கிரகப்பிரவேசம்
அன்று காலை சுமதி திண்ணையில் கிடந்த பாட்டிக்குக் காப்பி கொண்டு வந்தாள். "பாட்டி! காப்பி இந்தாங்க" என்ற குரலுக்குக் கிழவியின் உடம்பில் எந்த அசைவும் இல்லாது இருக்க "அப்பா! இங்கே வந்து பாரேன். பாட்டி எழுந்திருக்கலை" என்று கூச்சலிட்டாள். தூக்கத்திலேயே மரணத்தைத் தேடிக்கொண்ட எண்பது வயதுக் கிழவியின் சகாப்தம் முடிந்தது. பெற்றவள் என்ற முறைக்குச் செல்வம் அழுதான். ஊருக்காகவும் உறவுக்காகவும் இல்லத்தரசி சிறிது நேரம் அழுதாள்.

ஆனால் பாட்டியின் இழப்பு சுமதியை பெரிதும் பாதித்தது. பாட்டியின் கம்மிய குரலில் ராமாயணக் கதையை இனிமேல் அவளால் கேட்க முடியாது.

கிழவியின் வற்றிய முகத்தில்தான் எத்தனை சுருக்கங்கள்! அத்தனையும் அனுபவத்தின் அடையாளங்கள். ஒரே வாரிசைப் பெற்றும், கடந்த ஐந்து வருடமாக வீட்டிற்குள் போக முடியாமல் திண்ணையில் அநாதையாகக் கிடந்து சாவிற்காகப் பிரார்த்தனை செய்த அப்பாவி ஜன்மம்.

எல்லாச் சடங்குகளும் முடிந்து வீட்டில் அமைதி நிலவியது. அன்று மாலை செல்வம் வீட்டிற்குள் வந்த பொழுது அவன் கையில் பாட்டியின் ஃப்ரேம் போட்ட பெரிய படம் இருந்தது. வாசலில் விளையாடிக் கொண்டிருந்த சுமதி ஓடி வந்து "இது யார் படம் அப்பா?" என்று கேட்டாள். "பாட்டியோட படம்" என்றதும் "அய்யா! பாட்டி வந்துட்டா" என்று குதித்தாள். அந்தப் பிஞ்சு மனதில்தான் எவ்வளவு வெகுளித்தனம்! இதையெல்லாம் கேட்டு இல்லத்தரசி உள்ளே இருந்து வெளியே வந்து "என்னங்க! அம்மா படத்தை எங்கே மாட்டப் போறீங்க?" என்று கேட்டாள். அதைக் கேட்டு செல்வம் ஒரு நிமிஷம் ஆடாமல் அசையாமல் சிலைபோல் நின்றான். அவனுடைய இல்லத்தரசியா 'அம்மா' என்று சொன்னாள். என்றுமே 'கிழவி' என்று சொன்னவளுக்கு அந்தப் புனித வார்த்தையை அவள் சொன்னது நம்பவே முடியவில்லை.

"இதை ஹாலில் மாட்டவேண்டும்" என்றான் செல்வம். "இல்லை! அம்மா படத்தை 'பெட் ரூமில்தான்' மாட்ட வேண்டும்" என்று இல்லத்தரசியின் கண்டிப்பான கட்டளை. இந்த வாக்குவாதம் பலத்த குரலில் நீடித்தது.

சோபாவில் உட்கார்ந்திருந்த சுமதி பொறுமை இழந்து "போதும், உங்க சண்டையை நிறுத்திறீங்களா? பாட்டி இத்தனை வருஷமும் திண்ணையிலேதானே இருந்தா. படத்தை அங்கேயே மாட்டுங்க. உள்ளே வராமே இத்தனை நாளும் தடுத்தீங்களே, இப்போ உள்ளே எங்கே மாட்றதுன்னு சண்டை போடிறீங்களா? பாட்டி இருக்கும்பொழுது நம்ம நாய் ஜிம்மிக்குப் போடற மாதிரி சாப்பாட்டை அலுமினியத் தட்டிலே வச்சுட்டுப் போனீங்களே மறந்திட்டீங்களா? நீங்க ரெண்டு பேரும் பாட்டிகிட்டே நேராப் பேசி எத்தனை வருஷமாச்சு! இப்போ திடீர்னு பாட்டி போட்டோ மேலே இவ்வளவு அக்கறை? அதை என் ரூமிலே மாட்டுங்க" என்று சொன்னாள். இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர்.

பத்து வயதுகூட ஆகாத சுமதியின் பாசத்தை அவளுடய அப்பாவும் அம்மாவும் அதுவரை உணரவில்லையே! உயிருடன் இதுவரை அந்த வீட்டிற்குள் நுழைய முடியாத கிழவி, போட்டோ படமாக கிரகப்பிரவேசம் செய்தாள்.

பி. கிருஷ்ணமூர்த்தி

© TamilOnline.com