நேபாளம்
நான் முதன்முதலில் கோலாலம்பூர் வந்தபோது, 'இது என்ன! எல்லா சீனர்களுமே ஒரே ஜாடையாக இருக்கிறார்களே!" என்று வியப்பேன். அண்மையில், கோலாலம்பூரிலிருந்து சுமார் நான்கு மணிநேரம் பறந்து, நேபாளத் தலைநகரான காத்மண்டுவை அடைந்தபோதோ, "எந்த இரண்டு நேபாளியுமே ஒரேமாதிரி முகசாடையுடன் இல்லை, கவனித்தாயா?" என்று என்னுடன் வந்திருந்த மகள் சித்ராவிடம் கூறி அதிசயப்பட்டேன்.

வெளிநாட்டுப் பயணிகள் நிறைந்த தாமேல் என்ற இடத்தில் தங்கினோம். குறுகிய தெருவின் இருபுறங்களிலும் கடைகள். நேபாளம் பள்ளத்தாக்காக இருக்கலாம். ஆனால், கடைகள்கூடப் பத்துப்படி ஏறி, பன்னிரண்டு படி இறங்குவதாகவே அமைந்திருந்தன. எங்கே நுழைந்தாலும், 'நமஸ்தே!' என்று கரம் கூப்பி வரவேற்கிறார்கள். 'வாங்கித்தான் ஆக வேண்டும்,' என்று சண்டை பிடிப்பதில்லை. கடைகளில் பஷ்மினா என்னும் மலையாட்டு ரோமத்தில் செய்யப்பட்ட ஸ்வெட்டர், ஸ்கார்ஃபுகள், பித்தளையிலான தொங்குமணிகள், புத்தர், பிள்ளையார் சிலைகள், துணிமணிகள் என்று பலவாறானவை!

அதிகாலை ஐந்தரை மணிக்கே வெளிச்சமாக இருந்தது. உற்சாகமாக, ஸ்வயம்புநாத் கோயிலுக்குச் சென்றோம். சனிக்கிழமைகளில் கோயில்களில் சிறப்புப் பூசை. ஆடு, கோழி பலியிடுவார்களாம். சற்று அயர்ந்தோம். 'புத்தர் கருணை வடிவானவர் ஆயிற்றே! அவர் கோயிலில் பலியா?" என்று. சிவன், துர்கை கோயில்களில்தான் அதெல்லாம் என்று தைரியம் அளித்தார்கள்.

அகலமான கருங்கல் படிக்கட்டு, இருபுறமும் நெடிய மரங்கள். 'ஐயோ! இதில் ஏறணுமா!' என்று நான் கீழே இருந்த கருங்கல் பெஞ்சில் உட்கார்ந்து வேடிக்கை பார்த்தேன். திடகாத்திரமான, நாற்பது வயதுக்கு மேற்பட்ட ஆண்களும், பெண்களும் மலையடிவாரத்தில் மிகவும் கடினமாக தேகப்பயிற்சி செய்யும் காட்சி விநோதமாக இருந்தது.

மலையேற வழிகாட்டிகளாம்! ஒரு வாரத்திலிருந்து இரண்டு மாதம்வரை மலையேறப் பயணிகளை அழைத்துப் போகும் உத்தியோகம். ஆரோக்கியமாக இருக்க வேண்டாமா? ஒருவர் கூறினார், "தினமும் நான் என் வீட்டிலிருந்து இரண்டு மணிநேரம் மலையேறிப் பள்ளிக்கூடம் செல்வேன். வீடு திரும்ப ஒருமணி. அப்போதெல்லாம் திணறியபடி பிறநாட்டினர் வழிகாட்ட மலையேறுவதைப் பார்க்க வியப்பாக இருக்கும். பிறகு, இதையே தொழிலாகக் கொண்டுவிட்டேன்".

Click Here Enlargeஇந்து, பௌத்தர் அனைவரும் இருமதக் கோயில்களுக்கும் செல்கிறார்கள். அவ்வளவு ஏன்! ஒரு புத்தர் கோயிலின் நுழைவாசலில் பிள்ளையார் அமர்ந்திருந்தார் கம்பீரமாக. கோயிலுக்கு வரும் பெண்கள் சிவப்பு நைலக்ஸ் புடவைகளை அணிகிறார்கள். சனிக்கிழமைகளில் திரும்பும் இடமெல்லாம் சிவப்புப் புடவைகள்தாம். நெற்றியை அடைத்துக் குங்குமப் பொட்டு, இடது மூக்குத்தி. ஹிந்திப் படங்களில் வருவதுபோல, முதுகு பூராவும் தெரிய பிளவுஸ். 'மறைப்பதற்கு என்ன இருக்கிறது!' என்று அலட்சியமாகத் தோளில் தொங்கிய புடவைத் தலைப்பு. அக்காட்சியை ஒரு பொருட்டாகவே எண்ணாது, கடைக்கண்ணாலோ, முறைத்தோ பார்க்காத ஆண்களைப் பார்த்து ஆச்சரியப்பட்டேன்.

அங்கே ஒரு பிளெண்டரை வைத்துக்கொண்டு, கற்றாழையைச் (Aloe Vera) சாறு பிழிந்து விற்றுக் கொண்டிருந்தான் ஓர் இளைஞன். முதலில் அதன் முன்பகுதிகளை வெட்டி எறிந்துவிட்டு, தோலைச் சீவி, அதைப் பத்திரப்படுத்தி வைத்து, பின் அதன் துண்டுகளை வெட்டித் தண்ணீரில் போட்டு, வேண்டும்போது சாறு பிழிந்தான். நானும் குடித்தேன். வெள்ளரிபோல் ருசி. ஒருவர் சைகை காட்டினார், 'தோலை எடுத்து, முகத்தில் தேய்த்துக்கொள்' என்பதுபோல். ஏதோ பல மணி நேரம் தேகப்பயிற்சி செய்து வியர்த்து விறுவிறுத்துப் போனதைப்போல், நானும் அப்படியே செய்தேன்.

நுழைவாசலில் இருந்த பெரிய புத்தர் சிலையின் தடித்த கையில் சறுக்கிக் கொண்டிருந்தது ஒரு குரங்குக்குட்டி. இரண்டு தாய்க்குரங்குகள் பேன் பார்த்துக்கொண்டிருந்தன. கோயிலுக்கு வெளியே கீரை, வெள்ளரி, பாகல் என்று பசுமையான காய்கறி, கனிவகைகளைத் தரையில் போட்டு விற்றுக் கொண்டிருந்தார்கள். பிரேசிலை அடுத்து, உலகிலேயே நீர்வளம் நிறைந்த நாடு நேபாளம். எங்கும் செழுமை.

மறுநாள் போக்ராவுக்குப் (Pokhara) போனோம். வாடகைக் காரில் போனால் ஐந்தாறு மணி ஆகலாம் என்று அறிந்ததும் அச்சம் பிறந்தது. மலையைக் குடைந்து ரோடு. அடிக்கடி காற்றழுத்தம் மாறும் அபாயம். சீரான பாதை கிடையாது. விமானத்தில் போனால், இருபதே நிமிடம். ஆனால் ஒருவருக்கான பயணச் சீட்டோ, US$ 350! வெளிநாட்டுக்குப் போனால், செலவைப் பார்த்து அஞ்சமுடியுமா! முனகியபடியே வாங்கினோம்.

1961ல், மிஸஸ் டேவிஸ் என்ற ஸ்விட்சர்லாந்து நாட்டுப் பெண்மணி, போக்ராவில் இருந்த ஒரு நீர்வீழ்ச்சியிலிருந்து பெருகி ஓடும் ஆற்றில் குளிக்கப்போய், காணாமல் போக, பலபேர் வெகுநேரம் முயன்று அவள் உடலைக் கண்டுபிடித்தார்களாம். அவள் நினைவாக, அதன் பெயர் டேவிஸ் அருவி. வெளியில், தேவி அருவி என்ற பலகை தொங்குகிறது. அப்படியொரு இரைச்சலை நான் எங்கும் கேட்டதில்லை. 'என்னதான் நீச்சல் தெரிந்தாலும், இதையெல்லாம் பார்க்கத்தான் முடியும். இறங்கிக் குளிக்க முடியாது’ என்று போய் நின்றவுடனேயே புத்திக்கு உறைக்கிறது.

நீர்ச்சாரலை ரசித்துவிட்டு, எதிர்ப்புறம் இருந்த குப்தேஷ்வர் மஹாதேவ் குகைக்குப் போனோம். வழியில் ஆளுயர கான்க்ரீட் சிலைகள். அவற்றில் ஒரு கதையே அடங்கி இருப்பதாகத் தோன்றியது. முதலில், விசிறி மடிப்பு, மார்க்கச்சு அணிந்து, நாட்டியமாடும் பெண். அவளுடைய இடது மூக்கில் துளை; அடுத்து, மரத்தடியில் காதலில் கிறங்கிய பெண் தலை சாய்த்திருக்க, அவள் முகவாயைத் தொட்டபடி ஆண்; அவன் பகிரங்கமாக, அவளுடைய உடலில் வைக்கக்கூடாத இடத்தில் கைவைக்க, இருவரும் முத்தமிட்டபடி; குழந்தைக்குப் பாலுட்டுகிறாள்; வருத்தம் தோய்ந்த முகத்துடன் வயோதிகன் ஒருவன். நீதி: பெண்களிடம் மயங்காதே!

மழையில் வழுக்கிய படிக்கட்டுகளில் இறங்கி, குகைக்குள் சென்றவுடன் என் தலை சுற்ற ஆரம்பித்தது, என்னமோ கழுத்துக்குப் பயிற்சி கொடுப்பதுபோல. தலைசுற்றல் என்றால் இப்படியா இருக்கும்! வெளியே ஓடி வந்துவிட்டேன்.

பன்னாட்சி மலை அருங்காட்சியகத்தில் (International Mountain Museum) மலையேறுவதற்கு வேண்டிய உபகரணங்கள், எவரெஸ்டு சிகரத்தைத் தொட முயன்று, பாதியிலேயே உயிரிழந்தவர்கள், வெற்றி பெற்றவர்கள் என்று பலவற்றைப் பார்த்ததில், நிறைய விஷயங்கள் கற்க முடிந்தது. எல்லாரும் நம்முடன் ஹிந்தியில் பேசுகிறார்கள். ஹிந்திப் படங்கள் பார்ப்பேனோ, பிழைத்தேனோ! நடிகர் ஷாருக் கான், முடிவெட்டும் சலூன், சாப்பாட்டுக் கடை, லாண்டரி, கார் பழுது பார்க்கும் கடைகள் எல்லாவற்றிற்கும் பேதமின்றி விளம்பரம் கொடுத்தபடி இருந்தார்!

அதன் பின்னர் Peace Zone Stupa என்ற இடத்துக்குப் போனோம். பாதிவழிக்கு கார்தான். 'மேலே செல்ல 7 நிமிடங்கள்தாம்!' என்ற அறிவிப்பைப் பார்த்து, தைரியமாக ஏறினேன். வழியிலேயே பாதி உயிர் போயிற்று. மேலிருந்து பார்த்தால் மிக அழகிய காட்சி-தூரத்தில் அன்னபூர்ணா மலைத்தொடர், நம் அருகில் நீலமாகப் பரந்த ஏரி, அதில் சின்னஞ்சிறு புள்ளிகளாகப் படகுகள்.

போக்ராவிலிருந்து நான்கு மணி நேரம் காரில், சித்வான் என்ற காட்டுப் பகுதிக்குப் போனோம். வழி நெடுகிலும் நெல் வயல்கள்-சமதரையில், அல்லது நவராத்திரி கொலுப்படி போன்று வெட்டப்பட்டிருந்த மலைச்சரிவில். கூன்போட்ட வயோதிகர்கள் சோளக்கொண்டை, பீர்க்கை போன்றவற்றைத் தம் முதுகில் சுமந்து, தடி ஊன்றியபடி மலைப் பாதைகளில் ஏறி வருவதைப் பார்த்து, 'நாம் எவ்வளவு சொகுசு கொண்டாடுகிறோம்!' என்ற வெட்கம் ஏற்பட்டது.

மறுநாள், காட்டுக்குள் பயணம். யானைமேல் ஏறினேன், காலைத் தூக்கிப் போட முடியாமல் அவதிப்பட்டபடி. மரங்கள் அடர்ந்திருந்தன. சிறு செடிகொடிகள் கிடையாது. முன்னும் பின்னும் அசைந்தவாறு யானை நடக்கையில், மரக்கிளைகள் முகத்தில் இடித்தன. அவை என் செருப்பைக் கழற்றித் தள்ளிவிடுமோ என்ற அபாயத்தை உணர்ந்தபோது சிரிப்பு வந்தது.

ஒரு யானை ஒரே நாளில் சாப்பிடுவது: 250 கிலோ (கழுவிய, சமைக்கப்படாத) புழுங்கலரிசி, 250 கிலோ புல், 250 கிலோ உப்பு, 2 கிலோ சர்க்கரை! எல்லாம் வயிற்றிலேயே உட்கார்ந்திருக்குமா? நாங்கள் பயணித்த இருமணி நேரத்தில் இருமுறை லத்தி போட்டு, அது எங்களுடன் வந்த ஆஸ்திரியப் பெண்மணிமேல் தெறிக்க, அவள் அலற, நாங்கள் சிரிக்காமலிருக்க அரும்பாடு பட்டோம். யானைமேலிருந்து இறங்கிய பின்னரும் என் உடல் ஆடியபடி இருந்தது. கால் வலி தாங்கவில்லை. என்னைப்போன்ற 'சோத்தாளுக்காக' சித்வானில் Elephant Safari Massage என்று செய்கிறார்கள். போய் வைத்தேன்.

ஆனால், காத்மாண்டுவுக்குத் திரும்பி, கடைகடையாக ஏறி இறங்கிய வலியில் விமானத்துக்கு நொண்டி நொண்டி நடந்தேன்; அதிகாரியே பரிதாபப்பட்டு கோலாலம்பூர் விமான நிலையத்தில் ஒரு சக்கர நாற்காலிக்கு ஏற்பாடு செய்யும் அளவுக்கு! அதற்கெல்லாம் பயப்படாதீர்கள். நீங்களும் ஒருமுறை போய் வாருங்கள் நேபாளத்துக்கு.

நிர்மலா ராகவன்,
மலேசியா

நிர்மலா ராகவன்: மலேசிய எழுத்தாளரான இவர் ஓய்வுபெற்ற ஆசிரியர். ஆங்கிலம், தமிழ் இரண்டிலும் எழுதுகிறார். சிறுகதை, கட்டுரை, தொடர்கதை, வானொலி நாடகம், விமர்சனங்கள் போன்றவற்றை எழுதிவருகிறார். பல மேடைகளிலும் கருத்தரங்கங்களிலும் பேசியுள்ளார். இந்தியர்களிடையே காணும் சமுதாயப் பிரச்சனைகள் குறித்துச் சிந்திக்கும் இவர் தமது எழுத்துக்களில் அவற்றின் தீர்வுக்கான ஆலோசனைகள் வழங்குகிறார். நேரடி சமூகச் சேவையிலும் ஈடுபட்டு வருகிறார். இவர் பெற்ற பரிசுகள்: சிறுகதைச் செம்மல் (1991); சிறந்த பெண் எழுத்தாளர் (1993); தங்கப் பதக்கம் மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம் (2006); சிறந்த சிறுகதை எழுத்தாளருக்கான தங்கப் பதக்கம், மலேசிய தமிழ் எழுத்தாளர் சங்கம் (2006).

© TamilOnline.com