கைலாயமலையும் மானசரோவரும் - பகுதி 1
நானும் எனது கணவரும் வெகுநாட்களாக கைலாஷ்-மானஸரோவர் யாத்திரை மேற்கொண்டு கைலாசநாதரின் தரிசனமும், பரிக்ரமமும் (மலையை வலம் வருவது) செய்ய எண்ணிக்கொண்டிருந்தோம். அவன் அருளின்றி அவன் தரிசனம் கிடைப்பதும் அரிது. சென்னையில் உள்ள பத்மநாபன் என்பவரின் தலைமையில் ஜூன் 9-ம் தேதியன்று பதினேழு யாத்திரிகர்கள் கொண்ட குழுவுடன் நாங்கள் சென்னையிலிருந்து ஜீ.டி. விரைவுரயிலில் கிளம்பினோம். 11-ம் தேதியன்று காலை 6.30க்கு டில்லி ஸ்டேஷனில் இறங்கி, ஏர்போட்டிற்குப் போனோம். அங்கிருந்து காட்மாண்டு.

காட்மாண்டுக்குப் போக எங்களது குழுவில் இருந்த மூவருக்கு போர்டிங்-பாஸ் இல்லை. சென்னையில் உள்ள பயண அதிகாரி ஏதோ குழப்படி செய்துவிட்டார். இதை இருவரும் கவனித்தும் கேள்வி எழுப்பத் தோன்றாமல் விட்டுவிட்டனர் போலும். இது எங்களது முதல் இடர்ப்பாடு. எல்லோரும் பீதி அடைந்தனர். நல்லவேளையாகத் தாமதமில்லாமல் வேறொரு நுழைவு அட்டை வாங்கிக்கொண்டு விமானத்தில் அவர்களும் ஏறினர்.

எங்களது யாத்திரையை காட்மாண்டுவில் ஒரு பயண முகமை (டிராவல் ஏஜன்சி) மூலம் ஏற்பாடு செய்திருந்தார் பத்மனாபன். அதன் உரிமையாளரின் பெயர் ஜோதி அதிகாரி. அவர் எங்கள் அனைவரையும் மாலை அணிவித்து வரவேற்றார். இவரது குழுவில் பணி செய்பவர்கள் அனைவரும் எங்களை மிகவும் நன்றாக கவனித்துக் கொண்டு, அன்பாகப் பேசி, வேளை தவறாமல் உணவு வழங்கி மிகவும் செளகரியமாக அழைத்துச் சென்றனர். எவ்வளவு அசெளகரியங்கள் இருந்தாலும் இவர்களது அன்பான வார்த்தைகளால் எங்களுக்குச் சிரமமே தெரியவில்லை.

ஜூன் 12-ம் தேதி மதியம் நான்கு மணிக்குக் காட்மாண்டுவிலிருந்து குட்டிப்பேருந்தில் கோடாரி செல்லும் வழியில் துலிகல் என்ற இடத்திற்கு மாலை ஆறு மணிக்குச் சென்றடைந்தோம். அங்கே மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் பெரிய மரத்தை வெட்டிப் பாதையில் போட்டு வாகனங்களைத் தடுத்து நிறுத்திவிட்டனர். இது எங்களது இரண்டாம் இடர்ப்பாடு. ஆகையால் நாங்கள் அன்று இரவு துலிகலில் தங்கிவிட்டோம். அங்கு தங்குவதற்கு இடம் வசதியாக இருந்தது. ஆனால் மரம் சாய்ந்ததால் அன்று முழுவதும் துலிகலில் மின்சாரம் இல்லை.

மறுநாள் காலை சிற்றுண்டியை முடித்துக்கொண்டு பத்துமணி அளவில் பாதையை ராணுவ அதிகாரிகள் சரி செய்ததும் கோடாரிக்குப் பயணமானோம். ஆனால் செல்லும் வழியில் ராணுவ அதிகாரிகள் 'தற்சமயம் பயணம் செய்வது ஆபத்து' என்றார்கள். தலைமைக் கட்டுப்பாடு அலுவலகத்திலிருந்து அனுமதி கிடைத்தால்தான் மேலே செல்லவிடுவோம் என்று கூறினார்கள். அதற்கு ஒரு மணி நேரம் ஆனது. அதுவரை பேருந்திலேயே உட்கார்ந்து பிரார்த்தனை செய்து கொண்டிருந்தோம்.

மாலை ஐந்து மணி அளவி கோடாரி சென்றடைந்தோம். கோடாரி (2,000 அடி) இரண்டு மலைகளுக்கு நடுவில் அழகான ஒரு நதியின் அருகே அமைந்துள்ளது. இயற்கை எழில் மிக்க இடம். சிற்றருவிகள் இருந்தன. நதியின் குறுக்கே இருக்கும் பாலத்தின் யெர் '·ப்ரெண்ட்ஷிப் பாலம்' என்பதாகும். இந்த பாலத்தைக் கடந்துதான் திபெத்திற்கு (தற்சமயம் சீனாவில் உள்ளது) செல்ல வேண்டும். எங்களது மினி பஸ்ஸிற்கு விடை கொடுத்து அனுப்பி விட்டோம். மறுநாள் பதினோரு மணி அளவில் பாலம் கடந்தபின் சீன எல்லையில் குவாரண்டைன், குடியிறக்கச் சோதனை எல்லாம் முடிந்தன. இதற்குமேல் லான்ட்-க்ரூசரில்தான் செல்ல வேண்டும்.

அங்கிருந்து ஜாங்க்மு என்ற ஊரின் வழியாக ஞாவம் (11800 அடி) என்கிற இடத்திற்கு சென்றோம். வண்டியிலிருந்து இறங்கியவுடன் பனிக்காற்று பலமாக பெரிய சத்தத்துடன் விசிற்று. எங்களுக்கு மூச்சு விடுவதும் மிகவும் சிரமமாக இருந்தது. 'ஆல்டிட்யூட் ஸிக்னஸ்' வராமல் இருப்பதற்கு அன்றிலிருந்து தினமும் இரவில் மாத்திரை ஒன்று கொடுத்து வந்தனர்.

தட்பவெப்பம் பழகுவதற்கு அந்த இடத்திலேயே இரண்டு நாட்கள் தங்குமாறு பத்மநாபன் ஆலோசனை கொடுத்தார். அதன்படியே செய்தோம். டோல்மாபாஸ் மலைமேல் மிகவும் பனி இருப்பதாகவும், அடுத்த மூன்று நாட்கள் பரிக்ரமம் செய்வது மிகவும் கடினம் எனவும் தெரிவித்தார். கடவுளைப் பிரார்த்தனை செய்து வேறுவழியின்றி அன்று உறங்கினோம்.

ஜூன் 16-ம் தேதி காலை எட்டு மணிக்கு ஓட்ஸ் கஞ்சி குடித்துவிட்டு எங்களது பயணத்தின் மிகவும் கடினமான பகுதியை மேற்கொள்ள மனதைத் தயார் செய்துகொண்டோம். அன்றைய பயணம் எட்டு மணி நேரம். அதிகக் கற்களாலான பாதை. வண்டி ஆடி அசைந்து சென்றது. சாகா (15,000 அடி) என்ற ஊர்தான் எங்கள் அடுத்த இலக்கு. வழியில் பலமுறை வண்டி பழுதுபட்டு, ஓட்டுனர்களே சரிபார்த்து, ஒரு மணிக்கு ஒரு முறை வண்டியை நிறுத்திப் பயணத்தைத் தொடர்ந்தோம். சாகா செல்லும் வழியில் நாங்கள் பிட்ஸ்கு என்ற உப்புக்குளம் மற்றும் பிரம்மபுத்திரா நதி ஆகியவற்றைக் கடந்து சென்றோம். மாலை 5.30 மணிக்கு சாகாவை அடைந்தோம். அங்கு எல்லா வசதிகளும் இருந்தன ஒன்றைத் தவிர. அதுதான் கழிப்பறை. அதற்கு வெட்டவெளிதான்!

மறுநாள் காலை சிற்றுண்டியை முடித்துக் கொண்டு பரியாங் என்ற இடத்திற்குப் பயணமானோம். வழிநெடுகத்தாவரங்களே கிடையாது. வெறும் பனிமூடிய மலைகள் தாம். வழியில் சக்தா நதியும், அன்னபூரணா மலைத்தொடரும் எங்களை கண்களைக் கொள்ளை கொண்டன.

மதியம் 3.30 மணிக்கு பரியாங் (13,500 அடி) சென்றடைந்தோம். ஒரு விசாலமான திறந்த வெளியில் 50-60 மண் குடிசைகள் இருந்தன. இதுதான் மொத்தமாக இந்த ஊர். இங்கே ஒரு பள்ளிக்கூடமும் இருந்தது. நாங்கள் பள்ளி மாணவர்களுக்குப் பேனா வழங்கினோம். இங்குள்ள மக்கள் மிகவும் ஏழ்மை நிலையில் உள்ளனர். நாங்கள் தங்கிய இடம் வசதியாக இருந்தது.

மறுநாள் காலை பனி பெய்தது மிகவும் கவலையைக் கொடுத்தது. பனி பெய்தால் எங்களது பயணமும், கைலாசநாதர் தரிசனம் மற்றும் பரிக்ரமமும் தடைப்படும். ஆனால் பத்து மணிக்கு மேல் வெய்யில் அடிக்க ஆரம்பித்தது.

எங்களது பயணத்தைத் தொடர்ந்து மதியம் 4.30 மணிக்கு மானசரோவர் (14,500 அடி) பார்வைமுனை வந்தடைந்தோம். மேக மூட்டம் இல்லாததால், வண்டியைவிட்டு இறங்கியதும் எதிரில் மானசரோவரும் வலது பக்கத்தில் கைலாசமலையுமாகச் சேர்ந்து மகோன்னதமாகக் காட்சி அளித்தன. பிறகு நாங்கள் வண்டியில் ஏறி மானசரோவர் ஏரியைச் சுற்றி எதிர்ப்புறமுள்ள குர்லா மாந்தாதா மலையின் அடிவாரத்தில் இருக்கும் மண் குடிசைக்குச் சென்றோம். வெய்யில் நன்றாக அடித்துக் கொண்டிருந்தது. நானும் எனது கணவரும் மெதுவாக ஏரிக்குச் சென்றோம். தண்ணீர் மிதமான சில்லிப்புடன் இருந்தது. சிறிது நேரம் கழித்து நாங்கள் ஏரியில் குளித்து வந்தோம். அன்று இரவு அனைவரும் ஆனந்தமாக பஜனை செய்தோம்.

இங்கு நடு இரவில் ரிஷிகளும், சித்தர்களும் நட்சத்திரமாக கீழே இறங்கி நீரில் குளித்துவிட்டுச் செல்லுவதாக ஐதீகம். எங்களில் சிலர் நடுங்கும் குளிரில் வெட்ட வெளியில் நள்ளிரவுவரை உட்கார்ந்திருந் தனர். எனக்கு 12.30 மணி அளவில் ஒரு நட்சத்திரம் கீழே இறங்குவது போல் தெரிந்தது. பிறகு நாங்கள் அனைவரும் உறங்கச் சென்றுவிட்டோம்.

19-ம் தேதியன்று காலை மானஸரோவர் கரையில் இருக்கும் கற்களை எடுக்கச் சென்றோம். இக்கற்களை மூர்த்தம் எனக் கூறுவர். இந்த மூர்த்தங்களைச் சிவ பெருமானின் ரூபமாய் வீட்டில் வைத்து அபிஷேகம் செய்வது மிகவும் விசேஷமாகும். எங்களுக்குக் குளிக்க மானசரோவரின் தண்ணீர் எடுத்துச் சுடவைத்துக் கொடுத்தார்கள். குளித்து, ஹோமம் செய்து உணவு அருந்தியபின் டார்சானுக்குப் (கைலாச மலையின் அடிவாரக் கூடாரம்) பயணமானோம். போகும் வழியில் கைலாச மலையின் மிகவும் அழகான காட்சிகளைக் கண்டோம். மதியம் 2.00 மணிக்கு டார்சானைச் சென்றடைந்தோம். இங்கும் தங்குவதற்கு டார்மிட்டரி வகை தங்கும் வசதி இருந்தது.

(அடுத்த இதழில் நிறைவு பெறும்)

ராஜலக்ஷ்மி தியாகராஜன்

© TamilOnline.com