நியூ ஜெர்சி: சுபாஞ்சலி
அக்டோபர் 20, 2013 அன்று சுபாஞ்சலியின் 20ம் ஆண்டு விழா ஸ்காட்ச் பிலேன்ஸ் ஃபான்வூட் உயர்நிலைப் பள்ளியில் கொண்டாடப்பட்டது. இது ஒரு மறக்கமுடியாத ஒரு நாட்டியாஞ்சலியாக அமைந்தது. சிறந்த வாக்கேயக்காரர்களும், பாடலாசிரியர்களும் இயற்றிய பாடல்களைத் தேர்ந்தெடுத்து, அவர்களுக்கு அஞ்சலி செய்யும் வகையில் இந்த நடன நிகழ்ச்சி இருந்தது. இதனை மிக நேர்த்தியாகத் தொடுத்து வழங்கிய பெருமை குரு சுபா ரேமஷ் பர்மார் அவர்களையே சாரும். 30 வருடங்களுக்கும் மேலாக சிறந்த நடனமணியாகவும், நாட்டிய ஆசிரியையாகவும் திகழ்ந்து வரும் குரு சுபாவின் கடும் உழைப்பிற்கு இந்த நிகழ்ச்சி ஒரு எடுத்துக்காட்டு.

சங்கீத மும்மூர்த்திகளில் தொடங்கி, அன்னமாசார்யா, சுவாதித் திருநாள், ஜயேதவர், துளசிதாஸ், பாபநாசம் சிவன், பாரதியார், மீராபாய், லால்குடி ஜயராமன், கணேஷ்-குமேரஷ், கடம் கார்த்திக், ஏ.ஆர். ரகுமான் வரை கிராமியப் பாடல்களோடு சேர்ந்து அன்று பெய்த இசைமழைக்கு சுபாஞ்சலி நடனமணிகள் வண்ணமயமாக பரதநாட்டியம் ஆடினர். 5 வயதுச் சிறுமிமுதல் 50 வயதுப் பெண்மணிவரை அனைவரும் சுறுசுறுப்பாக ஆடி பாராட்டுப் பெற்றனர். 120 பேர்கள் பங்கேற்ற நிகழ்ச்சியில், ஒவ்வொரு குழுவும் வண்ணமயமான உடைகளை அணிந்து ஆடியது கண்கொள்ளாக் காட்சி.

குரு சுபாவும், மற்ற ஆசிரியர்களும் சேர்ந்து ஆடியது மிகச் சிறப்பு. 20 வருடங்களுக்கு முன் அரங்கேற்றம் செய்த ஒருவர் (தற்போது 2 மக்களுக்குத் தாய்) முதல், சமீப ஆண்டுகளில் அரங்கேறிய 35 மாணவியர்வரை, வெவ்வேறு ஊர்களில் இருந்தாலும், அன்றைய நடனங்களைக் கற்று, வந்து ஆடியது மிகவும் மகிழ்ச்சிக்குரியது.

அர்ஷ வித்யாச்ரமத்தின் முக்கிய உறுப்பினரும், எய்ம் ஃபார் சேவாவின் நியூ ஜெர்சி தலைவருமான திரு M. சுவாமிநாதன் நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்கினார். இந்த நிகழ்ச்சி மூலம் சுபாஞ்சலி, எய்ம் ஃபார் சேவா நிறுவனத்திற்கு நன்கொடை அளித்தது. ஐந்தாண்டுகளில் வெள்ளி விழாக் காண இருக்கும் சுபாஞ்சலிக்கு வாழ்த்துக்கள்.

செய்திக் குறிப்பிலிருந்து

© TamilOnline.com