சலூன்
கிருஷ்ணமூர்த்தியை எந்த ஒரு பெண்ணும் ஏறிட்டுப் பார்த்து மூன்று நான்கு வருடங்கள் இருக்கும். இந்த வருடங்களில்தான் கிருஷ்ணமூர்த்தி மாதம் ஒரு தடவை, முதல் திங்கள் கிழமையன்று நியூ ஸ்டார் சலூனுக்குப் போகிற வழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டிருந்தான். செவ்வாய்க்கிழமை சலூன் கிடையாது. வெள்ளிக்கிழமை முடிவெட்டிக் கொள்வது நல்லதல்ல. ஞாயிற்றுக்கிழமை கும்பலாயிருக்கும். மற்ற கிழமைகளில் கிருஷ்ணமூர்த்தி தன் இரு பையன்களுக்கும் வெட்டிவிட வேண்டும். ஒரே நாளில் இரு பையன்களுக்கும் வெட்டி விடுவது தகப்பனுக்காகாது. தந்தையும் மகனும் ஒரே நாளில் வெட்டிக்கொள்வது குடும்பத்துக்குக் கெடுதல். இரண்டாம் வாரத்துக்கு மேல் சில்லறைத் தட்டுப்பாடு வந்துவிடுமாகையால், சம்பளம் வந்த முதல் வாரத்திலேயே சலூன் சமாச்சாரங்களை முடித்துவிட வேண்டும்.

கிருஷ்ணமூர்த்தி நியூ ஸ்டார் சலூனுக்கு வந்தபோது இரண்டு விஷயங்களைக் கவனித்தான். முதலாவது சலூனின் பெயர் கிரெஸண்ட் சலூன் என்று மாறியிருந்தது. இரண்டாவது கடைக்குள் வழக்கமாய் வெட்டிவிடுகிற, குண்டான கழக அரசியல் பேசுகிற பழனிவேல் என்ற பெயரைக் கொண்ட ஆளைக் காணோம். கடைக்குள் எப்போதும் இருக்கும் ஒல்லியான நபர் மட்டுமே இருந்தார். கிருஷ்ணமூர்த்திக்கு அவர் பெயர் தெரியாது. அவரிடம் ஐம்பது வயதிற்கு மேற்பட்ட வாடிக்கையாளர்கள்தான் வழக்கமாய் வெட்டிக் கொள்வார்கள், பெரும்பாலும் கையைத் தூக்கி
மழிக்கச் சொல்பவர்கள்.

"என்ன பாக்கறே? வா சார்..."

கிருஷ்ணமூர்த்தி தயங்கி நின்றான்.

"சும்மா வா சார்..."

"அவர் இல்லீங்களா?.."

"சொல்றேன். மொதல்ல வா சார்"

"நான் வழக்கமா அவருகிட்டதான் வெட்டிக்கிறது"

"தெரியும் சார். அவன் என்ன லண்டன்லியா முடி வெட்டிக்கக் கத்துக்கினான்? நாந்தான் சார் கத்துக்குடுத்தேன். சும்மா வா"


கிருஷ்ணமூர்த்தி யோசித்தான். ஒருவேளை இந்த ஒல்லி நபர் நன்றாக வெட்டி விடலாம்.
மீண்டும் பெண்கள் பழைய நாட்களைப் போல் தொலைவில் கிருஷ்ணமூர்த்தியைக் கண்டதும் கண்கள் படபடக்க, மார்பு விம்மித் தணிய வெறிக்கவும் ஆரம்பிக்கலாம். மகத்தான எதிர்காலத்தை நோக்கி கிருஷ்ணமூர்த்தி நடந்து உட்கார்ந்து கொண்டான். போர்வை போர்த்தப்பட்டது. காலருக்குள் துணியின் முனை போனதும் கிருஷ்ணமூர்த்திக்கு தான் ஏதோ ஒரு சாயலில் ஜவஹர்லால் நேருவைப் போல இருப்பதாகத் தோன்றியது. நேருவுக்கு ரோஜாப்பூ. கிருஷணமூர்த்திக்கு வெள்ளைத் துணியில் அப்போதுதான் விழுந்திருந்த கற்றை மயிர்.

"அவர் இல்லீங்களா?.." கிருஷ்ணமூர்த்தி மீண்டும் கேட்டான்.

"அவனை நிப்பாட்டிட்டேன்"

"கடையை நீங்க வாங்கிட்டீங்களா?"

"கொஞ்சம் இரு சார்.. டேய் இங்க வாடா.."

கடைக்கு வெளியே உட்கார்ந்திருந்த பையன் ஓடி வந்தான். ஒல்லி ஆள் அவனை டீ வாங்க அனுப்பிவிட்டுத் தொடர்ந்தான்.

"மின்னியே கடை என்னுதுதான்"

கணநேரம் கிருஷ்ணமூர்த்தி குழப்பமடைந்தான். இத்தனை நாட்களாக கடையின் சொந்தக்காரன் குண்டாயிருக்கும் பழனிவேல் என்றே நினைத்தான். அதற்கு நிறையக் காரணங்கள் இருந்தன. ஒன்று: பெரும்பாலான முதலாளிகள் குண்டானவர்கள். கடைக்குள் நிறைய அரை நிர்வாணக் காலண்டர்கள் இருந்தன. அவற்றை இளைஞனான பழனிவேலுடன் மட்டும் சம்பந்தப்படுத்திப் பார்க்க முடிந்தது. கிருஷ்ணமூர்த்தி தலையை நிமிர்த்திப் பார்த்தான். காலண்டர்கள் அங்கேயேதான் இருந்தன.

"பழனிவேல் இதெல்லாம் எடுத்திட்டுப் போகலியா..."

"ம்... போயிடுவாரு... அத்தினியும் நான் மாட்டினது. அவன்தான் மாட்டினான்னு நினைச்சியா...?"

கிருஷ்ணமூர்த்திக்கு தான் தொடர்ந்து ஒருமையில் அழைக்கப்படுவது கொஞ்சங்கூடப் பிடிக்கவில்லை. காதருகில் நிக் நிக்கென்று கத்திரி விளையாடும்போது ஆட்சேபம் தெரிவிக்கவும் பயமாயிருந்தது. வம்பு கேட்கும் ஆசை அலைக்கழிக்க, "என்ன தகராறு?" என்றான்.

"தகராறா... அதை ஏன் கேட்குற.. இது என்ன?"

"போட்டோ"

"யாருது"

"உங்களுது"

தெருவித்தைக்காரன் பாணியில் ஒல்லி ஆள் கேட்கக் கேட்க, கழுத்துவரை மூடியிருந்த கிருஷ்ணமூர்த்தி பவ்வியமாகப் பதில் சொல்லிக் கொண்டிருந்தான்.

"அசக்காதே! என் போட்டோதானே இது?"

"உம்"

"கடைங்கள்ல யாரு போட்டோ மாட்டுவாங்க"

கிருஷ்ணமூர்த்திக்கு பதில் தெரியவில்லை.

"சொல்லுப்பா யாரு படம் வைப்பாங்க. உன் படமா? ஓனர் படம்தானே மாட்டுவாங்க? அவன் என்ன
செஞ்சான்னு கேளு. வர்ற கஷ்டமர் கிட்ட எல்லாம் புளுகறது. அஞ்சு, பத்து கைமாத்துக் கேட்குறது. வர்றவங்களுக்கென்ன? ஓனர்தானேனு நினைச்சுக் கொடுத்துருவாங்க. அதான் போட்டோவை மாட்டிட்டேன். அவன் கடைன்னா அவன் போட்டோதானே மாட்டியிருக்கணும்? இது என் போட்டோ. கடை ஓனரு நான்தான்."

"உம்"

"இதைப் பாத்தியா... இத்தினி பேரு கிட்ட பணம் வாங்கியிருக்கான். எத்தினி ஆச்சு?

"உம்"

"எத்தினி ஆச்சுப்பா?"

ஒல்லி ஆள் காட்டிய காகிதத்தைப் பார்த்து கிருஷ்ணமூர்த்தி விசுவாசமாய்க் கூட்டினான்.

"எண்பத்தி ஒரு ரூபா"

"உம் இப்படியே போய்க்கிட்டிருந்தா கடைய எவன்கிட்டயாவது அடமானம் வச்சிருவான். அதான் நிப்பாட்டிட்டேன். பிள்ளை மாதிரி வளர்த்தேன். கல்யாணம்னு சொன்னான். நூறு ரூபா கொடுத்தேன். அயோக்கியன். நம்மகிட்டயே கூர் பார்த்துட்டான்"

"உம்"

"அசக்காத. என்ன வேணும்? அரிக்குதா?"

"இல்ல.. சிகரெட் வேணும்"

"இரு. வாங்கியாறச் சொல்றேன். டேய் சாருக்கு சிகரெட்டாம். வாங்கியா"

கடைப்பையன் வாங்கப் போனான். அவன் டீ வாங்கி வந்து ஒரு நிமிஷம்கூட ஆகவில்லை. அதற்குள் சிகரெட். பிராண்ட்கூட அவனுக்குத் தெரியும். வழக்கமாய் நாலணா டிப்ஸ் தருகிற வழக்கம். அதை வெறுமனே கொடுக்க கிருஷ்ணமூர்த்திக்கு மனம் வராது. சிகரெட் வாங்கி வந்ததற்குக் கொடுத்தால் பரஸ்பரம் திருப்தியா இருக்கும். நாலணாவை வாங்கிக் கொள்ளும்போது பையன் அழகாக வெட்கப்படுவான். பாவம்... அவனுக்கு நல்ல சட்டைகூடக் கிடையாது. அவன் நிறைய வேலை செய்வான். பத்து நிமிஷத்துக்கொருதரம் தரையைப் பெருக்குதுவதும், முந்தின நாள் தந்திப் பேப்பரை ஷேவிங் க்ரீம் வழிக்க கையகலத்தில் துண்டு துண்டாய் வெட்டுவதும், டீ வாங்க, கிருஷ்ணமூர்த்தி மாதிரி ஆட்களுக்கு சிகரெட் வாங்க என்று பல வேலைகள். சம்பளம் உண்டோ? இல்லை வெறும் சாப்பாடு மட்டுமோ?

பையன் போன சுருக்கில் திரும்பினான். கிருஷ்ணமூர்த்தி கிளம்பும்போது ஒல்லி ஆள் அந்தப் பையனைக் காட்டி, "இவன் வயசிலேதான் அவனும் என்கிட்ட வந்தான். தொழில் கத்துக்கிட்டான். சரி. அத்த விடு. வா சார். நம்ம கடைக்கே எப்பவும் வா. ஜோரா வெட்டி விடறேன்" என்று முடித்தான்.

கிருஷ்ணமூர்த்தி வெளியே வந்ததும் சிகரெட்டைப் பற்ற வைத்தான். கடையைத் திரும்பி ஒருதரம் பார்த்தான். இரண்டு ஓட்டை நாற்காலிகள், பொதுவில் தண்ணீர் பீச்சுகிற முனை உடைந்த பாட்டில். ஒரு பென்ச் நிறைய முண்டக்கட்டைக் காலண்டர்கள். இத்தனைக்குமாக போராட்டம் நடக்கிறது. இத்தனையும் ஒரு சமஸ்தானம் போலும். ஒல்லி ஆள் ராஜா போலும்; சூழ்ச்சி செய்கிற தளபதி போல ஒரு தடியனும் சேவகனாய் அந்தப் பையனும். கிருஷ்ணமூர்த்தி மனம் விட்டுக் கொஞ்ச நேரம் சிரித்தான்.

****

அடுத்தமாதம் முதல் திங்கள்கிழமையன்று கிருஷ்ணமூர்த்தி மீண்டும் சலூனுக்குக் கிளம்பினான்
. இந்தத் தடவை சலூனின் பெயர் மீண்டும் "நியூ ஸ்டார்" என்று மாறியிருந்தது. சென்றமுறை வெட்டிவிட்ட ஒல்லி ஆளைக் காணோம்.

"வாங்க சார்" என்றான் பழனிவேல்

"உம்"

"உட்காருங்க. டேய் பையா, சாருக்கு டீ வாங்கியாடா..."

அதே பையன். காலண்டர்களும் அதே. தண்ணீர் தெளிக்கும் பாட்டில் கூட மாறவில்லை. போட்டோ மட்டும் மாறியிருந்தது. இந்தமுறை பழனிவேலின் போட்டோ தொங்கிக் கொண்டிருந்தது.

"பாருங்க சார் அநியாயத்தை. பதினைஞ்சு நாள் ஊர்ல இல்லாமப் போயிட்டேன்."

"உம்"

"வந்து பாத்தா கடை பேரு மாறியிருந்திச்சி. அந்த ஆளு போட்டோ தொங்குது. அவர்தான் ஓனராம். போற வர்ற ஆளுங்ககிட்ட பொய் சொல்லிட்டிருக்கான் சார்."

"உம்"

"தகப்பனார் மாதிரி மதிச்சேன். என்னிக்காவது உங்க முன்னாடி அந்த ஆளைத் திட்டினதுண்டா?"

"ஓனர்னு சொல்லி வர்றவங்ககிட்ட கடன் கேட்டாராக்கும்" என்றான் கிருஷ்ணமூர்த்தி.

"அதெல்லாம் இல்ல. சும்மா பொய் சொல்லக்கூடாது. போட்டோ மாட்டினார் சார். கடை பேரு மாத்தியிருக்கு. நான் மாத்தலைன்னு சொல்றாரு. ஆனா போர்டுல புரொப்ரைட்டர்னு அந்த ஆளு பேரு எழுதியிருந்திச்சி. சரி, ஏதோ தகப்பன் வயசுன்னு நான் போலீஸ் கம்ப்ளெய்ண்ட்கூட கொடுக்கலை. போன வருஷம் அவரு சம்சாரம் தவறிப் போயிட்டாங்க. ஏதோ பாவம் எங்கம்மா மாதிரி. எல்லாச் செலவும் நான் ஏத்துக்கிட்டேன். ஆனா அடாவடி அடிச்சா என்ன செய்யிறது... கொஞ்சம் நேரப் பாருங்க.. ஆங்... பாருங்க, பதினைஞ்சு நாளு.. அதுக்குள்ள போட்டோ மாட்டியிருக்காரு.. என்னடா மனுஷங்கன்னு ஆயிட்டுது சார்.. இது என்ன சார்?"

"போட்டோ" கிருஷ்ணமூர்த்தி நிமிர்ந்து பார்க்காமல் சொன்னான்.

"என் போட்டோ சார். அவருதைக் கடாசிட்டேன். இனிமே வராதீங்க. ஏதோ அப்பன் மாதிரி மதிச்சேன். கூட ஒரு மாச சம்பளம் தர்றேன். எங்கியும் எப்படியும் சமாளிச்சுக்கங்கன்னு நிப்பாட்டிட்டேன்."

"உம்"

"நீங்க எப்பவும் போல வாங்க சார். இனி கடையில நாந்தான் எப்பவும் இருப்பேன்" என்றான் பழனிவேல்.

கிருஷ்ணமூர்த்தி கடையை விட்டு வெளியே வந்ததும் வழக்கம்போல சிகரெட்டைப் பற்ற வைத்தான். கடையை ஒருதரம் திரும்பிப் பார்த்தான். அந்த சமஸ்தானத்திற்கு தளபதி அரசனாகி விட்டான். ஒருவேளை ஒல்லி ஆள்தான் தளபதி போலும். வேட்டைக்கு மன்னன் பதினைந்து நாட்கள் சென்று திரும்பும் முன் சூழ்ச்சியால் அரியணை பெற்ற தளபதி. போட்டோ என்ற இலச்சினை மோதிரம். யார், யாரை மோசம் செய்கிறார்கள் என்ற முடிவான தீர்மானத்திற்கு கிருஷ்ணமூர்த்தியால் வர முடியவில்லை. அவனது அனுதாபம் இளைஞனான பழனிவேல்மீது இருந்தது. வாடிக்கையாளர்கள் வெறும் வாய்மூடிப் பிரஜைகள் மட்டுமே. அவர்கள் அனுதாபம் கொள்ளலாம். வாலிபர்கள் வாலிபனிடத்திலும். வயோதிகர்கள் வயோதிகனிடத்திலும்.

கிருஷ்ணமூர்த்தி நடக்க ஆரம்பித்தான்.

அப்போது கடையிலிருந்து டீ வாங்க அந்தப் பையன் வெளியே வந்தான். சமஸ்தானத்தின் சேவகன். யார் ஆண்டாலும் ஏவப்படுகிறவன்.

"டேய் பையா"

"என்னா சார்"

"இந்தா" நீட்டப்பட்ட எட்டணாவை பையன் வெட்கத்துடன் வாங்கிக் கொண்டான்.

"என்ன வேணும் சார்"

"எத்தனை நாளாடா கடையில இருக்கே?"

"எட்டு வருஷமா சார்"

"அவ்ளோ வருஷமாவா?"

"ஆமா சார்"

"யாருதுடா கடை?"

பாக்கெட்டுக்குள் கையை விட்டு தன் பர்சை எடுத்து பையன் எட்டணாவை பத்திரப்படுத்தினான். அந்தப் பர்சினுள் ஒரு போட்டோ இருந்தது. பையன் அதைக் காட்டி, "எங்க நைனா போட்டோ சார். அவரு செத்துட்டாரு. எனக்கு யாரும் இல்ல சார். எங்க நைனாதான் ஓனர்" என்றான்.

ம.வே.சிவகுமார்

© TamilOnline.com