ் பண்ணிக்கிட்டோம்."

"பில்லிங்குக்குன்னா? கணக்கு காட்றதுக்கா?"

"யெஸ். எங்க புரொகிராமர் ஒருத்தன் திடீர்னு வேற கம்பெனிக்குத் தாவிட்டான். ஒருத்தன் கல்யாணம்னு லீவுல கேரளா போயிட்டான். எங்களுக்கு மொத்தம் பத்துப் பேர் வேணும் கிளையண்ட் பில்லிங்குக்கு. ஊர்ல எங்க கம்பெனியைக் கூப்பிட, கோவிந்துவையும், பல்பீரையும் அவசரத்துக்கு அனுப்பினாங்க. இப்ப சரியான மாற்று ஆள் வந்தாச்சு. அதுனால இவங்களைத் திருப்பி அனுப்பிட்டோம்"

அம்முலுவின் எதிர்பார்ப்பு ஏமாற்றமாய்ப் போய்விட்டதில் எனக்குச் சற்று வருத்தமாகவே இருந்தது.

ஒரு மாதம் கழிந்திருக்கும்.

ஒரு நாள் பாதி ராத்திரியில் ஒரு ஃபோன் கால் வந்துது.

"கோவிந்து பேசறேன். நான் இப்ப மவுண்டன்வ்யூ, கலிஃபோர்னியாலேருந்து பேசறேன்"

"அங்க என்னடா பண்றே?"

"கூகிளுக்கு வேலை செய்யறேன் அங்கிள். என் மனைவிக்கு கூகிள்ல வேல கிடைச்சிது. அவளோடகூட சேர்ந்து வந்துட்டேன். எனக்கும் வேலை கொடுத்துட்டாங்க."

"மனைவியா?"

"ஆமா அங்கிள்....ஊருக்குப் போனனா. அம்மா ஒரு பொண்ணு பார்த்து வெச்சிருந்தாங்க. அவளும் ஐடி கம்பெனில வேலையில இருந்தாள். சரின்னுட்டேன். அவசரத்தில கல்யாணம். பத்திரிக்கைகூட அடிக்க முடியல. உங்களுக்கு சொல்லக்கூட நேரம் இல்ல. அம்மாக்குக்கூட வருத்தம்தான். மன்னிப்பு கேட்டு, சாரி சொல்லச் சொன்னாங்க."

"வாழ்த்துகள். என்ன வேலை செய்யற இப்ப கூகிள்ல?"

"தொடுதிரையில தமிழ் நிரல் இடைமுகம் தயாரிக்க ஆராய்ச்சி நடக்குது. நான் குழுத்தலைவன். அதாவது டீம் லீடர்."

"மீட்டிங்ல இங்லீஷ்ல பேசணுமே. எப்படி சமாளிக்கறே?"

"இந்தக் குழுவுல எல்லாரும் தமிழங்க. துறைத்தலைவர் ஹென்றியும் தமிழ்ல முனைவர் பட்டம் வாங்கியிருக்கார். நல்லாத் தமிழ் பேசுவார். ஒரு வெண்பா எழுதியிருக்கேன் கேளுங்க,

தமிழென்றே தாழ்வும் எதற்காகத் தோழா
தமிழில் பயின்று சிறிதும் தயக்கமின்றிக்
குதித்தோடி வந்த தமிழரை வேலையுடன்
கூவி அழைத்திடும் கூகிள்.


விடுமுறை கிடைக்கறச்ச உங்களை வந்து பார்க்கிறேன் அங்கிள்" என்று ஃபோனை வைத்தான்.

"யாரு போன்ல?" என்றாள் மனைவி.

"கோவிந்து. அவனுக்கு போன மாசம் இந்தியால கல்யாணம் ஆயிடுத்தாம். இப்ப மவுண்டன்வ்யூ வந்து கூகிளுக்கு வேலை செய்யறானாம்."

"கூகிளா! அழகா நம்ம பெண்ணுக்கு இவனைக் கல்யாணம் பண்ணியிருக்கலாமே? உங்களுக்கு இதுக்கெல்லாம் சாமர்த்தியம் கிடையாது."

எல்லே சுவாமி

© TamilOnline.com