மலைவாழை அல்லவோ கல்வி!
குறுக்கும் நெடுக்கும் நடந்துகொண்டு இருந்தான் பிரகாஷ். திடீரென நின்று தன் மனைவி திவ்யாவின் கையைப் பிடித்து வருடிக் கொடுத்து ''எல்லாம் நல்லபடியா நடக்கும் கவலைப்படாதே'' என்று தேற்றினான். அவன் இருந்த நிலைமையில் அவனுக்கே ஆறுதல் சொல்ல ஒருவன் தேவைப்பட்டது.

அங்கு வந்த நர்ஸ் மார்ஷா "இன்னும் கொஞ்சநேரத்திலே டாக்டர் வந்துடுவாங்க. அதுவரைக்கும் வலியைப் பொறுத்துக்கோ'' என்றவள் பிரகாஷைத் தனியாகக் கூப்பிட்டு, ''இன்னும் கொஞ்ச நேரம்தான். யாருக்காவது முக்கியமா சொல்லணும்னா சொல்லிடுங்க'' என்றாள்.

பிரகாஷ¤ம் இந்தியாவிலிருக்கும் திவ்யாவின் பெற்றோரிடம் விஷயத்தை இப்போது தெரிவிப்பதா வேண்டாமா என யோசித்துக் கொண்டு இருக்கையில் டாக்டர் பாரதி நுழைந்தார்.

திவ்யாவைப் பரிசோதித்த டாக்டர் "வலியைப் பொறுத்துக்கோம்மா. எல்லாம் சரியாப் போயிடும்'' என்றாள். என்ன நடக்கிறது என்று புரியாத திவ்யா, டாக்டர் பாரதி சொன்னபடி செய்தாள்.

சற்று நேரம் கழித்து வந்த டாக்டரின் கையில் ஒரு அழகான பெண் குழந்தை வீறிட்டுக் கொண்டிருந்தது.

அதுவரை வலியில் துடித்த திவ்யாவும் மனஉளைச்சலில் இருந்த பிரகாஷ¤ம் இப்போது சந்தோஷத்தின் உச்சியில்!

ஒருநாள் பிரகாஷின் நெருங்கிய நண்பனான கிஷோர் வீட்டுக்கு வந்தான்.

கிஷோர் பிரகாஷிடம் ''ரொம்ப குஷியா இருக்கே போலிருக்கு. என்ன விஷயம்?'' என்றான்.

''ஆமாண்டா. குழந்தையும் பொறந்தாச்சு. இதுவரைக்கும் ஒவ்வொரு வருடமும் எங்க இரண்டு பேருக்குதான் வரிவிலக்கு வாங்கு வோம். இனிமே மூணு பேருக்கு வரி விலக்கு கிடைக்கும்'' என்றான்.

''சரியா சொன்னே. வரிவிலக்கு ஒரு மிகப் பெரிய விஷயம்.''

கிஷோர் சற்றுநேரத்திற்குப் பிறகு ஒரு சின்ன உறையைப் பிரகாஷிடம் பரிசாகக் கொடுத் தான். இது என் அன்பு மேகனாவுக்கு. இதிலே ஒரு விண்ணப்பப் படிவமும் அவ பேர்லே ஒரு 250 டாலருக்கான காசோலையும் வெச்சிருக் கேன். பத்திரமா...'' என்றான்.

பிரகாஷ், ''வந்த நண்பர்கள்லே வித்தியாச மானவன் நீதாண்டா. எல்லோரும் கி·ப்ட் கார்ட் அல்லது அன்பளிப்புப் பொருள் குடுப்பாங்க. ஆனா நீ மட்டும் ஒரு விண்ணப்பப் படிவம் கொடுத்திருக்கே. என்னடா இது?'' என்றான்.

அப்போது குழந்தை அழுதது. ''ஏன் அழறதுன்னு பாரு'' என்றான் கிஷோர்.

''ஒண்ணு, பால் வேணும்னு அழும். இல்லேன்னா டயப்பரை மாத்தச் சொல்லும்'' என்று சொல்லிக் கொண்டே டயப்பரை மாத்தினான் பிரகாஷ்.

அதைப் பார்த்த கிஷோர் ''நீ வரிப்பணத்தை சேமிப்பேன்னு நினைச்சா எல்லாத்தையும் டயப்பர்லயே செலவாக்கிடுவே போலிருக்கே!'' என்றான்.

"ஆமாண்டா. ஒரு பக்கம் எனக்கு மேகனா வந்தது சந்தோஷமா இருந்தாலும், எப்படி அவளுடைய செலவைச் சமாளிக்கப் போறோம்னு பயமாத்தான் இருக்கு'' என்று ஒப்புக் கொண்டான் பிரகாஷ்.

''அதனாலதான் நான் உனக்கு கிப்ட் கார்ட் கொடுக்கலை. பங்குச் சந்தைக் கணக்கு ஆரம்பிக்க ஒரு விண்ணப்பமும், அதுக்குக் காசோலையும் கொடுத்தேன்.''

''என்னடா சொல்லற. ஒண்ணும் புரியலே. டயப்பர் செலவுக்கும் ஷேர் மார்க்கெட் கணக்குக்கும் என்னடா சம்பந்தம்?''

''சரி திவ்யாவையும் கூப்பிடு. நாம பேசலாம்'' என்றான் கிஷோர்.

பால்கனியில் நன்கு காற்று வீசியது. மூவரும் அங்கே உட்கார்ந்திருந்தார்கள். குழந்தை தூங்கிக்கொண்டிருந்தது.

கிஷோர் ஆரம்பித்தான். ''நாம இந்தியாவி லிருந்து வந்துட்டாலும் நம்ப பழக்க வழக்கங்கள் நம்பளை விட்டு போகாது. என்னதான் அமெரிக்கா வந்தாலும் நீ அம்மா அப்பா பார்த்த பொண்ணைதானே கல்யாணம் பண்ணிண்டே. அந்த மாதிரி, பொண்ணு வளர ஆரம்பிச்ச உடனே உன் கவலையெல்லாம் நல்லாப் படிக்க வைக்க வேணும்னுதான் இருக்கும்.''

''அது சரி கிஷோர் அண்ணா. அதுக்கும் நீங்க கொடுத்த விண்ணப்பத்திற்கும் என்ன சம்பந்தம். புரியலையே'' என்றாள் திவ்யா.

"இங்கே ஒரு குழந்தை நல்லா படிக்கணும்னா என்ன செலவாகும் யோசிச்சுப் பார்த்தீங்களா? பள்ளியில் இருந்து அது கல்லூரிவரை செல்வதற்குச் சுமார் 500,000 டாலர் முதல் ஒரு மில்லியன் வரை ஆகும். கல்லூரிக்குப் போற எல்லாருக்கும் உதவித்தொகை கிடைக்கும்னு சொல்ல முடியாது.

''இந்தியப் பாரம்பரியப்படி வளர்ப்பதனாலே படிப்பிற்கு முக்கியத்துவம் ரொம்பக் குடுப்போம். அமெரிக்காவிலே எல்லா வசதியும் இருந் தாலும், எல்லாத்தையும் நம்ம பொண்ணுக்குச் சொல்லித் தரணும்னா செலவு ஆகும்.''

''சரிடா கிஷோர். அதுக்கும் இந்த விண்ணப் பத்திற்கும் என்ன சம்பந்தம்?'' என்றான் பிரகாஷ் சற்றே பொறுமையிழந்து.

''சொல்றேன். அமெரிக்க அரசாங்கம் நமக்கு இரண்டுவிதமான வழிகள் சொல்லியிருக்காங்க. ஒன்று 529 Plan. மற்றது Coverdell ESA அல்லது Education IRA அப்படின்னு.''

"ம். மேலே சொல்லுங்க அண்ணா'' என்றாள் திவ்யா ஆர்வத்துடன்.

''529 Plan முக்கியமா கல்லூரி மற்றும் மற்ற மேல்படிப்புக்கு உதவும். இந்த முறையில் ஒவ்வொரு மாநிலமும் வெவ்வேறு வழிகள் செஞ்சிருக்காங்க. மாதாமாதமோ அல்லது வருஷா வருஷமோ நாம பணத்தை இந்த 529 Plan-லே முதலீடு செஞ்சு வைச்சோம்னா அந்தப் பணம் வளரும். வளர்ந்த இந்தப் பணத்தைக் குழந்தையோட மேல்படிப்புக்குப் பயன்படுத்திக்கலாம்.''

''சரிடா, இந்த 529 Plan-ல ஏதாவது பிரச்சினை இருக்கா?''

''ஆமா. இதை நடத்தற மாநிலமே முதலீட்டை நிர்வாகமும் பண்ணுது. அதனால எவ்வளவு ரிடர்ன்ஸ் வரும்னு சொல்லமுடியாது. சில சமயம் நிறைய வரும். சில சமயம் குறைவா வரும். ஆனால் இதிலேர்ந்து வர்ற பணத்துக்கு நாம வரி கட்ட வேண்டாம். அப்படியே கல்லூரிப் படிப்புக்கு உபயோகிக்கலாம்.''

''கிஷோர், இன்னொண்ணு சொன்னயே, Education IRA. அது என்ன?'' என்று பிரகாஷ் கேட்டான்.

''Coverdell ESA அல்லது Education IRA-ன்னா உன் பணத்தை நேரடியாக நீங்களே மேனேஜ் பண்ணலாம். நீங்க பங்குகள் வாங்கலாம் அல்லது பரஸ்பர நிதியில (Mutual Funds) போடலாம். உங்களுக்கு எதுல நிறைய வருமானம் வருமோ அதுல முதலீடு செய்யலாம். இதுலே என்ன விசேஷம்னா நீ இதிலிருந்து வர்ற பணத்தை ஆரம்பக் கல்வி மற்றும் உயர்நிலைக் கல்விக்கும் பயன்படுத்திக்கலாம்.''

''சரி. Coverdell-லே வர வருமானத்துக்கு வரி கட்டணுமா வேண்டாமா?''

''Coverdell-லே வர பணத்துக்கு வரி கட்ட வேண்டாம். 529 Plan-லே நாம வருஷத்திற்கு 250,000 டாலர் வரை கட்டலாம். ஆனா Eduation IRA-லே 2,000 டாலர் வரைதான் கட்ட முடியும்.'' என்று கிஷோர் தெளிவு படுத்தினான்.

''சிறுகச்சிறுக சேர்த்தாலும் படிப்புச் செலவுக்கு ரொம்பப் பயன்படும்'' என்று கூறி முடித்தான் கிஷோர்.

பூஜையறையில் அந்த விண்ணப்பத்தை வைத்து, கிஷோர் மாதிரி நல்ல நண்பர்கள் கிடைத்ததற்குக் கடவுளுக்கு நன்றி செலுத்தினான் பிரகாஷ்.

சிவா மற்றும் பிரியா

சிவா மற்றும் பிரியா 'Dollar wise Penny foolish' என்ற பங்குச்சந்தை முதலீடு குறித்த நூலை எழுதியுள்ளனர். மேலும் அறிய: http://www.wisepen.com

© TamilOnline.com