டிசம்பர் 2013: வாசகர் கடிதம்
சீதா துரைராஜ் சமயம் கட்டுரைகளில் கோவில்கள் மற்றும் தெய்வங்கள் பற்றி முழுமையான விவரங்களோடு கொடுப்பது வாசிக்கச் சுவையாக இருக்கிறது.

டாக்டர். அனந்தராமன்,
சான் ரமோன், கலிஃபோர்னியா

*****


நவம்பர் இதழில் 'அம்மாவின் பிரார்த்தனை' அருமை. எது உண்மையான பிரார்த்தனை என்பதைக் கண் திறக்க வைக்கும் படைப்பு. மயானத்து வைரமணி மயானத்தைப் பற்றிக் கூறும்போது, "இங்கே யாரும் யாரையும் ஏமாத்துறதில்லை. வஞ்சகம் செய்வதில்லை. எந்த அநியாயமும் இங்க நடக்கறதில்லை" என்ற வார்த்தைகள் என் மனதைத் தொட்டது மட்டுமல்ல; வாழும் மக்களின் ஆட்டத்தை நினைத்து வேதனைப்பட வைத்தது. துரைசாமி அவர்களின் 'கனவு மெய்ப்பட வேண்டும்' நூல் அறிமுகத்தைப் படித்தபோது எனது அனுபவக் கனவுகளையும் சுட்டிக் காட்ட வேண்டியுள்ளது. தமிழ்நாட்டில் ஊழல் எதிர்ப்பு இயக்கத்தை நடத்தி வருகிறோம். கடந்த பத்து ஆண்டுகளாக பல விழிப்புணர்வுப் பேரணிகள், நிகழ்வுகள், கூட்டங்கள் நடத்தி வருகிறோம். அமெரிக்க ஃபோர்டு ஃபவுண்டேஷன் நிதியுதவியுடன் உந்துநர் அறக்கட்டளை மூலம் 200 மக்கள் மையங்கள் நடத்தி வருகிறோம். இம்மையங்கள் மக்கள் நன்மைக்காகவும், நல்ல குடிமக்களை உருவாக்கும் முயற்சியிலும் ஈடுபட்டு வருகிறது. துரைசாமியின் கனவு மெய்ப்படும் காலம் வெகு தூரத்தில் இல்லை. 'கண்ணுறங்காத காலம்' பல குறிப்புகளுடன் வருவது நல்ல படைப்பு. நாம் உறங்கினாலும் காலம் உறங்குவதில்லை என்பது உண்மைதானே! கி.வா.ஜ.வின் சொல் விளையாட்டு இதழின் மணத்தைக் கூட்டியுள்ளது. அவரது உரையில் வந்த சீர்த்திருத்தக் கருத்து இது: "ஏழை அழுத கண்ணீர் கூரிய வாளை ஒக்கும் என்ற திருக்குறள் கருத்திற்கேற்ப ஒரு பழமொழி உண்டு. எளியாரை வலியோர் வாட்டினால் வலியாரை தெய்வம் வாட்டும் என்ற பழமொழியை திருப்பிப் போட்டுப் பாருங்கள். ஏழைகளுக்கு வலிமையுடையவர்கள் உதவி செய்தால், வலிமை உடையவர்களுக்கு கடவுள் உதவி செய்வார் அல்லவா?" தென்றல் இதழில் பகுதிகள் அனைத்தும் நல் முத்துக்கள். வாழ்த்துக்கள்!!

டி.வி. சிவசுப்ரமணியன்,
டாலஸ், டெக்சாஸ்

*****


இந்தியாவிலிருந்து ஹூஸ்டனில் வந்து இறங்கியவுடன் மனம் மகிழ்ச்சியில் திளைத்தது 'தென்றலை' பார்த்ததும். ஆஹா! என் உயிர்மூச்சு பத்திரிகைகள் படிப்பதும் எழதுவதும்தான்.

ராதா நரசிம்மன்,
ஹூஸ்டன், டெக்சஸ்

*****


நானும் என் மனைவியும் கடந்த 13 வருடங்களாக 'தென்றல்' இதழைத் தவறாமல் படித்து வருகிறோம். நவம்பர் தென்றல் சிறப்பாக இருந்தது. ரா. ராகவையங்கார் அவர்களைப் பற்றிய கட்டுரை சிறப்பாக இருந்தது. என் தந்தை ராகவையங்கார் பற்றி நிறையச் சொல்லக் கேட்டிருக்கிறேன். ஈரநெஞ்சம் மகேந்திரனின் வைரமணியுடனான நேர்காணல் அனைவரும் படிக்க வேண்டிய ஒன்றாகும். அவருடைய படங்களையும் வெளியிட்டிருந்தது சிறப்பு.

அன்புள்ள சிநேகிதியேவில் 'சமுதாயக் கூடு உடையும்' என்ற டாக்டர். சித்ரா வைத்தீஸ்வரன் பதிலையும் படித்தேன். அவரது பதில் சிறப்பாக இருந்தது. "தாய்ப்பாசம் கரை கடந்தது. உங்கள் சுகத்திற்கே தன்னை அர்ப்பணித்துக் கொள்ளும்" என்ற பதில் தாயின் சிறப்பை தெரியப்படுத்துகிறது. அதுசரி, எப்போதும் தாய்தான் தன் குழந்தைகளுக்காக விட்டுக்கொடுக்க வேண்டுமா? கொஞ்சம் குழந்தைகளும் விட்டுக் கொடுத்தால்தான் என்ன?

தொடர்ந்து தென்றல் வீச நல்வாழ்த்துக்கள்! புது வருட வாழ்த்துக்கள்.

லிபியா ராமானுஜம்,
கேன்டன், மிச்சிகன்

© TamilOnline.com