அருண் இராமநாதன்
டாக்டர் அருண் இராமநாதன் Education Trust—West (ETW) அமைப்பின் நிர்வாக இயக்குனர். தாழ்ந்த வருமானமுள்ள மற்றும் வெள்ளையரல்லாத அமெரிக்க மாணவர்களுக்குச் சமநிலைக் கல்வி கிடைப்பதற்கான கொள்கை ஆய்வும் கருத்துப் பிரசாரமும் இந்த அமைப்பின் முக்கியச் சேவைத் தளங்கள். மனநலம் குன்றியோர் விடுதிகளில் தன்னார்வச் சேவகராகத் தொடங்கிய இவர் பல்வேறு படிகளைத் தாண்டிச் சமத்துவக் கல்விச் செயலார்வலர் ஆனார். லாஸ் ஏஞ்சலஸ் டைம்ஸ், சான் ஃபிரான்சிஸ்கோ க்ரோனிகிள், சான் ஹோசே மெர்குரி நியூஸ் உட்படப் பல செய்தித் தாள்களில் கல்வி குறித்து இவர் எழுதிய தலையங்கங்கள் வெளியாகியுள்ளன. டார்ட்மத் கல்லூரி, பாஸ்டன் கல்லூரி ஆகியவற்றில் பயின்றபின் ஹார்வர்டு கல்வியியல் கல்லூரியில் ஆய்வு மேற்கொண்டு டாக்டர் பட்டம் பெற்றார். இவரது மனைவி இன்டெலிசா கரீல்யோ ஆசிரியப் பணி புரிகிறார்.

அம்பாள்: வணக்கம். கல்வித்துறையில் உங்கள் பின்புலம் சுவாரசியமானது. அதில் ஈடுபட உந்துதலாக இருந்தது எது?
அருண்: நான் கடந்துவந்த பாதை வித்தியாசமானது. கல்லூரிப் படிப்பை முடித்தவுடன் நான் 'வாலண்டியர் இன் சர்விஸ் டு அமெரிக்கா' ஆகப் பணி புரிந்தேன். (இது பீஸ் கோர் போன்றது. கிளின்டன் அமெரிகோர் என்று மாற்றினார்.) இது மூடப்பட்டபோது இதன் பயனாளிகள் மிகவும் பிற்பட்ட இடங்களுக்கு அனுப்பப்பட்டனர். நான் மேற்கு பென்சில்வேனியாவில், அபலேஷியாவில் ஒரு வருடம் சேவை செய்தேன். மனவளர்ச்சி குன்றியவர்கள், மனநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவினேன். இவர்கள் சிறுவயதிலேயே தமக்கென நடத்தப்பட்ட விடுதிகளுக்கு அனுப்பப்பட்டவர்கள். அவை மூடப்பட்டபோது பல்லாயிரக்கணக்கானோர் அபலேஷியா போன்ற வசதிகளற்ற பின்தங்கிய பகுதிகளில் கொண்டு விடப்பட்டனர். பள்ளிக்கூடங்களையே பார்த்திராத இவர்களுக்கு ஓரளவுக்குத் தம்மைத்தாமே கவனித்துக்கொள்ளும் பயிற்சியை நான் அளித்தேன்.

கே: இவர்களுடன் வேலை செய்ய மிகுந்த பொறுமை தேவை, அல்லவா?
ப: ஆமாம். நான் கல்லூரியில் படிக்கும்பொழுது தன்னார்வத் தொண்டு செய்துள்ளேன். படிப்பை முடித்துவிட்டுச் சட்ட நிறுவனமொன்றில் ஒரு வருடம் வேலை செய்தேன். அதில் கடுமையான சலிப்பே ஏற்பட்டது. பின்தங்கிய நிலையிலுள்ளவர்களுக்கு உதவி செய்தாலென்ன என்று தோன்றியது. கல்லூரியில் கற்ற, தன்னார்வச் சேவையின்போது பெற்ற அனுபவங்களின்இவர்களுடைய வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த முயற்சி செய்தேன்.

கே: இந்தச் சேவை உங்களை எப்படிக் கல்வித்துறையில் ஈடுபடவைத்தது?
ப: உண்மையில், நான் அபலேஷியா செல்லுமுன் பின்தங்கிய நிலையிலுள்ளவர்களைப் பற்றி அறிந்திருக்கவில்லை. இவர்களில் பலர் உடல் ஊனமுற்றவர்கள்தாம், எந்தவித மனக்கோளாறும் இல்லாதவர்கள். ஆனால் சிறுவயதிலேயே குடும்பத்தைவிட்டுப் பிரிக்கப்பட்டு, மனநோயாளிகளுடன் காலத்தைக் கழித்தவர்கள். இவர்களுக்குக் கல்வியறிவு தரப்படாதது இவர்களுக்கு இழைக்கப்பட்ட மிகப்பெரிய துரோகம். இவர்களுக்கு ஏதாவது செய்ய விரும்பினேன். இதுவே கல்வித்துறையில் ஈடுபடத் தூண்டுகோலாக அமைந்தது.கே: அப்போதைய நாட்களை எங்களுக்காக நினைவுகூர முடியுமா?
ப: அப்பொழுது எனக்கு வயது 25க்கும் குறைவு. தன்னார்வத் தொண்டர்கள் உதவியுடன், அங்கிருந்தவர்கள் ஒரளவுக்குப் பிறர் உதவியின்றிச் செயல்படக் கற்றுக்கொடுத்தேன். ஒரு வருடத்தில் பெருமளவில் மாற்றம் கொண்டுவர முடியாது என்பதை உணர்ந்தேன். அடுத்த 5 வருடங்கள் ஊனமுற்ற முதியவர்கள் மற்றும் பதின்ம வயதினர், மனவளர்ச்சி குன்றியவர்கள் ஆகியோருக்கு உதவினேன். இவர்களுக்கான சமூகநல அமைப்புகள் பல்வேறு குறைகளைக் கொண்டவையாக உள்ளன.

முதலில் சமுதாய வளர்ச்சித் திட்டங்களிலும் பின்னர் பள்ளிகளிலும் பணியாற்றினேன். இப்படித்தான் கல்வித்துறையில் ஆர்வம் ஏற்பட்டது. சிறுவயதினருக்குத் தக்க வாய்ப்புகளை அளித்தால் அவர்கள் வாழ்க்கை மேம்படும் என்பது என் அபிப்பிராயம். உடலாலும் மனதாலும் பாதிக்கப்பட்டவர்களுடன் நான் கழித்த காலம் என்னை ஓர் ஆசிரியராகி, இவர்களுக்குக் கல்வி வாய்ப்புகளை அளிக்க வேண்டும் எனச் சிந்திக்க வைத்தது.

கே: நீங்கள் ஓர் ஆசிரியர், ஆய்வாளர், சமமான கல்வி வாய்ப்புப் போராளி. இவற்றில் மிகுந்த மனநிறைவை அளிப்பது எது?
ப: நான் முதலில் நாட்டுப்புறத்தில் சேவைசெய்தேன். பின்னர் பாஸ்டன் கல்லூரியில் சேர்ந்து முதுகலைப் பட்டம் பெற்றேன். அங்கேயே ஆய்வையும் தொடங்கினேன். ஆய்வுக்கான மனநிலை எனக்கு இருந்தது. நானும் என் பேராசிரியரும் சேர்ந்து ஆய்வு முடிவுகளை வெளியிட்டோம். நல்ல வரவேற்பு இருந்தது.

அதை முடித்தபின் முதலில் பாஸ்டனிலும் பின்னர் சான் ஃபிரன்சிஸ்கோவிலும் ஆசிரியப் பணி செய்தேன். கூடவே ஆய்வும் செய்து முடிவுகளை வெளியிட்டுக் கொண்டிருந்தேன். விரிகுடாப் பகுதிக்கு வந்த இரண்டாண்டுகளில் ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் முனைவர்பட்ட ஆய்வைத் தொடங்க வாய்ப்புக் கிடைத்தது. என் வேலையின் முதல் கட்டத்தில் தொண்டனாகப் பணி செய்தேன், இரண்டாம் கட்டத்தை ஆய்வில் செலவிட்டேன் என்று சொல்லலாம்.

கே: நீங்கள் சான் ஃபிரான்சிஸ்கோவில் எப்பொழுது பணி புரிந்தீர்கள்?
ப: 2000 ஆண்டில். என் வருங்கால மனைவியையும் அங்கேதான் சந்தித்தேன். அவரும் ஒர் ஆசிரியை. எனக்குக் குளிர் பிடிக்காது. ஆனால் ஹார்வர்டில் படிக்கும் வாய்ப்பு எளிதில் கிடைத்துவிடாது. ஆகவே நான் மறுபடியும் பாஸ்டன் திரும்பினேன். கேம்பிரிட்ஜில் இருந்த இரண்டாண்டுகள் அற்புதமானவை—அருமையான பேராசிரியர்கள், சகமாணவர்கள். எனக்கு வழிகாட்டியாக அமைந்தவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள், கிளின்டன் நிர்வாகத்தில் சிறப்புக் கல்வித் திட்டதிற்குத் தலைவராயிருந்த டாம் ஹேயர் (Tom Hehir), சூ மோர் ஜான்ஸன், ரிச்சர்ட் எல்மோர், டேவிட் ரோஸ் ஆகியோர். கல்வித் திட்டம், கொள்கைகள் பற்றி முன்னரே நான் ஆய்வுகள் செய்திருந்த போதிலும், ஹார்வர்டு அனுபவம் என்னை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தியது. இளவயதினருக்கு நலந்தரும் வகையில் மாநிலத்துக்கும் நாடு முழுவதற்குமான கல்விக்கொள்கைச் சீர்திருத்தம் கொண்டு வருவது எப்படி என்பதை அங்குதான் முதலில் கற்றுக்கொண்டேன்.

கே: நன்றி அருண். கல்விக் கொள்கைச் சீர்திருத்தத்தில் உங்கள் பங்கு என்ன?
ப: ஹார்வர்டு பல்கலைக்கழக ஆய்வு முடித்த பிறகு, மூன்றாண்டுகள் லாஸ் ஏஞ்சலஸில் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் துறையில் ஆய்வு இயக்குநராகப் பணிபுரிந்தேன். அதன் பிறகு சான் டியேகோவில் (executive director of government relations) ஒன்றிணைந்த பள்ளிக்கல்வித்துறையில் தலைமை நிர்வாக இயக்குநராகப் பொறுப்பேற்றேன். மாவட்ட, மாநில மற்றும் மத்திய அளவில் கொள்கைச் சீர்திருத்தம் கொண்டுவரப் பாடுபட்டேன். பள்ளிக் கட்டுமானப் பொறுப்பும் இருந்தது எனக்கு. அதன் பின்னர் சான் டியேகோ பள்ளிக்கல்வித்துறையில் ஒரு பெரும் பகுதிக்குத் தலைவரானேன். 350 மிலியன் டாலர் பண ஒதுக்கீடும் 5000 அலுவலர்களும் கொண்டது இது. இதனால் எனக்கு உயர் நிர்வாக அனுபவம் கிட்டியது. இந்தப் பொறுப்புகளில், கொள்கைச் சீர்திருத்தம் வெவ்வேறு நிலைகளில் எவ்வித பாதிப்புகளை ஏற்படுத்துகிறது என்று புரிந்துகொண்டேன். இந்த அனுபவங்கள் இப்பொழுது Education Trust-West அமைப்பின் தலைவராகப் பணியாற்றப் பெரிதும் உதவுகிறது.

கே: நான் சான் டியேகோவில் சிறப்புக் கல்வி பெற விரும்பும் ஒரு குழந்தையின் தாய் என்று வைத்துக்கொள்ளுங்கள். உங்கள் கொள்கைச் சீர்திருத்தத்திற்கு முன் என் குழந்தைக்கு எது கிடைத்திருக்காது; இப்பொழுது என்ன கிடைக்கும்?
ப: நான் அங்கே பணிபுரிந்த இரண்டாண்டுகளில் கொண்டுவந்த முக்கியமான மாற்றம், குறைபாடுள்ள மாணவர்களைத் தனிப்பள்ளிகளுக்கோ தனி வகுப்பறைகளுக்கோ அனுப்பாமல், முடிந்தவரை மற்ற மாணவர்களுடன் சேர்ந்து படிக்க ஏற்பாடு செய்வது. குறைபாடுள்ளவர் என்ற முத்திரை குத்தாமலிருப்பது அவர்களுடைய எதிர்காலத்திற்கு நல்லது. சாதாரண மாணவர்களுடன் படிப்பதால் நல்ல கல்வி கிடைக்கிறது.

நான் சான் டியேகோவில் பணியாற்றியபொழுது, நிதி ஒதுக்கீடு குறைந்ததால் பள்ளிகளில் மூன்றுமுறை ஆட்குறைப்புச் செய்தார்கள். அனுபவம் குறைந்த ஆசிரியர்கள் பணி நீக்கப்பட்டார்கள். அவர்கள் வசதி குறைந்த, ஏழைப் பள்ளிகளில் வேலை செய்தவர்கள். அனுபவமிக்கவர்கள் அதிகச் சம்பளம் வாங்கியதோடு வசதிமிக்க, பள்ளிகளில் வேலை பார்த்தார்கள். பணக்காரப் பள்ளிகளுக்கு அதிக நிதி என்ற நிலை தவறானதென நினைத்தேன். எஜுகேஷன் ட்ரஸ்ட் வெஸ்ட்டுக்கு வந்தவுடன் பள்ளிகளுக்கிடையே ஏற்றத்தாழ்வு கூடாதெனப் போராடினேன். மாணவர் தேவைக்கேற்ப நிதி ஒதுக்கீடு இருப்பதுதான் சரி.கே: இப்போது நீங்கள் என்ன செய்கிறீர்கள்?
ப: எங்கள் நிறுவனத்தின் வேலை, கொள்கைகளை ஆய்ந்து, தேவையானதைப் பரிந்துரைப்பது. ஒரு திட்டம் எப்படிச் செயல்படுகிறது என்று முதலில் பரிசீலிப்போம். அதனால் ஏற்படும் நல்லது கெட்டதுகளைச் சீர்தூக்கிப் பார்ப்போம். உதாரணமாக அமெரிக்காவில் நிறைய ஏற்றத் தாழ்வுகள் உள்ளன. ஏழைக்குழந்தைகளுக்கும் ஆங்கிலம் தாய்மொழியாக இல்லாதவர்களுக்கும் மற்றக் குழந்தைகளுக்குக் கிடைக்கும் அதே வாய்ப்புகள் கிடைப்பதில்லை. லத்தீனோவாக இருந்தாலும், ஆப்பிரிக்க அமெரிக்கராக இருந்தாலும் ஒரேமாதிரி வாய்ப்பு இருக்க வேண்டும். இப்படிப்பட்டவர்கள் பெருமளவில் படிக்கும் பள்ளிகளுக்கு அவ்வளவாக நிதி ஒதுக்கீடு இருப்பதில்லை. அனுபவம் குறைந்த ஆசிரியர்கள் இப்பள்ளிகளில் வேலை செய்கிறார்கள். இவற்றை நாங்கள் உரத்துக் கூறுகிறோம்.

முக்கியமாக ஆரம்பப்பள்ளி அளவில் சம வாய்ப்புகளை அதிகரிக்கச் செய்கிறோம். சிறு வயதிலேயே எல்லாம் கற்றுத் தேற வேண்டுமென நினைக்கிறோம். முக்கியமாக இந்த டிஜிடல் யுகத்தில் பணியாற்றத் தேவைப்படும் கணினி மற்றும் பல எலக்ட்ரானிக் உபகரண அறிவை வளப்படுத்த ஆவன செய்கிறோம்.

கே: உங்கள் செயல்பாடுகளால் வகுப்பறையளவில் எவ்விதமான மாற்றம் ஏற்பட்டுள்ளது?
ப: எங்கள் ஆய்வுகளின்படி தற்பொழுது கணக்கு, அறிவியல், தொழிற்கல்வி, பொறியியல் போன்ற துறைகளில் உயர்கல்வி படிக்க நிறையப் பேர் முன்வருவதில்லை. இது மாறவேண்டும் என்பதற்காக பள்ளிகளில் கணித, விஞ்ஞானப் பாடங்களின் தரத்தை உயர்த்த முயற்சிக்கப்பட்டு வருகின்றது. இவற்றைக் கற்பிக்கும் விதத்தை மேம்படுத்தவும், பெற்றோர், மாணவர்கள் மத்தியில் இவற்றை விரும்பிப் படிப்பதால் ஏற்படும் பலன்களைப் புரியவைக்கவும் முயல்கிறோம். சில வருடங்கள் கழிந்துதான் மாற்றம் தெரியவரும்.

கே: என்னுடைய அடுத்த கேள்வி 'காமன் கோர் தத்துவம்' (common core) பற்றி. என் இரண்டு குழந்தைகள் சான் ரமோன் வேல்லிப் பள்ளிகளில் படிக்கிறார்கள். இந்தக் காமன் கோர் கல்வி முறை, அமெரிக்கப் பள்ளிக்கல்வித் தரத்தை உயர்த்துவதுடன் எல்லாப் பள்ளிகளுக்கும் பொதுவான அளவுகோலை நிர்ணயிக்கும், அதை மற்ற நாடுகளுக்கு இணையானதாக மாற்றும் என்கிறார்கள். நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?
ப: ஆமாம். காமன் கோர் கல்விமுறை தரம் வாய்ந்ததுதான். மற்ற நாடுகளில் தேசிய அளவில் ஒரே மாதிரியான கல்வித்திட்டம் உள்ளது. அங்கே மாணவர்கள் யாவரும் இதைப் படிக்கவேண்டும், மேல்படிப்புக்கான தேர்வுகளில் வெற்றி பெறவேண்டும்—இப்படிப் பல நிர்ணயங்கள் உள்ளன.

ஆனால் நமது பள்ளிகளில் அப்படி நாடு முழுவதுக்குமான நிர்ணயங்கள் இல்லை. மாநில அளவிலோ, உள்ளூர் நிர்வாக அளவிலோதான் உள்ளது. சில மாநிலங்களில் குறைவான தரத்தை நிர்ணயித்து, அதற்கேற்பத் தேர்வுகளை அமைக்கிறார்கள். இதனால் ஒரு மாநில மாணவனை மற்றொரு மாநில மாணவனுடன் ஒப்பிடமுடியாது. காமன் கோர் கல்விமுறை தேசிய அளவில் கல்வித்தரத்தை நிர்ணயிக்கிறது. மாணவர்கள் அத்தரத்தை எய்தியுள்ளார்களா என்று சோதிக்கப் பரிட்சைகள் உள்ளன. இதனால் நமது மாநிலங்களிடையே மட்டுமல்லாமல், சிங்கப்பூர், மற்றும் ஐரோப்பிய நாடுகளின் தரத்துடனும் நமது மாணவர் தரத்தை ஒப்பிட முடிகிறது.

என்னைப் பொறுத்தவரை, ஆசிரியர்கள் தாம் கற்பிக்கும் முறைகளை மாற்றிக் கொள்ளாவிட்டால் காமன் கோர் கல்விமுறையால் எந்தப் பலனையும் எதிர்பார்க்க முடியாது.

கே: என்ன மாதிரி மாற்றங்களை எதிர்பார்க்கிறீர்கள்?
ப: ஆசிரியர்கள் அடிப்படைக் கருத்துகளைப் புரிந்துகொள்ள வேண்டும் என்று இன்றைய கல்விமுறை சொல்கிறது. பழைய முறையில் அல்ஜீப்ரா, ஜியாமெட்ரி போன்றவற்றைச் சரியாகப் புரிந்துகொள்ளாமல், வழிமுறைகளைக் குருட்டு மனனம் செய்து மாணவர்கள் காலந்தள்ளினார்கள். சரியான விடை முக்கியமல்ல. சரியான விடையைக் காணும் வழிமுறைதான் முக்கியம். அந்த வழிமுறையைத் தாமாகவே யோசித்துக் கண்டுபிடிக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறது காமன் கோர். ஒரு மாணவனுக்கு எவ்வளவு தெரியும் என்பதைவிட, எவ்வளவு ஆழமாகப் புரிந்துகொண்டுள்ளான் என்பதற்கு இப்போது முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது.

கே: கல்விமுறையில் நடந்து கொண்டிருக்கும் சில மாற்றங்கள் வியக்க வைக்கின்றன. முதலில் ஃபிளிப்மாடல் கல்விமுறை, மற்றது தொழில்நுட்பம் கல்வியில் ஏற்படுத்தியுள்ள மாற்றங்கள். என் மகனின் கணித ஆசிரியர் ஒரு புதிய சூத்திரத்தைச் சொல்லிக் கொடுக்குமுன் மாணவர்களை அதுபற்றிய வீடியோ படத்தை முதல்நாளே வீட்டில் பார்க்கும்படிச் சொல்கிறார். அடுத்தநாள் வகுப்பறையில் கலந்துரையாடி, ஆசிரியர் உதவியுடன் புதிர்களை அவிழ்க்கிறார்கள். இதுகுறித்து என்ன நினைக்கிறீர்கள்?
ப: பெரும்பாலான கலிஃபோர்னியா வகுப்பறைகள் இன்றும் 1920களில் இருந்ததுபோலவே உள்ளன. ஆசிரியர் மாணவர்முன் நின்று உரையாற்றுகிறார். அவருக்குத் தெரிந்த எல்லாம் மாணவர்களும் தெரிந்துகொள்ள வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இணையத்தில் சென்று ஒரு பாடத்தைப் பற்றித் தகவல் தேடி எதையோ எழுதிக்கொண்டு வருவதும் சரியல்ல.

உங்கள் மகனின் வகுப்பில் போதிக்கப்படுவது புதுமுறைக் கல்வி. இது வரவேற்கத் தக்கது. இந்தப் புதுமுறைப்படி. வகுப்பில் இருக்கும் ஆறரை மணிநேரம் மட்டுமே கல்வி கற்கும் நேரமாக இருக்கத் தேவையில்லை. மாணவர்கள் தனியாகவும் நிறையக் கற்கவேண்டும்; அவர்கள் ஆசிரியரிடம் கற்றதையும், தாமே வேறு பல ஊடகங்கள் மூலம் கற்றதையும் உறுதிப்படுத்துவதே ஆசிரியரின் வேலை. இதனால் மாணவர்கள் புதுப்புதுப் பாடங்களை விரைவில் கற்க முடிகிறது. தொழில்நுட்பம் இதற்குச் சாதகமாகிறது. ஆசிரியர்கள் ஒவ்வொரு மாணவரின் திறனுக்கேற்பப் போதிக்கமுடிகிறது. பழைய திட்டத்தின்படி 25 மாணவர்களை ஓர் ஆசிரியர் ஒரே சமயத்தில் கவனிக்க வேண்டியிருந்தது. இப்புதிய முறைக்கு "ஃபிளிப்பிங் த க்ளாஸ் ரூம்" (flipping the class room) என்று பெயர்.

கே: இணையத்தின் வளர்ச்சி பிரமிக்க வைப்பதாக உள்ளது. ஒரு நொடியில் எதைப்பற்றிய தகவலும் கிடைத்துவிடுகிறது. இது கல்விமுறையை எப்படிப் பாதிக்கும்?
ப: கடந்த 200 வருடங்களாக நம் கல்விமுறையில் எந்தவித முன்னேற்றமும் இல்லை. மருத்துவம், வணிகம் போன்ற துறைகளில் முன்னேற்றம் உள்ளது. ஆனால் கல்வித்திட்டம் வளர்ச்சியின்றிப் பின்தங்கியுள்ளது. ஆசிரியர்கள் தொழிநுட்பத்தைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்; இல்லாவிட்டால் குட்டைத் தண்ணீரைப் போல் கல்வித்துறை தேங்கிவிடும். தொழிநுட்ப வளர்ச்சி வகுப்பறையின் உள்ளே பாடத்திட்டத்துடன் பிணைந்து மாற்றத்தை ஏற்படுத்துமா இல்லை வெளியேயிருந்து செயல்பட்டு மாற்றத்தை ஏற்படுத்துமா என்று பார்க்கவேண்டும்.

கே: வகுப்பறைக்கு வெளியேயிருந்து எப்படி மாற்றம் ஏற்படுத்தும் என்று விளக்கமுடியுமா?
ப: உங்கள் மகன் புதியமுறைப்படி கல்வி கற்கிறான். அடுத்த வருடம் அவனுடைய ஆசிரியர் பழைய முறைப்படி கற்பிப்பவராயிருந்தால் அவனுக்கோ, உங்களுக்கோ திருப்தி இருக்குமா? வீட்டிலிருந்து கணினி மூலம் அதே பாடத்தைப் புதிய முறையில் இணையத்தின் மூலம் சென்னையிலிருக்கும் ஓர் ஆசிரியரிடம் அவன் கற்கமுடியும். அரைத்த மாவையே அரைக்கும் பள்ளிக்குச் செல்ல அவனோ நீங்களோ விரும்பமாட்டீர்கள். இந்நாட்களில் தொழில்நுட்பத்தில் மாபெரும் வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. அதை நம் பள்ளிகளில்—பாலர் வகுப்பிலிருந்து உயர்நிலை வகுப்புகள்வரை—சரியாகப் பயன்படுத்திக் கொள்ளவில்லை. அதனால்தான் சொன்னேன் வகுப்பறைக்கு வெளியேயிருந்தும் தொழிநுட்ப வளர்ச்சி கல்விமுறையைப் பாதிக்கும் என்று.

கே: நன்றி அருண். இப்பொழுது ஏற்பட்டுவரும் கல்விக்கொள்கை மாற்றங்களால் இன்னும் ஒரு ஐந்து, பத்து வருடங்களில் இத்துறை எப்படியிருக்கும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?
ப: பெரிதும் மாற்றம் இருக்காது; காத்திருக்க வேண்டும் என்று தோன்றுகிறது. தற்பொழுதுள்ள அமெரிக்கர்கள் மூன்று தலைமுறைகளைச் சேர்ந்தவர்கள்—பேபி பூமர்கள், ஜெனரேஷன் எக்ஸைச் சேர்ந்த என்னைப் போன்றவர்கள், அடுத்து மிலனியம் தலைமுறையினர். பேபி பூமர்களே எல்லா இடங்களிலும் முக்கியமாகக் கலிஃபோர்னியாவில் நிர்வாகம் செய்கிறார்கள். இவர்களுக்குக் காமன் கோர் கல்விமுறை, வகுப்பறையில் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துதல் போன்றவற்றில் ஈடுபாடில்லை. இவர்கள் ஓய்வுபெற்று அடுத்த இரண்டு தலைமுறையினர் பதவியேற்றால்தான் பெரிய அளவில் மாற்றம் காணமுடியும்.

உதாரணமாக நம் கலிஃபோர்னியா ஆளுநர் ஜெரி பிரௌன் கல்வித்துறையில் டேடா (புள்ளிவிவரம்) என்ன பெரிதாகச் சாதித்துவிடப் போகிறது, அதில் தனக்கு நாட்டம் சிறிதுமில்லை என்கிறார். சிலிகான் வேல்லியில் வேலைபார்க்கும் ஒரு சராசரி நிர்வாகியோ அல்லது பேஸ்பால் அதிகாரியோகூட இதைக் கேட்டால் விக்கித்துப் போவார்.

கே: ஏனைய நாடுகளுடன் ஒப்பிடும்போது அமெரிக்கக் கல்வித்துறையில் என்னென்ன மாற்றங்கள் வேண்டும் என்று உங்கள் குழுவின் பரிந்துரைக்கிறது?
ப: பள்ளிகளில் மாணவர்கள் செலவழிக்கும் நேரத்தை நாட்கணக்கிலோ மணிக்கணக்கிலோ அதிகரிக்கலாம். ஆனால், எல்லா மாணவர்களும் இதனால் பயனடைவார்கள் என்று சொல்லிவிடமுடியாது. விரைவாகக் கிரகிப்பவர்களுக்கு வேண்டுமானால் இது பயன்படலாம். சில பின்தங்கிய மாணவர்களுக்கோ ஏது கற்காமல் பொழுது வெட்டியாகத்தான் கழியும். தரத்தைவிட எல்லோருக்கும் ஒரே மாதிரியான கல்வி வாய்ப்புக் கிடைக்கவேண்டும் என்றுதான் பாடுபடுகிறோம். ஏழை மாணவர்கள் கோடை விடுமுறையில் தாம் கற்றதை மறந்துவிடுகிறார்கள். இவர்களின் பெற்றோர்களால் இவர்களைக் கணக்கு மற்றும் கலை முகாம்களுக்கும், பயிலரங்குகளுக்கும் அனுப்ப முடியாது; வசதியற்ற மாணவர்கள் ஏன் பின்தங்கிவிடுகிறார்கள் என்று நாம் கேட்கிறோம். வருடத்தில் மூன்று மாதங்கள் பள்ளிக்கு வெளியே அவர்கள் இருக்கிறார்கள்.கே: சில மாணவர்கள் மற்றவர்களைவிட அதிக நேரம் பள்ளிகளில் இருக்கவேண்டியது அவசியமில்லையா? உங்கள் கல்விக்கொள்கை ஒரு வகுப்பறை அளவில் என்ன மாற்றத்தைக்கொண்டு வரும்?
ப: இந்தக் கேள்விக்கு எளிதில் பதில் சொல்லிவிடமுடியாது. மாணவர்கள் பள்ளிகளில் அதிக நேரம் இருக்கவேண்டுமானால் இன்னும் அதிகப் பண ஒதுக்கீடு பள்ளிகளுக்கு வேண்டும். பள்ளி அலுவலர் சங்கங்களும் தங்கள் ஒப்பந்தங்களை மாற்ற வேண்டிவரும். அலுவலர்கள் வேலை பார்க்கும் நேரத்தை நீட்டிக்கவேண்டும். அதற்கு அதிக நிதி வேண்டும்.

அதைவிட ஒரு மாணவனைப் பள்ளியில் அதிக நேரம் தக்கவைத்து அதிகம் சொல்லிக் கொடுக்கும்போது அவன் தாக்குப்பிடிப்பது கஷ்டமாகலாம்.
நான் முன்னரே சொன்னதுபோல் இந்தக் கணினி யுகத்தில் ஒரு மாணவன் வகுப்பறையில் 25 பேருடன் சேர்ந்துதான் எதையும் கற்கவேண்டும் என்ற அவசியமில்லை. வெவ்வேறு இடங்களில் வெவ்வேறு ஊடகங்கள் மூலம் கற்கலாம். ஏழை மாணவர்களுக்கும் பணக்கார மாணவர்களுக்கும் இவ்வித ஊடகங்களைப் பயன்படுத்தும் வாய்ப்புகள் ஒரே மாதிரியாகக் கிடைக்கவேண்டும்.

கே: இந்தக் காலத்துப் பெற்றோருக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?
ப: எல்லாப் பெற்றோரும் கல்வி என்று வரும்பொழுது தத்தம் குழந்தைகளுக்குச் சரியான முறையில் அது கிடைக்க வழிவகுத்துத் தரவேண்டும். இது காலங்காலமாகச் சொல்லப்படுவதுதான். நாம் குழந்தைகளுக்குக் கல்வி கற்பதன் அவசியத்தை எடுத்துச்சொல்லவேண்டும். குழந்தைகள் குறுகிய மனப்பான்மையுடன் இராமல் எதையும் கற்க முன்வர வேண்டும். கணக்கும் விஞ்ஞானமும் கற்கவேண்டும்; அதேசமயம் கலைகளையும் கற்கவேண்டும். கற்பனை வளம், ஆக்கபூர்வமான படைப்பாற்றல், தொழில்நுட்ப அறிவு எல்லாமே முக்கியம்.

கே: நல்லது அருண். உங்கள் குடும்பத்தைப் பற்றிச் சொல்லுங்கள். உங்கள் பின்புலத்தைப்பற்றித் தெரிந்துகொள்ளவும் ஆவலாயுள்ளேன்.
ப: என் பெற்றோர்கள் மருத்துவர்கள் மற்றும் ஆய்வாளர்கள். அவர்கள் 1976ல் இங்கிலாந்து சென்றார்கள். நான் அங்குதான் பிறந்தேன். ஆனால் நான் கைக்குழந்தையாக இருக்கும்பொழுது என்னைக் கேரளத்தில், ஆலப்புழையிலிருந்த என் தாத்தா வீட்டிற்கு அனுப்பிவிட்டார்கள். என் சிறுவயதில் தாத்தா ஆலப்புழையிலிருந்து பாலக்காட்டுக்குக் குடிபெயர்ந்தார். துரதிருஷ்டவசமாக ஆளும் அரசியல் கட்சியினர் அவர் வீட்டைப் பறித்துக்கொண்டு விட்டார்கள். பாலக்காட்டிலேயே வேறொரு வீட்டுக்கு என் தாத்தா மாறினார். எனக்கு நான்கு வயது இருக்கும்பொழுது நான் இங்கிலாந்துக்குத் திரும்பிச் சென்றேன். இங்கிலாந்திலும், அமெரிக்காவிலும் என் பெற்றோர்களிடம் என்னுடன் மலையாளத்திலோ, தமிழிலோ பேசக்கூடாது என்று சொல்லப்பட்டது. அந்தக் கால வழக்கம் அது. அதனால் இரண்டு மொழிகளை மறந்து போனேன். ஆனால், நானும் என் சகோதரியும் இந்த நாட்டில் வெற்றிபெறுவதற்காக எனது பெற்றோர் பல தியாங்களைச் செய்துள்ளனர். எங்கள் வெற்றி அவர்கள் தந்த வரம்.

கே: நன்றி அருண். இனி நான் சட்டென்று கேட்கும் கேள்விகளுக்குப் பட்டென்று பதில் சொல்லவேண்டும். சரியா? இதோ முதல் கேள்வி: உங்களுக்குக் கற்பதில், கல்வியில், கற்பிப்பதில் பிடித்தமான மேற்கோள் எது?
ப: எனக்கு நினவாற்றல் குறைவு. எனக்கு ஞாபகத்தில் இருப்பது மார்ட்டின் லூதர் கிங் கூறியது, "The arc of history is so long but it inevitably bends towards justice."

கே: கல்வித்துறையில் நீங்கள் பெரிதும் மதித்துப் போற்றும் நபர்?
ப: தர்குட் மார்ஷல். அவர்தான் அமெரிக்காவில் வெள்ளையருக்கும், கறுப்பருக்கும் தனிப்பள்ளிகள் இருந்த நிலையை மாற்றி, பள்ளிகளில் நிறப் பாகுபாடு இருக்கக்கூடாது என்று சொன்னார்.

கே: உங்களுக்குச் சிறப்புக் கல்வியில் மிகுந்த ஈடுபாடுள்ளது. உங்கள் கையில் ஒரு மந்திரக்கோல் இருந்து, இந்நாட்டில் சிறப்புக் கல்வியின் ஓர் அம்சத்தை மாற்ற முடியும் என்றால் எதை மாற்றுவீர்கள்?
ப: மந்திரக்கோல் எதுவும் தேவையில்லை. அனைவருக்கும் ஒரே மாதிரிக் கல்வி வாய்ப்பு அளிக்கப்படவேண்டும். எல்லோரும் ஒன்றாகக் கற்கவேண்டும். இதை நாடு முழுவதும் அமல்படுத்தினால் அது மந்திரம் போல் வேலை செய்யும்.

கே: நீங்கள் மிகவும் பெருமிதம் கொள்ளும் தருணம் எது? சொந்த வாழ்க்கை அல்லது உங்கள் வேலை சம்பந்தமானதாக இருக்கலாம்.
ப: எனக்கு இரண்டு அழகிய பெண்குழந்தைகள் உள்ளார்கள். அவர்கள் நல்ல மாணவிகள். என்னுடைய அழகான மனைவி ஓர் ஆசிரியை. எங்கள் குடும்பமே கல்விக்குடும்பம்!

கே: உங்கள் மனைவி, குழந்தைகளைப் பற்றிச்சொல்லுங்கள்.
ப: என் மனைவியின் பூர்வீகம் மெக்ஸிகோ. அவர் ஆங்கிலம் பேசக் கற்றுக்கொடுக்கும் ஆசிரியை. என்னுடைய மகள்களை இரு இனத்தைச் சேர்ந்தவர்கள் என்று சொல்லலாம். அவர்களால் ஸ்பானிய மொழியைச் சரளமாகப் பேசமுடியும். தமிழ்ப் பள்ளி எதுவும் இங்கு இல்லை. பாட்டியிடமிருந்து முடிந்தவரை கற்றுக்கொள்கிறார்கள். பரதநாட்டியமும் கற்கின்றனர். தமக்கிருக்கும் இரண்டு கலாசாரப் பின்னணியைப் பெரிதும் மதிக்கிறார்கள்.

கே: நேர மேலாண்மை பற்றிச் சொல்லமுடியுமா?
ப: உங்களைவிட நேரத்தை நல்ல முறையில் நிர்வாகம் செய்பவர்களுடன் வேலை செய்யுங்கள். (சிரிக்கிறார்)

கே: நல்ல அறிவுரை. நீங்கள் பெரிதும் மதிப்பது எது?
ப: நான் பெரிதும் மதிப்பது குடும்பத்தையும் சமுதாயத்தையும். குடும்பத்திற்கு நல்லது செய்தால் அது சமுதாயத்திற்கு நல்லது செய்வது போலாகும்.

கே: சொந்த வாழ்க்கையில் எதைச் சாதிக்கக் கனவு காண்கிறீர்கள்?
ப: எவரெஸ்ட் மலையில் ஏறி அதன் உச்சியைத் தொடவேண்டும் என்பது. வேறெதையும் என்னால் சொல்ல முடியவில்லை. நான் எவரெஸ்ட் மலையின் அடிவார முகாமிற்குச் சென்றுள்ளேன்.

கே: இதுவரை சந்தித்திராத ஒருவரைச் சந்தித்துப் பேசினால் மகிழ்ச்சி தரும் என்றால் அது யார்?
ப: சுவாரசியமான கேள்வி. ஜார்ஜ் பெர்னார்ட் ஷாவின் நாடகங்கள் எல்லாம் நான் படித்துள்ளேன். அவருடன் உரையாடச் சந்தர்ப்பம் கிடைத்தால் நன்றாக இருக்கும்.

கே: நீங்கள் இந்த நிலையில் இருப்பதற்கு முக்கியமான காரணமாக இருந்த உங்கள் இளவயது ஆசிரியர் யார்?
ப: ஹார்வர்ட் பல்கலையின் டாம் ஹேர்தான் என்னுடைய இந்த வளர்ச்சிக்குக் காரணம்.

கே: நீங்கள் மாணவர்களுக்கோ பெற்றோர்களுக்கோ ஆசிரியர்களுக்கோ எந்தப் புத்தகம், வலைப்பதிவு அல்லது பத்திரிக்கையைப் படிக்கப் பரிந்துரை செய்வீர்கள்?
ப: ஹார்வர்ட் பல்கலையின் டாக்டர் டேவிட் ரோஸ் நான் மதித்துப் போற்றும் மற்றொரு ஆசிரியர். அவர் ஒரு நியூரோ சைக்காலஜிஸ்ட். அவர் மாணவர்களின் மூளை வளர்ச்சியைப்பற்றி நெடுங்காலம் ஆய்வுகள் செய்துள்ளார். அவர் இத்துறையில் ஒரு முன்னோடி. அவருடைய வலைப்பதிவின் பெயர் cast.org. அதை அனைவரும் படிக்கவேண்டும். எனக்குப் பிடித்த புத்தகம் அவருடைய வகுப்பில் நான் படித்த 'The man who mistook his wife for a hat'.

கே: எனக்கு மூளை சம்பந்தமான புத்தகங்கள் படிக்கப் பிடிக்கும். ஜெஃப் ஹாக்கின்ஸின் On Intelligence படித்தேன். நியோ கார்டெக்ஸ் பற்றியும் மூளை எப்படி வருவதுரைக்கிறது என்பது பற்றியும் விளக்கியுள்ளார். நீங்கள் படித்ததுண்டா?
ப: இல்லை. படிக்கவேண்டும். உங்களுக்கு அந்தப் புத்தகம் பிடித்திருந்தால் ஆலிவர் ஸேக்ஸ் அவர்களின் புத்தகங்கள் எல்லாமே உங்களுக்குப் பிடிக்கும்—The man who mistook his wife for a hat என்பதையும் சேர்த்து.

டாக்டர் அருண் இராமநாதனுக்கு நன்றி கூறி விடைபெற்றோம்.

ஆங்கிலத்தில் உரையாடல்: அம்பாள் பாலகிருஷ்ணன்
ஆங்கில ஒலிபெயர்ப்பு: யுகி
தமிழ்வடிவம்: லக்ஷ்மி சங்கர்

*****


அமெரிக்க மாணவர்கள்
அமெரிக்கப்பள்ளிகளில் மாணவர்கள் ஆக்கபூர்வமாகச் சிந்திக்கத் தூண்டப்படுகிறார்கள். படைப்பாற்றலுக்கும், புதிய கோணங்களில் சிந்திப்பதற்கும் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. ஏனைய நாடுகளில் மாணவர்களிடமிருந்து அதிகம் கோரப்படுகிறது. மாணவர்கள் பொதுவாக நன்றாகப் படிக்கிறார்கள். பள்ளிகளில் சமச்சீரான தரம் உள்ளது.

மெக்ஸிகோவிலிருந்து ஒரு மாணவன் அமெரிக்கா வரும்பொழுது அவனால் ஆங்கிலம் சரியாகப் பேசமுடியாவிட்டாலும், கணக்குகளை எளிதில் போட்டுவிடமுடிகிறது. ஐரோப்பாவிலிருந்து வருபவர்களும் அமெரிக்கப் பள்ளிகளில் கணிதப் பாடத்தின் தரம் குறைவாக உள்ளது என்றுதான் சொல்கிறார்கள். இதற்குக் காரணம் அமெரிக்கப் பள்ளிகளில் மாணவர்களிடமிருந்து அதிகம் கோரப்படுவதில்லை. ஒரு கட்டுக்கோப்பு இல்லை. அமெரிக்காவில் பாடத்தைவிடப் பாடம்சாரா நடவடிக்கைகளுக்கு அதிக முக்கியத்துவம் தரப்படுகிறது. பிறநாடுகளில் சிறு குழந்தையாக இருக்கும்பொழுதே காலை எட்டுமணி துவங்கி மாலைவரை வகுப்பறையில் இருக்கிறார்கள், கற்கிறார்கள்.

- டாக்டர் அருண் இராமநாதன்

*****


உலக அளவில் போட்டியிடத் தயாராக வேண்டும்
இன்றைய தலைமுறையினர் வேலைக்காகப் பக்கத்துத் தெருப் பையனுடன் போட்டியிடுவதில்லை—பக்கத்து நாட்டில் வசிக்கும் ஒருவனுடன் போட்டியிடப் போகிறான். இதைப் பெற்றோர்களும் புரிந்துகொள்ள வேண்டும். உலகளாவிய போட்டியாகத்தான் எதுவுமே இருக்கப்போகிறது. இதனால் நல்ல ஊதியம் தரும் வேலைகள் கிடைக்கும் வாய்ப்புகள் குறைகிறது. நம் பொருளாதாரம் இத்தகைய வேலைகளைச் சார்ந்துள்ளது. இதற்கு விமோசனமே இல்லை என்று சொல்லிவிட முடியாது. நாம் பலவிதங்களில் நம்மை மேம்படுத்திகொண்டு களத்தில் இறங்க வேண்டும்.

அந்தக் காலத்தில் "ஆயுதப் போட்டி" (weapons race) என்று சொல்வார்கள். ஆனால் இப்பொழுது இருப்பதோ "மனப் போட்டி" (mind race). இதில் நாம் வெற்றிபெற்றாக வேண்டும். இதற்கு அரசாங்கத்தின் உதவி பெரிதாக வேண்டும். கல்வித்திட்டத்தில் மாற்றம் ஏற்படவேண்டும். கல்விகற்கும் வழிமுறைகள் மாறவேண்டும். மற்ற நாடுகளில் இருப்பதுபோல் ஒரு தேசிய அளவிலான பொதுவான கல்விக்கொள்கை நம்மிடமில்லை. நாம் அரசியல்மயம் ஆனதால் எல்லாம் சிதறிக் கிடக்கிறது.

- டாக்டர் அருண் இராமநாதன்

© TamilOnline.com