சங்கர நேத்ராலயாவுக்கு நிதி திரட்ட ஜுகல்பந்தி
ஃபிப்ரவரி 8, 2014 அன்று மதியம் 4 மணிக்கு, சங்கர நேத்ராலயாவிற்கு நிதி திரட்டுவதற்காக ஜுகல்பந்தி நிகழ்ச்சி ஒன்று சாரடோகா உயர்நிலைப் பள்ளி மெக்காஃபி கலை அரங்கில் நடக்கவிருக்கிறது. வளைகுடாப் பகுதியின் பிரபல பாடகியும், சென்னை கிருஷ்ண கான சபாவின் இசையரசி பட்டத்தைப் பெற்றவருமான திருமதி. ஆஷா ரமேஷ் மற்றும் ஹிந்துஸ்தானி சங்கீத வித்வான் திரு. நச்சிகேத யாகுண்டி அவர்களும் இணைந்து இந்த ஜுகல்பந்தியை வழங்குகிறார்கள்.

1976ம் ஆண்டு ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி அவர்கள் அருளுரையின் அடிப்படையில் டாக்டர் பத்ரிநாத் சென்னையில் சங்கர நேத்ராலயாவை நிறுவினார். 1978ம் ஆண்டு கண் சிகிச்சைக்கான மருத்துவமனை துளிர்த்தது. யாவர்க்கும் சரிசமான நிலையில் பார்வை சிகிச்சை அளிப்பதே குறிக்கோளாகக் கொண்டது இந்த கண் ஆலயம். கிராமப்புற மக்கள் சென்னைக்கு வருவது கடினம் என்பதால் பேருந்துகளை அனுப்பிப் பார்வை குறைபாடுள்ள எண்ணற்றோரைச் சென்னைக்கு அழைத்து வந்து சிகிச்சை தருகிறார்கள். அவர்கள் தங்கவும், சாப்பிடவும் வசதி செய்து தருகிறார்கள். கிருமிகளால் தொடரும் மோசமான கண்நோய்க்குப் பரிசோதனை செய்து மருந்துகள் தருவதோடு, தேவையானால் அறுவை சிகிச்சைகளும் செய்கிறார்கள்.

பார்வை ஆராய்ச்சி அறக்கட்டளை (Vision Research Foundation) ஒன்றை அமைத்து சங்கர நேத்ராலயா செய்யும் ஆய்வுப் பணி உன்னத நிலையில் இருக்கிறது. கிருமிகளைப் பற்றி மரபணு அளவில் (Genomic level) அவர்கள் புரியும் ஆராய்ச்சி கிருமிக்கொல்லி (Microbicide) முறைகளை உணர்த்தும். பார்வை நோய்களான ரெடினைடிஸ் பிக்மெண்டோசா (Retinitis Pigmentosa), புற்றுநோய் சம்பந்தப்பட்ட ரெடினோ பிளாஸ்டோமா (Retino Blastoma) குறித்தும் நவீன முறையில் ஆய்ந்து, நூல்கள் வெளியிட்டுளனர். இந்த ஆராய்ச்சிகளின் அடிப்படையில் புதிய மருந்துகளைத் தயாரிக்கும் பணியிலும் ஈடுபட்டுள்ளார்கள். இந்த மகத்தான சேவையை மேலும் வளர்த்தெடுக்க இந்த நிகழ்ச்சியின்மூலம் திரட்டப்படும் நிதி வழங்கப்படும்.

தகவல்: டாக்டர். ராதாகிருட்டிணன்

© TamilOnline.com