தென்றல் பேசுகிறது...
எவ்வளவுதான் வலைப்பட்டை அகலம் (bandwidth) அதிகமானாலும் 2 மில்லியன் நபர்கள் ஓர் வலையகத்துள் நுழைய முயன்றால் தள்ளுமுள்ளு ஆகத்தானே செய்யும். ஒபாமாகேர் மருத்துவக் காப்பீடு தொடங்க ஜனவரி 1ஆம் தேதி கெடு. அதற்கான இறுதிநாளில் இந்த நெருக்கடி ஏற்பட்டுப் பலரால் பதிய முடியவில்லை. மருத்துவக் காப்பீடில்லாத அமெரிக்கர்களின் எண்ணிக்கை 48 மில்லியன். அப்படியிருக்கக் குறைந்த கட்டணத்தில் மருத்துவக் காப்பீடென்றால் எல்லோரும் முயலத்தானே செய்வார்கள்! மற்றொரு புறம், சிறிய வணிக நிறுவனங்களில் பணிபுரிவோருக்கு அந்தந்த நிறுவனங்கள் மிகுந்த பொருட்செலவில் குழு மருத்துவக் காப்பீட்டுத் திட்டங்களில் நேற்றுவரை முதலீடு செய்துவந்தன. இவற்றை நிர்வகிக்கும் சிரமமும், உயர்ந்த காப்பீட்டுக் கட்டணமும் சிறு நிறுவனங்களால் சமாளிக்க முடியாதவையாக இருந்தன. அவற்றுக்கும் ஒபாமாகேர் ஒரு பெரிய வரப்பிரசாதமாக வந்ததென்றால் ஆச்சரியமில்லை. குறைந்த செலவில் தொழிலாளி காப்பீடு பெறமுடிகிறது; இதனால் ஏற்பட்ட உபரியால் அவர்களுக்கு அதிகச் சம்பளம் தரமுடிகிறது என்கிறார்கள் சிறுதொழில் முதலாளிகள். முதலில் கூறியதுபோல சில தொழில்நுட்பச் சிக்கல்கள் ஏற்பட்டாலும், ஒபாமா மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் தேவையைக் குறைத்து மதிப்பிட முடியாது. சிறியோரையும் காப்பதுதான் நல்லரசின் அடையாளம்.

*****


ஒபாமா அரசின் நியாயமான செலவுகளையும் செய்யவிடாமல் எதிர்க்கட்சி முடக்குவதால் நிர்மாண வேலைகள் யாவும் உறைந்து போயிருக்கின்றன. பொருளாதார வளர்ச்சிக்குப் பற்றாக்குறை வரவுசெலவுத் திட்டமும் (deficit budget), அரசின் உள்கட்டமைப்புத் திட்டச் செலவுகளும் (infrastructure projects) மிக அவசியம் என்பதை யாவரும் அறிவர். மத்திய வங்கி (ஃபெடரல் ரிசர்வ்) வட்டி விகிதங்களை உயர்த்தாமல், தொழில்துறைக்குத் தேவையான பணம் குறைந்த வட்டியில் கிடைக்கும்படிப் பார்த்துக்கொண்டதால் தனியார் துறை வளர்ச்சியடைந்துள்ளது. ஆனாலும் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) குறைந்துள்ளதென்பது கவலை தருவதாக உள்ளது. வேலை வாய்ப்பு இழப்பினாலும், வேலையிழந்தோருக்கான உதவித்தொகைக் குறைப்பாலும் மக்களின் வாங்கும் சக்தி குறைந்து அதன் காரணமாக இந்த உற்பத்தி வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. கையில் விலங்கை மாட்டிவிட்டு வித்தை காட்டு என்று கூறும் எதிர்க்கட்சியின் பணிமுடக்க அரசியல் நீண்டகாலத் தீங்கை அமெரிக்க ஐக்கிய நாடுகளுக்கு ஏற்படுத்திவிடும் அபாயம் நம்கண்முன் நிற்கிறது.

*****


புதுதில்லி அரசியலைப் பார்த்து சிரிப்பதா அழுவதா என்று புரியவில்லை. காங்கிரஸ் கட்சியை எதிர்த்துத்தான் (இல்லை, ஊழலை எதிர்த்து என்கிறார் அரவிந்த் கேஜ்ரிவால்!) 'ஆம் ஆத்மி கட்சி' தனது முதல் தேர்தலிலேயே கணிசமான இடங்களைப் பிடித்தது. எந்தக் காங்கிரஸ் கட்சியைப் புறங்காண வைத்து வென்றதோ அதே காங்கிரஸின் ஆதரவோடு அங்கே ஆட்சி அமைத்துள்ளது! இதைச் சோகம் என்பதா, முரண்நகை என்பதா என்று புரியவில்லை. 'ஆம்' என்ற சொல்லுக்கு 'மாங்காய்' என்று இந்தியில் பொருள். அதனால் ராபர்ட் வாத்ரா (பிரியாங்காவின் கணவர்) இவர்களை 'மாங்காய் மனிதர்கள்' என்று கேலி செய்தார். இவர்கள் புது தில்லி வாக்காளர்களை மாங்காய் மடையர்களாக்கியிருப்பது என்னவோ உண்மை. "அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா!" என்கிறீர்களா?

*****


விரைந்து மாறும் தொழில்நுட்பத்தை, சமுதாயத்தின் எல்லாத் தரப்பினருக்கும் சமமாகக் கல்வி தரப் பயன்படுத்த வேண்டும் என்று ஆதாரபூர்வமாக வாதிடும் டாக்டர். அருண் இராமநாதனின் நேர்காணல் நம்மை விழிப்படையச் செய்வது. விறுவிறுப்பான, புத்துணர்வு கொண்ட நடையில் நாவலும், சிறுகதையும் எழுதத் தொடங்கி, இன்று திரைப்படத் துறையிலும் ஆழக் கால் பதித்திருக்கும் இரா. முருகன் நம்மோடு தமது கருத்துக்களைச் சுவைபடப் பகிர்ந்துகொள்கிறார். ஏகலவ்யனைப் புதிய கோணத்தில் பார்க்கும் ஹரிமொழி, வயிறுவலிக்க 'வெஜிடபிள் குருமா' செய்து படைத்துள்ள எல்லே சுவாமிநாதன் கதை என்று 2014ன் முதல் இதழ் முத்தான இதழாக உங்களை கைகளை வந்தடைகிறது.

ஒரு தூய காந்தீயவாதியான நெல்சன் மண்டேலாவின் மறைவுக்குத் தென்றல் தன் வாசகர்களோடு சேர்ந்து கண்ணீர் அஞ்சலி செலுத்துகிறது.

வாசகர்களுக்கு ஆங்கிலப் புத்தாண்டு, பொங்கல் நன்னாள் வாழ்த்துக்கள்!

தென்றல் குழு

ஜனவரி 2014

© TamilOnline.com