ஜாவர் சீதாராமன்
எழுத்தாளர், திரைக்கதை ஆசிரியர், நடிகர், இயக்குநர் என்று கலையின் பல தளங்களிலும் முத்திரையைப் பதித்தவர் 'ஜாவர்' என். சீதாராமன். பிறந்தது திருச்சியில். தந்தை நடேச ஐயர் திருச்சியின் பிரபலமான வக்கீல். மகனையும் வக்கீல் தொழிலில் புகுத்த விரும்பினார். ஆனால் எம்.ஏ., பி.எல். படித்த சீதாரமனின் கலையார்வம் அவரை வேறு முடிவை எடுக்க வைத்தது. கிராமத்திலிருந்து சென்று பெரும்சாதனை படைத்த எஸ்.எஸ். வாசனை அணுகினார். வாசனின் ஜெமினி ஸ்டூடியோவில் ஊழியராகச் சேர்ந்தார். கலைத்தாகத்தால் படத்தின் 'க்ளாப்' அடிப்பது முதல், வெளியீட்டுக்குத் தயாராவதுவரை அனைத்து நுணுக்கங்களையும் கற்றுக்கொண்டார். அங்கு திரைப்படம் இயக்கிக் கொண்டிருந்த கே. ராம்நாத்தின் மதிப்பிற்கும் அன்புக்கும் பாத்திரமானார். 'மிஸ் மாலினி' என்ற படத்தில் நடிக்கும் வாய்ப்பு வந்தது. அதுதான் சீதாராமனின் முதல் படம்.

சீதாராமனுக்கு எழுத்தார்வம் அதிகம் இருந்தது. ஆங்கில நாவல்களைப் படிப்பதையும், ஆங்கிலப் படங்களைப் பார்ப்பதையும் வழக்கமாகக் கொண்டிருந்தார். தானே பல கதைகளை எழுததினார். அவை அனைத்திலுமே ஒரு திரைப்படம் போல சீன் பை சீன் இருப்பது போன்று எழுதினார். அவை ராம்நாத் உட்படப் பலரைக் கவர்ந்தன. ராம்நாத் அப்போது "ஏழை படும் பாடு" என்ற படத்தை எடுத்துக் கொண்டிருந்தார். விக்டர் ஹியூகோவின் "லே மிஸராபிலே" நாவலின் தமிழ்வடிவம் அப்படம். மொழிபெயர்த்தவர் கவியோகி சுத்தானந்த பாரதியார். அந்த நாவலில் வரும் கண்டிப்பான காவல்துறை அதிகாரி 'ஜாவர்' என்ற வேடத்திற்கு சீதாராமன் மிகவும் பொருத்தமாக இருப்பார் என்று கருதிய கே.ராம்நாத், அவருக்கு அந்த வாய்ப்பை அளித்தார். சீதாராமன், "ஜாவர்" சீதாராமன் ஆனார். அதுமுதல் நடிக்கவும், திரைக்கதை எழுதவும் ஜாவருக்குப் பல வாய்ப்புகள் வந்தன. 'மர்மயோகி', 'பணக்காரி' போன்ற படங்களில் நடித்தார்.

சோமு மற்றும் மொஹைதீன் இருவரும் தமது ஜூபிடர் பிக்சர்ஸ் மூலமாக, எஸ். பாலசந்தர் இயக்கத்தில் 'கைதி' என்ற படத்தைத் தயாரித்தனர். அதன் திரைக்கதை விவாதத்தில் பங்குகொள்ள ஜாவருக்கு அழைப்பு வந்தது. ஜாவரின் பல உத்திகள் பாலசந்தரைக் கவர்ந்தன. அவர் ஜாவருக்கு திரைக்கதை அமைப்பதில் மட்டுமல்லாது நடிக்கவும் வாய்ப்பளித்தார். அப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து ஜாவர் சீதாராமன் நிரந்தரமாக சென்னைக்குக் குடிபுகுந்தார். எஸ்.பாலசந்தரின் நெருங்கிய நண்பரானார். ஜாவருக்குத் தான் இயக்கிய 'அந்தநாள்' படத்திற்கு, திரைக்கதை-வசனம் எழுதும் வாய்ப்பு அளித்ததுடன் காவல்துறை அதிகாரி வேடத்திலும் நடிக்கும் வாய்ப்பைத் தந்தார் பாலு. அப்படத்தின் கதையும், நடிப்பும் ஜாவர் சீதாராமனுக்கு மேலும் புகழைச் சேர்த்தன. நாவல், திரைக்கதை, நடிப்பு என்று பல தளங்களிலும் இயங்க ஆரம்பித்தார்.

நாடக ஆர்வத்தால் 'ஜாவர் தியேட்டர்' என்ற நாடகக் குழுவை ஏற்படுத்தி, பல நாடகங்களுக்குக் கதை-வசனம் எழுதி இயக்கினார். சந்திரபாபு, வி. கோபாலகிருஷ்ணன், சந்தியா, ரா. சங்கரன் உள்ளிட்ட பலர் அவர் குழுவில் நடித்தனர். "திரைக்கதை எழுதுவதில் தனக்கு நிகர் யாருமே இல்லை என்று நிரூபித்த மாபெரும் எழுத்தாளர் அவர். திருவல்லிக்கேணியில் ஜெனரல் ஸ்டோர்ஸ் மாடியில் அறை எடுத்துத் தங்கி படங்களுக்கு கதை, வசனம் எழுதுதல், நடித்தல் போன்ற வேலைகளில் ஈடுபட்டார். சென்னை வந்துவிட்ட நானும் தினமும் அவரை அவர் அறையில் சந்தித்துப் பேசுவேன்" என்கிறார் முக்தா சீனிவாசன்.

ஜாவர் சீதாராமனின் கம்பீரமான குரலும், தோற்றமும், அறிவாற்றலும் பல தயாரிப்பாளர்களை, இயக்குநர்களைக் கவர்ந்தன. ஜாவரின் திறமையால் ஈர்க்கப்பட்ட ஏவி. மெய்யப்பச் செட்டியார் தம் நிறுவனத்தில் அவரைப் பணியாற்ற அழைத்தார். அதுமுதல் நிரந்தரமாக ஏவி.எம்மின் தூண்களுள் ஒருவரானார் ஜாவர் சீதாராமன். 'களத்தூர் கண்ணம்மா', 'ராமு', 'குழந்தையும் தெய்வமும்', 'செல்லப்பிள்ளை', 'உயர்ந்த மனிதன்' போன்ற படங்களுக்கு கதை-வசனம் எழுதியும் நடித்தும் புகழ்பெற்றார். இவர் கதை-வசனத்தில் உருவான 'ஆலயமணி', 'ஆண்டவன் கட்டளை', 'ஆனந்த ஜோதி', 'அதிசயப்பெண்', 'பட்டத்து ராணி' போன்ற படங்கள் பெரும் வெற்றிப் படங்களாய் அமைந்தன. கே. சங்கரின் முதல் படமான 'ஒரே வழி' படத்துக்கும் கதை-வசனம் ஜாவர் சீதாராமன்தான். 'பட்டணத்தில் பூதம்' படத்தில் பூதமாக நடித்தார் ஜாவர். அது அவரைப் புகழின் உச்சிக்குக் கொண்டு சென்றது. வீரபாண்டிய கட்டபொம்மன் படத்தில் கட்டபொம்மனை எதிர்த்துக் கேள்வி கேட்கும் மேஜர் பேனர்மேன் ஆக நடித்தவர் ஜாவர் சீதாராமன்தான். தமிழ்ப் படங்கள் மட்டுமல்லாது 'தோ கலியாண்', 'சூரஜ்', 'ஆத்மி', 'ஷாதி', 'பாய் பாய்' என ஹிந்திப் படங்களிலும் முத்திரை பதித்தார். தமிழ்நாட்டில் இருந்து சென்று ஹிந்தித் திரையுலகின் பல வெற்றிப் படங்களுக்கு வசனம் எழுதியவர்களில் ஜாவர் முக்கியமானவர்.

திரைக்கதை எழுத்தாளராக மட்டுமல்லாது பத்திரிகை எழுத்தாளராகவும் பெரும் வெற்றி பெற்றிருக்கிறார் ஜாவர் சீதாராமன். குறிப்பாக குமுதத்தில் இவர் எழுதிய 'உடல் பொருள் ஆனந்தி', 'மின்னல் மழை மோகினி', 'பணம் பெண் பாசம்', 'நானே நான்', 'சொர்க்கத்தில் புயல்', 'காசே கடவுள்' போன்ற கதைகள் அவருக்குப் பெரும்புகழைச் சேர்த்தன. வாசகர் மனங்கவர்ந்த எழுத்தாளரானதுடன், பத்திரிகை விற்பனை பெருகவும் காரணமானார். உடல் பொருள் ஆனந்தியில் ராமநாதன், திலீபன், சீதா இவர்களுடன் மல்லிகையம்மாள், மேஜர் எனப் பல புதிரான பாத்திரங்களை உருவாக்கி, அவற்றோடு மனோதத்துவம், அமானுஷ்யம் என இரண்டையும் அவர் சரிவிகிதத்தில் கலந்து கொடுத்திருந்தார். மின்னல் மழை மோகினியும் அமானுஷ்யமும் மர்மமும் கலந்த திகில் நாவல்தான். ஒரே தோற்றத்தில் இருக்கும் இருவரது வாழ்க்கைச் சம்பவங்களை த்ரில் கலந்து சுவாரசியமாகச் சொல்வது 'நானே நான்'. பிற்காலத்தில் வந்த பல அமானுஷ்ய நாவல்களுக்கு முன்னோடி ஜாவர் சீதாராமன்தான் என்றால் அது மிகையில்லை.

ஜாவருக்கு ஹிந்தியில் திரைப்படம் தயாரித்து இயக்கும் எண்ணம் இருந்தது. 1971ல் அதற்கான முயற்சியில் ஈடுபட்டார். தமிழில் பெரும் வெற்றிப்படமாக அமைந்த 'பணமா பாசமா' படத்தை ஹிந்தியில் 'பைசா யா ப்யார்' என்ற பெயரில் தயாரித்து இயக்கினார். படத்தின் தணிக்கை முடிந்து வெளியீட்டுக்குத் தயாரான தினத்தில் திடீரென்று ஏற்பட்ட மாரடைப்பால் காலமானார் ஜாவர் என். சீதாராமன். அப்போது அவருக்கு வயது 50.

மேலை நாட்டுப் படங்களொப்பத் தமிழிலும் பல மாற்றங்களைக் கொண்டு வர நினைத்தவர், புதிய பல பங்களிப்புகளைச் செய்தவர் ஜாவர் சீதாராமன். அவரது மறைவுக்குப் பின் அவர் எழுதிய உடல், பொருள், ஆனந்தி தொலைக்காட்சித் தொடராக வெளிவந்து புகழ்பெற்றது. 'பணம், பெண், பாசம்' நாவலும் தொடராக வந்து வரவேற்பைப் பெற்றது. தமிழ் திரைக்கதை எழுத்தாளர்களில் பல்துறைச் சாதனையாளராகப் புகழ் பெற்றவர் ஜாவர் சீதாராமன்.

அரவிந்த்

© TamilOnline.com