பத்மஸ்ரீ S.M. கணபதி ஸ்தபதி
எழுவங்கோட்டை என்னும் குக்கிராமத்தில் பிறந்து, இந்திய அளவில் புகழ்பெற்ற ஸ்தபதியாக உயர்ந்து நிற்பவர் பத்மஸ்ரீ எஸ்.எம். கணபதி ஸ்தபதி. காசி, காஞ்சி, ஹரித்துவார், அலஹாபாத், ஹைதராபாத், சதாரா, அமெரிக்கா எனப் பல இடங்களிலும் புகழ்பெற்ற பல ஆலயங்களை நிர்மாணித்தவர். காஞ்சி மஹா பெரியவரின் அன்பு ஆசிக்குப் பாத்திரமானவர். தமிழ், தெலுங்கு, சம்ஸ்கிருதம், கிரந்தம், சிற்ப சாஸ்திரம், ஜோதிடம் எனப் பலவற்றிலும் தேர்ந்தவர். ஆந்திர அரசின் தலைமை ஸ்தபதியாகப் பதவி வகித்திருக்கிறார். பத்ராசலத்தில் ஸ்ரீஇராமர் ஆலயம், காசியில் காமகோடீஸ்வரர் ஆலயம், அலஹாபாத்தில் ஆதிசங்கரர் விமான மண்டபம், ஹைதராபாத் ஹுஸேன் சாகர் ஏரி புத்தர், ஓரிருக்கையில் உள்ள காஞ்சி மஹா பெரியவர் மணி மண்டபம் எனப் பல வியக்கத்தக்க பணிகளைச் செய்திருக்கிறார். அமெரிக்காவின் முதல் ஆலயமான நியூயார்க் சித்தி விநாயகர் ஆலயத்தை நிர்மாணித்தவரும் இவர்தான். திருப்பதி பெருமாளுக்கு வைரக்கிரீடம் செய்து அளித்திருக்கிறார். பத்ராசலம், திருப்பதி ஆகிய தலங்களின் ஆஸ்தான ஸ்தபதியாகப் பணிபுரிந்திருக்கிறார். சில்பகலாநிதி, சில்பகலா வித்வன்மணி, சிற்ப சாஸ்திர ரத்னாகரா, சில்ப கலாவாரிதி எனப் பல பட்டங்களையும், காஞ்சி காமகோடி பீடம், சிருங்கேரி பீடம், திருவாவடுதுறை ஆதினம், தருமபுரம் ஆதினம் ஆகியவற்றின் விருதுகளையும், தமிழக அரசு, ஆந்திர அரசு உள்ளிட்ட அரசின் கௌரவங்களையும் பெற்றவர். மஹா பெரியவரின் ஆசியுடன் தியான ஸ்லோகங்களை மூலமாகக் கொண்டு சிற்பக் கலைஞர்களுக்கு மிகவும் தேவையான வழிகாட்டி நூல்களான 'ரூபத்யான ரத்னாவளி', 'காஸ்யபம்' போன்ற புத்தகங்களை எழுதியுள்ளார். தென்றலுக்காக அவருடன் உரையாடியதிலிருந்து...

கே: சிற்பிகள் என்போர் யார்?
ப: மனு, மயன், துவஷ்டா, சிற்பி, விஷ்வக்ஞ என்று ஐந்து பேர். இதில் மனு இரும்பில் செய்பவர்; மயன் மரத்தால் செய்பவர்; துவஷ்டா பஞ்சலோகத்தால் செய்பவர்; சிற்பி விக்ரகங்களை, இறையுருவங்களைச் செய்பவர்; விஸ்வக்ஞர் தங்க ஆபரணங்களைச் செய்பவர். இந்த ஐந்தொழிலையும் செய்வோர்களுக்கு விஸ்வகர்மாக்கள் என்று பெயர். இவர்களில் ஸ்தபதி என்பது மிக முக்கியமான பொறுப்பு. ஏன்னு கேட்டா, 'விஸ்வகர்மா ஸகல லோகம் பவிக்ரஹாத்' என்று ஈஸ்வரன் சொல்கிறார். இந்த லோகங்களை எல்லாம் பவிக்ரஹம் பண்ணி எல்லாருக்கும் சௌகரியங்களை ஏற்படுத்த வேண்டியது விஸ்வகர்மாவின் வேலை. ஒரு வீடு கட்டுவது என்றால் அங்கே ஆசாரி வேண்டும். தச்சு வேலை தெரிந்தவர் வேண்டும். அதுபோல மக்கள் வழிபாடு செய்யக் கோவில் வேண்டும்; ஆலயம் கட்ட ஒரு சிற்பி வேண்டும். இதில் விஸ்வகர்மாவைப் பற்றி மட்டுமல்ல; அநேக மகரிஷிகள் பற்றி எல்லாம் சொல்லியிருக்கிறார்கள்.

ப்ருகு ஆத்ரே வசிஷ்டச்ச விஸ்வகர்மா மயஸ்துதா
நாரதோ நக்னஜித் விஸாலாட்ச புரந்தரஹா
ப்ரம்ம குமார நந்தீசஹா ....

என்று 18 மஹரிஷிகளை விசேஷமாகச் சொல்லியிருக்கிறார்கள். இதில் விஸ்வகர்மாவின் வழியில் வந்தவர்கள் நாங்கள்.

கே: நமது சிற்பப் பாரம்பரியம் பற்றிச் சொல்லுங்களேன்...
ப: நமது பாரத பூமி மிகத் தொன்மையானது. மற்ற தேசங்களைப் போல இந்த தேசத்தின் காலத்தை நிர்ணயித்து இன்னதென்று யாராலும் சொல்ல முடியாது. "இமயாத்ரி கன்யோஹ் அந்தர்ஜவே தேசஹா" என்கிறது நமது சாஸ்திரம். இமயபர்வதம் முதல் கன்யாகுமரிவரை உள்ள பகுதியை மட்டுமே தேசமாக நமது சாஸ்திரம் சொல்கிறது. பின்னால் இதற்கு பாரதம் என்ற பெயர் வந்தது. "இமயாத்ரி கன்யோஹ் அந்தர்ஜவே பாரதஹா" என்று ஆயிற்று.

ப்ரஹ்மணேஸத்வரூபாய ரஜோரூபாய விஷ்ணவே
தமோரூபமஹேஸாய ஜ்ஞாநரூபாய தே நம​:


என்கிறது சாஸ்திரம். பிரம்மா, விஷ்ணு, ருத்ரன் என்ற மூன்று பேர்தான் நமக்குப் பிரதான தேவதைகள். பிரம்மாவுக்கு இமாலயம். அதனால் அங்கே தேவாலயம் பிரதானமில்லை. ஜபம், தபம், ஸ்நானம்தான் முக்கியம். அடுத்து விந்த்ய பர்வதத்திலிருந்து கிருஷ்ணவேணியாந்தம். அது ராஜஸம். அதற்கு அதிபதி விஷ்ணு. மற்ற பகுதிகளெல்லாம் தாமஸம். அதற்கு அதிபதி ருத்ரன். சிவன் கைலாயத்தில் இருப்பதாகத்தான் ஐதீகம் என்றாலும் நம்மவர்கள் தென்னாடுடைய சிவனே போற்றி என்றார்கள். காரணம் தென்னாட்டில்தான் சிவாலயங்கள் அநேகம். எல்லா நாயன்மார்களும் பிறந்தது இங்கேதான். தமிழ்நாட்டில் இருக்கும் சிவாலயங்கள் அளவுக்கு வேறு எங்கும் இல்லை. இவையெல்லாம் கட்ட எத்தனையோ ஆயிரம் சிற்பிகள் அந்தக் காலத்தில் இருந்திருக்க வேண்டும். சாமான்யமில்லை. அதற்கெல்லாம் சாஸ்திரங்களும் இருந்திருக்கிறது.கே: அவை என்ன?
ப: அதுதான் கிரந்தாக்ஷரம். சம்ஸ்கிருதம் என்றால் உடனே ஹிந்தியையோ, தேவநாகரி லிபியையோ நீங்கள் சொல்லக் கூடாது. நமக்கென்று ஒரு லிபியை நம் முன்னோர்கள் இயற்றினார்கள். அதற்கு கிரந்தாக்ஷரம் என்று பெயர். அதில்தான் நமது சாஸ்திரங்கள், வேதங்கள், புராணங்கள், கல்வெட்டுக்கள் எல்லாம் எழுதப்பட்டிருக்கின்றன. அதை அந்தக் காலத்தில் எல்லா சிற்பிகளும் படித்தார்கள். அதை வைத்துத்தான் இத்தனை ஆலயங்களையும் கட்டினார்கள். அந்தந்த ஏடுகளெல்லாம் பரம்பரை பரம்பரையாகவே அவரர்களிடம் இருந்ததால் இதையெல்லாம் செய்யமுடிந்தது. இன்றளவுக்கும் அவற்றைக் காப்பாற்றி வைத்திருக்கிறார்கள். “மாதா சில்பி; பிதா சாஸ்திரஹ" என்கிறது வேதம். கண்ணுக்குத் தெரியும் நமது சரீரம் மாதிரி இருப்பது சிற்பம். நம் சரீரத்திற்குள் மறைந்திருக்கும் ஆன்மாபோல இருப்பது சாஸ்திரம். சரீரம் நன்றாக அமைந்தால்தான் ஆன்மா அதில் ஒளி வீச முடியும். அதுபோல சில்பி ஒழுங்காக பின்னங்கள், குற்றம், குறைகள் இல்லாமல் சிற்பங்களைச் செய்ய வேண்டியது மிக அவசியம். அதற்கு சாஸ்திரங்கள் உதவியாக இருக்கின்றன. இன்றைக்கு இங்கிலீஷ் எப்படி பிரதானமாக இருக்கிறதோ அப்படி அன்றைக்கு சம்ஸ்கிருதம் பிரதானமாக இருந்திருக்கிறது. ஆனால் இன்றைக்கு சம்ஸ்கிருதத்தைக் கற்பவர்கள் அதிகமில்லை. அதில் என்னவெல்லாம் இருக்கிறது என்பதும் யாருக்கும் தெரியவில்லை. புரியவில்லை. ஆரம்பத்தில் மஹாபலிபுரத்தில் ஒரு ஸ்கூல் வைத்திருந்தார்கள். அதில் சம்ஸ்கிருதத்தையும் வைத்திருந்தார் வெங்கட்ராமன், ராஜாஜி காலத்தில். ஆனால் அது புரியாத பாஷையில் இருக்கிறது என்று எல்லாரும் சொன்னதால் சம்ஸ்கிருதத்தை எடுத்து விட்டார்கள்.

கே: உங்களது குடும்பப் பின்னணி என்ன?
ப: நான் மிக ஏழைக் குடும்பத்தில் இருந்து வந்தவன். தேவக்கோட்டை அருகே உள்ள எழுவங்கோட்டை எங்களது மூதாதையர்கள் வாழ்ந்த ஊர். என் தாத்தா, அப்பா காலத்திலிருந்து நாங்கள் கோவில் கட்டுபவர்கள். எங்கள் முன்னோர்கள் பல ஆலயங்களை நிர்மாணித்திருக்கிறார்கள். தமிழ்நாட்டில் ஆலயங்களை ராஜாக்கள் நிர்மாணித்தார்கள். ஆனால் ராஜாக்கள் போனபிறகு இதை ஆதரிப்பார் இல்லை. பின்னால் நாட்டுக்கோட்டை நகரத்தார்கள் நிறைய ஆலயங்களை நிர்மாணித்தார்கள். அதன் வழியாக கொஞ்சம் கொஞ்சமாக இந்தக் கலை மீண்டும் தலையெடுத்தது. இப்படிப் பல ஊர்களுக்கும் ஆலய நிர்மாணத்துக்காக நாங்கள் சென்றோம். நான் அரசு அங்கீகாரம் பெற்ற ஸ்தபதி ஆனேன். பின்னர் ஆந்திர அரசின் தலைமை ஸ்தபதியாகப் பொறுப்பேற்று பல பணிகளைச் செய்தேன்.

கே: அந்தக் காலத்தில் சிற்பங்களை எப்படிச் செய்தார்கள்?
ப: நிறைய பேர் சிற்பங்கள் என்றால் 'பொம்மைகள்' என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆகமம், சாஸ்திரம் என்றால் ஏதோ புரியாத மந்திர தந்திரம் என்று தவறாகப் புரிந்து கொண்டிருக்கிகிறார்கள். அது அப்படி இல்லை. முதலில் மண்ணில்தான் சிற்பங்கள் செய்தார்கள். அடுத்து மரம். அதற்கப்புறம் மிஸ்ரம். அதாவது மண்ணைப் பக்குவம் செய்து செய்வது. ரங்கநாதர், பார்த்தசாரதி, சுருட்டப்பள்ளி ஈஸ்வரன் எல்லாம் அந்த மாதிரி மண்ணை, சுண்ணாம்புக் கலவை சேர்த்து, இன்னும் சில மருந்துப் பொருள்களோடு சேர்த்து பக்குவம் செய்து செய்வது. அதெல்லாம் கல் இல்லை. "கல்கம்" என்று அதற்குப் பெயர். "கல்கவிதானம்" என்று அவற்றைச் சொல்வார்கள். பின்னால் கல்லில் செய்ய ஆரம்பித்தார்கள். அதன்பின் பஞ்சலோகங்களில் செய்தார்கள். அப்புறம் மாணிக்கம், மரகதம் என ரத்தினங்களிலும் செய்தார்கள். இதற்கெல்லாம் "பிரதிமா லக்ஷணம்" என்று தனியாக சாஸ்திரம் இருக்கிறது.

கே: கல்லில் வடிக்கும் சிற்பத்திற்கும் பஞ்சலோக சிற்பங்களுக்கும் என்ன வேறுபாடு?
இரண்டிற்கும் ஒரே சாஸ்திரம்தான். ஒரே டிராயிங் தான். அது கல். இது உலோகம் அவ்வளவுதான் வித்தியாசம். இதில் கல்லை அப்படியே அடிப்போம். அதில் உலோகத்தை காய்ச்சி, உருக்கி வார்ப்போம்.

கே: அமெரிக்காவில் ஆலயம் எழுப்பியது பற்றி...
ப: நகரத்தார் என்றாலே திருப்பணி செய்ய ஆசைப்படுவார்கள். அதில் டாக்டர் அழகப்பா அழகப்பனுக்கு ரொம்பவே ஆர்வம் அதிகம். அவர்களுக்கு அமெரிக்காக் கண்டத்தில் ஓர் ஆலயம் கட்டத் தோன்றியிருக்கிறது. அப்போது சி.வி. நரசிம்மன் ஐ.நா. சபை செக்ரடரியாக இருந்தார். அவர்கள் திட்டமிட, மஹா பெரியவாளின் ஆசியோடு என் மூலமாக அமெரிக்கக் கண்டத்தில் முதல் இந்து ஆலயம் நிர்மாணமானது. நான் அதற்கு பிரதான ஸ்தபதியாக இருந்தேன். அடுத்து பிட்ஸ்பர்க் ஆலயப் பணிகளைச் செய்தேன். சித்தி விநாயகர் ஆலயம், வெங்கடேஸ்வரர் ஆலயம், இங்கே அறுபடை முருகன் ஆலயம் என்று அழகப்பா அழகப்பன் நிறையச் செய்திருக்கிறார். ஆனால் நான் அமெரிக்கா போனதற்குப் பிறகு வெளிநாடுகளுக்குப் போகவில்லை. பல வெளிநாட்டு ஆலயங்களுக்கு நான் வரைபடம் மட்டுமே போட்டுக் கொடுத்தேன்.

கே: ஏன்?
ப: ஏனென்றால் அப்போது நான் ஆந்திர அரசின் தலைமை ஸ்தபதியாக இருந்தேன். அந்தக் காலத்தில் இந்தியாவிலேயே 'ஸ்தபதி' என்ற பதவியை உருவாக்கி, அதனை ஆலய, நிர்மாணப் பணிகளுக்குச் செயல்படுத்தியது ஆந்திர அரசாங்கம் மட்டும்தான். அதனால் இந்தியாவின் பிற மாநிலங்களில் ஏதாவது ஆலயப் பணி மேற்கொள்ள வேண்டும் என்றால்கூட ஆந்திர அரசாங்கத்தையும், எங்களைப் போன்றவர்களையும் ஆலோசித்துத்தான் செயல்படுத்துவார்கள். பொறுப்பு அதிகம். வேலை அதிகம். நான் அரசு ஊழியன் என்பதால் அரசின் அனுமதி இல்லாமல் என்னால் போக முடியவில்லை. காஞ்சி காமகோடி பரமகுரு மஹா பெரியவா சொல்படிதான் நான் எப்பவும் நடப்பது வழக்கம். அவர் நீ அமெரிக்காவுக்கு இனிப் போக வேண்டாம் என்று சொல்லிவிட்டார். எனது ஆலோசனைப்படி அந்தப் பணிகளை எனது தம்பி முத்தையா ஸ்தபதி பொறுப்பேற்றுச் செய்து முடித்தார். அமெரிக்காவில் இருக்கும் ஆலயங்களில் முக்கால் பாகம் அவர் செய்ததுதான். அவர் தமிழ்நாட்டு அரசாங்கத்தின் தலைமை ஸ்தபதியாக இருக்கிறார். அவருக்கு பத்மஸ்ரீ விருது கொடுத்து கௌரவித்திருக்கிறார்கள்.

கே: ஹைதராபாத் புத்தர் சிலை பற்றி...
ப: என்.டி.ஆர். என்னிடம் கேட்டுக் கொண்டதற்கேற்ப அதைச் செய்து கொடுத்தேன். ஹைதராபாத் ஹுஸேன் ஸாகர் ஏரியில் ஒரே கல்லினால் ஆன புத்தர் சிலையை செய்திருக்கிறோம். அதன் உயரம் 75 அடி. உலகிலேயே மிக உயரமான, ஒரே கல்லினால் ஆன புத்தர் சிலை இதுதான் என்று சொல்வார்கள்.

கே: மஹா பெரியவாளுடனான உங்கள் அனுபவங்கள் மறக்க முடியாதவை, அல்லவா?
ப: என் வாழ்க்கையின் எல்லா உயர்வுக்கும் மூலகாரணம் மஹா பெரியவாதான். அவர் இளையாற்றங்குடியில் ஒரு பெரிய சதஸுக்கு ஏற்பாடு செய்தார். அதில் இந்தியாவில் உள்ள சிற்ப சாஸ்திர சபையினர்கள், பெரிய பெரிய ஆட்கள் எல்லாம் வந்து கலந்து கொண்டார்கள். அவர்களிடம் யார் யாரிடமெல்லாம் என்னென்ன பிரமாணங்கள் இருக்கிறது, சாஸ்திரம் இருக்கிறது என்றெல்லாம் கூடிப் பேசினார். நமக்கு கிழக்கு மேற்கு கண்டு பிடிப்பதிலிருந்து, சங்கு ஸ்தாபனத்திலிருந்து, பூமி கர்ஷணத்திலிருந்து, பிரதிஷ்டை செய்வது, கும்பாபிஷேகம் செய்வதுவரை கணக்குகள் இருக்கிறது. அதுதான் ஆகமம் மற்றும் சில்பம். ஆகமம் என்பது பூஜா முறை. சில்பம் என்பது கோயிலை நிர்மாணிப்பது. ஆக அந்தந்த சாஸ்திர விதிகளின்படிதான் எல்லாவற்றையும் செய்ய வேண்டும் என்றெல்லாம் சொல்லி ஆக்ஞாபித்தார். அவர்தான் கோவிலை சாஸ்திரப்படிதான் கட்டவேண்டும், வீடு மாதிரி கட்டக்கூடாது என்று எடுத்துச் சொன்னார். அவருக்கு முன்னால் இதுபற்றி எல்லாம் யாரும் பேசியதுமில்லை, அக்கறை கொள்ளவுமில்லை. அந்தக் கோயில்கள் காலத்துக்கு நீடித்திருக்க வேண்டும்; எல்லா அம்சங்களும் 16 பொருத்தங்களும் சரியாக இருக்க வேண்டும்; ஸ்தாபத்திய வேதப்படிதான் எல்லாவற்றையும் அமைக்க வேண்டும் என்றெல்லாம் எடுத்துச் சொன்னவர் அவர்தான். பெரியவா எங்களை எல்லாம் உற்சாகப்படுத்தி, சம்ஸ்கிருதத்தை எல்லாம் நன்கு படிக்கச் சொல்லி, சாஸ்திரங்களின் சிறப்பைச் சொல்லி, சதஸ்கள் நடத்தி ஊக்குவித்தார். இது எல்லாம் பிராபல்யம் ஆனதுக்குக் காரணம் மஹா பெரியவாதான். அவர் சொன்னபடிதான் இதுவரை நடந்திருக்கிறது. இனியும் நடக்கும்.

கே: ஆத்திகம், நாத்திகம் பற்றி உங்கள் கருத்தென்ன?
ப: கண்ணதாசன் அர்த்தமுள்ள இந்துமதத்தில் அதைப்பற்றியெல்லாம் மிக அழகாகச் சொல்லியிருக்கிறார். "நான் நாஸ்திகனாக இருந்தபோது அதைப்பற்றி எல்லாம் மேடை மேடையாகச் சென்று பேசுவேன். பின்னர் படிக்கப் படிக்க உண்மையை உணர்ந்தேன்" என்று. காலம் மாறிக் கொண்டே இருக்கும். வள்ளுவர் என்ன நாஸ்திகரா? கடவுள் வாழ்த்தைத்தானே முதலில் அவர் எழுதியிருக்கிறார். கடவுள் இல்லை என்று மறுத்தவர்களேகூடப் பல ஆலயங்களின் ட்ரஸ்டியாக இருந்திருக்கிறார்களே. ஆஸ்திகமும் நாஸ்திகமும் மாறி மாறி வரக் கூடியதுதான். ஆனால் நாஸ்திகம் ஸ்திரமாக இருக்காது.கே: சிற்பக் கலை இன்றைக்கு எப்படி இருக்கிறது?
ப: நன்றாகவே இருக்கிறது. எல்லாரும் கலைகளை விரும்புகிறார்கள். அயல்நாட்டவர்கள் எல்லாம் வந்து பார்த்து ஆனந்தம் அடைகின்றார்கள். நம் மன்னர்கள் எழுப்பிய ஆலயங்களை, சிற்பங்களைப் பார்த்து ஆச்சரியம் அடைகின்றார்கள். இப்போது அரசாங்கமே நிறைய ஆதரிக்கிறது. பல ஆலய நிர்மாணப் பணிகள் நடக்கின்றன. தனியார் அமைப்புகளும் பல கோயில்களை நிர்மாணம் செய்வதில் ஆர்வமாக இருக்கின்றன.

கே: உங்கள் வாரிசுகளும் உங்கள் பணியைத் தொடர்கிறார்கள் அல்லவா?
ப: ஆமாம். எனக்கு இரண்டு பையன்கள். மூத்தவர் சங்கரன். இளையவர் ஜயேந்திரன். பெரியவாளின் ஞாபகமாக அவர்களுக்கு அந்தப் பெயர்களை வைத்தேன். அவர்கள் ஆங்கிலக் கல்வி படித்துக் கொண்டிருந்தார்கள். ஒருமுறை காஞ்சி காமகோடி பரமகுரு மஹா பெரியவாளைக் குடும்பத்துடன் பார்க்கப் போனபோது பெரியவா அவர்களுக்கும் உன் தொழிலைக் கற்றுக் கொடு, சம்ஸ்கிருதம் படிக்க வை. மிக நன்றாக வருவார்கள் என்று சொல்லி ஆக்ஞாபித்தார். அவர் சொன்னதுதான் எனக்கு வேத வாக்கு. அதன்படியே செய்தேன். இன்றைக்கு அவர் சொன்னபடியே என் இரண்டு மகன்களும் அமெரிக்கா, கனடா என்று பல வெளிநாடுகளுக்குப் போய் நிறைய ஆலயப் பணிகளைச் செய்து வருகிறார்கள்.

எனது மூத்த மகன் செய்ததுதான் பெங்களூரில் இருக்கும் விகாஸ் சௌதா. விதான் சௌதாவைப் போல மற்றொன்றை யாரும் செய்ய முடியாது என்று பலரும் சொன்னபோது இவர் அதை ப்ளான் போட்டு ரொம்பச் சிறப்பாகச் செய்து முடித்தார். அப்போதைய கர்நாடக முதல்வர் கிருஷ்ணா என் மகனைக் கட்டி அணைத்து ஆனந்தப்பட்டார். பாராட்டி கௌரவம் செய்தார். கர்நாடகாவில் எங்களுக்கு ஒரு ஃபேக்டரி இருக்கிறது. அதை அவர் பார்த்துக் கொள்கிறார். அதேபோல பெல்காமிலும் செய்து கொடுத்தார். சென்னை ஸ்ரீராமகிருஷ்ணா மடம் சங்கரன் கட்டியதுதான். தற்போது 160 அடி உயரத்தில் சிருங்கேரி பீடத்திற்காக கோபுரம் ஒன்றை கட்டிக் கொண்டிருக்கிறார். அதேபோல ராமேஸ்வரத்தில் ஒரு கோபுரம் கட்டிக் கொண்டிருக்கிறார். சிருங்கேரியில் மிக பிரமாண்டமான ஆதி சங்கரர் மணிமண்டபம் அமைக்கும் பணி நடந்து கொண்டிருக்கிறது. அவர் சிருங்கேரி மடத்தின் ஆஸ்தான ஸ்தபதி என்ற கௌரவம் பெற்றவர்.

சின்னவர் ஜயேந்திர ஸ்தபதி காஞ்சிபுரத்திலும் இங்குமாக இருக்கிறார். காஞ்சிபுரத்தில் ஒரு ஃபேக்டரி இருக்கிறது. அதை அவர் பார்த்துக் கொள்கிறார். ஓரிக்கை மண்டபப் பணிகளை எல்லாம் பொறுப்பாகச் செய்தது அவர்தான். ஆந்திராவின் ஓங்கோல், விசாகப்பட்டினம், அனந்தபூர் இவற்றிலெல்லாம் பிரமாண்டமாகப் பல ஆலயங்களைக் கட்டியிருக்கிறார். கோவிந்தபுரத்தில் மஹா பெரியவாளுக்கு மணிமண்டபம் கட்டியது ஜயேந்திரன்தான். அமெரிக்காவில் ஆதிசங்கரர் கோயில், நியூஜெர்ஸியில் குருவாயூரப்பன் பரிவார ஆலயம் இன்னும் கனடா உட்பட பல வெளிநாடுகளில் நிறையச் செய்து கொண்டிருக்கிறார்.கே: எதிர்காலத் திட்டங்கள் என்ன?
ப: இன்றைக்கு கம்ப்யூட்டர் வந்துவிட்டது. நிறையப் புஸ்தகங்கள் கிடைக்கின்றன. பழங்கால ஏடுகள் எல்லாம் இருக்கின்றன. இவற்றையெல்லாம் முறையாக ஒரு பள்ளியை ஆரம்பித்துப் பாதுகாக்க வேண்டும். ஆய்வு செய்ய வேண்டும். இந்தக் கலையைத் தொடர்ந்து தலைமுறைகளுக்குக் கொண்டு செல்லவேண்டும். இன்றைய எஞ்சினியரிங் மெதட்ஸ் மற்றும் கட்டிடம் சம்பந்தமானவை எல்லாம் சிற்ப சாஸ்திரங்களில் எழுதியிருக்கிறது. ஒரு கோயிலை எப்படி உருவாக்குவது, படம் போட்டு, கிழக்கு மேற்கு, சங்குஸ்தானம், பொம்மைகள் எப்படிச் செய்திருக்கிறார்கள், இதற்கு பிரமாணம் என்ன, விமானம் எப்படி, கருவறை, அர்த்தமண்டபம், மகாமண்டபம், மதில் நிர்ணயம், கோபுரங்கள், விமான கோஷ்டங்கள், கலசம் என்பதுபற்றியெல்லாம் ஒரு மாநாடு கூட்டி எல்லாருக்கும் விளக்கி ஒரு ரிசர்ச்போலச் செய்தால் பயனுள்ளதாக இருக்கும். ஆனால் இதற்கு மிகுந்த பொருட்செலவு ஆகும்.

83 வயதாகிறது கணபதி ஸ்தபதியாருக்கு. அதனால் ஏற்பட்ட உடல்நலக் குறைவு என்றாலும் நாம் கேட்கும் கேள்விகளுக்கு விளக்கமாக பதில் சொல்கிறார். பேச்சுக்குப் பேச்சு பக்தியோடு மஹா பெரியவாளை நினைவு கூர்கிறார். சம்ஸ்கிருத ஸ்லோகங்களையும் அதற்கான விளக்கங்களையும் சொல்லி ஆச்சரியப்படுத்துகிறார். என்னுடைய அறிவையும் அனுபத்தையும் ஒரு கான்ஃபரன்ஸ் மூலம் எல்லாருடனும் பகிரத் தயாராக இருக்கிறேன் என்கிறார். அவருக்கு நன்றி கூறி விடைபெற்றோம்.

சந்திப்பு, படங்கள்: அரவிந்த் சுவாமிநாதன்

*****


ஓவியமும் சிற்பமும்
இன்றைக்கு ஸ்கூல் ஆஃப் ஆர்ட்ஸ், ஃபைன் ஆர்ட்ஸ் என்றெல்லாம் சொல்கிறார்கள். நிறையக் கலைஞர்கள் இருக்கின்றார்கள். ஆனால் அவர்கள் யாராலும் நடராஜ மூர்த்தியை சாஸ்திரப்படி எழுதமுடியாது, வரைய முடியாது. ஸ்தபதி ஒருவரால்தான் அது முடியும். ஏனென்றால் அவர்களிடம்தான் அதற்கு சாஸ்திரம் இருக்கிறது. மற்றவர்கள் ஊகமாக எழுதுகிறார்கள். ஒரு உதாரணம் சொல்கிறேன். ஒரு நடராஜர் சிலை. அது ஆறடி உயரம். அவர் ஒரு காலைத் தூக்கி மேலே காண்பித்தால் அப்போது எவ்வளவு உயரம் குறையும்? அதற்கு சாஸ்திரம் அளவு சொல்கிறது. பூர்வ சூத்திரம் இருக்கிறது. பிரதிமா லட்சணம் இருக்கிறது. அதன்படிச் செய்தால்தான் எல்லாம் சரியாக வரும். காச்யப மஹரிஷி 'வர்ண லேபரம்' பற்றி தனியாக ஒரு அத்தியாயத்தில் சொல்லியிருக்கிறார். இதை எல்லாம் ஆராய வேண்டும்.

ஆனால் இதில் சில்பத்தின் சாயலைப் பிடித்தவர்கள் மணியமும் சில்பியும். அவர்கள் இருவர் மட்டும்தான் அந்த லைனில் வந்தார்கள். ஆனால் அவர்கள் பத்திரிகைத்துறைக்குப் போய் விட்டார்கள். ஒன்றைப் பார்த்து அதுமாதிரியே வரைவது வேறு. ஒன்றை உள்ளுக்குள் உணர்ந்து, சாஸ்திரப்படி சரியாக வரைவது வேறு. இரண்டுக்கும் வித்தியாசம் இருக்கிறது.

சுப்ரமண்யர், ஷண்முகர் என்றால் ஆறுமுகம், பனிரெண்டு கை, மயில் வாகனத்துடன் இருக்கிறார் என்று சொல்லிவிடலாம். ஆனால், அவர் எப்படி அமர்ந்திருப்பார், எந்தக் கையில் என்ன வைத்திருப்பார், மயில் எப்படி இருக்கும் என்றெல்லாம் சில்ப சாஸ்திரம்தான் சொல்லும். மற்ற தேவார, திருவாசகங்களோ, புராணங்களோ சொல்லாது. அததற்கு தியான ஸ்லோகங்கள், சாஸ்திரங்கள் இருக்கின்றன.

S.M. கணபதி ஸ்தபதி

*****


மஹா பெரியவா மணி மண்டபம்
நான் 1989ல் ஹைதராபாதில் இருந்து ரிடயர் ஆனதும் பெரியவாளிடம் என்ன செய்வதென்று கேட்டேன். அவர் இங்கேயே தங்கிவிடு என்று சொல்லிக் காஞ்சிபுரத்திலேயே இருக்க வைத்து விட்டார். அவர் ஆக்ஞைப்படி நிறைய சில்ப வேலைகளை எடுத்துச் செய்து கொண்டிருந்தேன். அப்படிச் செய்ததுதான் ஓரிக்கை மணி மண்டபம். அந்தக் காலத்தில் சோழர்கள் அதிக உயரம் கொண்ட விமானங்களைக் கட்டினார்கள். தஞ்சை பிரகதீசுவரர் ஆலயம், கங்கைகொண்ட சோழபுரம், திருபுவனம் போன்ற ஆலயங்களை உதாரணமாகச் சொல்லலாம். சோழர்கள் செய்தது அபூர்வமானதாக இருக்கும். பல்லவர்கள் செய்தது கலை நயத்தோடு இருக்கும். ஆயிரம் வருடங்களுக்குப் பிறகு அந்தப் பாணியில் கட்டப்பட்ட ஆலயம் ஓரிக்கை. இது 116 அடி உயரமும், 60 அடி அகலமும் கொண்டது. வெறும் மணல் மேலேயே அந்த ஆயிரக்கணக்கான டன் வெயிட் நிற்கிறது.

மஹா பெரியவாளை மஹா மஹா மஹான் என்கிறோம். அதுபோல ஓரிருக்கை மணிமண்டபமும் மஹா மஹா மஹா பெரிதாக அமைந்திருக்கிறது. உள்ளே 100 தூண்களைக் கொண்ட மண்டபம், பெரியவா 100 வருஷம் வாழ்ந்தார் என்பதைக் குறிப்பதாக இருக்கிறது. மேலும் கற்சங்கிலிகள், சிம்மத்தின் வாய்க்குள் பந்து, யானைகள், யாளிகள், குதிரைகள் என்று எல்லாம் அந்தக்காலத்தில் செய்யப்பட்டது போலவே அதே மாதிரிக் கல்லால் செய்யப்பட்ட ஆலயம் இது. கான்க்ரீட், ஜல்லி, இரும்பு எதுவும் பயன்படுத்தப்படவில்லை. வெள்ளைக் கல் மற்றும் கருங்கல்லால் முழுக்க முழுக்க கட்டப்பட்டுள்ளது. கும்பாபிஷேகம் ஆகிவிட்டது. கர்ப்பகிருஹத்தில் மஹா ஸ்வாமிகளின் மூன்றடி உயர மூர்த்தியுடன் அவர் பயன்படுத்திய பாதுகையும் தரிசனத்துக்கு வைக்கப்பட்டுள்ளது. சின்னச் சின்ன வேலைகள் மட்டும் பாக்கி இருக்கின்றன. தஞ்சாவூர் நந்தியைவிட மிகப்பெரிய நந்தியைச் செய்திருக்கிறோம். சுமார் 20 அடி உயரம். மிக அழகாக வந்திருக்கிறது. ஒரே கல்லில் ஆனது அந்த நந்தி. நந்தி மண்டபமும், கோபுரமும் பண்ணினால் கோயில் பூர்த்தியாகி விடும்.

இன்னும் சிலவற்றை அதில் செய்யப் போகிறோம். சப்த துவஜ ஸ்தம்பம் செய்ய வேண்டும் என்று பெரியவா சொல்லியிருக்கிறார்கள். அதையும், அதுபோல ஆவுடையார் கொடுங்கை என்பதையும் செய்ய இருக்கிறோம். அதுமாதிரி யாராலும் செய்ய முடியாது என்று சொல்வார்கள். அதைச் செய்ய இருக்கிறோம். அதற்கான வேலைகளை என் மகன் ஜயேந்திர ஸ்தபதி செய்து கொண்டிருக்கிறார். இதெல்லாம் மஹா பெரியவாளின் அனுக்ரஹம். அவர் ஆக்ஞை, அருளாசி இல்லாமல் செய்யமுடியாது. என்னைப் பெரியவா இங்கேயே இருந்து விடு என்று சொன்னது இந்தப் பணிக்காகத்தான் என்று எனக்குத் தோன்றுகிறது. என்னுடைய கற்பனை மட்டுமல்ல இது. அவர் சொன்னதைத்தான் நான் செய்திருக்கிறேன். அவர் சொன்னதுதான் அங்கே உருவமாயிருக்கிறது.

S.M. கணபதி ஸ்தபதி

*****


பெரியவர் கொடுத்த ருத்ராட்சம்
ஒருமுறை மஹாப் பெரியவர் சதாராவில் முகாமிட்டிருந்தார். சஹஸ்ரலிங்க பிரதிஷ்டைக்காக நானும் அங்கே சென்றிருந்தேன். அது ஒரு சிவராத்திரி தினம். அன்று மௌனம் அனுஷ்டித்து வந்தார் பெரியவா. அவரை தரிசிக்க பெரும் கூட்டம். 'பெரியவா அவர்கள் கையினால் எனக்கு எதுவும் கொடுக்கவில்லையே. ஒரு ருத்திராட்சமாவது கொடுத்தால் நல்லது' என்று மனதில் நினைத்தேன்.

திடீரென பெரியவா அங்குள்ள பக்தர்களிடம் யானையின் தும்பிக்கையைப் போலக் கையைக் காட்டி, 'கணபதியைக் கூப்பிடு' என்று சைகை செய்திருக்கிறாகள். உடனே கூட்டத்தில் இருந்த என்னைப் பெரியவாளிடம் கூட்டி வந்தார்கள். ஜன்னல் அருகில் பெரியவா வீற்றிருந்தார்கள். கையில் ஒரு ருத்திராட்சம் வைத்திருந்தார்கள். அதைக் கொடுத்தார்கள். என் மனம் பூரித்துப் போனது. நாம் மனதில் நினைத்துக் கொண்டதைப் பெரியவா எப்படி உணர்ந்தார்? நாம் நினைத்தபடியே அவர்கள் கையினாலேயே கொடுக்கிறார்களே! என்று பிரமித்துப் போனேன். அந்த ருத்திராட்சத்தை என் கழுத்தில் கட்டிக் கொண்டேன். இன்றுவரை என் கழுத்தில் உள்ளது.

S.M. கணபதி ஸ்தபதி

*****


தெலுங்குத் தாய்
ஒருநாள் 'ஈநாடு' செய்தித்தாள் நிருபர் என்னைக் காண வந்தார். அவர் செய்தி நிருபர் என்று எனக்குத் தெரியாது. தெலுகு தல்லிக்கு எத்தனை கைகள் இருக்க வேண்டும் என்று கேட்டார். நான் இரண்டு கைகள் இருக்க வேண்டும் என்றேன். மறுநாள் செய்தித்தாளில் தெலுங்கு தல்லிக்கு இரண்டு கைகளா, நான்கு கைகளா என்ற கேள்வியை எழுப்பி விமர்சித்து எழுதி விட்டார். இந்த விஷயம் அரசின் கவனத்துக்குச் சென்றது. வாத விவாதங்கள் ஏற்பட்டன. அதன் காரணமாக ஒரு கமிட்டியை அமைத்தார்கள். 'மாதெலுகு தல்லிக்கு மல்லிப்பூ தண்டா' என்று இந்தப் பாடலைப் பாடி வணக்கம் செய்துதான் ஆந்திர அரசு எந்த விழாவையும் ஆரம்பிக்கும். அந்தப் பாடலை ஆதாரமாக வைத்துத்தான் நான் அந்த ஓவியத்தை வரைந்திருந்தேன்.

வலது கையில் பூரண கும்பத்தின் மேல் தேங்காயும் மாவிலையும் உள்ளது போலவும், இடது கையில் நெற்கதிர் கொண்டுள்ளது போலவும் வரைந்திருந்தேன். இதன் விளக்கம்: ஜலம் நிறைந்த நாடு என்பதைக் குறிக்க பூரண கும்பமும், தென்னை வளமிக்க நாடு என்பதைக் குறிக்க கும்பத்தின் மேல் தேங்காயும், மாம்பழத்துக்குப் பிரசித்தி பெற்ற தேசம் என்பதால் மா இலைகளை வலது கை தாங்கியுள்ளது போலும் வரைந்திருந்தேன். ஆந்திரம் நாடு அண்டையில் உள்ள நாடுகளுக்கு தான்யம் (நெல்) வழங்கும் நாடு என்பதை இடது கையிலுள்ள நெற்கதிர் குறிப்பது போலவும் வரைந்திருந்தேன்.

தெய்வத்தாயின் உருவம் என்பதால் தெலுகு தல்லியை நின்ற வடிவத்தில் கழுத்தில் மல்லிகை மாலை சூடிய வடிவத்தில் சித்தரித்திருந்தேன். நான் சொல்லிய விளக்கத்தை கமிட்டியினர் ஒப்புக் கொண்டனர். ஆனால் முதலமைச்சருக்கு வேண்டியவரான வெங்கட்ராம ரெட்டியார் ஒப்புக் கொள்ளவில்லை. பின் என்.டி. ராமராவ் முதலமைச்சர் ஆனவுடன் 'கணபதி ஸ்தபதி வரைந்த தெலுகு தல்லியை அரசு ஒப்புக் கொள்கிறது' என்று ஆணை பிறப்பித்தார். எல்லா இடங்களிலும் இந்தப் படத்தையே போட வேண்டுமென்று சொல்லிவிட்டார்கள். பின்னர் டெல்லியில் தெலுகு தல்லியை அஞ்சல்தலையாக வெளியிட்டார்கள். அதன்பிறகு மஹபூப் நகரில் முதன்முதலாக 6 அடி உயரத்தில் தெலுகு தல்லி விக்ரகத்தை தாமிரத்தில் செய்து வைத்தார்கள். முதலமைச்சர் வெங்கல்ராவ் அதைத் திறந்து வைத்தார்.

"என் வாழ்க்கைப் பயணம்" என்னும் ஸ்தபதியின் வாழ்க்கை வரலாற்று நூலிலிருந்து...

© TamilOnline.com