காண்டாமிருகங்கள்
பிரமிளாவுக்கு நகத்தைக் கடிக்கும் பழக்கம் உண்டு என்று ஒரு பத்திரிகை கட்டத்துக்குள் பதிப்பிக்கிறது. பிரமிளாவுக்கு நகம் கடிக்கும் பழக்கம் இருந்தாலென்ன, வேறு எவளுக்கோ தொடையில் மச்சம் இருந்தால் நமக்கு என்ன என்று ஒருவரும் கேட்பதில்லை. கேள்வி கேட்காமல் இந்த Trivia அனைத்தையும் உட்கார்ந்துகொண்டு படித்துக் கொண்டிருக்கிறோம். இதைவிட அதிகமாக ஒரு ஜனக்கூட்டத்தை எவனும் அவமானப்படுத்த முடியாது என எண்ணுகிறேன்.

Ionesco Rhinoceros என்கிற நாடகத்தில் ஒரு காட்சி ஞாபகம் வருகிறது. நாடகப் பாத்திரங்கள் ஒரு பொது இடத்தில் பேசிக் கொண்டிருக்கும்போது முழுசாக ஒரு காண்டாமிருகம் குறுக்கே திடும், திடும் என்று புழுதியைக் கிளப்பிக்கொண்டு அவர்கள் எதிரே ஓடி மறைகிறது. இந்தக் காட்சியின் incongrulty அபத்தமும் அவர்களைப் பாதிப்பதில்லை. ஓடின மிருகம் ஆசிய வகையா, ஆப்பிரிக்க வகையா என்று சர்ச்சையில் தீவிரமாக இறங்கி விடுகிறார்கள். நம் தின வாழ்க்கையில் எத்தனை காண்டாமிருகங்கள்!

சுஜாதா, கணையாழியின் கடைசி பக்கங்கள் (ஆக்ஸ்ட், 1973); (பிப்ரவரி 27 சுஜாதா மறைந்த தினம்)

© TamilOnline.com