அரங்கேற்றம்: வித்யா சுப்ரமண்யன், மது காட்ரகட்டா
செப்டம்பர் 22, 2013 அன்று, சான் ஃப்ரான்சிஸ்கோ விரிகுடாப்பகுதியில் இயங்கி வரும் விருந்தாவன் இந்திய நாட்டியப் பள்ளியின் ஆதரவில் திருமதி வித்யா சுப்ரமண்யன் மற்றும் திருமதி மது காட்ரகட்டா ஆகியோரின் பரதநாட்டிய அரங்கேற்றம் சான் ரமோன் டஹர்டி உயர்நிலைப்பள்ளி அரங்கில் நடைபெற்றது. பள்ளியின் இயக்குனர் டாக்டர். பிந்து ஷங்கர் அவர்களிடம் இருவரும் பரதநாட்டியம் பயின்று வருகின்றனர். வித்யாவும் மதுவும் ஆரம்ப வருடங்களில் இந்தியாவில் பரதநாட்டியம் கற்றனர். நிதித் துறையிலும், தகவல் தொழில்நுட்பத் துறையிலும் முறையே பணிபுரியும் இவர்கள் திருமணத்துக்குப் பின்னர் நாட்டியத்தைத் தொடர்ந்து கற்று அரங்கேறியுள்ளனர்.

ஹிந்தோள ராகத்தில் புஷ்பாஞ்சலி, கணேச ஸ்துதியுடன் தொடங்கிய நாட்டிய நிகழ்ச்சியில் அடுத்து மலையமாருத ராகத்தில் ஆண்டாளின் நாச்சியார் கவுத்துவம் இடம்பெற்றது. கவி பொன்னையா பிள்ளை இயற்றி, ருக்மணி அருண்டேல் அவர்கள் நாட்டிய வடிமைத்த சங்கராபரண ராக வர்ணம் விருந்தாக இருந்தது. மதுவின் அம்பாள் மீதான ஒரு ஹிந்தி பஜனைத்தொடர்ந்தது புரந்தரதாசரின் 'பாக்கியாத லக்ஷ்மி பாரம்மா'வுக்கு வித்யாவின் நாட்டியம். அடுத்து சீதா அபகரணத்தைச் சித்திரிக்க இருவரும் வந்தனர். புகழ்வாய்ந்த கலாக்ஷேத்ராவில் பயிற்சி பெற்ற பிந்து ஷங்கர் அவர்களால் வால்மீகி ராமாயணத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பாடல்களுக்கு திருமதி. ஜயந்தி உமேஷ் அழகிய இசையமைத்திருந்தார். குந்தலவராளியில்அமைந்த உற்சாகமான தில்லானாவைத் தொடர்ந்து மங்கள ஸ்லோகத்துடன் அரங்கேற்றம் நிறைவுற்றது.

திருமதி. ஜயந்தி உமேஷ் (வாய்ப்பாட்டு), திருமதி. லக்ஷ்மி பாலசுப்ரமண்யா (வயலின்), திரு. ரவீந்த்ர பாரதி ஸ்ரீதரன் (மிருதங்கம்), திரு அஷ்வின் கிருஷ்ணகுமார் (புல்லாங்குழல்) என அனைவரும் நிகழ்ச்சி நல்ல பக்கபலம்.

E.K. ஜகந்நாதன்,
சான் ரமோன், கலிஃபோர்னியா

© TamilOnline.com