கச்சேரி: பத்மினி, மேதா ஸ்ரீதர்
செப்டம்பர் 22, 2013 அன்று மில்பிடாஸ் ஷிர்டி சாய் பரிவார் ஆலயத்தில் திருமதி. பத்மினி, செல்வி. மேதா ஸ்ரீதர் சேர்ந்து அளித்த கர்நாடக இசைக் கச்சேரி நடைபெற்றது. குரு திருமதி. ஜெயஸ்ரீ வரதராஜன் அவர்களின் ஸ்ரீராம லலிதகலா மந்திர் இசைப் பள்ளியில் இருவரும் இசை பயின்று வருகிறார்கள்.

இருவரும் ஹம்சத்வனி ராகத்தில் 'ஜலஜாக்ஷி' வர்ணத்தைத் தொடர்ந்து ஸ்ரீரஞ்சனியில் 'கஜவதனா' கீர்த்தனையை அளித்தார்கள். கேதாரத்தில் 'ஆனந்த நடனம்' பாடியபின் மோகனத்தில் 'நாராயண திவ்யநாமம்' பாடினர். 'சங்கராபரண ராகத்தில் 'எனகு ஆனே' மற்றும் அவர்களின் குரு இயற்றிய 'மாதவன் மருகா ஷண்முகா' இருவரும் பாடக் கச்சேரி களைகட்டியது. தனஸ்ரீ ராகத் தில்லானாவைத் தொடர்ந்து ஷிர்டி சாய் மங்களம் பாடிக் கச்சேரியை முடித்தனர். பக்கம் வாசித்த திருமதி சுபா நரசிம்மன் (வயலின்), விக்னேஷ் வெங்கட்ராமன் (மிருதங்கம்) சிறப்பாக ஒத்துழைத்தனர்.

கச்சேரிக்கு வந்திருந்த நைஜீரியரான விக்டர் சொனெயெ, "நான் இந்தியாவிற்கு 5 முறை சென்றிருந்தாலும் கர்நாடக சங்கீதம் கேட்டதில்லை. ஆனால் இந்தக் கச்சேரி எனது உணர்வையும் உள்ளத்தையும் தொட்டது. என்னையறியாமல் கண்களில் நீர் தளும்பியது. இனிவரும் கச்சேரிகளுக்கு என்னை அழைப்பார்கள் என நம்புகிறேன்" என்று கூறியது நெகிழ வைத்தது.

ஸ்ரீதர்,
மிலிபிடாஸ், கலிஃபோர்னியா

© TamilOnline.com