கே.ஏ. அகாடமி: 10 ஆண்டு கலை விழா
மரியாட்டாவில் (அட்லாண்டா) இயங்கிவரும் கே.ஏ. அகாடமியின் வயலின், வாய்ப்பாட்டு மற்றும் நடனப்பள்ளியின் பத்தாவது வருடாந்திர கலை விழா சதர்ன் பாலிடெக்னிக் ஸ்டேட் யுனிவர்சிடி ஆடிடோரியத்தில் நடைபெற்றது.

வயலின் மாணவ, மாணவிகள் பங்கேற்ற நிகழ்ச்சியுடன் விழா ஆரம்பமானது. முதலில் இளம்பாலகர்கள் சிறிய வயலினில் சப்தஸ்வரங்களை வாசித்தனர். பின்னர் பிலஹரி, மோஹனம், சங்கராபரண ராக கீதங்களையும் நோட்டு ஸ்வரங்களையும் அடுத்த நிலை மாணவ, மாணவிகள் ஒன்றுபோல் வாசித்தனர். மூத்த மாணவர்கள் நின்னுகோரி வர்ணத்தை வாசித்தது கேட்க இனிமை. இறுதியாக வித்தியாசமான ராக, தாளங்களில் குரு. C.V. சுப்ரமணியன் பாடிய ஸ்வரங்களை மாணவர்கள் அருமையாக வயலினில் இசைத்தனர். பக்கவாத்தியமாக திரு. சந்தோஷ் சந்துரு மிருதங்கமும், திரு. வஜ்ரங் காமத் கடமும் வாசித்தனர். பின்னர் வந்த இசைப்பள்ளி மாணவ, மாணவியர் இசை நிகழ்ச்சியில் இளஞ்சிறார் முதலில் ஆத்மா ராமா, பாலகோபால முதலிய பஜனைப் பாடல்களைப் பாடினார்கள். தொடர்ந்து அடுத்த நிலை மாணவ, மாணவிகள் வரலீலா கான லோலா, வரவீணா, ஸாரஸ நேத்ரா, சரசர ஸமர போன்ற பாடல்களை அருமையாகப் பாடினார்கள். மூத்த மாணவிகள் ஸ்ரீமன் நாராயணாவைத் தொடர்ந்து காபிராக அஷ்டபதி பாடினார்கள். பின்னர் குரு C.V. ஸ்வரங்கள் பாட இளஞ்சிறார் 20க்கும் மேற்பட்ட ராகங்களைக் கூறியது ஆச்சரியப்பட வைத்தது.

இடைவேளைக்குப் பின் அகாடமி நாட்டியப் பள்ளியான சௌந்தர்ய நாட்யாலயாவின் நடன நிகழ்ச்சிகள் ஆரம்பமாகின. நடன ஆசிரியையும் அகாடமி நிர்வாக இயக்குநருமான குரு திருமதி. காயத்ரி சுப்ரமணியன் நடனங்களைக் கச்சிதமாக வடிவமைத்திருந்தார். 'ஆனந்தன நர்த்தன கணபதி'யில் தொடங்கி, அடுத்து வயலினில் வலசி ராக ஸ்வரஜதிக்கு, துரித கதியில் அமைத்திருந்த நடனத்தை மாணவிகள் சிறப்பாக ஆடினார்கள். ஆரபியில் முரளீதர கௌத்துவம் அருமை. அடுத்து சிறுமிகள் "குறையொன்றுமில்லை" பாடலுக்கு ஆடியது அருமை.

5 வயதே நிரம்பிய பிஞ்சுச் சிறுமிகளின் மீரா பஜன், காளிங்க நர்த்தன தில்லானா அற்புதம். கிருஷ்ணனாக குரு காயத்ரி வந்து கம்பீரமாக ஆடி, பலத்த கைதட்டலைப் பெற்றார். நிகழ்ச்சிக்கு மகுடமாக அமைந்தது 'தசாவதாரம்' நாட்டிய நாடகம். நட்டுவாங்கம், நடன அமைப்பு: குரு. திருமதி. காயத்ரி சுப்ரமணியன்; இசை: திருமதி. காயத்ரி வஸந்த்; வயலின்: திரு. C.V. சுப்ரமண்யன்; மிருதங்கம்: சுரேஷ் கோதண்டராமன்; புல்லாங்குழல்: ராம்நாத்; வீணை: திருமதி. அபர்ணா பெல்லூர் என அனைவருமே நிகழ்ச்சியைப் பரிமளிக்கச் செய்தனர்.

மேலும் விவரங்களுக்கு: www.kaacademy.com

ராதா ராமஸ்வாமி,
மேரியட்டா, அட்லாண்டா

© TamilOnline.com