ஆனந்த் ராகவ் எழுதிய இரண்டு நூல்கள்
ஆனந்த் ராகவ் எழுதிய 'துளிவிஷம்', 'டாக்ஸி டிரைவர்' ஆகிய இரண்டும் அழகான சிறுகதைத் தொகுப்புகள். தென்றல் சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றுள்ள இவரது கதைகள் வாழ்க்கைமீதான நுணுக்கமான பார்வையை நேர்த்தியான விவரிப்பில் சொல்பவை. ஒவ்வொன்றாகப் பார்க்கலாம்.

துளி விஷம்
இவை வாராந்தரிகளில் வெளியான அழகான முத்திரைக் கதைகள். சிறுகதைக்குத் தேவையான ருசிகரமும், சிறுகதை இலக்கண விதிகள் அனைத்தும் இந்தக் கதைகளில் இருப்பது சிறப்பு. 'துளி விஷம்' எனும் சிறுகதை தலையானதென்பதால், அந்தத் தலைப்பையே நூலுக்கு வழங்கியுள்ள ஆசிரியரை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.

'கொன்றுயிர் உண்ணும் விசாதி, பகை, பசி, தீயன எல்லாம் நின்ற இவ்வுலகில்' என்று நம்மாழ்வார் பாசுரத்தில் இந்த உலகத்தின் ஒரு கொடூரமான பக்கத்தைக் காண்பிப்பார். புராதனப் பெருமைகள் கொண்ட பாரதநாட்டில் வாழும் பாக்கியமே ஒரு மனிதப் பிறவிக்குக் கிடைத்த மகாபாக்கியம் என்றெல்லாம் சொல்கிறார்கள். ஆனாலும் வாழும் வாழ்க்கையில் இந்த மனிதர்கள் படும் அவதிகளும், அவமானங்களும், பசிக்கொடுமையும், நோய் போன்ற துயரங்களும் வேறு நாட்டில் உண்டோ என்றால் ஐயம்தான். இப்படித் துயரை அனுபவித்துக் கொண்டிருக்கும் எண்பது வயது நானிமா எனும் மூதாட்டியின் கடைசிகாலத் துயரத்தை அந்த மூதாட்டி எப்படியெல்லாம் இன்பமாக அனுபவித்துக் கொண்டு செல்கிறாள் என்பதே 'துளி விஷம்' எனும் இக்கதையின் சாரம். தன் குடும்பத்துள்ளேயே அநாதையாக வாழ்கிற அவளைக் கும்பமேளாவுக்கு அழைத்துச் சென்று, நல்லபடியாக வாழ்க்கையின் பாவங்களையெல்லாம் கழிக்கும் சந்தர்ப்பமாக அவளைக் கருதச் செய்து, அவளை அங்கேயே அநாதையாக்கி விட்டுத் திரும்பும் குடும்பம் அவளுக்கு நல்லது செய்திருக்கிறதா அல்லது வீசியெறிந்த திருப்தியில் ஊர் திரும்புகிறதா என்பதை ஆசிரியர் காண்பிக்காவிட்டாலும், நானிமாவுடன் வாசகர்களையும் ஆனந்த் ராகவ் கட்டிப் போட்டுவிடுகிறார்.

மும்பை, கராச்சி, தாய்லாந்து போன்ற இடங்களில் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்துகொண்டே அரசுகளுக்கு அதீத பயத்தைத் தந்து கொண்டிருக்கும் பாதாள ஆயுதவியாபாரிகளின் கோஷ்டிச் சண்டைகளை வைத்து எழுதப்பட்ட 'வேட்டை' விறுவிறுப்பானது. இவற்றின் செயல்முறையைத் தீவிரமாக ஆராய்ந்து விவாதிக்கும் திறன் போற்றத்தக்கது. அதேபோல தாய்லாந்தில் ஏற்பட்ட விமான விபத்து பற்றிய 'ஒரு விபத்தின் கதை' வெகு சுவாரசியமானது. தவறான தரைப்பாதையில் விமானத்தை ஓட்டி பயணிகளைக் கொன்று பிறகு ஏகப்பட்ட பிரச்னைகளை சமாளித்துத் தப்பித்தாலும், அந்த விமானி வாழ்க்கையின் ஏனைய நாட்களில் இந்த விபத்தின் காரணமாக ஏற்படும் மனச்சோதனைகளை சமாளிக்க வேண்டியிருக்கும் என்பதை அழகாக எடுத்துக் காட்டியிருக்கிறார். அதேபோல ஒரு பிளாஸ்டிக் கை அணிந்துள்ள அஷோக் ஜெயினைப் பார்க்கும் மனிதனின் பார்வையெல்லாம் அந்த பிளாஸ்டிக் கை மேலேயே இருந்து அவன் மனதினை எப்படியெல்லாம் ஆக்கிரமிக்கிறது என்பதைச் சொல்லும் கதை, கல்யாணத்தில் மெல்லிசை என்ற கோரமான ஒலி முழக்கம் எப்படியெல்லாம் நம்மைக் கஷ்டப்படுத்துகிறது என்பதைச் சொல்லும் கதை என இப்படிச் சொல்லிக் கொண்டே போகலாம்தான்.

டாக்ஸி டிரைவர்
பொதுவாக நாடுவிட்டு நாடு செல்லும்போது பொதுவிடங்களில் நம் மொழியில் நம் மன வருத்தங்களையோ, மற்றவர்மீது, அதுவும் வண்டி ஓட்டுநர்மீதே (அவருக்குத் தம் பாஷை தெரியாது என்ற நம்பிக்கையில்) தமக்குள் குற்றம் குறைகளையோ பேசுவதன் விளைவை ஆனந்த் ராகவுக்கே உரிய நகைச்சுவையோடு கூறுவது 'டாக்ஸி டிரைவர்' சிறுகதை. ஆஸ்திரியா சென்றாலும் தங்கள் சந்தேகங்கள், சலிப்புகள் இவைகளைக் கொட்டித் தீர்த்துக் கொண்டே இருக்கும் ஒரு தமிழ்த் தம்பதியினர் கடைசியில் டாக்ஸி விட்டு இறங்கும்போது அந்த ஐரோப்பிய டிரைவருக்கு நன்றாகவே தமிழ் வரும் என்பதை உணரும்போது ஆசிரியர் சொல்லாமல் விட்டுவிட்ட அதிர்ச்சியை அந்தத் தம்பதியினர் நன்றாகவே உணர்ந்திருப்பார்கள்.

இதைப் போல 'பயம்' என்றொரு கதையில் ஒரு வெளிவேலை பார்க்காத, குடும்பத்துக்கு மட்டுமே ஓய்வில்லாமல் உழைக்கும் ஒரு பெண்மணியின் பயத்தைப் பற்றிய கதை ஏதோ நமக்குத் தெரிந்தவருக்கு நடப்பதுபோல எழுதியிருப்பார். அந்தப் பெண்ணுக்கு தான் நடந்து செல்லும் பாதையில் இருக்கும் வெறிநாய்கள் மீதுள்ள பயத்தால் ஒதுங்குவதும், ஆனால் அப்படி ஒதுங்கிய இடத்தில் வெறிநாய்களை விடக் கேவலமாக நடந்துகொள்ளும் மனித நாய்களைக் கண்டு, இவர்களுக்கு அந்த நாய்களே மேல் என்று தைரியமாக நடந்து தன்னை நோக்கிக் குரைத்த நாய்களைக் கல்லால் விரட்டுவதும், இனி எதற்கும் பயம் கூடாது என்பதாகத் தெளிவடைவதையும் அழகாக விவரிக்கிறார் ஆசிரியர்.

எல்லாக் கதைகளும் இப்படி ஏதாவது பாடம் சொல்லாமல் சொல்வது நல்லதுதான். அதேபோல 'பிச்சை புகினும்' கதையில் சாதாரணப் பிச்சைக்காரன் ஒருவன், இந்தக் கால மாடர்ன் பிச்சைக்காரன் செய்கையில் பாடம் கற்பதைச் சுவையாக எழுதி இருக்கிறார் ஆசிரியர். நண்பர் பென்னேசுவரன் அழகான முன்னுரை கொடுத்துள்ளார் இந்தத் தொகுப்புக்கு.

(ஒவ்வொரு நூலும் விலை ரூ.120; இரண்டையும் வெளியிட்டோர்: வாதினி பதிப்பகம்; ஆன்லைனில் வாங்க: nhm.in)

V. திவாகர்

© TamilOnline.com