சித்தி ஜுனைதா பேகம்
"இப்போது சில காலமாக ஆண்பாலாரைப் போலவே பெண்பாலரும் கல்வி விஷயத்தில் இந்நாட்டில் முன்னேற்றமடைந்து வருகிறார்களென்பதை யாவரும் அறிவர். பெண்பாலாரில் சில சாதியினர் மட்டும் கல்வியில் மிக்க மேம்பாடுற்று விளங்குகின்றனர். தமிழ் சம்பந்தப்பட்டமட்டில், மகம்மதியப் பெண்மணிகளில் நன்றாகப் படித்தவர்கள் இருப்பதாகத் தெரியவில்லை. ஆண்பாலாரில் அந்த வகையிற் பல வித்துவான்கள் உண்டு.... மகம்மதியர்களுள்ளும் தமிழ் நூல்களை பயின்றுள்ள பெண்மக்கள் இருக்கிறார்கள் என்பதை இப்புத்தகம் நன்கு விளக்குகிறது. எல்லாவற்றிலும் மேலானது கடமையே என்பதும், பரோபகாரச் செயல் ஒவ்வொருவருக்கும் இன்றியமையாததென்பதும், பொருளாசை மேலிட்டவர்கள் எதுவும் செய்யத் துணிவர் என்பதும் இப்புத்தகத்திற்கண்ட முக்கிய விஷயங்கள். இதன் நடை யாவரும் படித்தறிந்து மகிழும்படி அமைந்திருக்கிறது. கதைப் போக்கும் நன்றாக உள்ளது" - இப்படிப் புகழ்ந்துரைத்திருப்பவர் மகாமோபாத்தியாய டாக்டர் உ.வே. சாமிநாதையர் அவர்கள். அவ்வாறு உ.வே.சா.வால் பாராட்டப்பட்ட நூல் சித்தி ஜுனைதா பேகம் எழுதிய 'காதலா? கடமையா?'.

வண்ணக்களஞ்சியப் புலவரின் வழியில் வந்த ஜுனைதா பேகம் 1917ம் ஆண்டு நாகூரில் பிறந்தார். தந்தை எம். ஷரீப் பெய்க், தாயார் கதீஜா என்னும் முத்துக்கனி. இவரது பள்ளிப்படிப்பு மூன்றாம் வகுப்போடு முற்றுப் பெற்றது. இருந்தாலும் ஆர்வத்துடன் பயின்று தமிழிலும் ஆங்கிலத்திலும் தேர்ச்சி பெற்றார். பன்னிரண்டாம் வயதில் ஃபகீர் மாலிமா என்பவருடன் திருமணம் நிகழ்ந்தது. நான்கு மகவுகள் வாய்த்தன. சில வருடங்களில் கணவர் காலமாகி விட்டதால் குடும்பம் தவித்தது. இந்நிலையில் தனது சோகத்தை மறக்க இலக்கியம் மற்றும் ஆன்மீகத்தின் மீது கவனம் செலுத்தத் துவங்கினார். சிறு சிறு கதை, கட்டுரைகளை எழுதினார். முதல் கதையான 'ஹலீமா அல்லது கற்பின் மாண்பு' இவரை ஒரு புரட்சிப் பெண்ணாக அடையாளம் காட்டியது. அதற்குப் பல எதிர்ப்புகள் வந்தபோதும் அவற்றைச் சமாளித்து மேற்கொண்டு எழுதினார்.

இவர் எழுதிய முதல் நாவல் 'காதலா? கடமையா?'. இதன் முன்னுரையில், "இக்கதையில், தலைமகனாய் வரும் சுரேந்திரன் என்பான், கடமையின் பொருட்டுத் தன் வாழ்க்கையின்பத்தையே தியாகஞ் செய்கின்றான். கதாநாயகியாகிய விஜய சுந்தரி என்னும் மின்னாள், தங்கடமையினின்றும் வழுவிவிட எண்ணுங்காலை, உலகினில் உயிர்வாழ்வான் ஒவ்வொருவனும், எல்லாவற்றிலும் கடமையையே தன் வாழ்க்கையிற் பிரதானமாய்க் கொள்ளவேண்டுமெனச் சுரேந்திரன் எடுத்துக்காட்டுகின்றான். இக்கதையில் இன்னும் பல சிறந்த நீதிகளும் எடுத்துக்காட்டப்பட்டிருக்கின்றன, பொது மக்கள் இப்புத்தகத்தை ஆதரித்து, எனக்கு மேன்மேலும் ஊக்கத்தை அளிக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்ளுகின்றேன்" என்று குறிப்பிட்டுள்ளார். இந்நாவலை எழுதும்போது அவருக்கு மிகவும் இளவயது என்பது குறிப்பிடத்தக்கது. "நச்சுடை சில நாகங்களைத் தனக்குக் குடிகளாய்க் கொண்ட இவ்வூரின் சிலர் தம் தூற்றுதலுக்கஞ்சி, பத்திரிகைகட்குப் பெயர் போடாது கட்டுரைகள் வரைந்தனுப்புமாறு அன்று என்னைத் தூண்டியவர்" என்று தம் சிற்றன்னை ஹதீஜாவைப் பற்றியும் நாவல் முன்னுரையில் குறிப்பிட்டுள்ளார் ஜுனைதா பேகம். ஏனென்றால், அக்காலத்தில், அதுவும் குறிப்பாக இஸ்லாமிய சமூகத்தில் பெண்கள் யாரும் எழுத்துத் துறைக்கு வரவில்லை. அப்படியே ஒருசிலர் எழுதினாலும்கூடத் தங்கள் பெயரை வெளியிடும் துணிச்சல் இருக்கவில்லை. அத்தகைய சூழலில் கதை, கட்டுரை, நாவல் என்று எழுதியதுடன் தன் பெயரையும், முகவரியையும் கூடப் படைப்புகளில் குறிப்பிட்டவர் ஜுனைதா பேகம்.

'வனஜா அல்லது கணவனின் கொடுமை', 'சண்பகவல்லிதேவி அல்லது தென்னாடு போர்ந்த அப்பாஸிய குலத்தோன்றல்', 'பெண் உள்ளம் அல்லது சுதந்திர உதயம்' போன்ற புதினங்களுடன் 'திருநாகூர் அண்ணலின் திவ்ய மாண்பு' என்ற வரலாற்று நூலையும் எழுதியுள்ளார். 'இஸ்லாமும் பெண்களும்' என்ற தலைப்பில் இவர் எழுதியிருக்கும் கட்டுரைத் தொகுப்பு இவரது ஆய்வு நோக்கையும், சமூக அக்கறையையும் காட்டுவதாகும். மேலும் 'மலைநாட்டு மன்னன்', 'காஜா ஹஸன் பசரீ (ரஹ்): முஸ்லிம் பெருமக்கள் வரலாறு' போன்றவையும் குறிப்பிடத்தக்கவையாகும். இத்துடன் எண்ணற்ற கட்டுரைகள், சிறுகதைகளைப் பல இதழ்களில் எழுதியுள்ளார். இவர் எழுதிய 'மகிழம்பூ' நாவலும் குறிப்பிடத் தகுந்த ஒன்று.

"மகிழம்பூவில் பெண்மையின் பொற்குணம் மட்டும் மணக்கவில்லை! ஆசிரியையின் இலட்சியப் பெருநோக்கு சுடர்விட்டுப் பிரகாசிக்கிறது! ஆசிரியையின் எண்ண ஓட்டங்களின் வேகமும் விரைவும் கதையின் ஒவ்வொரு பக்கத்திலும் பளிச்சிடுகின்றது! பாத்திரப்படைப்பிலும், இயற்கை வருணனையிலும், உரையாடலிலும் 'நயத்தக்க நாகரிக' நடையழகு பேணப்பட்டு, எழுத்து இழைக்கப்பட்டுள்ளது? பெண், வெறும் போகப்பொருள் அல்ல! பூமியில் பயிர் விளைச்சல் நடைபெறுவது போல, பெண்மையில் உயிர் விளைச்சல் நடைபெறுகிறது! உயிரினும் சிறந்த செம்பொருள் ஏதேனுமுண்டோ? பெண்மையினும் சிறந்த பொறுமையுண்டா? தாய்மையினும் சிறந்த தனிப் பெருமையுண்டோ? இப்படிப்பட்ட சிந்தனைத் தூண்டல்கள் ஜுனைதாவின் எழுத்தில் பின்னிப் பிணைந்துள்ளன!" என்கிறார் 'மகிழம்பூ' நாவலின் முன்னுரையில் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன்.

தன் நாவல்பற்றி ஜுனைதா பேகம், "இப்போது வெளிவரும் மாத, வார இதழ்களில் பத்திரிக்கையைப் பார்ப்பவர்க்குக் கவர்ச்சியூட்டினால் விலைபோகும் என்ற கருத்தினாலோ, வேறு எதனாலோ, பிஞ்சு உள்ளங்களில் இளஞ்சிறுவர், சிறுமிகள் உள்ளத்தில் தீய கிளர்ச்சியை ஊட்டத்தக்க ஆபாசமான, அசிங்கமான சிறுகதைகள், சரித்திரக் கதைகள், குறுநாவல்கள் எழுதி வெளியிடுகிறார்கள். படங்களும் அவைகளுக்கேற்ப அமைக்கின்றார்கள். இவர்களை உயர்ந்த எழுத்தாளர்கள் என்றும் சமூக சீர்திருத்தவாதிகள் என்றுங் கூறுகின்றனர். இவைகளைப் பார்க்கும்போது மனம் புண்படுகின்றது; வேதனையுறுகின்றது. அம்மாதிரி பண்பற்ற கதைகளைப் படிக்கும் வாசகர்கட்கு இந்த நூல் நல்வழி காட்டும் என்று நம்புகிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.

"அந்தக்கால இஸ்லாமிய உலகில், நாகூரிலிருந்து, புரட்சி செய்த ஒரு படைப்பாளி என்று சொன்னால் அது மிகையாகாது. இன்னும் ஒருபடி மேலே போய் வரலாறு படைத்தவர், படிக்காத மேதை என்று வருணித்தாலும் பொருத்தமானதே" என்கிறார், பேராசிரியரும், எழுத்தாளரும் ஜுனைதா பேகத்தின் தங்கை மகனான நாகூர் ரூமி. மேலும் அவர், "எழுதப்பட்ட காலம், சூழல், பின்புலம், ஆச்சிமாவின் பள்ளிப்படிப்பின்மை மற்றும் அந்தக் காலத்தில் முஸ்லிம் பெண்களுக்கிருந்த கட்டுப்பாடுகள் இவற்றையெல்லாம் கணக்கிலெடுத்துப் பார்ப்போமேயானால், இவற்றையெல்லாம் மீறி அவர்கள் எழுதி, தனது பெயரையும் போட்டு, தன்வீட்டு முகவரியையும் கொடுத்து, உருவப் படங்களுடன் கூடிய புத்தகமாகவும் வெளியிட்டுள்ளார்கள். ஆச்சிமாவின் துணிச்சலும் அந்த இளவயதிலிருந்த முதிர்ச்சியும் வியப்பை ஏற்படுத்துகிறது" என்கிறார்.

சித்தீக் என்பது அரபியில் உண்மையாளர் என்ற பொருளைத் தரும். சித்தீக்கின் பெண்பால்தான் சித்தி. நபிகள் நாயகத்தின் வழியைப் பின்பற்றுபவோருக்கான அடையாளச்சொல் இது. சித்தி ஜுனைதா பேகம், இலக்கிய ஆர்வலராக இருந்ததுடன் சிறந்த ஆன்மீகவாதியாகவும் இருந்திருக்கிறார். அதேசமயம் தம் படைப்புகள் மூலம் சமுதாய சீர்திருத்த நோக்குடனும், புரட்சி எண்ணத்துடனும் சமுதாயத்தில் மண்டிக் கிடக்கும் மடமைகளை, மூடப்பழக்க வழக்கங்களை மிகக் கடுமையாகச் சாடினார். தனது நான்கு மகள்களுடன் நிறைவாழ்வு வாழ்ந்த சித்தி ஜுனைதா பேகம், மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மார்ச் 19, 1998 அன்று காலமானார். இஸ்லாமியப் பெண் இலக்கியவாதிகளுக்கு ஒரு முன்னோடி ஆவார் சித்தி ஜுனைதா பேகம்.

அரவிந்த்

© TamilOnline.com