ஆயிரம் பொற்காசுகள்
தங்கமங்கலம் என்ற ஊரில் ஒரு பணக்காரன் வாழ்ந்து வந்தான். அவன் மிகவும் கஞ்சன். ஒருநாள் பக்கத்து ஊர் சந்தையில் பொருள் வாங்குவதற்காக 1000 பொற்காசுகளுடன் புறப்பட்டான். காட்டு வழியில் செல்லும்போது ஓரிடத்தில் வண்டி குடைசாய்ந்து விட்டது. அதனால் சந்தைக்குச் செல்லாமல் வீடு திரும்பினான்.

வீடு திரும்பியதும்தான் தான் கொண்டு சென்ற பொற்காசுப் பை தொலைந்து விட்டதை அறிந்தான். பதறியடித்துக்கொண்டு போய் வண்டி குடைசாய்ந்த இடத்தில் தேடினான். எவ்வளவு தேடியும் பொற்காசுகள் கிடைக்கவில்லை. கோபமுற்ற அவன், வண்டியோட்டிதான் இதற்குக் காரணம் என்று குறைசொல்லி அவனை வேலையிலிருந்து அடித்துத் துரத்தி விட்டான்.

ஆனாலும் பைத்தியம் பிடித்தது போலப் புலம்பிக் கொண்டிருந்தான். இந்த நிலையைப் பார்த்து இரங்கிய அவனது தந்தை, "இதோ பார், நம்மிடம்தான் நிறையப் பணம் இருக்கிற்தே! இந்தப் பணம் போனால் போகிறது. புலம்ப வேண்டாம். ஒன்று செய். தண்டோரா போடுபவனிடம், பணத்தை யாராவது கண்டுபிடித்துத் தந்தால் அதில் ஐந்தில் ஒரு பங்கு தருவதாக அறிவிக்கச் சொல். நல்ல பலன் கிடைக்கும்" என்றார்.

பணக்காரனும் அப்படியே செய்தான். சிலநாட்கள் சென்றன.

பக்கத்து ஊரிலிருந்து ராமன் என்ற ஏழை விவசாயி தங்கமங்கலத்துக்கு வந்து கொண்டிருந்தான். வழியில் ஒரு குரங்கு அடிபட்டுக் கிடப்பதைப் பார்த்தான். இரக்கமுற்ற அவன் அருகிலிருந்த ஏரியிலிருந்து தண்ணீர் கொண்டுவந்து அதன் காயங்களைத் துடைத்தான். தனக்குத் தெரிந்த பச்சிலைகளைக் கொண்டு அதன் காயத்துக்கு மருந்து போட்டான்.

சிறிது நேரத்தில் குரங்கு மெல்ல நடக்கத் துவங்கியது. அருகிலிருந்த மரப் பொந்திலிருந்து ஒரு பையை எடுத்து அவன்முன் போட்விட்டுக் காட்டுக்குள் சென்று மறைந்தது.

ராமன் அந்தப் பையைத் திறந்து பார்த்தான். அதில் பொற்காசுகள் இருந்தன. "ஓ.. யாரோ வழியில் தவற விட்டிருப்பார்கள் போல. பாவம், அவர்கள் என்ன கஷ்டப்படுகிறார்களோ! அவர்களைக் கண்டுபிடித்து இதைச் சேர்ப்பிக்க வேண்டும்" என்று நினைத்தவாறே தங்கமங்கலத்தை அடைந்தான்.

சாப்பிட்டுவிட்டு ஒவ்வொரு கடையாக ஏறி வேலை தேடப் புறப்பட்டபோதுதான் தண்டோரா அறிவிப்பைக் கேட்டான். உடனே அந்த அறிவிப்பாளனிடம், "ஐயா, நீங்கள் சொல்வது இந்தப் பைதான் என்று நினைக்கிறேன். இது எனக்குக் காட்டு வழியில் கிடைத்தது" என்றான்.

அறிவிப்பாளனும் மற்றவர்களும் பணக்காரன் வீட்டுக்கு ராமனை அழைத்துச் சென்றனர். ராமனும் பணக்காரனிடம் அந்தப் பை தனக்கு எப்படிக் கிடைத்தது என்பதைச் சொல்லி அதைக் கொடுத்தான்.

பை கிடைத்ததும் பணக்காரனுக்கு மகிழ்ச்சி தாளவில்லை. உடனே காசுகளை எண்ணிப் பார்த்தான். எல்லாம் சரியாக இருந்ததில் மேலும் மகிழ்ச்சி. ஆனால் கொண்டுவந்தவனுக்கு ஐந்தில் ஒரு பங்கு தர வேண்டுமே! கஞ்சனான அவனுக்கு அதற்கு மனம் ஒப்பவில்லை. உடனே முகத்தைக் கடுமையாக மாற்றிக் கொண்டு, "இதோ பார், பணம் எல்லாம் சரியாக இருக்கிறது என்பது உண்மைதான். ஆனால் இந்தப் பையில் நான் என் வைர மோதிரத்தையும், கழுத்துச் சங்கிலியையும் கழற்றி வைத்திருந்தேன், அதைக் காணோமே! அது எங்கே?" என்றான்.

ராமன் திடுக்கிட்டான். "ஐயா, இந்தப் பை எனக்கு எப்படிக் கிடைத்ததோ அப்படியேதான் கொண்டு வந்திருக்கிறேன். நான் இதிலிருந்து எதுவுமே எடுக்கவில்லை" என்றான்.

ஆனால் பணக்காரன் அதற்கு ஒப்புக்கொள்ளாமல் ராமன்மீது திருட்டுக் குற்றம் சாட்டினான். அப்படிப் பட்டம் சுமத்தினால் வந்தவன் பயந்து ஓடிப்போய் விடுவான், அவனுக்குப் பரிசுத்தொகை தர வேண்டி இருக்காது என்பது அவனது எண்ணம். ஆனால் ராமன் அதற்கு ஒப்பவில்லை. வழக்கு நீதிபதியிடம் சென்றது.

நீதிபதி விசாரித்தார். பணக்காரன், "ஐயா, அந்தப் பையில் ஆயிரம் பொற்காசுகள் வைத்திருந்தேன். கூடவே என்னுடைய வைர மோதிரத்தையும், கழுத்துச் சங்கிலியையும் போட்டு வைத்திருந்தேன். பணம் இருக்கிறது. நகைகளைக் காணோம். நீங்கள்தான் நல்ல தீர்ப்புக் கூறவேண்டும்" என்றான்.

பணக்காரன், தண்டோரா போட்டபோது 'பணம் தொலைந்து விட்டது' என்றுதான் அறிவிக்கச் செய்தானே தவிர நகையைப் பற்றிப் பேச்சே இல்லை. அதை நீதிபதியும் கேட்டிருந்தார். அவன் பொய் சொல்கிறான் என்பதை உணர்ந்துகொண்டார். அவனது கஞ்சத்தனமும் அவர் அறிந்ததுதான்.

அவர் சபையினரைப் பார்த்து, "அன்பார்ந்த மக்களே! நம் ஊர் செல்வந்தர் மிகவும் நல்லவர். வல்லவர். அவருக்குப் பொய் சொல்ல வேண்டிய அவசியமில்லை. அவர் சொல்வது போல அந்த பணப்பையில் பணத்தோடு கூடவே நகைகளும் இருந்திருக்கிறது. ஆனால் ராமன் எடுத்து வந்த பையில் வெறும் பணம் மட்டுமே இருக்கிறது. ஏழை ராமனும் பொய் சொல்ல வேண்டிய அவசியமில்லை. அப்படி அவன் பொய்யனாக இருந்திருந்தால் அந்தப் பையை எடுத்துக்கொண்டு அவன் ஊருக்கே திரும்பிப் போயிருக்கலாம். ஆனால் அவன் அப்படிச் செய்யவில்லை. ஆகவே ராமன் கொண்டு வந்த பை பணக்காரருடையது அல்ல என்றும், இந்தப் பணப்பையை ராமனே வைத்துக் கொள்ளலாம் என்றும் தீர்ப்பளிக்கிறேன். செல்வந்தருடைய பையை நாம் எல்லோரும் சேர்ந்து தேடுவோம். கிடைத்தால் கண்டிப்பாக அவரிடம் கொடுப்போம். இதுவே எனது தீர்ப்பு" என்றார்.

பணக்காரன்மீது ஏற்கனவே கோபம் கொண்டிருந்த சபையினரும் தீர்ப்பை வரவேற்றனர். பங்குத் தொகை கொடுக்கக் கஞ்சப்பட்டு வஞ்சனை செய்த பணக்காரனோ, திரும்பி வந்த பணத்தை இழந்தான். நேர்மையாக நடந்த ராமனோ நல்ல பரிசைப் பெற்றான்.

அரவிந்த்

© TamilOnline.com