சுவாமிநாத ஆத்ரேயன்
மணிக்கொடி கால எழுத்தாளரும், தமிழ், சம்ஸ்கிருத அறிஞருமான சுவாமிநாத ஆத்ரேயன் (95) தஞ்சையில் காலமானார். 1919ல் பிறந்த இவர், சாஸ்திர நிபுணரான தன் தந்தை சிமிழி வெங்கடராம சாஸ்திரிகளிடம் சம்ஸ்கிருதம், வேதம், புராண, இதிகாசங்களைப் பயின்றார். பின் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பயின்று சம்ஸ்கிருத வ்யாகரண சிரோமணி பட்டம் பெற்றார். இசையிலும் புலமை பெற்றவர். காஞ்சி மஹா பெரியவரின் பூரண அன்பைப் பெற்ற ஆத்ரேயன், காஞ்சி காமகோடி பீட ஆஸ்தான வித்வானாகவும் இருந்தார். பல இசை நூல்களைத் தமிழில் பெயர்த்திருக்கிறார். கோரக்பூர் கீதா பிரஸ்ஸின் பகவத் கீதை தமிழ் மொழிபெயர்ப்பைச் செய்தவர் சுவாமிநாத ஆத்ரேயன் தான். இவரது படைப்புகளில் 'பக்த சாம்ராஜ்யம்', 'நாம சாம்ராஜ்யம்', 'ஸ்ரீதர அய்யாவாள் சரிதம்', 'ராம நாமம்', 'தியாகராஜ அனுபவங்கள்' போன்றவை குறிப்பிடத் தகுந்தவை. சிறந்த சிறுகதைகளையும் எழுதியிருக்கிறார். 'மாணிக்க வீணை' என்ற சிறுகதைத் தொகுப்பு முக்கியமானது. தி. ஜானகிராமன், கரிச்சான்குஞ்சு, சி.சு.செல்லப்பா, கி.வா.ஜ., திருலோகசீதாராம், தி.ஜ. ரங்கநாதன், பகீரதன் போன்ற இலக்கிய ஜாம்பவான்களின் நெருங்கிய நண்பர். காஞ்சி மஹா பெரியவரின் ஆக்ஞைப்படி இவர் எழுதிய 'ராமதாஸர் சரிதம்' (துளசிதாசரின் ராமசரித மானஸின் தமிழ் மொழிபெயர்ப்பு) குறிப்பிடத்தகுந்தது. 'தியாகராஜ அனுபவங்கள்' நூலுக்காக ராஷ்ட்ரிய சம்ஸ்கிருத சம்ஸ்தான விருது பெற்றவர். இது தவிர காஞ்சிப் பெரியவரால் 'ஆசுகவி திலகம்' என்ற பட்டமும், உலக வேத அமைப்பின் 'வேதஸ்ரீ' பட்டமும் பெற்றிருக்கிறார். கிருஷ்ணா ஸ்வீட்ஸ் அறக்கட்டளை 'ஞானச்செம்மல்' விருது வழங்கி கௌரவித்துள்ளது. ஆங்கிலம், ஹிந்தி மொழிகளிலும் தேர்ந்தவர். உபன்யாசகர். கர்நாடக சங்கீத வல்லுநரும் கூட. பல்துறை விற்பன்னராகத் திகழ்ந்த சுவாமிநாத ஆத்ரேயருக்குத் தென்றலின் அஞ்சலி.



© TamilOnline.com