நாயோடு ஒரு நடை
வாசற்கதவை யாரோ தட்டும் சத்தம் கேட்டது. யார் என்று மாடி சன்னல் வழியாகப் பார்த்தேன். பக்கத்து வீட்டு ஜேன். ஓடிப்போய்க் கதவைத் திறந்தேன்.

"என்ன விஷயம்?" என்றேன்.

"நானும் ஸ்டீவும் எங்கள் நாயை வாக் பண்ணிக்கொண்டிருந்தோம். நான்தான் லீஷைப் பிடித்துக்கொண்டிருந்தேன். ஓர் அணிலைப் பார்த்தவுடன் திமிறிக்கொண்டு எங்கள் ஸ்பாட் ஓட ஆரம்பித்தான். அணில் மரமேறிவிட்டது. இவன் உங்கள் புல்வெளியில் அசிங்கம் பண்ணிவிட்டான். மன்னிக்கவும். நான் சுத்தம் செய்து விடுகிறேன்" என்றாள். நான் சரி என்று சொல்லிவிட்டுக் கதவை மூடினேன்.

சென்னையிலிருந்து அமெரிக்கா வந்திருந்த என் அம்மாவுக்கு ஒரே ஆச்சரியம். "என்ன இது? நாய் அசிங்கம் பண்ணினால், அவள் வந்து மன்னிப்புக் கேட்கிறாள். க்ளீன் பண்ணுகிறேன் என்கிறாள். நீயும் உரம் என்று விடாமல், "சரி. செய்" என்கிறாயே? ஜேன் என்ன ஒவ்வொரு புல்லையும் அலம்பிவிடப் போறாளா? நல்லாயிருக்கு நீங்கள்ளாம் புல்லுக்குக் கொடுக்கற முக்கியத்துவம்."

"அம்மா, இந்த ஊர்ல இப்படித்தான். இந்த சப்டிவிஷன்ல 300 வீடு இருக்கு. முக்கால்வாசிப் பேர் கிட்ட ஒண்ணு ரெண்டு நாய் இருக்கும். எல்லா நாயும் எல்லார் வீட்டு லான் மேலயும் அசிங்கம் பண்ணா என்ன ஆகும்?"

"நான் இங்க வரதுக்கு முன்னாடி, உங்க அத்தை காசி, தில்லினு போய்ட்டு வந்தேன்னு சொல்லி எனக்கு ஒரு ஜோடி கோலாப்பூர் செருப்பு கொடுத்தா. நான் அதை ஒரு தடவை போட்டுண்டு வாசப்படிகிட்ட விட்டிருந்தேன். பக்கத்து வீட்டு மீனாவோட நாய் வேலி வழியா நம்ம வீட்டுக்கு வந்து செருப்பைக் கடிச்சுப் போட்டுடுத்து. நாய்க்கு என்ன தெரியும்? இதுக்குனு புது செருப்பு வாங்கித்தானு மீனாகிட்ட கேட்க முடியுமா?"

"நாய்க்கு என்ன தெரியுங்கறது சரிதான். ஆனால் அமெரிக்காவுல நாய் வளர்ப்பவர் பொறுப்போடு இருக்கணும்னு ரூல் இருக்கு. நாயை வாக் பண்ணுகிறவர்கள் எல்லாம் எப்பவும் ஒரு ப்ளாஸ்டிக் பையையும் எடுத்துக்கொண்டு போவாங்க. நாய் அசிங்கம் பண்ணினால் உடனே அதை அள்ளிக் குப்பைத்தொட்டியில் போடுவாங்க. இல்லாட்டி குப்குப்னு நாத்தம் வந்திடும். மிதிச்சா வேற கஷ்டம்.

"நம்ம க்ரேஸி மோகன் மாதிரி இந்த ஊர்ல சயன்ஃபெல்ட்னு ஒரு நகைச்சுவை நடிகர் இருக்கார். அவர் இதப்பத்தி ஒரு தடவ ஜோக்கா சொன்னாரு. வேற்று உலகத்திலிருந்து ஒருத்தர் அமெரிக்காவைப் பார்த்தா, நாய்தான் எஜமானன்னு நினைச்சுக்குவார்னு; ஏன்னா அது அசிங்கம் பண்ணா கூடப்போறவர் உடனே அதைப் பொறுக்கி எடுக்குறாரேன்னு.

"ரெண்டு தெரு தள்ளி ஒருத்தர் கிட்ட ராட்வய்லர் நாய் ஒண்ணு இருந்தது. அது எப்படியோ வெளியே வந்து எதிர்வீட்டில் தோட்டவேலை செய்து கொண்டிருந்தவரைக் கடித்துவிட்டது. அந்தப் பெண் உடனே பொலீசைக் கூப்பிட்டுவிட்டாள். அவர்கள் வந்து வளர்ப்பவருக்கு அபராதம் போட்டார்கள். நாயயையும் காரண காரியமில்லாமல் ஒருவரைக் கடித்துவிட்டது, வயலண்ட் என்று சொல்லிக் கொன்றுவிட்டார்கள்".

அம்மாவின் உடல் நடுங்கியது.

"நான் வாக்கிங் போறப்ப, அது என்ன, ஓக் தெருவா, அதில் ஒரு வீட்டிலிருந்து பொன்னிறத்தில், சிங்கக்குட்டி மாதிரி ஒரு நாய் குரைத்துக்கொண்டு ஓடிவரும்; ஆனால் அது சத்தியத்துக்குக் கட்டுப்பட்ட மாதிரி புல்வெளி எல்லையில் நின்றுவிடும். அது என்ன ராட்வய்லரா?" என்றாள்.

"அம்மா, அது கோல்டன் ரிட்ரீவர். அது பெரிய நாய். அது ஒண்ணும் பண்ணாது. சாது. அவங்க வீட்ல மின்வேலி இருக்கும் அதுதான் அது லான் விளிம்பில் நின்றுவிடுகிறது."

இதையெல்லாம் கேட்டுக்கொண்டிருந்த என் பெண் சொன்னாள்; "பாட்டி,இந்த ராட்வய்லர், புல் டாக் இதெல்லாந்தான் பயங்கரமானது; மத்ததெல்லாம் ஒண்ணும் பண்ணாது."

"இங்க யார் வீட்லயாவது அந்த மாதிரி நாய் இருக்கா? எனக்கு வாக்கிங் போகவே பயமா இருக்கு இதக் கேட்ட பிறகு."

"தெரில பாட்டி. நீங்க வேணா ட்ரில் மாஸ்டர் மாதிரி ஒரு விசிலக் கயத்துல கட்டிக் கழுத்துல தொங்கவிட்டுக்குங்கோ. நாய் துரத்தினால் ஊதுங்கோ. ஊய்னு சத்தம் கேட்டா நாய் ஸ்டன் ஆகி நின்னுடும். எல்லாரும் வெளிலயும் வருவாங்க; ஹெல்ப்பும் பண்ணுவாங்க".

"நாய் கடிக்க வந்தாக் கையும் காலும் எனக்கு வெலவெலனு வரும். விசிலை ஊதவா தோணும். நான் சென்னைக்குப் போய்க்ச் கூட்டமோ நாட்டமோ நாகேஸ்வரராவ் பார்க்லயே நடந்துக்கறேன். இனிமே எனக்கு இங்க வாக்கிங் வேண்டாம்."

அதன் பிறகு அம்மா ஒருநாள்கூட நடை போகவில்லை.

லக்ஷ்மி சங்கர்,
நார்கிராஸ், ஜார்ஜியா

© TamilOnline.com